பொள்ளாச்சி அபி சிறுகதைகள் - திறனாய்வு போட்டி--குருவிக்கார குமாரு

வித்தியாசமான கருக்களில் கதை எழுதுபவர் தான் என்பதை பொள்ளாச்சி அபி அவர்கள் இந்தக் கதையிலும் நிரூபித்துள்ளார். இந்தக் கதை ‘பறவைகளைக் கவனித்தல் (பேர்ட் வாட்சிங்)' என்ற கருவை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இது, உலகில் இன்று பிரபலமான பொழுதுபோக்காக வளர்ந்து கொண்டே வருகிறது. 'பறவைகளைக் கவனித்தல்' என்பது மிக விரிவான தலைப்பு. அதைப் பற்றி புத்தகங்களும்,செய்திகளும், வலைத்தள விவரங்களும் நிறையவே இருக்கின்றன.
நமது இடத்தில் என்னென்ன பறவைகள் இருக்கின்றன,வெளி நாடுகளிலிருந்து என்னென்ன பறவைகள் வருகின்றன, அவற்றின் குணங்கள் என்னென்ன,உணவுப் பழக்கங்கள்,மற்றப் பழக்கங்கள் என்னென்ன,அவற்றைப் பார்க்க எங்கெங்கே போக வேண்டும்,இது சம்பந்தமான வல்லுனர்கள் யார் யார், சில பறவைகளை நம் இடத்துக்கு வரவழைக்கலாம் என்கிறார்களே, எப்படி வரவழைக்க முடியும், பறவைகளைக் கவனித்தல் என்ற பயிற்சியை எப்படி கற்றுக் கொள்வது, எப்படி, அந்தப் பயிற்சியை மேம்படுத்திக் கொண்டே போவது என எத்தனையோ சொல்லலாம்.
இந்தக் கதை ஒரு புதிய பறவை; அழகான பறவையும் கூட;வண்ணங்கள் நிறைந்த பறவையும்தான். எங்கும் தேடித் போகத் தேவை இல்லாமல், நாம் உலாவிக் கொண்டிருக்கும் எழுத்து வலைத் தளத்துக்கே வந்து அமர்ந்து தரிசனம் கொடுத்து மகிழ்விக்கும் பறவை.
இந்தக் கதையின் நாயகன் எட்டாவது படிக்கும் குமாருக்கு, இயல்பாகவே, பறவைகளைக் கவனித்தல் என்ற திறமையில் எதிர்கால மேதைமைக்கான அறிகுறிகள் தெரிகின்றன. நண்பர்களுடன் ஊர் சுற்றாமல்,தனியாக தோட்டம்,காடு,குளம்னு சுத்தறதையே விரும்புகிறான் அப்போதுதானே, வானத்திலே,குளத்திலே,மரத்திலே இருக்கும் பறக்கிற,பாடுகிற பட்சிகளைஎல்லாம் பார்க்க முடியும். இதைத்தானே பறவைகளைக் கவனிப்பவர்கள் முறையான பயிற்சி மூலம் கற்கிறார்கள்.சுற்றுலாத்துறையும் கல்வி வடிவத்தில் உதவுகிறது. ஆனால் யார் உதவியும் இல்லாமல் இயல்பான ஆர்வத்தினாலேயே கற்றுக் கொள்கிறானே. அப்போது அவன் எதிர்கால மேதைதானே.

