அபி சாரின் நீயே சொல்லு சார்

நான் சொல்லுறேன் சார் ரெண்டு பேர் என்ன இருபது பேரைக் கொன்னாலும் சரி தான்....

நீயே சொல்லு சார் என்ற தலைப்பிலேயே யார் யாருக்கு சொல்லுகிறார்கள் என்பதை ஒளித்து வைத்து விடுகிறார் கதாசிரியர் அந்த ரகசியம் கடைசி வரியில் தான் புரிகிறது இந்த அழகிய கதை நகர்த்தல் ஒரு புலமை.

மனிதனுக்கு மனிதன் செய்யக்கூடிய துரோகத்தைச் சொல்லிச் சென்று இறுதியில் வெளிப்படுத்தியதைக் கதையைப் படிப்பவருக்கு விட்டு விடுகிறேன். நில அபகரிப்பில் அவதிப்படும் உயிர்களின் அவலத்தை சித்திரமாகச் செதுக்கிய விதம் அபி சாரின் கலை. செய்தியாகச் சொல்லுவதுபோல் புதிய கோணத்தில் கதை நகர்த்தி எத்தனை அறிவானாலும் உரிமை ஒன்றுதான் என்ற கணக்கு இங்கே வெற்றி பெற வைத்திருக்கிறார்.

கொஞ்சம் ஆழமாகப் படித்துப் பார்க்கும் பொழுது அந்த மருதாச்சலம் கதாபாத்திரமும் மோட்சம் என்ற வார்த்தையும் மட்டுமே உபயோகித்து எதைச் சொல்லுகிறார் கதாசிரியர் என்று உணர்த்திவிடுகிறார் அருமை. "அவளுகளுக்கு எப்ப, என்னத்தை ‘வழங்கப்’ போறான்னு தெரியலை.." என்று நையாண்டியில் புதைத்து வைத்த நகைச்சுவையும் அலாதி.

"நாங்க சுத்தி சுத்திப் போயிகிட்டேயிருந்தா.. இதுக்கு ஒரு முடிவுதான் என்னா சார்..? " என்ற கேள்வி கொஞ்சம் சிந்திக்கவும் வைக்கிறது. சரிதானே உண்ண உணவு உடுக்க உடை உறங்க உறைவிடம் என்ற அடிப்படைத் தேவைகள் மட்டுமே போதும் என்று வாழ்வோர்களின் வாழ்கையை பணமுதலைகள் சூறையாடுவது எப்படிச் சரியாகும்?

"பச்ச மண்ணு..அது எப்புடி துடிச்சு,துடிச்சு அழுகுதுன்னு தெரியுமா சார்..? அந்த இடத்துலே உங் குழந்தைய நிறுத்தி,ஒரு நிமிஷம் யோசிச்சுப் பாரு சார்...." இங்கே நிசமாகவே நினைத்துப் பார்த்து இரண்டு சொட்டு விழ வைத்து விடுகிறார் கதாசிரியர். ஆனால் நான் ரசித்த செய்தி ஒன்றும் சொல்லிவிடுகிறேன் இங்கே கதை படிப்பவர்கள் அந்தப் பிஞ்சுக் குழந்தையை நினைத்துக் கலங்குவார்கள் அப்படியே கதை படித்து முடித்ததும் அடடா அந்தப் பிஞ்சு இதுவா என்று யோசிக்கும்போது இங்கே சிலருக்கு இன்னும் இரண்டு சொட்டு அதிகமாகலாம் அது கதாசிரியருக்கு கூடுதல் வெற்றிச் சதவிகிதம்.

"அது ஒண்ணும் சாதாரண இடமில்லே சார்..பசேல்னு இருக்குற மலையும், காடும்..,அதுலே வெள்ளியை உருக்கி ஊத்துன மாதிரி அருவியும்,ஆறும்.." இங்கே இயற்கை அழிவதை எதார்த்தமாகச் சொல்லி அழிப்பவர்கள் யார் என்ற உண்மையை குத்திக் காட்டிப் புரியவைத்திருப்பது நேர்த்தி.

இந்தச் செய்தி ஒருவருக்கு மட்டுமல்ல மானுடம் யாவருக்குமான செய்தி என்று விளக்க கதாசிரியர் எடுத்துக் கொண்ட அந்தக் கதை சொல்லும் பாத்திரம் ரசிக்க யோசிக்க மலைக்க வைத்த கதாபாத்திரம் இது மாற்றி யோசித்த மகத்துவம்.

எளிமையானவர்கள் மன வலிமை படைத்தொராயினும் பண வலிமையின் முன் தோற்றுப் போகும் இன்றைய வாழ்வியல் தோல்வியை எடுத்துச்சொல்லும் அழகான கதைதானே இது நீயே சொல்லு சார்...

எழுதியவர் : மீ.மணிகண்டன் (14-Jun-15, 3:11 pm)
பார்வை : 152

மேலே