சீர்காழி என்ற திருப்பூந்தராய் - பாடல் 6

சீர்காழி என்ற திருப்பூந்தராய் ஊரில் விளங்கும் சிவபெருமான் பற்றி திருஞானசம்பந்தர் இயற்றிய பதிகத்தில் பியந்தைக்காந்தாரம் பண்ணில் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாக அமைந்த 6 ஆம் பாடல்.

பாடல் 6 - எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

வாள்வரிய தளதாடை வரிகோ
...வணத்தர் மடவாள் தனோடு உடனாய்
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி
...வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி யுழுவையோடு கொலையானை
...கேழல் கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்லநல்ல வவைநல்ல
...நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

பொழிப்புரை :

ஒளியும் வரியும் பொருந்திய புலித்தோல் ஆடையை உடுத்து வரிந்து கட்டிய கோவண ஆடையராய் உள்ள பெருமானார் உமையம்மையாரோடும், அத்துடன் அன்றலர்ந்த மலர்கள், வன்னி, கொன்றை, கங்கை ஆகியவற்றை முடிமிசைச் சூடி வந்து என் உளத்தினுள்ளே புகுந்துள்ள காரணத்தால் வலிய குரங்கு, புலி, கொலை யானை, பன்றி, கொடிய நாகப்பாம்புடன் கரடி, சிங்கம் ஆகியன நமக்கு நல்லனவே செய்யும். அடியவர்கட்கும் மிக நல்லனவே செய்யும் என்கிறார் திருஞானசம்பந்தர்.

குறிப்புரை :

வரி - கீற்றுக்களை உடைய புலி, கோள் – வலிமை, அரி – குரங்கு,

கோளு (வலிமை, கொலையு)ம் அரி (பகை)யும் உடைய உழுவை(புலி) எனலுமாம்.

ஆளரி - சிங்கம். `ஆளரியேறனையான்`

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Jul-15, 10:15 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 93

மேலே