எரிதழல் வீழின் -3 கார்த்திகா

எல்லோருடைய கேள்விகளுக்கும் நாம் பதிலாய் இருப்பதனால்தான் எல்லோரும் கேள்வியே கேட்கிறார்கள்.நாமே கேள்வியானால்?

நிச்சயம் பதில் வருமா என்று தெரியாது....வாயடைத்தல் நிகழலாம் ..சமீபத்தில் வியந்த திரைப்பட வரிகள்..

எல்லாவற்றிற்கும் அடி பணிந்து போக வேண்டுமென்று கட்டாயம் ஏதும் இல்லை.


"கடமைகளுக்காக
கனவுகளைக் கொன்றால்
நீ எங்கே?"


உருட்டலும் மிரட்டலும்தான் வாழ்க்கை என்றால் கைதியாய் சிறை கொள்ள ஏன் பிறந்திட வேண்டும்?சில நாள் இன்பமும் வாழ்நாள் முழுக்க வாழத் தடையும் விதித்தால் மறுப்பேதும் சொல்லாமல் நீ
மறைத்திட கண்ணீர் மட்டும் ஏன் வெளியில்?

மென்மை குணம் உன்னுடையது என்று பேசாமல் மௌனம் கொண்டால் தலை ஆட்டும் பொம்மை என்பர்.முரண்டு பிடித்தால் ஆகாது....


உன்னை இழிவுபடுத்தினால்
எக்காரணம் கொண்டும் ஏற்காதே
தன்மானம் உன் சுவாசமாகட்டும்

உன்னை தரம் தாழ்த்தினால்
உயர்த்தும் வரை உயரு
பேசுபவர் காது கிழியும்வரை
உன் குரல் ஓங்கட்டும்

உனக்காக ஒரு நிமிடம்
வாழ நினை பிறரை
வாழ வைக்க உன் வாழ்க்கையை
எதற்காக தொலைக்கிறாய்?

மறந்தும் உன்னை மறவாதே
உன் வழியும்
வழித்துணையும் நீயே
காரிருள் அகற்றும்
ஒளி வெள்ளமும்
உன் கைகளில்!

ஒளியோடு பிறந்தவள் இருள் போர்த்துவது தகுமா?

பிறிதொன்றும் பிறழாததில்,

இதழோடு இதழ் இறுக மொட்டு கட்டி அதிகாலையில் அவிழும் சின்னப் பூக்கள் மடியேந்துகின்றன என்னை..சில நொடிகள் பூக்களில் சூல் கொள்கிறேன்........


மூடிய இமைகளை முத்தமிட்டு தொடங்கும் கனாக்களை கொஞ்சம் வாசிக்கிறேன்....உறக்கம் தழுவ மறுக்கும் ஊமை நொடிகளில் கனவுகள் கொண்டே யாசித்து தீர்கிறேன்...


ராகங்கள் செவிகளை நிறைக்கும் போது நான் வெகுதூரம் பயணித்துவிடுகிறேன் வெற்று வளியில் உயிர் துழாவியபடி ..........


வானம்பாடியும் நானும் ஒரு வைகறையில் சந்தித்தோம் ..விடியலுக்கு குரல் தந்தது அது..கோடி விண்மீன்களை அள்ளி வான் தட்டில் வைத்த போது ஒரு சூரியனுக்கு பிறப்பு தந்தேன் நான் ...


பார்க்கும் நிறங்களை எல்லாம் திரட்டி மின்னல் நூலில் நிலாக்கள் கோர்த்தபோது வானவில் அள்ளிச் சென்றது...


எங்கோ ஒரு மரத்தின் இலை கீழே விழும்போது அதன் அழுகுரல் என் காதுகளை மட்டும் கிழிக்கிறது..


பசி மரத்து நெஞ்சுக் கூட்டில் காற்றடைத்த என் சக மனிதனின் வேள்வியில் வெந்தணலாகிறேன் ...


பால் இல்லா முலைக் காம்புகளை தடவும் பச்சிளம் சிசுவின் பசி தோற்கடிக்கிறது என்னை ....


சிவப்பினை உணரும் போதெல்லாம் என்னவள் ஒருத்தி சிதைக்கப்பட்ட இரத்த வாடை என் செல்களை அறுக்கிறது...


இழி சொற்களையெல்லாம் கடைந்து உப்புக் காற்றில் தேய்த்தெடுத்து அதன் ஊறல்களில் தடவல்களின்
எரிச்சல்களை சமன் செய்து விடலாம்...


விரியாத கருவறைகள் உடைந்து சிதறும்போது சிந்திய துளிகளில் நான் மரித்து
நாம் கூர் தீட்டுகிறோம்...


நீட்டிய கரங்களை விலங்கிடாமல் சிறை செய்யும் விரல்களில் நான் தொலைகிறேன்...


பிறிதொன்றும் பிறழாத விழி நரம்புகளில் சுயத்தைத் தேக்கி வைத்து சொட்டு சொட்டாய் உயிர் கொடுக்கிறேன் எல்லை கோடுகளில் அழிந்து கொண்டே ..




-மீண்டும் எரியும்

எழுதியவர் : கார்த்திகா AK (3-Jul-15, 10:07 pm)
பார்வை : 139

சிறந்த கட்டுரைகள்

மேலே