இன்னிசை இருநூறு - இரண்டாவது அதிகாரம் – அறம் - பாடல் 4

சினகரம்போய்த் தீர்த்தம்போய்ச் செய்யினு நன்மை
வினைவேறு சிந்தையும் வேறாகு மாயின்
மனநற் றளியொளிர் வாலறிவற் காணார்
தினையளவு நீங்கார் திருக்கு. 4

சினகரம் – ஆலயம், தளி – கோயில்

பதவுரை:

சினகரம்போய் – ஆலயத்திற்குச் சென்று

தீர்த்தம்போய் – புனித நீராடலுக்கான புண்ணிய நதிகளுக்குச் சென்று

நன்மை செய்யினும் – அங்கெல்லாம் நற்காரியங்கள் செய்தாலும்

வினைவேறு - அப்படிச் செய்பவர்கள் தங்கள் செயல்கள் வேறாகவும்

சிந்தையும் வேறாகு மாயின் – மனதில் சிந்திக்கின்ற எண்ணங்களும் வேறாக மாறுபட்டிருக்குமானால்,

மனநற் றளியொளிர் – மனத்தினில் நல்ல கோயிலாகக் கொண்டு ஒளிச்சுடராக விளங்கக் கூடிய

வாலறிவன் காணார் – தூய அறிவு வடிவானவனைக் காணமுடியாதவர்களாக ஆகிவிடுவர்
திருக்கு – அவர்கள் தங்களுடைய இடையூறுகளும், அதனால் ஏற்படும் துயரங்களும்

தினையளவு நீங்கார் – சாமை என்றறியப்படும் தினையின் ஒரு சிறு மணியளவு கூட விலகிப் போகும்படியான இலாபத்தினை அடைய மாட்டார்கள்.

தெளிவுரை:

ஆலயங்களுக்குச் சென்று, புனித நீராடலுக்கான புண்ணிய நதிகளுக்குச் சென்று அங்கெல்லாம் நற்காரியங்கள் செய்தாலும், அப்படிச் செய்பவர்கள் தங்கள் செயல்கள் வேறாகவும் மனதில் சிந்திக்கின்ற எண்ணங்களும் வேறாக மாறுபட்டிருக்குமானால், மனத்தினில் நல்ல கோயிலாகக் கொண்டு ஒளிச்சுடராக விளங்கக் கூடிய தூய அறிவு வடிவானவனைக் காணமுடியாதவர்களாக ஆகிவிடுவர். அவர்கள் தங்களுடைய இடையூறுகளும், அதனால் ஏற்படும் துயரங்களும் சாமை என்றறியப்படும் தினையின் ஒரு சிறு மணியளவு கூட விலகிப் போகும்படியான இலாபத்தினை அடைய மாட்டார்கள் என்கிறார் பெரும்புலவர் அரசஞ் சண்முகனார்.

தளி – இடம், கோவில் (அடிசிற் றளியா நெய்வார்ந்து எனச் சீவகசிந்தாமணி 2579 ஆம் பாடலிலும், காமர் சாலை தளினிறுமின் என 306 ஆம் பாடலிலும் கூறப்பட்டது போல)

திருக்கு – சங்கடம் (எத்திருக்கும் கெடுமென்பதை எண்ணா என்ற கம்ப ராமாயணம் 123 ஆம் பாடலிற் கண்டாற்போல)

விளக்க உரை: திரு.கா.எசேக்கியல்

குறிப்பு:

இன்னிசை இருநூறு என்ற இந்நூல் 200 இன்னிசை வெண்பாக்களைக் கொண்டது. இந்நூல் மதுரைத் தமிழ்ச் சங்க வித்வான்களில் ஒருவராகிய சோழவந்தான் திரு.அ.சண்முகம் பிள்ளையவர்கள் இயற்றியது.

இந்நூல் மதுரையில் விவேகபாநுப் பிரஸ் நடத்தி வந்த பத்திராதிபர் திரு. மு.ரா.கந்தசாமிக் கவிராயர் என்பவரால் 01.07.1913 ல் புத்தகமாக வெளியிடப்பட்டது.

இத்தளத்திலுள்ள நண்பர்கள் அனைவரும் இப்பாடலை வாசித்துப் பயன் பெறும்படியும், கருத்தளிக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.

எழுதியவர் : அரசஞ்சண்முகனார் (9-Aug-15, 10:18 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 112

மேலே