மூன்று மீன்கள்

ஒரு குளத்தில் மூன்று மீன்கள் வாழ்ந்து வந்தன. அவைகளில் முதலாவது, புத்திசாலியான மீன். இரண்டாவது, அரைகுறை புத்திசாலியான மீன்.மூன்றாவது, முட்டாள் மீனாகும்.

உலகிலுள்ள மற்றெல்லா மீன்களைப் போல்தான் அக் குளத்திலுள்ள மீன்களும் வாழ்ந்து வந்தன.
மற்ற மீன்களுக்கு நேருகின்ற அனைத்து விஷயங்களும் அக் குளத்து மீன்களுக்கும் நேர்ந்து வந்தன.
ஒரு நாள் குளத்து மீன்களின் வாழ்க்கையிலும், ஒரு குறுக்கீடு மனித ரூபத்தில் வந்தது.

வந்த மனிதனின் கைகளில் வலை இருந்தது.

வலையைக் கவனித்து விட்ட புத்திசாலியான மீனுக்கு தான் பார்த்த, கேட்ட அனுபவங்கள் எல்லாம் ஞாபகத்துக்கு வந்தன. அவ்வனுபவங்களைக் கொண்டு சாமர்த்தியமாக செயóல் இறங்கலாம் என யோசனை பண்ணியது அம் மீன்.

இக்குளத்தில் மனிதக் கண்ணில் படாமல் மறைவாக ஒளிந்து கொள்வதற்கு நிறைய பொந்து பொடவுகள் இருக்கின்றன. ஆகையால் செத்தது போல் நடிக்கலாம் என திட்டம் போட்டது அந்த புத்திசாலியான மீன்.
தனது சக்தியெல்லாவற்றையும் திரட்டி, குளத்தை விட்டு எம்பிக் குதித்து அம் மீனவனின் காலடியில் போய் விழுந்தது புத்திசாலியான மீன். தனது காலடியில் விழுந்த மீனைப் பார்த்து ஆச்சரியமாகப் போய்விட்டது மீனவனுக்கு.

ஆனால், அம் மீன் மூச்சை இறுக்கிப் பிடித்து துடிப்பில்லாமல் கிடந்ததால், மீன் இறந்து போய்விட்டது என நினைத்து அதைக் குளத்துக்குள் தூக்கியெறிந்துவிட்டான் மீனவன்.

நீரில் விழுந்த அம் மீன் கரையோரமாக இருந்த ஒரு பொந்திற்குள் போய்ப் புகுந்து கொண்டது.
இரண்டாவது மீனிற்கு, நடந்த விஷயங்கள் எதுவும் தெரியாது. ஆகவே இரண்டாவது மீன், புத்திசாலியான மீன் இருக்குமிடத்திற்கு நீந்திப் போய் நடந்த விஷயங்களைக் கேட்டது.

“ரொம்ப சுலபம். நான் இறந்துவிட்டது போல் நடித்தேன். அவன் என்னைத் தூக்கி, குளத்தில் மீண்டும் போட்டு விட்டான்” என்றது புத்திசாலி மீன்.

அதைக் கேட்டவுடன், இரண்டாவது மீன் துள்ளிக் குதித்து தண்ணீரை விட்டு வெளியே வந்து மீனவன் காலடியில் விழுந்தது.

’வினோதமாக இருக்கிறது. மீன்கள் தரையில் எல்லா இடங்களிலும் தாவிக் குதித்து விழுகின்றன’ என யோசனை செய்தான் மீனவன்.

அந்தப் பாதி புத்திசாலியான இரண்டாவது மீன் மூச்சை இறுக்கிக் கட்டுப்படுத்த மறந்து விட்டது. சுவாசத்துடன் மீன் உயிருடன் இருப்பதைப் பார்த்து மீனைத் தன் கூடைக்குள் போட்டுக் கொண்டான் மீனவன். தன் முன்னால் தரையில் வந்து விழும் மீன்களைப் பற்றி யோசித்துக் குழம்பிப் போயிருந்த மீனவன்,தண்ணீருக்குள் உற்றுப் பார்க்கத் திரும்பினான்.

தனது குழப்பத்தில், கூடையை மூடாமல் விட்டிருந்தான் மீனவன்.

அதை உணர்ந்த அரை புத்திசாலியான மீன், தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, கூடையை விட்டு நழுவி வந்து, தண்ணீருக்குள் விழுந்து புத்திசாலியான மீனைத் தேடிப் பிடித்து அதன் பின்னால் மூச்சு வாங்கிப் பதுங்கிக் கொண்டது.

மூன்றாவது முட்டாள் மீனோ இதை எதையுமே புரிந்து கொள்ளவில்லை.

முதல் மீனும், இரண்டாவது மீனும் மூச்சை அடக்க வேண்டிய அவசியத்தைப் பற்றி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், மூன்றாவது மீன் எதையும் சரியாகக் காதில் போட்டுக் கொள்ளவில்லை.
“உங்களுக்கு மிக்க நன்றி, இப்போது நான் புரிந்து கொண்டு விட்டேன்” என்று சொல்லி விட்டு தண்ணீரை விட்டுத் தாவிக் குதித்து மீனவனின் பின்னால் போய் விழுந்தது மூன்றாவது மீன்.

முதலிரண்டு மீன்களையும் இழந்துவிட்ட மீனவன் இப்போது வந்து விழுந்த மீனுக்கு மூச்சுத் துடிப்பு இருக்கிறதா, இல்லையா என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் அம் மீனைத் தூக்கிக் கூடைக்குள் போட்டுவிட்டான்.

மீனவன் சளைக்காமல் வலையைக் குளத்துக்குள் மீண்டும் மீண்டும் வீசியும் முதலிரண்டு மீன்களும் வலையில் சிக்காமல் நீரின் அடியாழத்துக்குள் போய்விட்டன.

மூன்றாவது மீன் கிடைத்தவுடன் கூடையை எச்சரிக்கையுடன் இறுக மூடி வைத்திருந்தான் மீனவன்.
கடைசியாக வலையில் மீன்கள் மாட்டாததைக் கண்ட மீனவன் தனது முயற்சியைக் கை விட்டவனாய். கூடையைத் திறந்தான்.

உள்ளிருந்த மீனுக்கு சுவாசம் நின்றுவிட்டதை உணர்ந்த மீனவன். தான் வளர்க்கும் பூனைக்கு இரையாக அதை வீட்டுக்கு எடுத்துச் சென்றான் .

எழுதியவர் : முகநூல் (30-Jul-15, 6:14 pm)
Tanglish : moondru meenkal
பார்வை : 285

மேலே