பொம்மை கூட்டம்

வெயிலின் மஞ்சளைப் பூசியிருந்தக் குட்டிக் குட்டி கூறை வீடுகளிடையே, நெற்றித் திலகச் சிவப்பாய் சில ஓட்டு வீடுகளும்,எங்கோ பளிச்சென மினுக்கிய மூக்குத்தியாய் ஓரிரு மச்சு வீடுகளும். புடவை பாடர்களாய் சுற்றிலும் சின்னச் சின்ன சந்துகளும் போக; வானொலி அலையில் செந்தூரப்பூவே… செந்தூரப்பூவே…ன்னு இளையராஜாவின் இசை இழையோட;பொக்கவாய் தாத்தா எல்லாத்தையும் அசைபோட; உண்டியல்ல, சீரக டப்பாவுல போட்டு வெச்சுருந்த சில்லறை எல்லாம் கல்லாவுல சேர; வகையா தேன் மிட்டாய், குருவி ரொட்டி, எலந்த வடைன்னு பொட்டு பொடிசுகளை தந்திரமா சுண்டி இழூத்திட எத்தனை முறை சுவைத்தாலும் தேனா ஒட்டிக்கும் அந்தத் தேன் மிட்டாய் பாகுக்கும், வாயில வச்சதுமே சுள்ளுன்னு சுருண்டுரும் அந்த எலந்தப் புளிப்புக்கும் வசமான நாக்கு முச்சந்திய சந்திக்கிறப்பவெல்லாம் ச்ச்…ன்னு சப்புகொட்ட மறக்காது. ரயில ‘கூகூகூ…’ன்னும், பஸ்ஸை பாங்…பாங்…ன்னும் சந்து பாதையில அட்டை பூச்சியா வளைஞ்சு நெளிஞ்சு போகும் அந்தச் சின்ன பசங்க வால்புடி வண்டி டிஷ்யூம்…டிஷ்யூம்…ன்னு பூட்டுன வீட்லேருந்து சத்தம் கேட்டுசடன் பிரேக்குல சட்டுங்க, அது என்னாவாயிருக்கும்!ன்னு மொத்தமும் கள்ளத் தனமா ஜன்னல் வழியா எட்டிப் பார்க்க,உள்ளே இருந்த மோகேஸ்வரன் ஜன்னல்ல எட்டுன பத்து தல ராவணனைப் பார்த்து பதைச்சு நின்னான்.

“டேய் மோகேஸீ என்னடா பண்ணிட்டுருக்கே…?”

“……”

“என்னடா அது…!”

“ஓ…இதுவா…இதோ இந்த நீலக் கலரு பொம்மைதான் ஹீரோ, வெள்ளை கலரு அப்பா, கறுப்பு வில்லன், சிவப்பு கலரு தான் அம்மணி…”என கண்களை சிமிட்டினான்.

“அப்ப சிரிப்பாளு எங்க?”மோகேஸ் திரு திருவென முழித்து விட்டு உடனே

“கொஞ்சம் இருங்கடா…” என தையல் மிஷினில் தொங்கி கிடந்த மஞ்சள் பையில் துணிக் குப்பையை கிளறிப் பல வண்ணத்தில் இருந்த ஒரு துண்டுத் துணியைத் தேடி எடுத்தான். ஓலக்குச்சியை ஒரு சாண் ஒடித்து உச்சியில் ஒரு சிறு உருண்டையாய் உருட்டித் துணியைச் சுற்ற அது தலையானது. அதன் மேலே கலர் துணியைக் கட்டி மீதியை இரு புறமும் இழூத்து விட அது இரு கைகளாகி உருவம் கொள்ள களூக்கென சிரிச்சான் கலியன்.

