மரணத்தின் மகள்

வாழ வக்கத்த ஒருவன், தான் பெற்ற பெண் குழந்தையை வளர்க்க இயலாமல் மரணத்தின் வாசலில் குழந்தையை விட்டுச்சென்றான். தன்னைக் கொல்ல வந்த மரணத்தின் விகாரத்தைப் பார்த்த குழந்தை பயத்தில் கதறியது. குழந்தையின் கதறலைப் பார்த்து மனமிறங்கிய மரணம், அந்தக் குழந்தையை வாழ்வதற்கு அனுமதித்தது. அந்தக் குழந்தையை பிள்ளைச் செல்வமில்லாச் செல்வந்தர் வீட்டில் விட்டுச்சென்றது.

செல்வந்தரும் அந்தக் குழந்தையை எடுத்து வளர்த்தார். குழந்தையின் நலனைக் காண அவ்வப்போது மரணம் குழந்தையின் கண்களுக்கு மட்டும் தெரியும் படி வந்து போனது. முதலில் மரணத்தைப் பார்த்து பயந்த குழந்தை இப்போது அதனுடன் நட்புடன் பழகியது. சாரா என்று பெயரிடப்பட்ட அந்த குழந்தை வளர்ந்து பெரிய டாக்டரானது.

டாக்டரான சாராவிடம் ஒருநாள் மரணமானது உயிர்ப் பிழைக்கும் ரகசிய மருந்தை இரண்டு நிபந்தனைகளுடன் சொல்லிக் கொடுத்தது,
"முதல் நிபந்தனை - மரணிக்கும் நபரின் தலைமாட்டில் நான் இருந்தால் அவருக்கு நீ உயிர்க் காக்கும் ரகசிய மருந்தைக் கொடுக்கலாம்.
இரண்டாவது நிபந்தனை - மரணிக்கும் மனிதரின் கால்மாட்டில் நான் இருந்தால் அந்த மனிதனுக்கு நீ ரகசிய மருந்தைக் கொடுக்கக் கூடாது. அவர் மரணித்து என்னிடம் வந்து சேருவார்."

இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்ட சாரா உயிர்க் காக்கும் ரகசிய மருந்தினை மரணத்திடம் இருந்து பெற்றுக் கொண்டாள். அவள் மருத்துவம் பார்த்த அனைவரும் குனமடைந்தனர். டாக்டர் சாரா சில மாதங்களில் உலகளவில் பிரபலமானாள். ஒருநாள் சாராவின் வளர்ப்புத் தந்தை கொடியநோயால் பாதிக்கப்பட்டார், அவரை காப்பாற்ற சென்ற சாரா மிகவும் அதிர்ச்சியடைந்தாள். ஆம் மரணம் அவள் வளர்ப்புத் தந்தையின் கால்மாட்டில் உட்கார்ந்திருந்தது.

தனது வளர்ப்புத் தந்தையின் உயிரைக் காப்பாற்ற தன்னையே மரணத்திடம் அற்பனித்துக் கொண்டாள் சாரா. ஆம் தன் தந்தையின் உயிருக்கு பதிலாக தனதுயிரை மரணத்திடம் கொடுத்துவிட்டாள். முன்பு மரணம் தன்னை நெருங்கிய போது பயந்த சாரா தற்போது தனது வளர்ப்புத் தந்தைக்காக முழுமனதுடன் மரணத்திடம் சரணடைந்தாள். மரணமும் அவளை எற்றுக்கொண்டது.

எழுதியவர் : சிந்துஜா (29-Aug-15, 12:16 pm)
Tanglish : maranthin magal
பார்வை : 343

மேலே