கொலையாளி 5 பேசும் ஓவியம் பாகம் 2 க்ரைம் கதை

முன்கதைச் சுருக்கம்

அதிரூபன் நெற்றிப்பொட்டில் குண்டு பாய்ந்த நிலையில் இறந்து கிடக்கிறார். துப்பறியும் நிபுணன் வசந்த் மரணம் நிகழ்ந்த இடத்தை ஆராய்கிறான்....

..........................................................................................................................................................................................

வாழ்க்கையை கட்டுக்கோப்பாக நடத்திச் செல்லும் ரசனை மிகுந்த அதிரூபன் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை..!

இது கொலைதான். எனில் யார் செய்தது?

எப்போதும் இருபது நிமிடம் வேகமாய் ஓடும் கடியாரம் நேற்று சரியான நேரம் காட்டிய மர்மமென்ன?

அறைக்கு முதுகைக் காட்டிய நிலையில் நாற்காலி, மேஜை, மேஜையில் கடிகாரம், பின்னால் புத்தக அலமாரி..

வசந்த் அப்படியே மேஜையில் சாய்ந்தான்... இன்னும்..இன்னும்.. ஓ !

எல்லாப் புத்தகங்களும் அழகாக அடுக்கப்பட்ட நிலையில் ஒரு புத்தகம் மட்டும் கவிழ்ந்து கிடந்தது. அதன் காகிதங்களில் ஒழுங்கற்ற மடிப்புகள்...!

அடடா...!

வசந்த் கீழே வந்தான்.

அகிலாவின் வக்கீலை இழுத்துக்கொண்டு தனியே போய் ஏதோ பேசினான். சற்று தேரத்திற்குள் அகிலா சித்தி பின் தொடர வந்தாள்.

“ சார்..! சார்..! நான் நிரபராதி சார் ! நாங்க ரெண்டு பேரும் உண்மையிலேயே சந்தோஷமா இருந்தோம் சார்..! என்னை தவிக்க விட்டுட்டு போனதோட, இவ்வளவு பொல்லாப்பையும் சுமக்க வச்சிட்டாரே..! ”

மடை திறந்த வெள்ளமாய் கதறி அழுதாள்.

சற்று நேரம் மௌனமாய் இருந்த வசந்த் பிறகு பேசினான்..

“ கவலைப்படாதீங்க..! குற்றவாளியை கண்டுபிடிக்க உங்க ஒத்துழைப்பு தேவைப்படுது..! நீங்க தயக்கமில்லாம மனம் விட்டு என் கிட்ட பேசணும்.. அப்பத்தான் மேற்பட்டு கேஸை நகர்த்த முடியும்..! குற்றவாளி சிக்குனாதான் உங்க மேல விழுந்த பொல்லாப்பும் போகும்..! ”

அவள் ஒத்துக் கொண்டதற்கு அடையாளமாய் கண்ணைத் துடைத்துக் கொண்டார். அந்த தனியறையில் அவளை வசதியாக உட்காரச் சொன்னான் வசந்த்.

கேட்க ஆரம்பித்தான்.

“ நேற்று இந்த வீட்டுல யாரெல்லாம் இருந்தீங்க? ”

“ நான், என் கணவர், சமையல்காரி, வேலைக்காரி, வேலைக்காரன் அவ்வளவுதான்..! ”

“ வாட்ச்மேன்? ”

“ அவர் வார நாட்கள்ல மட்டும் வருவார்..! ”

“ வேலைக்காரங்க எத்தனை மணிக்குப் போனாங்க? ”

“ வேலைக்காரனும் வேலைக்காரியும் சாயந்தரம் ஆறு மணி வாக்கில போயிட்டாங்க. சமையல்காரிக்கு வீடு இங்கதான். கூப்பிடு தூரம்..! அவ பத்து மணிக்குப் போனா.. ”

“ வேற யாராவது வந்து போனாங்களா? ”

