தொலைக்காட்சி சேனல்கள்

நம்மில் பலருக்கு பொழுதுபோக்கு, தொலைக்காட்சி பார்ப்பது தான். அந்த தொலைக்காட்சி சேனல்களில் என்னென்ன காட்டுகிறார்கள் என்பதை பற்றி இங்கு பகிர்கிறேன். தொலைக்காட்சியில் நாம் பார்ப்பது செய்திகள், நெடுந்தொடர்கள், விளையாட்டு போட்டிகள், திரைப்படங்கள், நகைச்சுவை காட்சிகள் என பட்டியல் அவரவர் விருப்பதிற்கேற்ப நீள்கிறது. அதை பற்றி ஒவ்வொன்றாக இங்கு காண்போம். புதிதாக சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும், என்னுடைய எண்ணங்களை உங்களிடம் கொட்டித் தீர்ப்பதற்க்காகவே பதிவு செய்கிறேன்.

தொலைக்காட்சி சேனல்கள் 90-களின் ஆரம்பம் வரை, அரசாங்கத்தையே நம்பியே இருந்தது. அதில் மக்களுக்கு பயன்படும் வகையில் அறிவியல் நிகழ்ச்சி , குழந்தைகளுக்கான நிகழ்ச்சி, மாணவருக்கான நிகழ்ச்சி என்று ஒளிப்பரப்பினர். பின்னர் தான் தனியார் தொலைக்காட்சி சேனல்களின் வரவால் அவை ஒதுக்கப்பட்டன. இன்று பல தனியார் தொலைக்காட்சி சேனல்கள் , பணம் சம்பாதிக்கும் எண்ணத்தில், கண்டபடி நிகழ்சிகளை ஒளிப்பரப்புகின்றனர்.

முதலில் செய்திகள். நாட்டுநடப்பை மக்களுக்கு கொண்டு செல்வதற்கு தான் செய்திகள். ஒவ்வொரு சேனலிலும் ஒவ்வொரு விதமாக செய்திகள் வாசிக்கும் போது எது உண்மை, எது பொய் என்று மக்களுக்கு தெரியவில்லை. இப்போதுதான் ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி சேனல் இருக்கிறதே! ஒவ்வொன்றிலும் அவர்கள்கொள்கைக்கு தகுந்த படி செய்திகளை மாற்றி மாற்றி சொல்கின்றனர். ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும் போது அந்த கட்சி தலைவர்/தலைவியின் புராணம் பாடும் செய்திகளும், அதுவே அவர்கள் எதிர்கட்சியாக இருந்தால், ஆளும்கட்சிக்கு அறிக்கை விடும் செய்திகள் தான் சொல்கின்றனர். இதை தான் எல்லா கட்சி சேனல்களும் செய்கிறது.

எந்த செய்தியை காட்ட வேண்டுமோ அதை காட்டாமல், தேவையில்லா குப்பை செய்திகளையும், விளம்பரங்களையும் காட்டி அவர்கள் மதிப்பை அவர்களே குறைத்து கொள்கின்றனர். போலிச்சாமியாரின் சில்மிஷங்களை ரகசிய கேமராவில் பதிந்து, நொடிக்கு ஒரு முறை காட்டியும், அவர்கள் வாங்கி வெளியிட்டுள்ள திரைப்படம் திரையரங்கை விட்டே ஓடினாலும், 'வெற்றி நடைபோடுகிறது ' என்று விளம்பரம் செய்து அவர்களது டி .ஆர்.பி. ரேட்டிங் -ஐ (T.R.P Rating) ஏற்றி கொள்கின்றனர்.

நாட்டில் விண்கலம் புதிதாக விண்ணில் செலுத்தப்படும் போதும், நம் மாநிலத்தில் ஒருவர் உலக அளவில் விருது வாங்கினர் என்றோ, அறிய அறிவியல் கண்டுப்பிடிப்பை பற்றியோ அடிக்கடி போட்டுக்காட்டுவதில்லை.

