என் வாழ்க்கைப் பயணம் - அனுபவச் சாரல்கள் -15

வாழ்க்கையில் சாதித்தவர்கள் , மக்களுக்காக உழைத்தவர்கள் , அடுத்தவர்களைப் பற்றி கவலைப்படுபவர்கள் , இரக்கம் கொண்டவர்கள் , இப்படி பல நல்ல குணாதிசயங்கள் இயற்கையாகவே உள்ளவர்கள் பலரும் சமீப காலத்தில் மறைந்துவருவது நமக்கு பெரும் இழப்பு மட்டுமல்ல , வருங்கால சந்ததியினரை நினைப்பவரும் நாட்டில் குறைந்து வருவது , மிகவும் வருத்தமாகத்தான் உள்ளது .

சமீபத்தில் பொதுநலனுக்காக , மதுவிலக்கு அமுல்படுத்த ஒரு வேகத்துடன் போராடி , களத்திலேயே மறைந்த காந்தியவாதி திரு சசி பெருமாள் அவர்களின் இழப்பும் அதன்பின் நடந்த நிகழ்வுகளும் நெஞ்சை உலுக்கவே செய்தது அனைவருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது என்றே நம்புகிறேன் . அவருக்கோ , அவருடைய குடும்பத்திற்கோ , சுயநலத்திற்காகவோ என்றுமே அவர் போராடியதும் இல்லை .. இறுதிவரை அந்த நோக்கோடு வாழவும் இல்ல. அவருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ..இதய அஞ்சலி .
இதுபோன்று பலர் இருப்பார்கள் .. நமக்கு அவர்களை தெரியாமலும் இருக்கலாம் .

சமுதாய சீரழிவிற்கு பல காரணங்களில் மதுவும் ஒன்று . தற்காலத்தில் அந்த கலாசாரம் அணைத்து பிரிவுகளிலும் பரவி , வளமான வருங்காலம் உருவாக ஒரு தடையாகவும் உள்ளது என்றால் அது மிகையில்லை .

பாதை மாறி போகவில்லை இங்கே கட்டுரையில் நான் ...அவ்வப்போது நெஞ்சில் எழுகின்ற வலிமிகு எண்ணங்களை பகிரவே இதெல்லாம் கூறுகிறேன் . ஏனெனில் என் அனுபவச் சாரல்களில் இவைகளும் ஒரு துளியே .எனது வாழ்க்கைப் பயணத்தின் இடையிடையே நடைபெறும் நிகழ்வுகளின் எதிரொலியே . நிழலாடும் நினைவுகளின் உருவகமே ...ஊற்றெடுக்கும் உள்ளத்தின், உண்மை அனுபவங்களின் உயிர்த்துடிப்பு .

நான் வங்கியில் கண்ட பலபல அனுபவங்களே இன்று என்னை பதப்படுத்தி , தெளிவாக்கி , பலரை இனம் கண்டுக் கொள்ள உதவுகிறது . சிலரின் உண்மை நிறங்களை அறிந்திட முடிந்தது .

ஒருமுறை எங்கள் வங்கியின் மனமகிழ் மன்றத்தின் விழா ஒன்றிற்கு, கவிபேரரசு வைரமுத்து அவர்களை அழைத்துவர அவர்தம் வீட்டிற்கு சென்றேன். என்னுடன் என் நெருங்கிய நண்பர் மக்கள் குரல் திரு சண்முகம் அவர்களும் வந்திருந்தார். அவர் மூலமாகத்தான் எனக்கு கவிபேரரசு அவர்கள் அறிமுகமானார் . நண்பர் திரு சண்முகம் அருமையான , வெளிப்படையான , எளிய மனிதர் . எப்போதும் சிரித்த முகமுடனே காணப்படுவார். அப்போது கவிஞரின் உதவியாளர் ( திரு பாஸ்கர் என்று நினைக்கிறேன் ) , எங்களை வரவேற்று , தேநீர் கொடுத்து உபசரித்தார். சில நிமிடங்களில் சார் வந்துவிடுவார் ....ரெடியாகி கொண்டிருக்கிறார் என்றார். சற்று நேரத்தில் திரு வைரமுத்து அவர்கள் மாடிப்படிகளில் இறங்கி வந்தார் ....வரும்போதே என்ன சண்முகம் நலமா என்று கேட்டார் . என் அறிமுகம் முடிந்தவுடன் , சில மணித்துளிகள் பொதுவாக பேசிக்கொண்டிருந்தோம் . நான் கேட்ட சில கேள்விகளுக்கு சட்டென்று பதில் அளித்தார். புறப்படலாம் என்றார். நம் காரிலேயே போகலாம் என்றார். நாங்கள் சென்ற காரை எங்களை பின்தொடர சொல்லிவிட்டு நாங்கள் கிளம்பினோம் . கார் கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் இருந்து அண்ணா சாலையில் உள்ள எங்கள் மத்திய அலுவலகம் நோக்கி பயணித்தது ....அப்போதே ட்ராபிக் பிரச்சினைதான் ....நான் கவிஞரின் பக்கத்திலே அமர்ந்து இருந்ததால் , சில அரசியல் , திரைப்பட அனுபவங்களையும் , நிகழ்வுகளையும் திறந்த மனதுடன் பகிர்ந்து கொண்டது மறக்க முடியாத பயணமானது அது . சிலநேரத்தில் , ஆவேசமாக பேசினார் ...சிலவற்றிற்கு அமைதியுடன் சிரித்துக் கொண்டே பதில் அளித்தவிதம் என்னை கவர்ந்தது ....