“ ஆமா.. அவரோட ஆபிஸ் காரியதரிசி மீனா ஞாயிற்றுக் கிழமை கூட இங்க வந்து வேலை செய்வாங்க. நேற்றும் வந்திருந்தாங்க. மதியத்துக்கு மேல ரூமைப் பூட்டி சாவியை என் கிட்டக் கொடுத்துட்டு வீட்டுக்குப் போனாங்க.. ”

“ பெண்கள் விஷயத்தில உங்க கணவர் எப்படி? ”

“ ஜென்டில்மேன் சார்..! அழகான பொருள்களை அவருக்குப் பிடிக்கும்..! அதே போல அழகான துடியான பொண்ணுங்களையும் பிடிக்கும்..! அவங்களை பக்கத்துலேயே வச்சிக்க நினைப்பார். ஆனா வக்கிரமா பழக மாட்டார்..! சிரிக்க சிரிக்க பேசுவார்..! பொண்ணுங்களுக்கும் அவரை ரொம்பப் பிடிக்கும் சார்..! அப்படியே மயங்குவாங்க..! லிமிட் மீற மாட்டார்.. ! யார் யாருக்கு என்ன இடமோ அதை மீறி அவங்களும் வர விட மாட்டார்..! ”

“ சாரோட கடன் விவரம் என்ன? ”

“ அதெல்லாம் எனக்குத் தெரியாது சார்..! கடன், பிசினஸ், சொத்து இதெல்லாம் என் கிட்ட சொல்ல மாட்டார்..! போன வாரம் ஏதோ நெக்லஸ் வாங்கினார். நகைக் கடைக்காரன் லாண்ட் லைன்ல ஃபோன் பண்ணியிருந்தான். அத நான் எடுத்தேன். கல்லு பதிக்கணும்.. கல்லுங்களை வந்து செலக்ட் பண்ணித் தரச் சொல்லுங்கன்னான்..! அதுக்குள்ள அவர் வந்துட்டார்..! என்ன நெக்லஸ், யாருக்குன்னு நான் கேட்டதுக்கு அதெல்லாம் பிசினஸ் சமாச்சாரம்; உனக்குச் சம்பந்தமில்லாததுன்னு சொல்லிட்டார்.. ”

வசந்த் காரியதரிசி மீனாவின் வீட்டு விலாசத்தையும் நகைக்கடை முகவரியையும் வாங்கினான்.

சமையல்காரியை சந்தித்தான்.

கொஞ்சம் வயதான அம்மணியை எதிர்பார்த்தவனுக்கு இருபத்தைந்து வயது கட்டழகு சமையல்காரி வந்து நின்றது அதிர்ச்சியை அளித்தது. அவள் அந்த வீட்டுக்குப் பின்னால் தனி போர்ஷனில் கணவனோடு தங்கியிருக்கிறாள்; அவள் கணவனும் அதிரூபன் அலுவலகத்தில்தான் வேலை செய்கிறானாம்..! கல்யாணம் நடந்து இரண்டு வருடமாகிறதாம். இந்த வீட்டில் நான்கு வருடமாக வேலை செய்கிறாளாம்..!

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்றால் அதிரூபன் பெண்களிடம் முறை தவறிப் பழகும் ஆளில்லை. அப்படி ஏதாகிலும் இருந்தால் இவள் திருமணத்திற்குப் பிறகு இங்கு தொடர்ந்திருக்க மாட்டாள்.

வேலைக்காரனும் வேலைக்காரியும் கூட இள வயதினர்தான்.

வீட்டிலேயே அலுவலக அறையும் இருந்தது. திரும்ப அகிலாவை அழைத்தான். “ மேடம், சார் வழக்கமா துப்பாக்கியை எங்கே வைப்பார்? ”

அவள் கலைக்கூடம் போன்ற ஒரு அறையைக் காட்டினாள். அதிலுள்ள பீரோவில்தான் துப்பாக்கியை வைப்பாராம். “ ஆனா சார், நாலு நாளைக்கு முன்னாடி லைசன்ஸ் புதுப்பிக்க துப்பாக்கியை வெளியே எடுத்தார். சனிக்கிழமை ஒரு ஆபிசர் வீட்டுக்கே வந்து பிசிகல் வெரிபிகேஷன் பார்த்தாராம். அதுலேயிருந்து துப்பாக்கியை ஆபிஸ் பீரோவிலதான் வச்சிருந்தார்..!

