மீரா மொகைதீன் டீக்கடை

அந்த டீ கடையின் முதலாளி மீரா மொகைதீன். அவனுக்கு வயது அனேகமா 23 லிருந்து 25 வயசுக்குள்ள இருக்கும் .முகத்தில் தாடி மீசையுடன் இருந்தான்.நல்ல நிறம் .நல்ல வளர்த்தி ..இன்னும் நிக்காஹ் ஆகவில்லை . ஸ்டவ் அடுப்பில் ஒன்றில் பால் பாத்திரமும் மற்றொன்றில் டீ பாத்திரமும் சூட்டில் இருந்தது.அடுப்பு தீயின் அளவை கொஞ்சம் சுருக்கி வைத்தான்.இனிமே கடைக்கு சாயங்காலம்தான் ஆட்கள் வருவார்கள் அதுவரை கொஞ்சம் ஓய்வுதான்.காய்கறி கடைக்கு போய் பஜ்ஜிக்கு தேவையான வாழைக்காய்..மிளகாய் ...தேங்காய் எல்லாம் வாங்கிட்டு வந்து வெட்டிக் கொண்டிருந்தான் .

``அஸ்ஸலாமு அலைக்கும்" இஸ்மாயில் வஸ்தாத் நின்று கொண்டிருந்தார் .அவனுக்கு தூரத்து சொந்தம் .பக்கத்து ஊர்க்காரர்
``வா அலைக்கும் அஸ்ஸலாம் " முகமன் கூறி அவருக்கு டீ போட்டுக் கொடுத்தான்.

டீ சாப்பிட்டுக் கொண்டே இஸ்மாயில் கேட்டார் ``போனவாரம் கடையில ஏதோ பிரச்சினை என்று கேள்விப் பட்டேன்,
இப்ராஹிம் ராவுத்தர் சொன்னாரு "

``ஆமாம் வாப்பா , வழக்கமா டீ சாப்பிட வருகிறவர்தான் ...கடையில நம்ம மத பாட்டு மட்டும் போடுவோமல்லவா..அவரு எல்லா மதத்து பாட்டையும் போடலாமென்று சொன்னார்...எல்லாரும் டீ சாப்பிட வருகிற இடம்தானே என்றார் .''

``அப்புறம் என்னாச்சி ''

``அந்த நேரத்தில இருந்த நம்ம பசங்க கொஞ்சம் ஆவேசம் ஆகிட்டாங்க, அப்புறம் நாசுக்கா நான் சமாளிச்சு அனுப்பினேன் ''

``அதெப்படி ஒரு முஸ்லிம் கடையில் மற்ற மதப் பாடல்கள் போடுவது...டீ குடிக்க வந்தா வாரானுவ இல்லைன்னா போகட்டும்" இஸ்மாயில் இதை சொல்லி முடிப்பதற்குள் அவர் முகமெல்லாம் சிவந்து விட்டது.

டீக்கு காசு கொடுக்கபோனபோது வேண்டாமென்று மீரா மொகைதீன் சொல்லவே விடை பெற்றுக் கொண்டார்இஸ்மாயில்.அவர் போன பிறகு மீராவின் மனது கணக்குப் போட்டுப் பார்த்தது ..அந்த சம்பவத்துக்கு பிறகு கடைக்கு அதிகமாக ஆட்கள் வருவதில்லை...அவன் கடையில் நடந்த பிரச்சினை கொஞ்சம் பரசியமாகி வியாபாரத்தை ரொம்பவே பாதிச்சு விட்டது..என்னவோ வீறாப்புல இருந்தாலும் நஷ்டம் அவனுக்குத்தான் .முன்பெல்லாம் 10 லிட்டர் பால் செலவழியும் .இப்ப வெல்லாம் 5 லிட்டர் பாலுக்கே வியாபாரம் ஆகமாட்டேங்குது.

வேலைக்கார பையனை கடையை பார்க்கச் சொல்லிவிட்டு சாயுங்கால தொழுகைக்கு பக்கத்திலிருக்கும் பள்ளிவாசல் நோக்கிச் சென்றான் . தொழுகை முடிந்து வெளிய வந்த மீரான் பழக்கமான குரல் அழைக்கவே திரும்பிப் பார்த்தபோது அக்பர் நின்று கொண்டிருந்தான்.

