வாழ்க்கை வாகனம் இறக்கும்வரை பயணம்

குஞ்சு பொரித்து கூட்டிலிருந்து
துரத்தி விடும் தாய்ப்பறவை,
தனியே பறக்கும் திராணிக்கு
தயார் செய்திட, அது ஒரு தந்திரம்.

இந்த மந்திரம் அறியா மானுடன்
பிள்ளையை பிரிவதில்லை பெரியதாகும் வரை.
அளவை மீறும் அன்புக்கும் அணை வேண்டும்;
ஆற்றல் அறிவு கொஞ்சலில் கெஞ்சலில் வாராது.

மூளை மந்திரம் தந்திரம் கொண்ட ஒரு எந்திரம்
இயக்குவது இயங்குவது சக்தியெனும் யுக்தி கொண்ட புத்தி
அப்பாவி சக்தியறியான், அறிவாளி புத்தியுடையான்
ஆன்றோன் சான்றோன் இரண்டையும் யுக்தியாக்குவான்

வாய் மட்டும் இல்லையெனில் நாய் கூட நம்மை கவ்வி விடும்
வாழ்முறை நெறி அறியாதவன் வாழவே தகுதி யற்றவன்
உதிக்கும் சூரியனுக்கும் எரி வெயிலுக்கும் யாரும் சொல்லி தரவில்லை
சுயம்பாய் வாழ தலைப்படுவனே மனிதன் கை நீட்டாமல் கால் பிடிக்காமல்

மேடு பள்ளங்கள் வாழ்வில் மட்டுமல்ல காணுமிடம் எங்கும் அதுவே விதி
சட்டம் சம்பிரதாயம் சகுனம் சாத்திரம் சமூகத்தின் வலைகள் நெறிகள் முறைகள்
ஏமாற்றியவனே பலம் படைத்தவனாகிறான் ஏமாளிக்கு இங்கு ஈடு மறுக்கப்படும்
பட்டுத்தெளிதலே இங்கு பாடம், பறி கொடுத்தது விரயமல்ல பிணையம்

அனுப்பிய ஆண்டவனும் அறியாதது ஆஸ்தியும் அந்தஸ்தும் பணமும் புகழும்
அதற்குதான் அலைக்கழிக்கும் மனமும் மூளையும் அதனால் தானே கஷ்டமும் நஷ்டமும்
வாழ்க்கையில் பரீட்சைகளே பாடங்கள், மூளைக்குள் உரைக்கும் மனதுக்குள் உணர்த்தும்
போதனைகள் சுய தெளிவுகள் அறிந்து தான் செய்கிறான்

அவனுக்கு தெரியும் இறக்கும் வரை தான் இந்த வாழ்க்கைப் பயணம்!

எழுதியவர் : செல்வமணி (14-Aug-15, 1:28 am)
பார்வை : 173

மேலே