அம்மையப்பன் வாழ்த்து

தாள்பணிந்து நிற்கின்றேன் தங்கத் தாயே
தாளெடுத்து நானெழுத கவிதை கூறு
அள்ளல்ல குறையாத அறிவை ஈந்து
அன்னையே பிள்ளைக்கு ஆசி கூறு

கண்டதில்லை தெய்வமதை கண்டேன் உம்மை
அண்டமதில் எனைபடைத்த அம்மை யப்பா
என்றுமிந்த வையகத்தில் எனது வாழ்வு
குன்றுபோல உயர்ந்திருக்க நலத்தை நல்கு

மார்போடு அணைத்தெந்தன் தோளைத் தழுவி
ஊர்மெச்ச வாழ்ந்திடவே வழியை காட்டி
கண்போல காத்தீரே அம்மை யப்பா - உங்கள்
கால்பற்றி கண்ணொற்றி கொள்ளு கின்றேன்

சிறுபிள்ளை எனக்காக சிரத்தை கொண்டு
வறுமையிலே எனக்காக தம்மை வருத்தி
சீரோடு எனை வளர்த்த அம்மை யப்பா - உங்கள்
அடிதொழுது நிற்கின்றேன் அருளை தாரீர்

வஞ்சமதில் உடையாத உறுதி பெற்று
நெஞ்சத்தில் காயாத அன்பு வேண்டும்
எனக்கான வாழ்வெதுவோ அதனை வாழ
என்றென்றும் என்னோடு துணையாய் வாரீர்.


--------------------நிலாசூரியன். தச்சூர்.

எழுதியவர் : நிலாசூரியன், தச்சூர். (21-Aug-15, 11:50 am)
பார்வை : 145

மேலே