குமாரு, பறவை பார்ப்பவர்கள் போல பைனாகுலரோ காமிராவோ வைத்துக்கொள்ளவில்லை, பார்க்கும் பறவைகளையெல்லாம் தத்ரூபமாக ஒரு நோட்டில் படம் வரைந்து வைத்துக் கொள்கிறான். ' வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்னும் பொன்மொழிக்கு எடுத்துக் காட்டாக திகழ்கிறான்.
இந்தக் கதையில்,குமாரு, தன் பறவை ஆராய்ச்சி திறமையை வீட்டுக்கே வந்து உட்கார்ந்த குருவிகள் விடயத்தில் எப்படிமுழுமையாக பயன்படுத்துகிறான்; அந்த திறமையை எப்படி மென்மேலும் மெருகேற்றுகிறான் என்பதைப் பற்றியதுதான்;. சிட்டுக்குருவி வீட்டுக்கே வந்து உட்கார்ந்ததில் அளவில்லா ஆனந்தம் அடைகிறான். வெளியில் அலையாமல் ஒரு பறவையைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
குருவிகள் எவற்றை வைத்து கூடு கட்டுகின்றன என்று கவனித்து வைத்துக் கொண்டு,அவற்றையெல்லாம் தன் வீட்டிலிருந்தே எடுத்துக் கொண்டு வந்து அட்டாலிப் பலகை மேலே வைத்து உதவுகிறான். ஆண் குருவியும், பெண் குருவியும் கீச்சு கீச்சென்று சத்தமிடும்போது அவை என்ன பேசிக் கொள்கின்றன என்பதை தானாக கற்பனை செய்து மகிழ்கிறான்.அவை இரை தேட வெளியே அலையாமல் இருப்பதற்காக,தன் வீட்டு மூட்டையிலிருந்து அரிசி, சோளம் முதலியவற்றை அட்டாலியில் அவை கண் படும் இடத்தில் வைக்கிறான். இது குருவிகள் மேல் அவனுக்கிருக்கும் அபிமானத்தைக் காட்டுகிறது.
தினம் பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்ததும் அட்டாலி மேல் ஏறி குருவிகள் என்ன செய்கின்றன, கூடு எப்படி இருக்கிறது என்று பார்ப்பது, பறவை கவனித்தலில் அவனுக்கிருந்த அடங்காத ஆர்வத்தைக் காட்டுகிறது. அதனால் ஆண்குருவி சத்தத்தையும் பெண் குருவி சத்தத்தையும், தனித்தனியா அடையாளம் கண்டுபிடிக்க தெரிகிறது. குருவிக் கூட்டுக்குள் முட்டை அடை காக்கும்போது,அருகே போனால் ஆண் குருவியும் பெண் குருவியும் சேர்ந்து உக்கிரமாக கீச் கீச் என்று சத்தமிடுவதை பார்த்து அவை கோபமாக இருக்கின்றன, அந்த நேரத்தில் அவைகளை தொந்தரவு செய்யக் கூடாது என்று புரிந்து கொண்டான். தானோ வேறு யாருமோ குஞ்சு வெளிவருவதற்குள் மேலே ஏறி தொந்தரவு செய்து விடக் கூடாது என்பதற்காக ஏணியை இடம் மாற்றி வைத்து விடுகிறான்.இப்படி பெண் குருவிக்கு ஒரு தாயுமானவனாகவே குமார் என்ற பாத்திரத்தை படைத்து விடுகிறார் எழுத்தாளர்.
குஞ்சுகள் வெளிவரும் நாளில் அவைகளை எப்படி இருக்கின்றனவோ அப்படியே நோட்டில் படம் வரைய வேண்டும் என்று கனவில் மிதக்க ஆரம்பித்து விடுகிறான்.இங்கு அவன் வேகம்தான் அவனை சாதிக்க வைக்கிறது; பைனாகுலரோ காமிராவோ அல்ல; பறவை ஆராய்ச்சியாளர்களிடம் அவை உண்டு என்பது கூட அவனுக்கு தெரியாது .படிக்கும்போது, அவற்றை வாங்க அனுமதியும் கிடைக்காது.
குருவிகளிடம் தாய்ப் பாசத்தையே வளர்த்துக் கொண்டு விடுகிறான். குருவிகளையும் குஞ்சுகளையும் சுட்டு சாப்பிட்டு விட்டார் காளிமுத்து மாமா என்று தெரிந்ததும் வெறிக் கோபத்துடன். உருட்டுக் கட்டையை வைத்து,அவரை மண்டையில் ரத்தம் வர பலமாக அடித்து விடுகிறான் குமாரு. குருவிகளின் மீதிருந்த பாசம் வெளிப்படுகிறது. குமாருக்கு இருக்கும் திறமைக்கு,அவனுக்கு, பாக்கியம் இல்லை என்றே சொல்ல வேண்டும். பறவை ஆராய்ச்சியாளர் ஒருவரது ஆதரவு இருந்தால், தன் ஆராய்ச்சியை மேம்படுத்தக் கற்றுக் கொள்வான்; குருவிகளை இடர்களிலிருந்து காக்கவாவது கற்றுக் கொள்வான்.இரக்கமில்லாத அவனது காளிமுத்து மாமாவால்,குருவிகளுக்கும்,குஞ்சுகளுக்கும் அழிவு வந்ததுதான் மிச்சம். குருவிக் கூட்டோடு,குமாரின் கனவுகளும் கலைந்தபோது,குமாரின் பாத்திரத்தோடு,ஒன்றிப் போன நமக்கும்,குமாரைப் போலவே கண்ணீர் வருகிறது!
அப்படி நம்மை ஒன்ற வைத்ததற்கு,நாம் எழுத்தாளரை எவ்வளவோ பாராட்ட வேண்டும்!
அந்தக் குருவிகளை வெறுமனே கவனிக்கவில்லை குமாரு. அவற்றுடன் வாழவே வாழ்ந்திருக்கிறான்!
பறவை கவனித்தல்(பேர்ட் வாட்சிங்) எனப்படும் அரிய கருவில் கதை எழுதத் தோன்றிய எழுத்தாளர் அபியின் படைப்புத் திறனை பலர் பாராட்டுவர்.
அடுத்து, அபி அவர்கள் 'குருவிக்கார குமாரு -- 2' என்று ஒரு கதை எழுதுவாரா என்று ஆவலுடன் காத்திருக்கிறோம். அல்லது ' குயிலோட பாடும் குமாரு' என்று எழுதுவாரா? எப்படி எழுதினாலும் படிக்க காத்திருக்கிறோம்! கட்டாயம் படிக்க சுவாரசியமாகவே இருக்கும்!
இன்னும் பல அரிய படைப்புகள் படிக்கும்படி எழுத்தாளர் பொள்ளாச்சி அபியை வேண்டுகிறோம்; வாழ்த்துகிறோம்.
இது என் சொந்தப் படைப்பே என்று இதன் மூலன் உறுதி கூறுகிறேன்.
ம. கைலாஸ்
i

எழுதியவர் : ம. கைலாஸ் (16-Jun-15, 6:36 pm)
சேர்த்தது : M Kailas
பார்வை : 177

மேலே