தாய்மை

என்னுள் உயிர் துடிக்குமொரு
சொப்பனம் கண்டேன்...
பால் சுரக்கையில் குறுகுறுக்கும்
மார்பெனதாய் இருந்து
தேகம் முழுதும் பூரித்திருந்ததப்போது;
யான் எனதெண்ணிக் கொள்ளும்
மமதை அழிந்து இன்னொரு
உயிர் சுமக்கும் பெருமிதத்தில்
வீங்கிப் பெருத்திருந்ததென் வயிறப்போது...
பசி இரண்டென்றெண்ணி
நிறைய உண்டேன்;
தாகமிரண்டென்றெண்ணி அதிகம் குடித்தேன்....
தனிமையிலிருந்த போது
அதை தவமாய் கருதி
கண்மணி என் உயிரோடு வயிறுதடவி
பேசிச் சொக்கிக் கொண்டிருக்கையில்
பாவியென் சொப்பனம் கலைந்ததென்ன...?
இப்பிறவியிலொரு ஆணாய் என்னை
மீண்டும் நிலைக்கும் படி ஊழ்வினையென்னைச்
சபித்துச் சென்றதென்ன...?
எப்பிறப்பில் இனி நான் பெண்ணாவேன்...?
என்னுளிருந்தென் சிசு உதைக்கும் சுகமறிவேன்...?
கனவாகிப் போன என் கனவாவது
வாய்க்குமா மீண்டுமொரு முறை இனியென்றெண்ணி
ஏக்கத்தில் ஊர்ந்து கொண்டிருக்கிறேன்
இவ்வரிகளினூடே.............

எழுதியவர் : தேவா சுப்பையா (17-Jun-15, 10:53 am)
Tanglish : thaimai
பார்வை : 575

மேலே