“ஏய்… சிரிப்பாளு வந்துட்டாம்பா”என மொத்தமும் ஜன்னலில் சிரித்தது. மோகேஸீ அந்தக் கலர்
பொம்மையை பலகை மேடையில் அடிக்குச்சியைப் பிடித்து ஆட்ட அந்தப் பொம்மை ஆட்டம் போட்டது

“ஏ… டில்லாங் டோம்பரி…ஏ… டில்லாங் டோம்பரி…டப்பாங் குத்து ஆட்டம் ஆடுவேன்…ஷோக்கா பாட்டுப் பாடுவேன்…நேக்கா நோட்டம் போடுவேன்…”என மோகேஸ் பாட

“நேக்கா நோட்டம் போடுவேன்…”என மொத்தமும் அந்த ஜன்னலின் வழியே கோரஸில் லயித்தது. கூத்து கூரையைக் கிழிக்க அந்த விரிசலில் வானமும் எட்டியது. வெளியே பூட்டியிருந்தக் கதவுகள் திறக்கும் சத்தம் கேட்டு

“டேய் போங்கடா… போங்கடா அம்மா வந்திருச்சு” வென மோகேஸ் எச்சரிக்க ஜன்னல் கம்பிகளில் காந்தமாய் ஒட்டிக்கிடந்த மொத்தமும் அங்கிருந்து விலக்கிக்க மறுத்தது. படாரென திறந்த கதவிலிருந்து உடல் நிலை முடியாத மோகேஸீ அப்பனைப் பிடித்தவளாய் உள்ளே நுழைந்தவள் ஜன்னல் தலைகளைக் கண்டு கடுகென வெடித்தாள். அடுத்த நொடி பத்தும்பத்துத் திசையாய் பறந்து பஞ்சு மிட்டாய்க்கெனக் கூடியது.
தள்ளுவண்டியில் வேகமாய் நெருப்புப் பறக்க; அதன் மேல் சுற்றின அகல வட்டாவிற்குள் சீனியைத் தெளிக்க; நொடியில்சிலந்தி வலையாய் மிட்டாய் பின்னியது. கண்முன்னே ஜாலங்கள் நிகழ்ந்தும் அவர்களது மனம் முழுவதும் ஜன்னல் கம்பிகளிலேயே ஒட்டிக் கிடந்ததை அந்த மிட்டாய் வண்டி உணர்ந்து டிங்…டிங்… என மணி ஓசையில் எழுப்பியது.

“ச்சே… நல்லா இருந்துச்சுல்ல”எனக் கலியன்

“ஹுக்கும்… எங்கெ அதுக்குள்ளதாங் மோகேஸீ அம்மா வந்துடுச்சே”வென சுந்தரம் சளித்தான்

“ஆமான்டா”என உச்சு கொட்டியிருக்க
பின்னிப் படர்ந்த பஞ்சு மிட்டாயினை ஒரு குச்சியில் சுற்றிச் சுற்றி எடுக்கப் பெரியதொரு ரோஸ் முண்டாசை அது கட்டிக்கொண்டது. அதற்குள் ஒரு பஞ்சு மிட்டாயின் தலையை நசுக்கி மோகேஸைப் போல பொம்மை விளையாட்டைக்கட்டினான் சுந்தரம். அதைப் பார்த்து அனைத்தும் தலையை நசுக்கிக் கொள்ள சுவாரஸ்யம் கணப்பொழுதில் கரைந்துஇளகியது. அதை வேடிக்கை பார்த்த மிட்டாய் வண்டி குழப்பத்தில் அங்கிருந்து அகன்றது.
மோகேஸின் பெற்றோர்கள் ஆஸ்பத்திரிக்குப் புறப்பட்ட அடுத்த நொடியில் மறைந்திருந்த பத்து தலைகளும் ஜன்னல் வழியே எட்டுவது வழக்கமாகிவிட, மோகேஸின் அம்மா பல தடவை வசைந்தும், சாக்கடை அடைப்பெடுக்கும் கொம்பினால் சில தடவை விளாசியும் கூட வேடிக்கை வாடிக்கையானது. ஒருநாள் ஆவலாய் ஓடியக் கால்கள்மோகேஸின் வீட்டு வாசலில் கூடியிருந்தக் கூட்டத்தைக் கண்டு தூரமாய் தயங்கி நின்றது. ஒருபுறம் தென்னை ஓலையைமுடைந்திருக்க; மறுபுறம் மோகேஸின் அம்மா ஒப்பாரி வைத்திருந்தாள். பக்கத்தில் மோகேஸி

