மனக்குஷ்டம்

நான் ஒன்னாவது படிக்கசொல்லோ வழக்கம்போல பலிபீடத்துக்கு(பள்ளிக்கூடம்) வந்தா, அந்த மிஸ்சும் விடாம நொய்நொய்னு ஒரே இம்ச. ஒரு நாள் ரெண்டு நாள்னா பரவால்ல தெனமுமா மானங்கெட்டுப் போய் இப்டி என்கிட்டே கெஞ்சறது? என்னா செஞ்சாங்களா? திரும்பத் திருமப் த்ரீ டேபிள்ஸ் சொல்ல சொல்லி கேக்குறாங்க. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த எனக்கு பத்திக்கிட்டு வந்திடுச்சி ஒரு நாளு. 'ச்சீ பே'ன்னு சொல்லிட்டு நடையக் கட்ட ஆரம்பிச்சேன். பட் என் நேரம், எங்கம்மா அங்கயே டீச்சராயிருக்கக் காரணத்தால, தரதரன்னு புடிச்சு இஸ்தாந்துட்டாங்க. அப்புறம் நடந்தது வீர வரலாறு. ஆனா அந்த விழுப்புண்களப் பாக்கும்போது மட்டும் இப்டி ஒரு வீரக் கொயந்தையை, அதன் தெறமய நாடு அமுக்கப் பாக்குதேன்னு ஒரு மனக்குஷ்டம் வரும்.

கொஞ்ச நாள்ல டெலிபோன் வாங்கினாங்க. அதை நான் தொடக்கூடாதுன்னே, ஒசரத்துல தூக்கி வெச்சு வெறுப்பேத்தினாங்க. எனக்கா உள்ளுக்குள்ள அஞ்சாறு காட்டெரும உறும ஆரம்பிச்சுது. ஒரு நாள் எங்கம்மா மாடில எதையோ ஏறக்கட்டிக்கிட்டிருக்கும்போது வசமா நேரம் கெடச்சிது. வீட்டு வேலைக்கு புதுசா சேர்ந்த கலாக்காக்கு என்னயப் பத்தி தெரியாததால, அவங்கள விட்டே எடுத்துக் கொடுக்கச் சொன்னேன். டெலிபோன் டயரியையும் எடுத்துக்கிட்டேன். எங்கப்பா ஸ்கூல் வாத்திங்க, ஹெச்எம், இந்த த்ரீ டேபிள்ஸ் மிஸ், அக்காவோட கிளாஸ் மிஸ், மேத்ஸ் மிஸ், எங்க ஹெச்எம்னு இப்டியாப்பட்ட ஆளுங்களுக்கா போனைப் போட்டு, 'அடச்சீ போனை வை'ன்னு திட்டிட்டு டபக்னு கட் பண்ணிடறது. வேலைய முடிச்சப்புறம் அந்த நம்பருங்களை அழுத்தி கிறுக்கி அடிச்சி வெக்குறது. அப்புறம் ஏதோ ஒரு துரோகி (அப்போ எங்கள மாதிரி அப்பாவிங்களுக்குத் தெரியாத) காலர் ஐடியை வெச்சு போட்டுக் கொடுத்து, ஒதை வாங்கினேன். அடப்பாவிகளா தர்மத்தின் வாழ்வுதனை சூது வவ்வுன்னு கவ்வும், ஆனா பன்னெண்டு வருஷங்கழிச்சு செல்போனும் ப்ரீ எஸ்எம்எஸ்சும் கொடுத்து உங்கள சாவடிக்கும்னு கம்னு விட்டுட்டேன்.

எங்கம்மாக்கு குட்டியூண்டு வேண்டுதல்னா சாமி பிரிபரன்ஸ் கம்மியாக் கொடுத்திடப் போகுதுன்னு ஒரே பயம். அதால பெருசா வேண்டிப்பாங்க. நான் இதெல்லாம் பாத்து சாமி கூட ஒரு டீலிங் வெச்சுக்கிட்டேன். அதாவது, நான் கேக்குற மார்க் வந்துச்சின்னா, புடிக்காத டீச்சருக்கு டைபாய்டுன்னான்னு ஒவ்வொரு கோரிக்கைக்கும் ஒவ்வொரு அமவுண்ட். இது கொஞ்ச நாள் கழிச்சு ஜாலியாகி, இன்னைக்கு இன்னாரோட இந்தக் காரியம் உருப்படாம போனா இத்தன ஆயிரம் போடறேன். இன்னார் பல்லு ஒடஞ்சா இவ்ளோ லட்சம் போடறேன்னு இஷ்டத்துக்கு வேண்டிக்கிறது. அப்புறம் வேண்டுதல நிறைவேத்தணுமே, அதுக்கு எங்கருக்கு காசு? நானா அசருவேன். தெனமும் டர்ன் போட்டுக்கிட்டு அம்மா, அப்பா, அக்கா பர்சை பதம் பாக்குறது. ஒரு கட்டத்துல அவுங்களுக்குள்ள சண்டைப்போட்டு மண்டயப் பிச்சிக்கிட்டாங்க, ஆனா என்னைய மட்டும் சந்தேகப்படல. அடக் கெரகமே, இந்த டீலிங்கோட டீலிங்கா இவங்களுக்கு கொஞ்சம் புத்தியக் கொடுன்னு கொசுறா கோரிக்கைய ஆட் பண்ணிட்டு, நானும் செவனேன்னு பெருமாளுக்குத் துட்ட தேத்திக்கிட்டிருந்தேன். எவ்ளோ நாள்தான் இப்டி நூத்துக்கணக்குல போட்டு பைசல் பண்றது, இனி ஆயிரத்துல செட்டில்மென்ட்னு முடிவு பண்ணி, எங்கப்பா கொண்டாந்த சம்பளக் கவர தொறந்து அம்புட்டையும் உண்டியல்ல போட்டாச்சு. ஒருவழியா சினிமா போலீசாட்டம் கண்டுப் பிடிச்சு, உண்டியலத் தொறந்துப் பாத்தா கிட்டத்தட்ட அஞ்சாயிரம் தேத்திருக்கேன் ரெண்டே மாசத்துல(இப்போ போட்ட சம்பளத்த சேக்காமலே). இந்த சாதாரண பக்தி சம்பந்தப் பட்ட விஷயத்துக்கு எதுக்கு அவ்ளோ டென்ஷன் ஆனாங்கன்னு தான் எனக்கு சரியா புர்ல. சரிதான் போங்க, நாடு ஒரு குட்டி விவேகானந்தினிய எழந்திடுச்சி, நஷ்டமும் குஷ்டமும் நாட்டுக்குத்தான?

எழுதியவர் : செல்வமணி (வலையில் படித்தத (29-Aug-15, 10:02 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 206

மேலே