அப்துல் கலாம் ஆசிரியர் பிறந்த மண் யாழ்ப்பாணம்

ஒரு உயர்ந்த உன்னதமான மனிதரை இன்று காணப்போகின்றேன் என்ற வேணவாவுடன் பல்கலைக்கு புறப்பட்டேன். வீட்டிலிருந்து புறப்படும் போதே நல்ல சகுனம்.

நெற்றியிலே திலகம் மின்ன இடுப்பிலொரு குழந்தையைத் தூக்கிய வண்ணம் தாயொருத்தி முன்னே வந்து கொண்டிருந்தாள். உள்ளத்தில் பொங்கும் மகிழ்ச்சி அலைகளோடு ஊந்துருளியை பல்கலை நோக்கி வேகமாக ஓட்டினேன்.

உலக மக்களால் மதிக்கப்படும் மாண்புமிகு மனிதரல்லவா! எவ்வளவு பெரிய மனிதர்!! எத்தனையோ நோயாளர்களை பயனடைய வைக்கும் இருதய குருதிக்குழாய் தாங்கு சுருளியின் (stent) உருவாக்கத்திற்கு பங்காற்றிய அற்புத பிறவியல்லவா!

இலட்சியத்திற்காக கனவுகாணுங்களென இளையோரை ஊக்கப்படுத்திய பேரறிஞரல்லவா! ‘ரோகினி’ செயற்கைக்கோளை புவியின் அண்மித்த சுற்று வட்டப்பாதையில் நிலைபெறச்செய்த விஞ்ஞானியல்லவா!

இவ்வாறான எண்ண ஓட்டங்களுடன் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்க மண்டபத்துள்ளே முன் வரிசை ஆசனங்களுக்கு அண்மிய கரையோரமாக நிற்கிறேன்.

கலையரங்கம் முழுதும் ஐயாயிரக்கணக்கான மக்களும் மாணவர்களும் மட்டுமன்றி அரங்கின் வெளியேயும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அறிஞரைக்காணும் ஆவலோடிருந்ததை அவதானித்து மெய்சிலிர்த்தேன்.

நீண்ட காத்திருப்பின் பின் அந்த மகான் இத்தனை வயதிலும் இயலாத நிலையிலும் தன்னைக்காண வந்த மக்களுக்காய் நடந்தே வந்தார்.

எவ்வளவு எளிமையான முகம். கல்நெஞ்சையும் கரைக்கும் கனிவான பார்வை. இத்தகைய மனிதர் எம்மண்ணிற்கு வந்ததை நினைக்க என் ஓர விழி இருதுளி கண்ணீர் முத்துக்களைச் சிந்தியது.

தனது உரையின் ஆரம்பத்திலேயே “வணக்கம் நண்பர்களே” என விழித்தார். சபையெங்கணும் கைதட்டலொலி அதிர்ந்ததது. பின் “புயலைத்தாண்டினால் தென்றல்” எனும் தலைப்பில் தான் உரையாற்றப்போவதாகவும் தலைப்பு பிடித்திருக்கா என்றும் சபையைக் கேட்டார்.

கலாம் மேலும், “நான் 1941 இல் ராமேஸ்வரத்திலே 5ம் வகுப்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திரு கனகசுந்தரநாத் ஆசிரியரிடம் கணிதம் பயின்றேன்.

என் ஆசிரியர் பிறந்த இந்த யாழ்ப்பாண மண்ணை நான் வணங்குகிறேன். யாழ்ப்பாண மக்களுக்கு எனது வாழ்த்துக்கள்” என்றார். தொடர்ந்து தான் எழுதிய கவிதையொன்றை வாசித்து தன்னுடன் சேர்ந்து சொல்லும்படி சபையைக்கேட்டார்.

“நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்
நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்
நான் பிறந்தேன் நல்ல எண்ணங்களுடன்
நான் பிறந்தேன் உயர்ந்த எண்ணங்களைச் செயல்படுத்த
நான் பிறந்தேன் ஆராட்சி உள்ளத்துடன்
நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க
நான் பூமியில் ஒருபோதும் தவளமாட்டேன்,
தவளவேமாட்டேன்!

ஆராட்சி ஒன்று தான் என் லட்சியம்.”

அடடா என்ன ஒரு உயர்ந்த நோக்கு. எத்தனையோ நல்ல விடயங்களை எளிமையாகச் சொன்ன அறிஞரது அத்தனை கருத்துக்களையும் கிரகிக்க இந்தச் சிறியேனால் முடியவில்லை! எனினும் அம்மகானது கூற்றுக்கள் சில இந்நேரம் வரை என் இதயத்தில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன.

லட்சியத்தையடைய உழைப்பு முக்கியம். விடாமுயற்சி இருந்தால் நீ யாராக இருந்தாலும் வெற்றி உன்னை வந்து சேரும். என்ற கருத்துக்களே அவை.

தனது வாழ்க்கைக்கு அச்சாணியாக அமைந்தது உலகப்பொது மறையான திருக்குறளே என திருக்குறட்பாக்கள் பலவற்றை எடுத்துக்காட்டினார்.

இறுதியில் ” அன்பு மாணவ செல்வங்களே, நம்பிக்கையையும் லட்டசியத்தையும் உங்கள் கண்களில் காண்கிறேன். உறக்கத்தை மறக்க கனவு காணுங்கள்.

வெற்றி உங்களை நாடிவரும்.” என்ற பொன்னான வாசகத்தை எளிமையாகக் கூறி முடித்தார். மனதிலே பெருத்ததொரு திருப்திகரமான வைராக்கியத்தோடு கலையரங்கை விட்டு சபையோடு சபையாக அகன்றேன்!

V.சண்முகராஜா,
ஊடகக்கற்கைகள்,
யாழ்.பல்கலைக்கழகம்.

எழுதியவர் : V.சண்முகராஜா, (29-Jul-15, 4:33 pm)
பார்வை : 345

சிறந்த கட்டுரைகள்

மேலே