காலைச் சாரல் 13 - வேலை

23-07-2015
அதிகாலை எண்ணங்கள் ..... "வேலை"

அதிகாலை மாடத்திற்கு வந்தமர்ந்தேன்

ஆனால் இது நான் எப்பொழுதும் வந்தமரும் மாடம் அல்ல, வேறு. மாப்பிள்ளை வெளியூர் சென்றுள்ளதால் பெண் வீட்டில் மூன்று நாள் வாசம். பெண்ணும் இருந்த வேலையை விட்டு விட்டு வேறு வேலையைத் தேடிக் கொண்டிருப்பதால் அவளும் வீட்டில் இருக்க, பேத்தியும் அங்குதான்.
****

நேற்று மாலை சுமார் 7:00 மணிக்குச் செல்ல, கதவைத் திறந்த பேத்தியின் உற்சாக வரவேற்பு. "தாத்தா நான் நாளை டெஸ்ட்டுக்குப் படித்துக் கொண்டிருந்தேன்" என்ற அறிவிப்புடன்... பார்த்து பத்து நாள் இருக்கும்.... சற்று உயர்ந்திருப்பது போல் தோன்றினாள்.... கொடுத்த சாக்லேட்டை வாங்கி ஃப்ரிட்ஜில் கொண்டு வைத்து, அதிசயிக்க வைத்தாள்... இரவு படுக்கும் பொழுது தாத்தா கையை இறுகப் பிடித்துக் கொண்டு பாட்டியுடன் நீண்ட நேர உரையாடல். இடையிடையே ஏற்படும் சந்தோஷக் குலுக்கலில் தாத்தாவுக்கு பின்னங் கால்களால் உதை.... தொடர்ந்து கிடைத்த உதைகளின் மயக்கத்தில் நான் தூங்கி விட்டேன்.... அதற்கு வெகு நேரம் பின்னும் அவர்கள் உரையாடல் தொடர்ந்திருக்கிறது....
****

வேலைக்குச் செல்லுபவர்களை பார்க்கும் பொழுது - குறிப்பாக பெண்கள் - பிறர் பொதுவாக எண்ணுவது - அவளுக்கென்ன கை நிறைய சம்பாதிக்கிறாள் என்றுதான். ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம் என்றான பின் பணி இடங்களில் பெண்ணுக்கு பெண்ணே எதிரி ஆகிறாள்.... மற்றவர் திறமை நமக்கு இடையூறு உண்டாக்குமோ என்ற பயத்திலும், தற்காப்பு உணர்விலும் திறமைக்கு தடையும், தீங்கும் சில சமயங்களில் ஏற்படுகிறது. பல சமயம் கிடைக்கும் சம்பளத்திற்கு பங்கம் ஏற்படாமல் இருக்க அவமானங்களை விழுங்கி ஒரு உயிரில்லா வாழ்க்கை நடத்தும் நிற்பந்தங்களும் உண்டு.
****

ஆனால் சுய கவுரவமும், தன்னம்பிக்கையும் உடையவர்கள் இச் சூழலை வேறு விதமாக எதிர் கொள்வர். என் தந்தை அந்த ரகம். சட்டையைக் கழட்டும் வேகத்தில் வேலையை மாற்றுவார். மேலே உள்ளவர்கள் செய்யும் ஊழல்கள் / நேர்மையின்மையே முக்கிய காரணங்களாக இருக்கும். தன் திறமையிலும், தன் உழைப்பின் மேலும் உள்ள அபார நம்பிக்கையிலும். அவர் எத்தனை வேலை மாற்றினார் என்ற கணக்கு அவருக்கே நினைவு இருக்காது. எனக்கு தெரிந்து அனைத்து பிரபல MNC நிறுவனங்களிலும் வேலை செய்துள்ளார். (இவரை விரட்டி விரட்டி வேலைக்குச் சேர்த்துக் கொண்டவர்கள் உண்டு - இந்தியாவை பிற்காலத்தில் கலக்கிய ஊழலில் சம்பந்தப்பட்ட ஒருவரும் இதில் அடக்கம்). இளமைக் காலங்களில் வீரமாக வலம் வந்தவர் 45 வயதுக்கு மேல் மிகவும் கஷ்ட்டப் பட்டார். (நேர்மைக்கும் உழைப்புக்கும் மதிப்புக் கொடுக்கும் காலங்கள் முடிந்து விட்டதோ என்னவோ....?)
****

இதில் பாடம் கற்றுக் கொண்டது நான். அலுவலகக் காட்டில் (Corporate jungle) வாழப் பழகிக் கொண்டேன். ஒரு நல்ல MNC வேலையை மற்றவர்களின் செயல்பாட்டிற்காக விடுவதில்லை என்ற உறுதி பூண்டேன். அப்பா கடைசிக் காலத்தில் பட்ட கஷ்டங்கள் நான் படத் தயாராக இல்லை. இரண்டு பெண்களும் நல்ல நிலமை பெற கார்பரேட் கசப்புகளை விழுங்கப் பழகிக் கொண்டேன். அதற்காக அப்பாவின் நேர்மைக்கும் உழைப்புக்கும் சிறிதும் குறைவல்ல எனது. எப்படி என்றால் "பொய் சொல்ல மாட்டேன் - ஆனால் உண்மை சொல்வேன் என்று உத்தரவாதம் இல்லை" (இரண்டு முறை படியங்கள் புரியலாம்).
****

தாத்தா - அப்பா போல்தானே பெண் இருப்பாள். கார்பரேட் கசப்புகளை எதிர்த்து போராடினாள்... தீர்வு கிடைக்காத பொழுது கால் கடுதாசி கொடுத்துவிட்டு வந்துவிட்டாள்... வேறு வேலை நிச்சயம் கிடைக்கும் என்று தன் திறமையின் மீது அதீத நம்பிக்கை.... கடந்த இரண்டு வாரங்களாக குழந்தையுடன் முழு நேர இனிமைப் பொழுதுகள்.....

கூடிய விரைவில் புதிய வேலை, அதிக சம்பளம் - தாத்தா பாட்டியுடன் "பேத்தி"

----- முரளி

எழுதியவர் : முரளி (23-Jul-15, 9:30 pm)
பார்வை : 262

சிறந்த கட்டுரைகள்

மேலே