“ சனிக்கிழமை நீங்க வீட்டுல இல்லையா? ”

“ இல்ல சார்.! பிறந்த வீட்டுக்குப் போயிட்டேன்..! ”

சனிக்கிழமை இரவு ஒரு சின்ன தண்ணி பார்ட்டி கூட வீட்டில் நடந்திருக்கிறது.

அடுத்து அவன் விசாரித்தது அதிரூபன் தெருவிலிருந்த தையற்கடையை. ஞாயிறன்று அந்த ஒரு கடைதான் திறந்திருந்தது.

“ ஒன்பது மணி வாக்குல அதிரூபன் சம்சாரம் கார்ல போனாங்க சார். அவங்க போன பின்னாடி தொப்பி போட்டு ஒருத்தர் வந்து வாசல்ல நின்னார். அப்புறம் நான் கடையை மூடிட்டுப் போயிட்டேன்..! ”

அதிரூபன் வீட்டு வேலைக்காரி இரவு பத்து மணி வாக்கில் எஜமானியம்மா வந்ததாகவும் அதற்கு முன்னோ பின்னோ யாருமே வீட்டுக்கு வரவில்லை என்றும் சொன்னாள்.

அதிரூபனின் காரியதரிசி மீனாவின் வீடு.

வசந்த்தைப் பார்த்ததும் மீனாவின் மாமியார் தன் பேரனை இறுக அணைத்துக் கொண்டது விசித்திரமாக இருந்தது. விசாரணை தொடங்குவதற்கு முன் “ஏங்க, எங்களை படுத்தறீங்க? ” என்று பிலாக்கணம் பாட ஆரம்பித்து விட்டார். “இந்திரன் மாதிரி புருசன் இருக்கற போது வேலைக்காரன் மடியில விழுந்து கிடக்கிற பெண்டாட்டி இதைத் தானேயா செய்வா? அதுக்கு எம் மருமவ என்ன செய்வா? ”

வசந்த் முகத்தைச் சுளித்தான். “ சரி, நீங்க சொன்னதை உங்க மருமக எழுத்துப் பூர்வமா கொடுப்பாங்களா? நீங்க சொன்ன விஷயம் மட்டும் தப்பா இருந்தது, மான நஷ்ட வழக்கு போட்டு உங்க மருமகளை உள்ள தள்ளிடுவாங்க..! பரவாயில்லையா? ”

வசந்த் கடுமை காட்டினான்.

“ சும்மா இருங்க அத்தை! ” மீனா பதறிப் போய் அவள் மாமியாரை அடக்கினாள். “ அவங்க சும்மா யூகத்தில சொல்றாங்க சார்..! உங்களுக்கு என்ன தெரியணும்? ”

அவளிடம் சற்று நேரம் பேசிவிட்டு நகைக் கடைக்கு நகர்ந்தான்.

நகைக் கடைக்காரருக்கு அதிரூபனின் மரணம் இன்னும் தெரிந்திருக்கவில்லை. வசந்த் நெக்லஸை டெலிவரி எடுக்க வந்ததாகத் தெரிவித்தான்.

“ நெக்லஸை அப்பவே டெலிவரி கொடுத்தாச்சே. நீலா மேடத்துக்கான நெக்லஸ் தானே அது? அவங்களே காரில வந்து வாங்கிட்டு போயிட்டாங்களே? ”

“ நீலாவா? யாரு? கொட்டிவாக்கம் நீலாதானே? ” சும்மா அடித்து விட்டான் வசந்த்.

“ இல்ல சார், பெசண்ட் நகர் நீலா..! 23, ஜிகெஎஸ் க்ராஸ் ஸ்டீர்ட். வைபவ் இல்லம்! ”

அதற்கு மேல் வசந்த் ஏன் அங்கு நிற்கப் போகிறான்?

