தங்கச்சிப்பாப்பா - கற்குவேல் பா

இரண்டரை வயது இருந்திருக்கும் அவனுக்கு ..!
அவன் மட்டுமே படுத்து உறங்கிய ,
அந்த மரத்தொட்டில் ..!
பரண் மேலிருந்து கீழே இறக்கிய அப்பா ..!
என்னோட தொட்டில் என்று துள்ளி ஓடி அதில் அமர்ந்த தருணத்தில் ,
" இனி , இது உனக்கு வரப்போகும் தங்கை பாப்பாவிற்கு" என்று தந்தை கூறிய கணத்திலிருந்து ஆரம்பமாயிற்று , அவனுக்கான தங்கை கனவுகள் !

அன்றிலிருந்தே ,
பாப்பா எப்போ வருவா ?
பாப்பா எப்படிமா இருப்பா ?
என்ன மாதிரி கருப்பா இருப்பாளா இல்ல ,
உன்ன மாதிரி வெள்ளையா இருப்பாளா ?
உன் வயிற்றிலிருந்து வெளியே வந்ததும் என் கூட ஒடி பிடிச்சு விளையாட வருவாளா?
என்கூட நம்ம பிள்ளையார் கோவிலுக்கு வருவாளா ? - என்று பல கேள்விகளுடன் அம்மாவிடம் அவன் !

அத்தனைக்கும் பதிலாக ஒற்றை நீள முத்தத்துடன் விடை தருவாள் அம்மா !
அன்று இரவு அம்மா பிரசவ வலியில் அழுதுகொண்டு பிரசவ அறைக்குள்
சென்ற போது ,
வெளியே புன்சிரிப்புடன் தங்கச்சி பாப்பா கனவுடன் அவன் !

ஒருசில நிமிடங்களில் அம்மா சத்தம் நின்றுவிட . வெளியே வந்த மருத்துவர் கண்ணாடியை கழற்றி அப்பாவிடம் ஏதோ சொல்லிச் செல்ல ..கலங்கிய அப்பா அவன் கை பிடித்தே பாட்டியிடம் கொண்டு சென்று வீட்டிற்கு கூட்டிப் போகச் சொல்ல ,,

"தங்கச்சி பாப்பா வரட்டும் பா சேர்ந்து போகலாம்" - என்ற அவன் கேள்விக்கு , இருக்க அணைத்தவாறு ,
" நீ பாட்டி வீட்டுக்குப்போ நானும் அம்மாவும் பாப்பாவோட வீட்டிற்கு வருகிறோம் " என்று சொல்லி அனுப்பி வைத்தார் .

மறுநாள் இரவு , ஏதோ ஒரு பொம்மையுடன் வீட்டிற்கு வந்து , "இதோ உன் தங்கச்சி பாப்பா" என்ற அம்மா மற்றும் அப்பாவிடமிருந்து விடைபெற்று ,
பிள்ளையார் கோவிலுக்கு அவளை ( பொம்மை ) கையில் சுமந்து சென்ற நியாபகம் இன்றும் அவனது கண்களில் கண்ணீராக !!!

இதோ இன்று அவன் மனைவி பிரசவ வலியில் ,
அதே பிரசவ அறைக்குள் அழுகையுடன் செல்கிறாள் ..
இந்த முறையேனும் அவனுக்கு மகளாய் வந்து பிறந்து விடட்டும் , அந்த தங்கச்சிபாப்பா !

- கற்குவேல் .பா

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (13-Aug-15, 9:05 pm)
பார்வை : 453

மேலே