பொள்ளாச்சி அபி சிறு கதைகள் திறனாய்வுப் போட்டி -குருவிக்கார குமாரு

கதையின் மையக் கதாபாத்திரம் குமாரு இயற்கையை ரசிக்கும் எட்டாவது படிக்கும் சிறுவன்...பறவைகளைக் கவனித்துப் படம் வரைவது ..அவற்றின் இயல்புகளை அவதானிப்பது என இந்தப் பதின்ம வயதுச் சிறுவனின் அபூர்வமான ஆர்வம் பொழுது போக்கு என்பன அழகாக ஆரம்பத்தில் கதாசிரயரால் சொல்லப் படுகிறது ..
தொடர்ந்து கதை ஒரு குறிப்பிட்ட வகைச் சூழலுக்குள்ளே பயணிக்கிறது.... அத்தை சரசுவின் வீட்டுக் கொல்லைப் புறம்.. கொய்யாமரம்.. அட்டாலி என அழகியல் ஒருமை கெடாமல் அந்த வீட்டுச் சூழலை ஆசிரியர் குறிப்பிட்டவிதம் மிகச்சிறப்பு...

//இரண்டு குருவிகள் கத்துற சத்தம் கேட்டது.கிளைங்களோட,இலை இடுக்குலே அந்தப் பெண்குருவியோட,ஒரு ஆண்குருவியும் சேந்து,கத்திட்டு இருந்துச்சு.அதோட அலகுலேயும், கொஞ்சம் கனமா ரெண்டு மூணு வைக்கோல் இருந்தது.ஆனா, ரெண்டும் ஒரே இடத்துலே உட்காராம,சட்சட்..னு இடம் மாறிமாறி, உட்கார்றதும்,பறக்குறதுமா இருந்துச்சு.//

இங்கு அத்தை சரசு அவள் கணவன் காளிமுத்து அவர்களுக்குக் குழந்தைப் பாக்கியம் இல்லாது ஏங்கும் அவளின் ஏக்கங்கள் இத்தகைய சூழ்நிலையுடன் கூடிய அவர்கள் அகச்சூழல் இந்தப் பறவைகள் சார்ந்த படிமங்களாக மெல்ல மெல்ல மாறியிருப்பதாக உணரமுடிகிறது...
மூன்று எதிர் எதிர் இயக்கங்களுடன் இயங்கும் கதாபாத்திரங்களின் முரணியக்கத்தின் புதிர் போல முடியும் ஓர் ஒற்றைச் சம நிலையை இக்கதையில் காணக் கூடியதாய் உள்ளது...

குருவி கூடு கட்டிக் குஞ்சு பொரிப்பதை உற்சாகமாக தீபாவளிக்கு சொந்தக்காரங்கள் வந்தது போன்ற மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் குமாரு...... குருவி கூடு கட்டுற வீட்டுலே,குழந்தை பாக்கியம் நிச்சயம் என்று குப்பாயிக் கிழவி சொன்னதை மனதில் வைத்து தன்னையும் அறியாமல் சிறுவன் குமாரு போல் நாளுக்கு நாள் குருவிகளை கவனிக்கும் அவன் அத்தை சரசு.... ,குடிகாரன் எவனுக்கும் கொழந்தை யில்லாமயாப் போச்சு..? என்று வீரம் பேசும் சரசு புஷன் காரன் என மூன்று கோணங்களுக்கிடையே பின்னப் பட்ட கூட்டில் மையத்தில் பொரித்துக் கொண்டிருக்கும் குருவிக் குஞ்சுகள் ........

நடுப்பகுதியில் கதை ஓட்டம் தொய்ந்து விடாமல் இருப்பதற்காக ஆசிரியர் நுட்பமான சிலவிடயங்களை வித்தியாசமான உத்திகளைப் பாவித்து சுவையாக கூறியிருந்தால் கதை இன்னும் செறிவாக வந்திருக்கும் எண்ணத் தோன்றுகிறது ....முதன்மையான கதாபாத்திரத்தின் குரல் மட்டும் அதிகமாக ஒலிப்பதில் கதை பற்றிய விரிவான சித்தரிப்பை ஆசிரியரால் அளிக்க முடிகிறது என்பதும் உண்மையே ...

எழுத்தின் நடை சொல்லாட்சி என்பன ஆசிரியருக்கே உரிய சிறப்பான திறமையின் வெளிப்பாடுகள் இவற்றைக் கதை வழியே அவதானிக்க முடிகிறது.
நடுப்பகுதியில் உரையாடல்கள் அதிகளவில் இல்லாவிடினும் கதையின் கடைசிப் பகுதியில் வாசகனால் நிகழ்வுகளை இலகுவில் உள்வாங்க கூடிய முறையில் உரையாடல்களை செறிவாகவும் அர்த்தம் மிக்கதாயும் எழுதியிருப்பது மிகச் சிறப்பு ....ஆசிரியர் கதையின் இறுதிப்பகுதியை நுட்பமாக நகர்த்திச் சென்று முடித்த விதம் பாராட்டத் தக்கது..

//அட்டாலி மேல ஏறுறதுக்காக,குமாரு எப்பவும் போடற மாதிரியே போட்டு வெச்சிருந்த ஏணி கண்ணுலே பட்டுச்சு.அவனுக்கு ஆச்சரியமாப் போச்சு
அங்கே,குருவிக் கூட்டை திருட்டுப்பூனை வந்து கலைச்ச மாதிரி,எல்லாம் சிதறிக்கிடந்தது. குருவிகளையும் காணோம்,குஞ்சுகளையும் காணோம்..//

இறுதியில்திருட்டுப் பூனையாய் அடிவாங்கி வீட்டு வாசப்படியேறும்போது,தலைக்கட்டோட யாரையும் பார்க்காம தலையைக் குனிஞ்சிட்டு இருந்த முட்டாள் காளிமுத்து மாமா.... எனக்கு கோவம் வராம என்ன செய்யும்..? பெத்த புள்ளைய அறுத்து சாப்பிடற மாதிரி தோணலை. அதுவும் உசிருதானே..! உங்கிட்ட சொன்னதைக் கேட்டுட்டு நீ சும்மா போயிட்டே..,என்னாலே பொறுத்துக்க முடியலை..எனக் கூறும் குமாருவின்நேர்மையான கோபம்.... யாருக்காக அழுவது எனத் தெரியாமல் அந்தச் சூழ நிலையில் ஊமையாக அழ மட்டும் முடிந்த சரசு..... என எல்லாக் கதாபத்திரங்களின் உணர்ச்சிப் போராட்டங்களையும் ஒரு சேர கதையின் இறுதிக்கணப் பொழுதில் சிறப்புற நிலை நிறுத்திச் சொல்லிச் செல்கிறார் கதாசிரியர் அபி சார் ..
.

இது என் படைப்பு என உறுதிப் படுத்துகிறேன் ...

எழுதியவர் : உமை (16-Jun-15, 11:29 pm)
பார்வை : 185

சிறந்த கட்டுரைகள்

மேலே