ஆனாலும் நின்றான். அங்கிருந்த வயதான வாட்ச்மேனின் பார்வை இந்தாண்டைப் பக்கம் வாடா மவனே என்றது. போனான். ஐந்து நூறு ரூபாய் நோட்டுக்கள் தன் வேலையைச் செவ்வனே செய்தன.

இந்த நீலா கோபிநாத்தின் மனைவி. கோபிநாத் அதிரூபனின் தொழில் முறை எதிரி. கோபிநாத் எத்தனை ரூபாய்க்கு டெண்டர் எழுதி இருக்கிறான் போன்ற ரகசியங்கள் நீலாவின் மூலம் அதிரூபனுக்குத் தெரிந்து விடும். அதற்குப் பரிசாக நீலாவுக்கு அவ்வபோது நகையும் பட்டுப்புடவையும் அதிரூபனிடமிருந்து கிடைத்து விடும்.

“ ரெண்டு பேரும் சேர்ந்து சுத்துவாங்களா? ” வாட்ச்மேனிடம் கேட்டான் வசந்த்.

“ இல்ல சார். மிஞ்சி மிஞ்சிப் போனா அந்த ஸ்டார் ஹோட்டலுக்கு காபி சாப்பிட வருவாங்க. அதுவும் எப்படி? அந்தம்மா முன்னாடி வந்துடும்.. பத்து நிமிஷம் கழிச்சி ஐயா வருவார். தனித்தனி டேபிள்ளதான் உட்காருவாங்க. ஒருதரம் எங்க முதலாளிக்கு அந்த ஹோட்டல்ல டேபிள் ரிசர்வ் பண்ணப் போயிருந்தேன். அப்பதான் பார்த்தேன். அந்தம்மா காபியை குடிக்கிறாங்களா, இல்ல ஐயாவை கலக்கி குடிக்கிறாங்களான்னே தெரியல...! அவங்க காரில ஏறிடுவாங்க. ஐயா கீழே நின்னிருப்பார். அப்ப அவங்க கொஞ்சுறதும், சிணுங்குறதும்.. ஹய்யய்யோ... கிளுகிளுங்கும்...! ”

வாட்ச்மேன் சொன்ன விதம் வசந்த்துக்கே கிளுகிளுத்தது.

“ ஐயா என்ன செய்வார்? ”

“ அவர் சிரிச்சுட்டே பை பேபின்னு கையாட்டிட்டு போய்கிட்டே இருப்பார்.. அந்தம்மா காரை விட்டு இறங்கி தரையை காலால ஒரு தட்டு தட்டுவாங்க பாருங்க..! காளை மாடு சண்டைக்கு முன்னாடி மண்ணைக் கீறுமே.. அதே மாதிரி இருக்கும்..! ”

நீலாவைப் பற்றி இன்னும் கொஞ்சம் துருவினான். நீலா திருமணமானதை மறைத்து அழகிப் போட்டியில் கலந்து கொண்டால் மிஸ் இந்தியாவாக வரலாம். ஆறு மாதங்களுக்கு முன் கணவனை விவாகரத்து செய்ய முயற்சித்து பிறகு ரத்தை ரத்து செய்திருக்கிறாள். நீலாவின் கணவன் கோபிநாத் கரடு முரடான முகமும் தொப்பையுமாக இருந்தாலும் அவன் அதிரூபனுக்கு அடுத்த நம்பர் டூ பிசினஸ் மேன்.

அன்றிரவு ஒரு மணிக்கு அலாரம் வைத்து எழுந்தான். நாலு டஜன் கள்ளச்சாவி, கருப்பு உடை, டார்ச், ரம்பம் இத்யாதிகளுடன் வெளியில் கிளம்பிய வசந்த்தை பார்த்து அவன் தாய் எங்கயாவது திருடப் போறியாப்பா? என்று அப்பாவியாகக் கேட்டாள். களுக்கென்ற சிரிப்பை பதிலாக்கி விரைந்தான்.

