இன்னிசை இருநூறு - இரண்டாவது அதிகாரம் – அறம் - பாடல் 3

சிவாநினக்கே யோவா தறவினை செய்வேன்
அவாவேன் பிறவன் பளியெனல் வேண்டும்
உவாமதி பாம்போ டுறுவது போலும் சினகரம்
அவாவொடு கூடு மறன். 3

பதவுரை:

அவாவொடு - ஆசைகளுடன்

சினகரம் – இறைவன் உறைவிடங்களுக்குச்

கூடும் அறன் – சென்று செய்விக்கும் தரும காரியங்கள்

உவாமதி - முழுமதி, நிறை நிலா

பாம்போடு உறுவது போலும் – இராகு என்ற பாம்புடன் சேர்ந்து வருவதினைப் போலவாகும்;

சிவா – அரனாகிய சிவனே!

நினக்கே – உனக்காகவே

ஓவாது – இடைவிடாமல்

அறவினை செய்வேன் – நற்காரியங்களைச் செய்வேன்

அவாவேன் பிற – வேறு மற்றைய ஆசைகளைக் கொள்கிலேன்;

அன்பளி – உன்னுடைய அன்பினையே எனக்குத் தருவாயாக

எனல் வேண்டும் – என்று உன்னை வேண்டிக் கொள்கிறேன்.

தெளிவுரை:

ஆசைகளுடன் இறைவன் உறைவிடங்களுக்குச் சென்று செய்விக்கும் தரும காரியங்கள் முழுமதி இராகு என்ற பாம்புடன் சேர்ந்து வருவதினைப் போலவாகும்; அதுபோல, அரனாகிய சிவனே! உனக்காகவே இடைவிடாமல் நற்காரியங்களைச் செய்வேன்; வேறு மற்றைய ஆசைகளைக் கொள்கிலேன்; உன்னுடைய அன்பினையே எனக்குத் தருவாயாக என்று உன்னை வேண்டிக் கொள்கிறேன்.

விளக்கம்:

முழு நிலவினைப் பாம்பு கவ்விக் கொண்டது போல, (உள்ளொளியும், உலகுக்குக் காட்டவிருக்கும் ஒளியும் இழந்தவர்களாக) கோயில்களுக்குச் செல்லும் பொழுது ஆசைகள் கொண்டவர்களாகச் செல்லுதல் கூடாது. யானோ, சிவனே! உன்னை நினைத்தே உனக்காகவே நற்செயல்களை விடாது ஆற்றி வருவேன். வேறு ஆசைகளைக் கொள்ளேன்; அன்பை மட்டுமே எனக்குத் தா எனல் வேண்டும்.

சினகரம் – சீவக சிந்தாமணியில் அம்மலைச் சினகரம் வணங்கி என்ற அடிக்குக் காட்டிய உரையில் ஜைன ஆலயம் என்று கூறப்பட்டுள்ளது.

விளக்க உரை: திரு.கா.எசேக்கியல்

குறிப்பு:

இன்னிசை இருநூறு என்ற இந்நூல் 200 இன்னிசை வெண்பாக்களைக் கொண்டது. இந்நூல் மதுரைத் தமிழ்ச் சங்க வித்வான்களில் ஒருவராகிய சோழவந்தான் திரு.அ.சண்முகம் பிள்ளையவர்கள் இயற்றியது.

இந்நூல் மதுரையில் விவேகபாநுப் பிரஸ் நடத்தி வந்த பத்திராதிபர் திரு. மு.ரா.கந்தசாமிக் கவிராயர் என்பவரால் 01.07.1913 ல் புத்தகமாக வெளியிடப்பட்டது.

இத்தளத்திலுள்ள நண்பர்கள் அனைவரும் இப்பாடலை வாசித்துப் பயன் பெறும்படியும், கருத்தளிக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.

எழுதியவர் : அரசஞ்சண்முகனார் (8-Aug-15, 12:34 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 176

மேலே