வேங்கைப் பூவிரவிக் கேச மணிந்த கிளரெழிலோள் - கைந்நிலை 12

கை' என்பது ஒழுக்கம் எனப் பொருள்படும். எனவே, கைந்நிலை என்பதற்கு 'ஒழுகலாறு' என்று பொருள் உரைக்கலாம். இந்நூலும் ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே. ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன. பாடல் அளவைக் கொண்டும், நூற் பொருளை ஒட்டியும் இதனை 'ஐந்திணை அறுபது' என்பதும் பொருந்தும். ஐந்திணை பற்றிய வெண்பா நூல்கள் வேறு இருப்பதால், அவற்றிலிருந்து வேற்றுமை தெரிவதற்காக, ஆசிரியரே 'கைந்நிலை' என்று இந்நூலிற்குப் பெயர் சூட்டி இருக்கலாம்.

இந்நூலில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற வரிசை முறையில் ஐந்திணைகளும் அமைந்துள்ளன. இந்நூற் செய்யுட்களில் 18 பாடல்கள சிதைந்துள்ளன (1, 8,14-17, 20, 26-35, 38). இவற்றுள் மூன்று பாடல்கள் ஒரு சொல் அளவில் சிதைவுபட்டவை. ஏனைய பதினைந்தும் அடிகளும் சொற்களும் பல வேறு வகையில் சிதைந்து காண்கின்றன. எவ்வகையான சிதைவும் இன்றி இறுதியிலுள்ள நெய்தல் திணைப் பகுதியில் உள்ள பாடல்கள் அமைந்துள்ளன.

இந் நூலைச் செய்தவர் மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார் என்று நூல் இறுதிக் குறிப்பில் காண்கிறது. இவர் தந்தையார் காவிதியார் எனப்படுதலின், அரசனால் 'காவிதி' என்னும் சிறப்புப் பெயர் அளிக்கப்பட்டிருக்கலாம். மாறோக்கம் என்பது கொற்கையைச் சூழ்ந்துள்ள பகுதியைக் குறிக்கும். எனவே, இவர் கொற்கையை அடுத்த முள்ளி நாட்டு நல்லூரில் வாழ்ந்தவராவர்.

1. குறிஞ்சி

தலைமகள், இரவுக்குறி ஏதமுடைத்து என்று அஞ்சித் தோழிக்குக் கூறுதல்.

நாக நறுமலர் நாள்வேங்கைப் பூவிரவிக்
கேச மணிந்த கிளரெழிலோ ளாக
முடியுங்கொ லென்று முனிவா னொருவன்
வடிவேல்கை யேந்தி வரும். 12 - பல விகற்ப இன்னிசை வெண்பா

பொருளைப் புரிந்து கொள்ள சொற்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டன.

நாக நறுமலர், நாள்வேங்கைப் பூ,விரவி,
கேசம் அணிந்த கிளர்எழிலோள் ஆக,
முடியும்கொல்?’ என்று முனிவான் ஒருவன்
வடிவேல்கை ஏந்தி, வரும். 12

பொருளுரை:

புன்னையின் நல்ல மலரையும், அன்றலர்ந்த வேங்கைப் பூவினையும் கலந்து, கூந்தலில் அணிந்து விளங்கிய கிளர்ச்சியூட்டும் வனப்புடையோளாகிய நம் தலைவியின் உடலானது அழிந்து விடுமோ என்று ஐயம் கொண்டு நம் தலைவனாகிய ஒப்பற்றவன் தன் உயிர் வாழ்க்கையை வெறுத்துக் கூர்மையான வேலைக் கையில் தாங்கி இரவில் வருவான். ஆதலால் இவ்வரவை நான் அஞ்சுகின்றேன், என் அச்சத்தை விலக்கு என்றாள்.

விளக்கம்:

புன்னை மலரும் வேங்கை மலரும் விரவிப் புனைந்த கூந்தலுடைய ’எழிலோள்’என்றாள் தலைவி. இது தன்னைப் படர்க்கையாகக் கூறியது. நான் பிரிவாற்றாமையால் இறந்து விடுவேன் என்று கருதி இரவில் தனியாக வருகின்றான் தலைவன் எனக் கூறினாள். என்னாக முடியுங் கொல் என்று கருதித் தன்னுயிரை வெறுத்து வருகின்றான் என்பதை விளக்க ‘முனிவான் ஒருவன் வரும்’என்றாள்.

கொடிய விலங்கினங்களும், அரவும், பேயும் வழங்கும் ஆற்றிடையும் கான் யாற்றினிடை யும் ஏற்று இழிவுடை நெறியினும் இரவில் வருவது தன்னுயிரை வெறுத்தவர்க்கே தகுதியாம் என்பது தோன்றக் கூறியது இது.

இவ்வாறு வந்து என்னுயிரைக் காக்கின்றான்; என்னுயிரோ அவனுயிராக இருக்கின்றது; இதனைநீ குறியாது இரவில் வருக எனக் கூறினாய் எனத் தோழிக்குக் குறிப்பால் அறிவித்தது இது.

புன்னை மலரும் வேங்கை மலரும் புனைந்த கூந்தல் என்றது முன் தழையுங் கண்ணியும் கொண்டு வந்த போது புன்னை மலரையும் தலைவன் கூந்தலிற் புனைந்தது குறித்துத் கூறியது.

வேங்கைமலர் மலைநாட்டு வாழ்வார்க்குரியது; அம்மலரைப் புனைவது அம்மகளிரியல்பு.

புன்னை நெய்தற்குரியது. வேங்கை குறிஞ்சிக்குரியது. இவ்விரண்டும் புனைந்த எழிலோள் என்றது நெய்தற்குரிய இரங்கலும் குறிஞ்சிக்குரிய புணர்தலும் என்னுள்ளத்தில் விரவியிருக்கின்றது எனக் குறிப்பால் உணர்த்தப்படுகிறது எனவும் கொள்ள வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Jul-15, 2:45 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 286

சிறந்த கட்டுரைகள்

மேலே