​என் வாழ்க்கைப் பயணம் - 4

​மூன்றாவது பகுதியினை முடித்திருந்தேன் எனது மூன்றாம் வகுப்பு முடிவடையும் நிலையுடன் .
சற்று மந்தமாகத்தான் இருந்தது ...சுவாரசியம் இல்லாத மூன்றாம் பகுதி. ( எனக்கே அப்படி என்றால்
வாசித்த உங்களுக்கு ...? ) ​

அந்த சிறு வயதில் அரைக்கால் சட்டையுடன் , சீவியும் சீவாத தலையுடன் , மடிப்புகள் படர்ந்த மேல் சட்டையுடன் ஏதோ கடனென்று நினைத்து , எதிர்காலத்தை பற்றிய நினைவே இல்லாமல் , நானும் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும் என்கின்ற கட்டாய மனப்பான்மையுடன் அன்று வெகு தூரமாக நினைத்த , நடந்து சென்றதை இன்றும் நினைவில் வருகையில் இலக்கே இல்லாத , வகுத்திடா வாழ்க்கைப் பாதையில் செல்வதை போன்று இருந்ததை நினைத்தால் சற்று வருத்தமாகத்தான்
உள்ளது. இப்போது உள்ளது போல எந்தவித ஊக்கசக்தியும் , சுய உந்துதலும் , வழிகாட்டுதலும் அன்றி , வசதிகளும் இல்லாமல் கடமைக்காக செய்தது , வியப்பாகவும் , விடைதெரியா வினாவாகவும் என் நெஞ்சில் அவ்வப்போது எழுந்து மறைந்திடும்.

அப்பா வேலைக்கு செல்வதால் குடும்பத்திற்குப் பயன் என்றும் , நாங்கள் பள்ளிக்கு செல்வது எங்களுக்கு பயன் என்றும் நினைத்த அம்மா மிகவும் சுறுசுறுப்புடன் செயல்படுவார் . காலையில் அவரின் வேலை பளுவாக இருக்கும். இன்றைய அம்மாக்களுக்கு உதவிட ஆட்களும் , இயந்திரங்களும் உள்ளது. பாவம் அப்படி இருந்தும் பல அம்மாக்கள் வெளியில் வந்து வேனில் ஏற்றும்போதும் சோறு ஊட்டிக்
கொண்டே இருப்பதை காண முடிகிறது. பொறுப்புள்ளவர்கள் என்றும் அம்மாக்கள் தான் ... பெற்றுடுத்த குழந்தைகளை வளர்த்திடும் தாய்மார்களை பற்றித்தான் சொல்கிறேன் .
ஈடேது இணையேது அந்த உறவுக்கும் உயிருக்கும் இவ்வுலகில் எவருக்கும் .


அப்போது நாங்கள் வசித்த அந்தப் பகுதியில் ( அம்பத்தூர் ) அந்தளவு தெரு விளக்குகள் கிடையாது. ( வருடம் 1962 என்று நினைக்கிறேன் ) ஏதோ ஆங்காங்கே பெயருக்கு ஒன்று இரண்டு எரியும். அதுவும் சிம்னி விளக்கை விட குறைவாகவே வெளிச்சம் இருக்கும். அப்போதெல்லாம் சாதாரண பல்பு மட்டுமே. ஒருநாள் இரவு 7 மணி அளவில் , கடைக்கு சென்று மருந்து வாங்கிட என்று நினைக்கிறேன் ....போகும்போதே அமாவசை இருட்டு போன்று இருந்தது. சற்று பயம் தலை தூக்கியது ...எதிரில் யாராவது வந்தால்கூட தெரியாத அளவு கும்மிருட்டு. என்னுடன் சகோதரரும் வந்தார். ஒரு நூறடி
தூரம் சென்றவுடன் எதிரில் ஒரு வெள்ளை உருவம் வருவது போல இருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் இறுக கட்டிப் பிடித்துக் கொண்டோம் . தானாகவே பற்கள் தந்தி அடித்தன ....அவர்தான் முதலில் கவனித்தார் அந்த உருவத்தை ...எனக்கு முகமோ உடலோ தெரியவில்லை.

வெள்ளை நிறம் மட்டும் லேசாக தெரிந்தது. நான் உடனே பேய் மோகினி என்று சொல்வார்களே ..அதுதானா இது என்று நாங்களே மெல்லியக் குரலில் பேசிக் கொண்டோம் . அவ்வளவுதான் ...திரும்பி பார்க்காமலே ஓட்டம் பிடித்தோம் ..அந்த வேகத்தில் என்னுடைய காலணிகள் கூட எங்கே சென்றது என்று அறியாமல் ....பறந்து .. மூச்சிரைக்க வந்தோம் வீட்டிற்கு. எங்கள் அம்மா கேட்டார்கள் பயந்து கொண்டே என்ன நடந்தது என்று
உடனே பதிலும் சொல்ல முடியவில்லை என்னால் ..சகோதரர்தான் படபடப்புடன் சொன்னார் ...ஏதோ வெள்ளை உருவம் ஒன்று தெரிந்தது என்று ..பயத்தால் ஓடி வந்துவிட்டோம் என்றார் . அம்மா அப்படியே வெளியிலே வந்து எட்டிப்பார்த்தார். உடனே சிரித்தார்...

