ஊர் கூடி

ஊர் கூடி...
===============================================ருத்ரா

ஊர் கூடி தேர் இழுப்பது தான்
சமுதாயம்.
இழுப்பது எல்லாம்
மந்தைகள் என்றால்
தேரில் இருப்பது அஞ்ஞானம்.
இழுப்பவர்களுக்கு
ஞானம் வந்துவிட்டால்
தேர் இல்லை.தெரு இல்லை.
ஊர் இல்லை.. சாதியின்
உறுமல்களும் இல்லை.
இருப்பது என்ன என்று
தேர் உச்சியில் இருந்த‌
ஒரு காக்கை
கரைந்து கரைந்து கத்தியது.
ஆளுக்கொரு ஒரு கூழாங்கல் தரச்சொல்லி
கூவி கூவி கத்தியது.
கூழாங்கல்லும்
குவிந்தது காணிக்கையாய்.
காக்கை தாகம் தணித்துக்கொண்டது.
மீண்டும் கத்தியது காக்கை.
என்ன சொல்ல வருகிறது?
அடியில் ஆழத்தில் நீர்.
வெயில் உறைக்கிறது.
வடம் இழுப்பவர்கள்
நுரை தள்ளி விழி பிதுங்கி
மூச்சுப்பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
நாலு முறை
கா கா கா கா
என்று கத்திவிட்டு காக்கா பறந்தது.
இதுவே
நாலு வேதமாய் தேர் உச்சியில் !
மந்தைகள்
இன்னும் இழுத்துக்கொண்டிருக்கின்றன.

__________________________________________________

எழுதியவர் : ருத்ரா (4-Jul-15, 7:38 am)
Tanglish : oor koodi
பார்வை : 82

மேலே