காருண்யம் - சின்னஞ்சிறுகதை

”விஜய்ய்… போய் ஒரு தேங்காய் வாங்கிட்டு வா, சாங்காலம் டிஃபனுக்குச் சட்னி அரைக்கனும்…” அம்மாவின் குரலைத் தொடர்ந்து நானும் கிளம்பினேன்.

நாலு தெரு தள்ளி ஒரு கடை இருந்தது அங்கேயே சென்று வாங்கலாம் என்று எண்ணியவாறே மெதுவாய் நடந்தேன்.

மாலை வேளை இதமான இளஞ்சிவப்பு சூரியன், காற்றும் குளிர்ச்சியாய் இருந்தது. இந்த சூழலில் சற்று நடக்க எண்ணித்தான் நான் சற்று தள்ளியிருந்த கடையைத் தேர்வு செய்தேன்.

மாலையில் தம் இடத்திற்குத் திரும்பிக்கொண்டிருந்த பறவைகளின் கூட்டம் என்னைக் கவர்ந்தது. அவை ‘V’ வடிவில் பறந்து செல்வது என் பெயரின் முதல் எழுத்தை வானில் எழுதியது போன்று இருந்தது. ஆனால் வரவர பறவைகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டிருக்கின்றது.

மனிதன் ஒரு சுயநலவாதியாய் இருப்பதே இதற்குக் காரணம். நாம் மனிதனைத் தவிர வேறு உயிர்களை மதிப்பதே இல்லை. ஏன், அவைகளும் உயிர்தானே, இறைவன் என்ற ஒருவனுக்கு அனைவரும் சமம்தானே? நாயோ, பூனையோ, ஈயோ அல்லது எறும்போ, அவற்றையும் இறைவன் ஒன்றாகத்தான் பார்க்கிறான். ஆனால் நாம்தான் ஏதோ உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தில் மற்ற உயிர்களைத் துன்புறுத்துகின்றோம்.

இயற்கை ஒவ்வொரு உயிர்க்கும் ஒரு சிறப்பை அளித்துள்ளது. அதுவே அந்த உயிர் வாழ உதவுகிறது. குதிரைக்கு வேகம், யானைக்கு பலம், பாம்பிற்கு விஷம், சிலந்திக்கு வலை… அப்படித்தானே மனிதனுக்கு அறிவு? அவ்வறிவைக் கொண்டு நாமும் உயர்ந்து பிற உயிர்களையும் உயர்த்த வேண்டாவா? ஆனால் நாம் என்ன—’படால்!’

வேறொன்றுமில்லை ஒரு கொசு, என் மேல் அமர்ந்தது, விடுவேனா? ஒரே போடு… ஆமா, என்ன சொல்லிட்டு இருந்தேன்?...

* * * * * * * *

எழுதியவர் : விசயநரசிம்மன் (5-Jul-15, 3:20 pm)
பார்வை : 441

மேலே