​என் வாழ்க்கைப் பயணம் - 5

​முதல் படம் நான் 1966 ம் ஆண்டு , 4 வது படிக்கும்போது எங்கள் பள்ளியில் வருடமுடிவில் எடுத்தது . மையத்தில் அமர்ந்திருப்பவர் என் மதிப்பிற்குரிய ஆசிரியை திருமதி ஞானாம்பிகை அவர்கள் . ​மிகவும் நல்லவர் , என்னை அன்போடு நடத்தியவர். மறக்க முடியாத சிலரில் அவரும் ஒருவர். இந்தப் படத்தில் உள்ளவர்களில் ஒரு சிலரின் பெயர்தான் நினைவில் உள்ளது.

5 ம் வகுப்பு ஆசிரியை திருமதி திருபுரசுந்தரி அவர்கள். என்னை அவர் மகன் போலவே நடத்தினார். பாசமுடன் பழகுவார் . ( எம் சிடி சிதம்பரம் செட்டியார் இடைநிலைப் பள்ளி , புரசைவாக்கம் ). இந்தப் பள்ளியில் 5வது வரை படித்தேன் . இரண்டு வகுப்பிலும் நான்தான் முதல் Rank . அதேபோன்று வருட இறுதியில் நடைபெற்ற கையெழுத்துப் போட்டியில் முதல் பரிசினைப் பெற்றேன் . அக்தன்றி பள்ளியில் ஆண்டுவிழாவன்று நடைபெற்ற நாடகம் ஒன்றில் நடித்தமைக்கும் முதல் பரிசு. வேடம் என்னத் தெரியுமா ...போலி சாமியார் .

( அன்றும் இன்றும் என்றும் முதலில் வருவதும் , அனைவரும் விரும்புவதும் " போலி சாமியார்களைத்தானே " ...... ) அதுதான் 2வது படம் .

முதலில் இருப்பவன் சத்தியநாதன் , இரண்டாவது ஜெயக்குமார் , மூன்றாவது நான் , நான்காவது அனந்தகிருஷ்ணன் , ஐந்தாவது பானுமதி .

திடீரென்று இடையில் ஒட்டுத்தாடி நழுவி விட்டதும் நினைவில் உள்ளது. எனக்கு அந்த பரிசைக் கொடுத்தவர் அன்றைய காதல் மன்னன் காலஞ்சென்ற நடிகர் திரு ஜெமினி கணேசன் அவர்கள். அன்று அவர் கன்னத்தில் தட்டிக்கொடுத்த ஸ்பரிசத்தை ....இன்றும் உணர்கிறேன் .


அன்றைய நாட்களில் வீட்டில் வெளியில் அமர்ந்து இருக்கும்போது, கீற்றுக் கொட்டகையில் இருந்து கேட்கும் பாடல்களில் பெரும்பாலானவை கவியரசு கண்ணதாசனின் வாழ்க்கை பாடல்களும் , தத்துவப் பாடல்களுமே. அதனால்தான் என் நெஞ்சில் வாழ்க்கைத் தத்துவங்களும் , சமூக சிந்தனையுள்ள எண்ணங்கள் வேரூன்றி , இன்று அவையே எழுத்தாகி கவிதைகளாகி இங்கே எழுத்து தளத்தில் வடிவம் பெறுகின்றன என்று
நினைக்கிறேன் . எல்லாவற்றிற்குமே ஒரு அடிப்படை காரணம் இருக்கத்தான் செய்கிறது ஆழ்மனதிலும் நம் செயலிலும் , இல்லையா ?

அதன்பிறகு 6ம் வகுப்புஇல் இருந்து என் படிப்பு , எம் சிடி எம் உயர்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு வரை தொடர்ந்தது . எத்தனை மறக்க முடியா நிகழ்வுகள் , அனுபவங்கள் , சந்தித்த வித்தியாசமான ஆசிரியர்கள் ....அங்கே எனக்கு கிடைக்கப் பெற்றேன் .

6 ம் வகுப்பு ஆசிரியர் - திரு சட்டநாதன் ( SSN )
7 ம் வகுப்பு ஆசிரியர் - திரு நடராஜன் ( DSN )
8 ம் வகுப்பு ஆசிரியர் - திரு லக்ஷ்மணன் ( RL )
9 ம் வகுப்பு ஆசிரியர் - திரு சிதம்பரம் ( NC )
10 ம் வகுப்பு ஆசிரியர் - திரு செங்கல்வராயன் (KSC )
11ம் வகுப்பு ஆசிரியர் - திரு முகமது யாக்கோப் (SMY )