நிகழ்ச்சியில் பேசும்போது என்னைப் பற்றி அவர் உயர்வாக பேசியது என்னை ஆச்சரியப்படுத்தியுதடன் , உற்சாகத்தில் ஆழ்த்தியது. ஒரு மணி நேரம் முன்னர்தான் அறிமுகம் ....அதில் அரை மணிநேரம்தான் உரையாடியது ...அதற்குள்ளாக என்னைப்பற்றி பேசுகிறார் என்று ...நான் அந்த உரையை டேப்பில் பதிவு செய்து வைத்திருந்தேன் ...அதை இங்கே பதிவிட நினைத்தேன் ...ஆனால் கிடைக்கவில்லை தேடியும் ....இது நடந்தது 1992 ம் ஆண்டு .

நான் வங்கியில் இருந்தபோது உயர்பதவிகளில் இருந்த பலரை சந்திக்கும் வாய்ப்பும் , அதன்பின்பு பலகாலம் தொடர்ந்த , இன்றும் தொடரும் நட்பும் மறக்க முடியாதவை . வங்கியின் பொன்விழா நடைபெற்றப் போது , அன்றைய குடியரசு தலைவர் மாண்புமிகு ஆர் வெங்கட்ராமன் அவர்கள் தலைமை விருந்தினராக முடிவாகி , ஆனால் கடைசி நேரத்தில் அவர் தவிர்க்க முடியாத காரணத்தால் கலந்து கொள்ள இயலாததால் , அன்று தமிழ்நாடு நிதி அமைச்சராக இருந்த மாண்புமிகு நாவலர் திரு V R நெடுஞ்செழியன் அவர்கள் தலைமையில் சீருடனும் சிறப்பாகவும் நடைபெற்றது . சிலம்புச் செல்வர் திரு ம பொ சி ,நீதியரசர் திரு A ர லட்சுமணன் , கவிஞர் வைரமுத்து , ஓய்வுப் பெற்ற தலைமை செயலாளர் திரு C V R பணிக்கர் IAS மற்றும் பலர் விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர் . சென்னை , தேனாம்பேட்டை , காமராசர் அரங்கில் நடந்தது . மறக்க முடியாத ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு என் அலுவல் காலத்தில். நிர்வாகத்தின் கட்டளைக்கு இணங்க , முக்கிய பணிகளை நான் நேரிடையாக மேற்கொண்டது பெருமையாக கருதுகிறேன் . வங்கியின் நிறுவனர், கலைத்தந்தை திரு கருமுத்து தியாகராசர் அவர்களின் உருவச் சிலையும் திறந்து வைக்கப்பட்டது. அனைத்து ஊழியர்களும் இணைந்து பணியாற்றிய , பங்கேற்ற சிறப்பான நிகழ்ச்சி அது .

இடையில் சில நேரங்களில் , வங்கியின் முக்கியமான வழக்குகள் சிலவற்றிற்காக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அடிக்கடி சென்று வர வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டது. அச்சமயத்தில் பல வழக்குகளை நேரிடையாக கண்டவன் ...சில நீதிபதிகளை நேரிடையாக சந்திக்கவும் உரையாடவும் வாய்ப்பு கிட்டியது. மறைந்த சிலம்புச் செல்வர் திரு ம பொ சி அவர்களை நான்கைந்து முறை சந்தித்து பேசியுள்ளேன் . அந்தகால நினைவுகளையும் , சுதந்திர கால போராட்டத்தையும் என்னிடம் பகிர்ந்து கொண்டார் .

எங்கள் வங்கியின் வருடாந்திர பொதுக் கூட்டம் மதுரையில் பாண்டியன் ஹோட்டலில் தான் நடக்கும் . ஏறக்குறைய 22 கூட்டங்களில் கலந்து கொண்டேன் ஊழியராக ....மேலும் அந்த துறையில் தான் நான் பணியாற்றிகொண்டிருந்தேன் . வருடத்தில் மூன்று நாட்கள் அங்கு தங்கி அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு வருவது ஒரு TOUR சென்று வருவதை போல இருக்கும். இதனால் மதுரையிலும் அதனை சுற்றியுள்ள கிளைகளிலும் பணியாற்றிய பலர் நண்பர்களாக மாறினர் . பல்வேறு அனுபவங்கள் கிட்டியது ....

மீண்டும் சந்திக்கிறேன் ....

பழனி குமார்
10.08.2015

எழுதியவர் : பழனி குமார் (10-Aug-15, 4:33 pm)
பார்வை : 364

சிறந்த கட்டுரைகள்

மேலே