சீர்காழி என்ற திருப்பூந்தராய் - பாடல் 4

சீர்காழி என்ற திருப்பூந்தராய் ஊரில் விளங்கும் சிவபெருமான் பற்றி திருஞானசம்பந்தர் இயற்றிய பதிகத்தில் பியந்தைக்காந்தாரம் பண்ணில் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாக அமைந்த 4 ஆம் பாடல்.

பாடல் 4 - எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

மதிநுதன் மங்கையோடு வடபா
...லிருந்து மறையோது மெங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமேல்
...அணிந்தென் உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு
...தூதர் கொடுநோய் களான பலவும்
அதிகுணம் நல்லநல்ல வவைநல்ல
...நல்ல அடியா ரவர்க்கு மிகவே,

பொழிப்புரை :

பிறைபோன்ற நுதலை உடைய உமையம்மையாரோடு ஆலின்கீழ் இருந்து வேதங்களைச் சொல்லி அருளிய எங்கள் பரமன் கங்கை, கொன்றைமாலை ஆகியனவற்றை முடிமேல் அணிந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால், சினம் மிக்க காலன், அக்கினி, யமன் ஆகியவைகளோடு யமதூதர், கொடியநோய்கள் முதலிய அனைத்தும் மிக்க குணமுடையனவாய் நல்லனவே செய்யும். அடியவர்களுக்கும் மிகவும் நல்லனவே செய்யும் என்கிறார் திருஞானசம்பந்தர்.

குறிப்புரை :

வடம் – ஆலமரம், வடபால் – ஆலமரத்தின்கீழ்,

கொதி - கோபம், உக்கிரம், அங்கி – அக்கினி, நமனொடு தூதர் - யமனும் யமதூதரும்,

நமன் (தருமராசன்) வேறு, நமனுடைய தூதராகிய கூற்றுவர் வேறு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Jun-15, 3:08 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 67

சிறந்த கட்டுரைகள்

மேலே