மாலைமாற்று மாலை நூல் - பாடல் 1 - காதை கரப்பு 1 - நான்காரைச் சக்கரம்

1868 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி பிறந்த பெரும்புலவர் அரசஞ்சண்முகனார் மாலைமாற்று மாலை என்ற இந்நூலை, (இன்றைக்கு 128 ஆண்டுகளுக்கு முன்) தனது 19 ஆம் வயதில் (1887) பாடி முடித்தார்.

மாலைமாற்று மாலை என்ற இந்நூலை, 1901 ல் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவிய ஸ்ரீ பாண்டித்துரை தேவர் முன்னிலையில் 1903 ஆம் ஆண்டு அரங்கேற்றினாராம். அக்காலத்தில் புலவர்கள் தங்கள் கல்வியறிவை பலரறியச் செய்ய செய்தற்கரிய சித்திரக் கவிகளாகச் செய்து உரை செய்தலும், உரை மறுத்தல் விவாதங்களும் நடைபெற்றுள்ளன.

மாலைமாற்று மாலை – பாடல் 1 – காதை கரப்பு – நான்காரைச் சக்கரம்

முதல் பாடலாகிய வெண்பாவில், ’வாலகன’ என்ற முதற்சீரில் காதைகரப்பாக ஒரு பாட்டுள்ளது.

வெண்பா

’வாலகன’ மானீயா மாவல வேனீத
நீலன நேசாயா நீயல – மாலய
னீயாசா னேநல னீதனீ வேலவ
மாயாநீ மானகல வா. பாடல் 1

அது ’வாகா னவவன காவா’ என்ற பாட்டு.

காதை கரப்பு என்பது ஒருவன் தன் வீட்டில் தான் காட்டினாலன்றி பிறர் காணாத வகையில் ஒன்றைப் புதைத்து வைத்தாற்போல், புலவன் தான் பாடிய பாட்டில் மற்றொரு பாட்டை தான் காட்டினாலன்றி பிறர் காணாத வகையில் மறைந்து நிற்கப் பாடுவது ஆகும்.

இங்கே, ’வாலகன’ என்ற முதற்சீரில் ’ல’கர உயிர்மெய்யெழுத்தை விடுத்து, மற்ற மூன்றெழுத்திலுள்ள ’வ’கர, ’க’கர, ’ன’கரம் என்ற மூன்று மெய்யெழுத்தும், அகர, ஆகாரம் என்னும் இரண்டு உயிரெழுத்தும் கூடிப் பிறந்த வா, கா, ன, வ என்னும் நான்கு உயிர்மெய்யெழுத்தையும் நேராகவும், மாற்றியும் நான்கு தடவை மடக்கி வாசித்தால், இப்பாட்டு வரும். இதனால் இப்பாடல் காதை கரப்பு ஆயிற்று.

வாகா னவவன காவா
வாகா னவவன காவா
வாகா னவவன காவா
வாகா னவவன காவா

இதே பாடல் நான்காரைச் சக்கரமாக, ஏகபாதமாக, மாலைமாற்றாக, வஞ்சி விருத்தமாக அமைந்திருக்கின்றது.

பதப்பிரிவு:

வா – கானவ – வல் – நகா - வா
வாகு – ஆன - அவன் – அகா - ஆ
ஆ - கா – நவ - வன – கா - ஆ
வாகு – ஆனவ – அனகா - வா

இதன் பொருள்:

வா கானவ (கானவ வா) – வேடவுருக் கொண்டோனே வருக
வல் நகா - வலிய மலைகளையுடையவனே
வா வாகு – வாவுகின்ற அழகிய
ஆன – இடப வாகனத்தையுடைய
அவன் அகா – அச்சிவபிரானின் உள்ளத்தில் விளங்குபவனே
ஆ ஆ கா – ஆவா (என்னை இப்பொழுதே) காத்தருள்க
நவ வன – புதுமையான அழகுடையானே
கா ஆ வாகு ஆனவ (வாகு கா ஆ ஆனவ) – கைகற்பமாக ஆனவனே
அனகா வா – மலரகிதனே வருக

பொருளுரை:

வேடவுருக் கொண்டோனே வருக! வலிய மலைகளையுடையவனே! வாவுகின்ற அழகிய இடப வாகனத்தையுடைய அச்சிவபிரானின் உள்ளத்தில் விளங்குபவனே! புதுமையான அழகுடையானே! கைகற்பமாக ஆனவனே! மலரகிதனே வருக! என்னை இப்பொழுதே வந்து காத்தருள்க!

குறிப்பு:

ஆ ஆ – இரக்கத்தை காட்டுவதாற்காக அடுக்கி வந்தது, வாகு என்பது பாகு வின் வடமொழித் திரிபு, முதலிலும், கடைசியிலும் உள்ள வா வா விரைந்து வா என்பதற்காகச் சொல்லப்பட்டது.

சக்கர பந்தம்:

இது நான்காரைச் சக்கரம், ஆறாரைச் சக்கரம், எட்டாரைச் சக்கரம் என மூன்று வகைப்படும். தேரின் உருள போல சக்கரம் வரைந்து, அதனுள் நடுவிடம், ஆரக்கால்கள், வெளிவட்டம் ஆகிய இடங்களில் பாட்டின் எழுத்துக்களைப் பதிய வேண்டும். இதில் நான்கு, ஆறு, எட்டு ஆரங்கள் என்று அமைத்துக் கொள்ளலாம்.

ஏகபாதம்:

ஏகபாதம் என்பது ஓரடி. இது ஓரடியால் அமைந்த ஒரு பாட்டைக் குறிக்கும். இந்த ஏக பாதம் ஓரடி ஒரு பாட்டு ஆயினும் ஒரே அடி நான்கு முறை திரும்பத் திரும்ப வந்து ஒவ்வோர் அடியும் வெவ்வேறு பொருள் தரும். இந்த ஏக பாதம் பாடுவது எவ்வளவு அரியதோ, அவ்வளவு அரிது உரை காண்பதுவும் ஆகும்.

மாலைமாற்று:

இது மடக்கலங்காரத்தின் பாற்பட்ட சித்திரக் கவிகளுள் ஒன்று. அது ஒரு செய்யுளை, ஈறு முதலாகக் கொண்டு வாசித்தலும் அச்செய்யுளே வரும்.

வஞ்சி விருத்தம்:

சிந்தடி (மூன்று சீர்கள்) நான்கு கொண்டு அமைவது வஞ்சி விருத்தம் ஆகும்.

முச்சீ ரானும் வரும்இடன் உடைத்தே. 354
வஞ்சியடி மூன்று சீரானும் வரும். – வஞ்சி விருத்தம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Jul-15, 8:46 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 290

மேலே