நான் பள்ளியில் சேரும்போது இருந்த தலைமை ஆசிரியர் உயர்திரு S நரசிம்மன் அவர்கள் . மிக அற்புதமான மனிதர் . கனிவானவர் . சிறந்த ஆசிரியருக்கான ஜனாதிபதி விருது பெற்றவர் . மிக எளிமையானவர். எங்கள் குடும்பத்தை நன்கு அறிந்தவர். உதவி தலைமை ஆசிரியர் திரு ஹரிஹரன் அவர்கள் . எங்கள் வீட்டில் அருகிலேயே வாழ்ந்தவர். இதே பள்ளியில்தான் எங்கள் தந்தையும், சித்தப்பாவும் ​படித்தார்கள் ​என்பது குறிப்படத்தக்கது. நடிகர் பாலாஜி எங்கள் அப்பாவின் பள்ளித்தோழர் . அவரும் படித்து அங்கேதான் .

அதுமட்டுமல்ல இன்றைய காதல் இளவரசன் , கலைஞானி திரு கமல்ஹாசன் அன்று 9வதும் 10 வதும் படித்தார் . அப்போதே பளிச்சென்று அழகாய் இருப்பார். பள்ளியில் ஓரங்க நாடகம் நடக்கும் .அதில் கட்டபொம்மனாக நடித்து இடைவிடாமல் விடாமல் வசனம் பேசுவார். இன்றும் அவர் பேசிய காட்சி நினைவில் உள்ளது. ஆனால் அங்கே தொடர்ந்து படிக்காமல் 11ம் வகுப்புக்கு ,திருவல்லிக்கேணியில் ​ ​உள்ள ​தி ​இந்து ​ உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து விட்டார்.

நான் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டதும் , ஊர்வலத்தில் ஒருவனாக மாணவர் படையில் சென்றதும் , எங்கள் பகுதியில் உள்ள , அன்று இருந்த பல வடநாட்டு வணிக வளாகங்களையும் , இந்திப் பெயர் தாங்கிய ஏதாவது ஒரு பலகையோ , பதாகையோ , தபால் நிலைய பெயர் பலகையோ கண்ணில் பட்டால் கல்வீசி எறிவதும் அங்கு கூட்டமாக நின்று கோஷங்களை எழுப்புவதும் இன்னும் எனக்கு பசுமையாக நினைவில் உள்ளது. அன்று இருந்தது செய்தது சரியா தவறா என்றெல்லாம் சிந்தித்தது இல்லை. காரணம் அந்த அளவிற்கு மாணவ சமுதாயம் தாய் மொழி மீது அளவிலா பற்று இருந்தது...இன்று .. யோசிக்க வேண்டிய ஒன்று ....ஆனாலும் வேறு மொழிகளை படிப்பதிலும் அறிந்து கொள்வதும் தவறு இல்லை ....திணிப்பதுதான் தவறு என்று நான் நினைக்கிறேன் .
அவரவர் மனதை பொறுத்த விஷயம். ஆத்திகம் நாத்திகம் போல .

​ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்வின் முன்னேற்றத்திற்கான அடித்தளமே , ​வருங்கால இலக்கின் ஆரம்பமே பள்ளி வாழ்க்கைதான் . அடிப்படை அறிவின் மாற்றத்திற்கும் , விரிவாக்கத்திற்கும் , எழுச்சிமிகு எண்ணங்களுக்கு வித்திடும் களமே பள்ளிக்கல்விதான் . வலிவான வளமுள்ள எதிர்காலம் உருவாகிட உதவுவது , ஆழ்ந்த சிந்தனைகளை சிந்தையில் வேரூன்ற செய்வதும் பள்ளிக்கல்வியும் அப்போது பெறுகின்ற அனுபவங்களும்தான் என்பது என் தனிப்பட்டக் கருத்து. அங்கு பாதை மாறினால் , வேறு திசையில் பயணித்தால் நம் வாழ்க்கையே மாறுவதற்கு வாய்ப்புள்ளது .

என் வாழ்க்கையிலும் நான் ஒரு முக்கிய முடிவு எடுத்ததும் அந்த பள்ளிக்கூட காலத்தில்தான் . அது தவறா சரியா என்று இதுவரை எனக்குத் தெரியாது . மற்றவர்கள் ஒப்புக்கொள்வார்களா என்றும் தெரியாது. அதைப் பற்றி அடுதது வரும் பகுதியில் கூறுகிறேன் ....

மீண்டும் சந்திப்போம் ..... என் பயணம் தொடரும் ...

பழனி குமார்
07.07.2015

எழுதியவர் : பழனி குமார் (7-Jul-15, 4:49 pm)
பார்வை : 374

சிறந்த கட்டுரைகள்

மேலே