அக்பர் அவனுடைய பால்ய காலம் தொட்டே நண்பன்.சொந்தமெல்லாம் கிடையாது,பக்கத்து வீடு.அக்பருக்கு அப்பா பஜாரில் செருப்பு கடை வைத்திருக்கிறார் .அக்பரும் மீரானும் பள்ளி இறுதி வகுப்பு வரை ஒன்றாகவே படித்தவர்கள் .மீரானுக்கு அதற்கப்புறம் படிக்க முடியாமல் போக அக்பர் கல்லூரியில் போய் படித்து இப்ப ராணுவத்தில் இருக்கிறான்.வேலையில் சேர்ந்து ஒரு வருடம் ஆகிறது.இப்போது அஸ்ஸாம் ரெஜிமெண்டில சிப்பாயாக இருக்கிறான்.

அக்பர் மிகவும் புத்திசாலி .பேருக்கு ஏற்றார் போல் பள்ளியில் படிக்கும் போதே அவனுக்கு ஏகப்பட்ட இந்து முஸ்லிம் நண்பர்கள் அவனுக்கு குர் -ஆனோடு கீதை தெரியும் , பைபளில் கூட எண்ணையும் அதிகாரத்தையும் சொன்னாலே வசனத்தைச் சொல்லக் கூடிய அளவுக்கு தேர்ச்சி பெற்றிருந்தான் .எல்லோரும் அவனின் விமர்சனமான பேச்சு , எல்லோரிடமும் பழகும் தன்மை மற்றும் சகிப்புத் தன்மை இதையெல்லாம் பார்த்து அவனை ஒரு கம்யூனிஸ்ட் என்றெல்லாம் கூட சொல்வார்கள்...எது என்ன ஆனாலும் தொழுகைக்கு போவதை மட்டும் அவன் தவறவே விட மாட்டான்.

``ஏ!எப்படா ஊரிலிருந்து வந்த "
``இன்னைக்கு காலையில் தான் வந்தேன் "
``வா கடைக்குப் போகலாம்'- மீரான் கூப்பிட ,இருவரும் கடைக்கு வந்து சேர்ந்தார்கள்.

``வியாபாரமெல்லாம் எப்படி நடக்குது '
முன்னாடி நல்ல போச்சுது .இப்ப கொஞ்சம் மந்தம்தாம் '- மீரான் குரலில் வருத்தம் மிகுந்து இருந்தது .
``ஏன் என்னாச்சி ''

மீரான் நடந்த சம்பவத்தை- பாட்டு போடுவதில் வந்த பிரச்சினையை கூறினான்.எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டு வந்த அக்பர்,

``டே, நம்முடைய நோன்புக் காஞ்சியைச் சாப்பிட்டதும் முஸ்லிமாக யாரும் மாறிவிடவில்லை.....கிருத்துமஸ் பலகாரங்களை சாப்பிட்டதனால் ஒரு ஹிந்து கிருத்துவனாக மாறிவிட்டானா ...எல்லாம் ஒரு சக மனிதர்களின் அன்பின் வெளிப்பாடு....நாகூர் ஹனிபா வின் பாடல்களை எத்தனையோ பிற மதத்தவர்கள் வீட்டில் வாங்கி வைத்து கேட்டு ரசிக்கவில்லையா..கிருத்தவர்கள் சர்ச்சுக்கும், ஹிந்து - ஆலயத்திற்கும் போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள் ...அதனால பொழைக்கிற வழியைப் பாரு.. கிருத்துவப் பாடலைக் போடுவதாலோ இந்து சுப்ரபாதம் போடுவதாலோ நீ முஸ்லிம் இல்லை என்று ஆகி விடாது.உங்கடைக்கு நாலுபேர் கூட வருவாங்க இல்லையா ...எல்லாவற்றுக்கும் பொறுமை வேண்டும் ''

``சகிப்புத்தன்மை குறைவாக இருப்பதால்தான் வாழ்வில் முக்கியமான முடிவுகளை வேகமாக எடுக்கின்றோம்.பின்னர் கவலை மேகங்கள் நம்மைச் சூழ்ந்து கொள்கின்றன.அவை நம் நிம்மதியைப் பறித்து விடுகின்றன ''.