ஆமாண்டா ....வருவது அப்பாதான் ..அதுகூட தெரியவில்லையா ...என்றார் . நாங்கள் சற்று நடுக்கத்துடனே திரும்பிப் பார்த்தோம்.

அதற்குள் அந்த உருவம் எங்கள் வீட்டருகே வந்து விட்டது. அப்பாவேதான் ...அவர் அன்று வெள்ளை பேன்ட் , வெள்ளை சர்ட்டும் அணிந்தது அப்போதுதான் கவனித்தோம் . அவரோ என்ன பிரச்சினை வெளியில் நிற்கிறீர்கள் எல்லோரும் என்றார் . அம்மா உடனே நடந்ததை அப்படியே
விவரித்தார் சிரித்துக்கொண்டே . அப்பா உடனே ... ஏண்டா இப்படி பயந்தால் எப்படி .....இது தொடர்ந்தால் ....அதே அச்ச உணர்வு அப்படியே உங்களுக்கு என்றும் நிலைத்துவிடும் . தைரியமாக இருக்க வேண்டும் என்றார் . ( ஆனாலும் இன்றுவரை நான் மாறவே இல்லை என்பது ஒரு உண்மை தகவல் )

ஏதோ இப்படி பலபல நிகழ்வுகளுடன் , நல்லவை , கெட்டவை கலந்து மூன்று ஆண்டுகள் கடந்திட்டோம். பின்பு ஏற்பட்ட சில குடும்ப சூழ் நிலையால் , பல காரணங்களால் மீண்டும் சென்னை - புரசைவாக்கம் பகுதிக்கே கூட்டுக் குடும்பத்தில் வந்து இணைந்திட்டோம் . அங்குதான் நாங்கள்
பிறந்த வீடும் ஆகும் . அங்கு ஒரு தனியார் பள்ளியில் 4வது வகுப்பிலும் , சகோதரர் 5ம் வகுப்பிலே சேர்ந்தோம்.
அப்போது எங்கள் தாத்தா அப்பகுதியில் பேரோடும் புகழோடும் விளங்கியவர். அதனால் எங்களுக்கு பள்ளியில் சேர்வது மிக எளிதாக அமைந்தது .

அப்போதெல்லாம் ஒரு வருடத்திற்கு கட்டணமே 15 - 30 ரூபாய்தான் . இந்த அளவிற்கு புத்தக சுமையும் இல்லை அக்காலத்தில் .

அங்கு அம்பத்தூரில் எங்கள் வீட்டிற்கு எதிரில் , சிறிது தள்ளி சினிமா ஓலை கொட்டகை ஒன்று இருந்தது. கோகுல் என்று பெயர் என நினைக்கிறேன் . சுற்றிலும் வெட்ட வெளியே .

இரவில் வீட்டு வாசற்படியில் உட்கார்ந்தால் பல படங்களின் பாடல் , வசனங்களை கேட்டுவிடுவோம். பல நேரத்தில் அங்கு சென்று 20பைசா

கொடுத்து மணலில் உட்கார்ந்து படம் பார்ப்போம். எனக்கு ஞாபகம் ..வெண்ணிற ஆடை , படகோட்டி , பழனி , சாரதா ...கற்பகம் போன்ற பல

காவியங்களை முதல் நாள் முதல் காட்சியிலே பார்த்துவிடுவோம் . என்ன ஒன்று பாதிபேர் படம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே அப்படியே மணலில் படுத்துவிடுவர் . மறக்க முடியாத நினைவுகள் அவை என்றும் எனக்கு ...எழுந்திர்க்கும்போது எங்கள் சட்டையில் சிவப்பு நிறம் பற்றி நிறம் மாறி இருக்கும் ..காரணம் அங்கே அமர்ந்தவர்களில் பலர் வாய்நிறைய வெற்றிலை புகையிலை போட்டு சுவைத்தப்பின் மிச்சத்தை அங்கேயே துப்பிவிடுவார்கள், அது அறியாமல் நாங்களும் சிறிது சாய்ந்து கொண்டே படம் பார்ப்பதால் வரும் பின்விளைவு...

புரசைவாக்கம் வந்தவுடன் சூழலே வேறுமாதிரி இருந்தது. பெரிய கூட்டுக் குடும்பம் . சுமார் 20 க்கும் மேற்பட்டோர் கொண்ட ஒரே குடும்பம் . வித்தியாசமான காலம் .பல அனுபவங்கள் .

விரிவாக சொல்கிறேன் நகர வாழ்க்கையையும் , பல இன்ப , சோக நிகழ்வுகளையும் இனி படிப்படியாக , அடுத்த பகுதியில் ...

அதற்குள் நானும் வளர ஆரம்பித்துடுவேன் இல்லையா .....?

மீண்டும் சிந்திப்போம்


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (3-Jul-15, 9:53 pm)
பார்வை : 125

சிறந்த கட்டுரைகள்

மேலே