அடுத்த நாள் சக்ரபாணியின் வீட்டை போலிஸ் சோதனையிட்டுக் கொண்டிருந்தது. சக்ரபாணி வெளிநாடு போகும் முயற்சியில் இருந்தார். வசந்த் வந்ததும், “ என்ன வசந்த், இது அநியாயம் ” என்று பதறினார் சக்ரபாணி.

வசந்த் பதில் சொல்லவில்லை.

“ கொலைகாரனை கண்டுபிடிங்கன்னா என்னைப் போட்டு இம்சிக்கிறாங்க..! இதுக்கா உங்களை பணம் கொடுத்து இந்த கேஸில் இறக்கி விட்டேன்? ” சக்ரபாணி ஆவேசமாய் கேட்க, வசந்த்தும் ஆவேசமானான்.

“ நல்லாவே பிளான் பண்றீங்க சக்ரபாணி..! நீங்க என்னை இந்த கேஸில இறக்கலேன்னாலும் அசோசியேஷன் ஆளுங்க இறக்கி விட்டிருப்பாங்க. அந்த சான்ஸ் இருந்ததாலயும் உங்க இன்னொரு நண்பரோட வற்புறுத்தலாலேயும் தான் நீங்க முந்திகிட்டீங்க. அப்ப என் சந்தேகம் உங்க மேல விழாதுன்னு நினைச்சீங்க இல்ல? ”

சக்ரபாணி அதிர்ந்தார்.

“ முப்பது லட்ச ரூபாய்க்காக நெருங்கின நண்பனை போட்டுத் தள்ளிட்டீங்களே! ”

“ இல்ல, இல்ல..! ” முதலில் திடமாய் மறுத்த சக்ரபாணி முப்பது லட்சம் அடங்கிய பிரௌன் நிற
சூட்கேஸ் கண்டு பிடிக்கப்பட்டதும் அப்படியே மண்டியிட்டார்.

“ஆமா, அதிரூபனை நான்தான் கொலை பண்ணேன். ” அப்படியே முகத்தை மூடி அழுதார். “ நீலா ஒண்ணு நினைச்சா அதை நிறைவேத்தாம விட மாட்டா! நான் முடியாதுன்னு சொன்னாலும் வேற யாரையாவது வச்சு வேலையை முடிச்சுடுவா..! யாருக்கோ போற பணம் எனக்கு வரட்டும்னு நினைச்சுட்டேன்.. எல்லோருக்கும் சந்தேகம் அகிலா மேலதான் போகும்.. நாம தப்பிச்சுடலாம்னு நினைச்சேன்..! ”

“ நல்ல நொண்டி சாக்கு! ” சீறினான் வசந்த். “ அந்த பொம்பளையைப் பத்தி சொல்லி குறைந்த பட்சம் உங்க நண்பரை எச்சரிக்கையாவது செய்திருக்கலாம். அதை விட்டுட்டு...! சே..! இப்படி பண்ணிட்டீங்களே? ”


“ கொஞ்சம் கோவையாத்தான் சொல்லுங்களேன் ” என்றார் இன்ஸ்பெக்டர் வசந்த்திடம். இடம்- ராகா ஹோட்டல்..! ரத்னா ஹோட்டல் மெனுவை ஆராய்ந்து கொண்டிருந்தார்.

வசந்த் சொல்லத் தொடங்கினான்.

“ இந்த கேஸ் நீலா கிட்ட இருந்துதான் தொடங்குது. நீலாவுக்கு அதிரூபன் கிட்ட மயக்கம்..! தன் தொழில் முறை எதிரியான கோபிநாத்தோட ரகசியங்களை நீலாவோட இந்த மயக்கத்தை பயன்படுத்தி அதிரூபன் தெரிஞ்சிட்டு வந்தார். ஆனா நீலா அதிரூபன் மேல பைத்தியமா இருந்தா. எந்தளவுன்னா தன் கணவனை டைவர்ஸ் பண்ணிட்டு அதிரூபனை மறுகல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு! ஆனா அதிரூபன் தனக்கு மனைவியா தேர்ந்தெடுத்தது அகிலாவை. அதிரூபன் தன்னை ஏமாத்திட்டதா நீலா கொதிச்சுப் போனா. தனக்கு கிடைக்காத அதிரூபன் இந்த உலகத்துலேயே இருக்கக் கூடாதுன்னு நினைச்சா.

