காலைச் சாரல் 12 - நிலா

15-07-2015
அதிகாலை எண்ணங்கள் ..... "நிலா"


மாடத்தில் வந்தமர்ந்து பார்த்தால் வெளியே இரண்டு ஒளி. எதிர் கட்டிடத்தின் மேல் 'பிறை நிலா', கீழே 'தெரு விளக்கு'... இரண்டும் ஏதோ ஒன்றிற்காகக் காத்திருந்தது... சூரியன் உக்கிரம் அடைய நிலாவும், மின் துறையினர் அணைக்க தெரு விளக்கும்....

****
நிலவு என்றால் அடிக்கடி என் மனதில் வருடும் பாடல் ....

"இரவும் நிலவும் வளரட்டுமே நம்
இனிமை நினைவுகள் தொடரட்டுமே..."

இதை முணு முணுப்பதைக் கேட்டால் நண்பன் 'சுத்த சாரங்கா' ராகம் என்பான். (முணு முணக்கத்தான் முடியும் - வாய் விட்டுப் பாடினால் யார் கேட்பார்கள்?) எனக்கு ராகம் எல்லாம் தெரியாது. ஆனால் நிறைய தமிழ்த் திரைப் பாடல் தெரியும்... எதாவது பாடல் கேட்டால் அதேபோல் இன்னொரு பாடல் சொல்வேன். நண்பன் அதுவும் அதே ராகம் என்பான். நமக்கு அவ்வளவு 'நானம்'.... இல்ல 'ஞானம்' ... சரி 'நானம்' .... இல்ல 'ஞானம்' கிடையாது. அத்தை விடுங்க.... பள்ளி நாட்களில் இருந்து தொடர்ந்து திரைப் பாடல்கள் கேள்வி ஞானம். வீட்டில் ஒரு 'எட்டு பாண்டு நேஷனல் எக்கோ' ரேடியோவும், பிற்காலத்தில் ஒரு குட்டி டிரான்சிஸ்டரும் (அடம் பிடித்து வாங்கியது) எப்பொழுதும் துணை. பாட்டுக் கேட்டுக் கொண்டே பாடம் படிக்கும் கலை பயின்றவன். நல்ல மார்க் வாங்கியதால் அம்மா கண்டு கொள்வதில்லை. ஆரம்ப இசையை கேட்கும் பொழுதே என்ன பாடல் என்று சொல்லும் அளவுக்கு திரைப் பாடல்களின் தாக்கம் உண்டு.

****
நாம் நிலாவுக்கு வருவோம். பூமியின் ஆகர்ஷன சக்தியில் (புவி ஈர்ப்பு) மாட்டிக் கொண்டதால் தப்பிக்க வழியில்லாமல் நம்மைச் சுற்றி வரும் நிலாவை வர்ணித்து எழுதாத கவிஞர்கள் இல எனலாம்.. எழுதவில்லை என்றால் அவர் கவிஞர் இல எனலாம்.

பாவம் அந்த நிலா - தன் விதியையும், வரண்ட நிலத்தையும் நொந்தபடி, தன் ஒரு முகத்தை (பக்கத்தை) மட்டும் காட்டி, வானில் ஒரு கண்ணாடிபோல் தன்மேல் படும் சூரிய ஒளியைப் பிரதி பலித்து, கால் பாகத்தில் பட்டால் கால் நிலா, அரை பாகத்தில் பட்டால் அரை நிலா, முழவதிலும பட்டால் முழ நிலா, சூரிய ஒளி மேலே படவில்லை என்றால் இருட்டு நிலா என்று ஒன்றுமறியாமல் சுற்றிவரும் சந்திரனுக்குத் தெரியுமா தன்னை இங்கே பூமியில் என்ன பாடு படுத்துகிறார்கள் என்று...?

பிரேமம் என்றால் நிலா
பிரிவு என்றால் நிலா
கோபம் என்றால்
பெண் என்றால் நிலா
காதல் என்றால் நிலா
அழகு எனறால் நிலா
தண்மை என்றால் நிலா
..... மிச்சத்தை நீங்களே சேர்த்துக் கொள்ளுங்கள்...
பாட்டி நிலவில் வடை சுட்ட கதைகளும், நிலவை காதலுக்குத் தூது அனுப்புவதும், பாப்பாவுக்குப் பால் சோறு ஊட்டுவதும் தொடர்கிறது....

****
பல வருடங்களுக்கு முன் (கார் வாங்கிய புதிது!) நான், மனைவி, இரண்டு மகள்கள், தம்பி, தம்பி மனைவி, மகள் எல்லோரும் சேர்ந்து மெரினா கடற்கரைக்குச் சென்றோம். மணலில் படுக்கை விரிப்பை பரப்பி அமர்ந்து அந்தாட்சரி ஆட்டம்.. கடைசி எழுத்துக்களில் பாடித் தீர்த்தபின், 'நிலா' என்ற வார்த்தைகள் உள்ள பாடல்கள் ஆரம்பித்தோம்... நேரம் சென்றதே தெரியவில்லை.... சுற்றி கொஞ்சம் கும்பல் வேறு.... விட்டால் அவர்களும் ஜோதியில் கலந்திருப்பார்கள். வானத்தில் பாவம் அப்பாவி நிலா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது....

இனிய நினைவுகள்....! (தொடரட்டுமே.......ஏ... ஏ....ஏ....ஏ...)
-------- முரளி

எழுதியவர் : முரளி (15-Jul-15, 1:03 pm)
பார்வை : 243

மேலே