சீர்காழி என்ற திருப்பூந்தராய் - பாடல் 3

சீர்காழி என்ற திருப்பூந்தராய் ஊரில் விளங்கும் சிவபெருமான் பற்றி திருஞானசம்பந்தர் இயற்றிய பதிகத்தில் பியந்தைக்காந்தாரம் பண்ணில் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாக அமைந்த 3 ஆம் பாடல்.

பாடல் 3 - எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

உருவளர் பவளமேனி யொளிநீ
...றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றைதிங்கண் முடிமே
...லணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது
...பூமி திசைதெய்வ மான பலவும்
அருநெதி நல்லநல்ல அவைநல்ல
...நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

பொழிப்புரை :

அழகிய பவளம் போன்ற திருமேனியில் ஒளி பொருந்திய திருவெண்ணீற்றை அணிந்து, மணம் பொருந்திய கொன்றை, திங்கள் ஆகியவற்றை முடிமேல் அணிந்து சிவபிரான் உமையம்மையாரோடு வெள்ளை காளை மீது ஏறி வந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் திருமகள், துர்க்கை, செயமகள், நிலமகள், திசைத் தெய்வங்கள் ஆன பலரும் அரிய செல்வங்களையே நல்லனவாகத் தரும். அடியாரவர்கட்கும் மிகவும் நல்லனவாகவே தரும் என்கிறார் திருஞானசம்பந்தர்.

குறிப்புரை :

உருவளர் பவளமேனி - அழகுவளரும் பவளம் போன்ற செம்மேனியில்,

கலையதூர்தி - துர்க்கை. நெதி - திரவியம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Jun-15, 12:14 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 74

மேலே