``திருக் குர்-ஆன் கற்றுத் தரும் அழகிய பிரார்த்தனை களில் ஒன்று என்ன தெரியுமா மீரான் ''

``எங்கள் இறைவனே ! நீ எங்கள் மீது பொறுமைப் பொழிவாயாக. எங்கள் பாதங்களை உறுதிப் படுத்துவாயாக'' (2:250). இது மறையில் இரண்டாம் அதிகாரத்தில் இருநூற்றி ஐம்பதாவது துஆ(வசனம்) என்று சொன்ன அக்பர் மேலும் எட்டாம் அதிகாரத்தில் நாற்பத்தி ஆறாவது து ஆவையும் ,பதினொன்றாம் அதிகாரத்தில் நாற்பத்தி ஒன்பதாவது து ஆவையும் தெளிவாக மீரானுக்கு விளக்கிச் சொன்னான்.

``பொறுமையை மேற்கொள்ளுங்கள் .திண்ணமாக ...அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான் ''(8:46)
இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு இறைவனின் உபதேசம் என்ன தெரியுமா `` எனவே பொறுமையை மேற்கொள்வீராக "(11.49).

மீரானுக்கு அகபரின் பேச்சைக் கேட்டு மலைப்பாகவும் இருந்தது, அதே சமயம் குழப்பமாகவும் இருந்தது.

``இப்ப நான் என்ன செய்யட்டும் ,அக்பர் "

``எந்த பாட்டுகள் போடாததால உன்வியாபாரம் மந்தமாச்சுதோ அதே பாட்டுகலாளையே வியாபாரத்தைப் பெருக்கு .
அதிகநேரம் நம்முடைய பாடல்களைப் போடு .இடையிடையே மற்ற மார்க்கத்தினரின் பாடல்களையும் போட்டுப் பார் ".
***************************************
அக்பர் வந்திட்டுப் போய் ஒரு மாதமிருக்கும்..இப்பொழுதெல்லாம் மீராவினுடைய கடை பெஞ்சு காலியாகவே இருப்பதில்லை. எப்போதும் கடையில் நாகூர் ஹனிபாவோடு சூலமங்கலம் சகோதரிகள் ,சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோர் கச்சேரி செய்கிறார்கள் . மேலும் கிருஷ்ணபிள்ளையின் ``கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப் படும்'' என்ற இயேசு பாட்டும் கேட்க முடிகிறது....அவன் எடுத்த இந்த முடிவுக்கு நல்ல வரவேற்பு இருந்தது . face bookilum , whats app ilum மீரா மொகைதீன் டீக்கடை பற்றியும் அங்கு நடக்கும் மூன்று மதங்களின் இசை சங்கமத்தைப் பற்றித்தான் ஒரே பேச்சு....

டிரிங்...டிரிங்...
கைபேசி ஒலித்தது...
``ஹலோ ''
``மீரா மொகைதீன் டீக் கடையா '
``ஆமாங்க''
``நாங்க தலைமைச் செயலகத்திலிருந்து பேசுகிறோம் ..உங்களின் சமூக நல்லிணக்க முயற்சிக்கு முதல்வர் உங்களை சந்தித்து விருந்தும் விருதும் கொடுக்க விரும்புகிறார்கள் ..இது சம்பந்தமாக பேச நாளை உங்களை சந்திக்கிறோம்..''

``அரே அல்லா ..எல்லாப் புகழும் இறைவனுக்கே'' என்ற மீராவின் மனக் கண்களில் அந்த நேரத்தில் அரூபமான அல்லாவும் அருமை நண்பன் அக்பரும் வந்து போனார்கள்.

எழுதியவர் : சுசீந்திரன். (5-Jul-15, 2:53 pm)
பார்வை : 291

மேலே