“அப்பா…அப்பா…” என அழுது தேம்பிக் கொண்டிருந்தான். தப்பட்டையை வார்பிடிக்க மூட்டிய நெருப்பு ஈரக்காற்றில்அங்குமிங்குமாய் அலைக்களித்தது. எல்லோரையும் சிரிக்க வைப்பவன் அழுது நிற்பதைக் காண சகிக்காத மேகக்கூட்டம் தூரல்களை சிந்தியது. எலவு வீட்டிலிருந்து தீட்டென ஒன்றை குப்பையில் வீசீனார்கள். உரிமை கொண்டாடி அதன்உச்சியில் கோழி ஒன்று ஏறி நின்று கழுகுப் பார்வை பார்த்தது. அதை மோப்பம் பிடித்து வந்த நாயைப் பார்த்ததும் கோழி கொக்கரித்துக் கொண்டே தெறித்து ஓட, குப்பையை முகர்ந்த நாய் ஒற்றைக் காலைத் தூக்கி நனைத்து விட்டுச் சென்றது.பொறுத்திருந்தக் கோழி நிதானமாய் வந்து குப்பைகளை காலாலும், அலகாலும் குத்தி ஆராய துணிக் குப்பைகள் வழிந்தது.அதிலிருந்து மோகேஸின் நீலக் கலரு பொம்மை கீழே உருண்டு விழ

“டேய்…அது நம்ம மோகேஸீ ஹீரோடா”என சுந்தரம் ஓடிச் சென்று அதைக் கையில் எடுத்தான். கோழியைத் தூர விரட்டிவிட்டு தீட்டுக் குப்பை என்றும் பாராமல் அதில் மேலும் கிளற மற்ற பொம்மைகளும் கைவசமானது. குப்பையில் கோமேதகம் கிடைத்த சந்தோஷம் மொத்தமும் குதித்தது. புரியாது முழித்தக் கோழி மீண்டும் அதன் ஆராய்ச்சியைத்தொடங்கியது.
குச்சிப் பொம்மைகளை கையில் வைத்துக் கொண்டு இரவு பகலாய் ஒத்திகைப் பார்த்தும், வேடிக்கைக் காட்டியுமாய் இருக்க மோகேஸின் லாவகம் யாருக்கும் கைக்கு எட்டவில்லை. அது வெறும் பொம்மை விளையாட்டாகவே இருந்தது.அதனுடனான போராட்டமே மிஞ்சிட எண்ணம் மோகேஸைத் தேடி அலைப் பாய்ந்தோடியது. அவனது அம்மா வீட்டைபூட்டிக் கொண்டிருந்தாள். இன்று மாறாக மோகேஸ் வீட்டிற்கு வெளியே நின்றிருந்தான். பொம்மைகளுடன் பரிதவித்து நின்றவர்களின் மீது அவனுடைய வெற்றுப் பார்வை பட்டது.

“நேரமா போனத்தாங் வேல கெடைக்கும் சீக்கிரம் வா மோகேஸீ”என அவனது அம்மா அவசரப்படுத்த

“ம்ம்…” என கையில் தூக்கு வாளியைச் சுமந்து நடை ஓட்டமாய் பின் தொடர்ந்து போனான். அவன் வீட்டின் மீது வெயில் கொஞ்சம் கொஞ்சமாய் மஞ்சளைப் பூசியது. கதவில் ஆடிய பூட்டில் மஞ்சள் ஒளிர்ந்து கண்களை கூசச் செய்தது.

எழுதியவர் : அபிமான் (3-Jul-15, 10:49 pm)
Tanglish : pommai koottam
பார்வை : 209

மேலே