ஒரு காலத்துல நீலாவும் சக்ரபாணியும் பேப்பர் மில் பங்குதாரர்கள். இந்த பரிச்சயத்தை வச்சிக்கிட்டு அதிரூபனை முடிக்கச் சொல்லி பணத்தாசை காட்டினது நீலா.

சனிக்கிழமை தண்ணி பார்ட்டியில அதிரூபனோட கைத்துப்பாக்கிய பார்க்கிறார் சக்ரபாணி. மீனாவோட குழந்தையை கடத்திட்டு போய், மீனாவை மிரட்டி கீழறையில இருக்கிற துப்பாக்கியை மாடி அறையில புத்தக அலமாரியில மறைச்சு வைக்கச் சொல்றார். மீனாவும் ஞாயிற்றுக்கிழமை மதியம் அப்படியே செய்யறா. இதை அந்த புத்தகத்து தாளோட மடிப்புகளை கவனமா பார்த்தாலே தெரியும். அவை ஒரு துப்பாக்கி செருகி வச்சதால வந்த மடிப்புகள்தான்.

இப்பத்தான் ஒரு திருப்பம்..

மீனாவோட கைபட்டு கடிகாரம் கீழே விழுந்து நின்னுடுச்சு. பதட்டத்துல இருந்த மீனா தன்னோட வாட்சை பார்த்து சரியான நேரத்தை செட் பண்ணிடுறா. அப்புறம் அகிலா பார்ட்டிக்கு போன பிறகு சக்ரபாணி தொப்பி போட்டு வர்றார். தன் கிட்ட இருந்த சாவியை வச்சி – ஆமா, அதிரூபன் வீட்டுச் சாவி சக்ரபாணி கிட்ட இருந்தது- கதவைத் திறக்கிறார்; மேலே போறார்..! சட்டுன்னு அங்க மறைச்சு வச்சிருந்த துப்பாக்கியை எடுக்கறார்..! நண்பன்தானேன்னு விச்ராந்தியா உட்கார்ந்திருந்த அதிரூபனை சுட்டுக் கொன்னுட்டு சுவடு தெரியாம இறங்கிப் போயிடுறார்..!

மரணம் அதிரூபனோட துப்பாக்கியால நடந்திருக்கு..! மேலோட்டமா பார்த்தா இது தற்கொலை மாதிரியும் தெரியும்..! மிஞ்சி மிஞ்சிப் போனா அகிலா மேலதான் சந்தேகமும் விழும்..!

சக்ரபாணி வீட்டைச் சோதனை போடும்போது கிடைச்ச முப்பது லட்ச ரூபாய் நீலாவோட அக்கவுண்ட்லேயிருந்து எடுக்கப்பட்டது. மீனாவும் சக்ரபாணியும் அகிலா மேல வீண்பழி போட்டது தங்கள் மேல இருக்கற குற்றத்தை மறைச்சு திசை திருப்பத்தான்...! ”

“ ஆனா உங்களை இப்படி யோசனை பண்ணி தேட வச்சது அதிரூபன் வரைஞ்ச ஓவியம்தான் இல்லையா? ” இன்ஸ்பெக்டர் கேட்டார்.

“ஆமாமா.. எங்கம்மா மட்டும் அந்த செயற்கைக்கோள் பற்றி என் கிட்ட சொல்லலைன்னா இந்த கேஸ் கோவிந்தாதான்..! ”

ரத்னா புன்னகைத்தார்.

“ ஹூம்..! இனிமே நானும் தினமும் வானத்தைப் பார்க்கிறேன்..! – இருக்கிற வேலையோடு..! ” இன்ஸ்பெக்டர் சலித்துக் கொள்ள வசந்த் சிரித்தான்.!


முற்றும்.

............................................................................................................................................................................................

எழுதியவர் : அருணை ஜெயசீலி (29-Jul-15, 8:33 pm)
பார்வை : 597

மேலே