அடுத்து தொலைக்காட்சி நெடுந்தொடர்ககளை எடுத்து கொண்டால், அதற்கு திரைப்படங்களே பரவாயில்லை என்று கூறலாம். எல்லா தொடரிலும் நாயகனுக்கோ, நாயகிக்கோ ஒன்றுக்கும் மேற்பட்ட தாரங்கள் இருக்கும். அல்லது பெண்களே,பெண்களைப்பற்றி தவறாக வஞ்சிப்பதும், சூழ்ச்சி செய்து குடும்பத்தை குலைப்பதும் தான் நடக்கிறது. பக்தி தொடர்கள், மேன்மேலும் மக்களின் காதுகளில் பூ சுற்றி கொண்டே போகின்றனர். அந்த அளவுக்கு மூடநம்பிக்கைகளை கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தின் உதவியுடன் விதைக்கின்றனர்.

தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சில விஞ்ஞான நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பலாம். அது மாணவருக்கும், மற்றவருக்கும் பயன்படுமாறும் செய்யலாம். மொழியின் சிறப்பை அறியும் வகையில் புதிதாக விளையாட்டு போட்டிகளை நடத்தி ஒளிப்பரப்பலாம். சிறுவர் சிறுமியருக்காக இதிகாச புராணங்களையும்,சில நீதி கதைகளையும் பற்றி பொம்மை (கார்ட்டூன்) படம் போட்டு காட்டலாம்.

அடுத்து, சில நாட்களாக எல்லா சேனல்களிலும் பிரபலமாகி வரும், 'ரியாலிட்டி ஷோக்கள் ' (Reality Show). சூப்பர் சிங்கர் , சூப்பர் டான்சர் , சூப்பர் டைரக்டர் , சூப்பர் காமெடியன் என பல நிகழ்ச்சிகள் உள்ளது. இவை மக்களின் திறமைகளை வெளி கொண்டுவருவதை விட, சேனல்களுக்கு பணம் ஈட்டித்தான் தருகிறது. மக்களுக்கு பண மோகம் அதிகமாக இருப்பதை அறிந்து, முன்பெல்லாம் விளையாட்டு போட்டிகளில் ஆயிரக்கணக்கில் பரிசு தந்தவர்கள், இப்போது லட்சங்களிலும் கோடிகளிலும் தான் புரள்கிறார்கள். பொதுமக்களை அழைத்து விளையாடாமல், பிரபலங்களை அழைத்து பரிசு பணத்தை வாரியிரைத்து ,விளம்பரம் செய்து வருவாயை பெருக்கி கொள்கிறார்கள்.

இவை எல்லாவற்றையும் விட என்னை மிகவும் வெறுப்பெற்றுவது,
"குற்றங்களும் அதன் பின்னணியும், நடந்தது என்ன? " என்று உப்பு சப்பில்லாத விஷயத்தை பெரும் பீடிகையுடன் சொல்வது தான். கடைசி வரை சொல்ல வந்ததை சொல்லவே மாட்டார்கள். அதை விட,"உண்மையை சொல்லும் " ஓர் உன்னத (?!?) நிகழ்ச்சியில், குடும்ப பிரச்சனைகளை இரு பிரிவினரும் பேசி, திட்டி, சண்டையிட்டு நம்மையும் கடுப்பாக்கி வைப்பார்கள். அதில், பஞ்சாயத்தை தீர்க்க வரும் 'பெண் நாட்டமை', "அவன் உன் மனைவியை தள்ளிக்கொண்டு போய்விட்டானா??? பரவாயில்லை. நீ அவன் மனைவியுடன் இரு... " என்ற தோணியில் மத்யத்சம் பேசுவது கொடுமையின் உச்சம். சில சமயங்களில் தாலியை (நிகழ்ச்சியிலேயே )கழட்டி தூக்கியெரிந்து விட்டு சென்றும் உள்ளனர். பணம் படைத்தவர்களிடம் இந்த மாதிரி பிரச்சனையே இல்லாதது போல, பெரும்பாலும் அடித்தட்டு மக்களை குறிவைத்தே இந்த நிகழ்ச்சிகள் நடத்தபடுகிறது.

அடுத்து 'கருத்து விவாதம்' நடக்கும் மேடை. முக்கிய பிரச்சனைகளை விட்டுவிட்டு ,நடிகை வீட்டை விட்டிவிட்டு ஓடியதையும், அழகிய பெண்களையும்,ஆண்களையும் வைத்து ஒப்பிடுவதும் தான் முக்கிய விவாதங்களா? சில நேரங்களில், நல்ல தலைப்புகளையும் அவர்கள் தேர்ந்தெடுத்து கையாள்வதும் கட்டாயம் இங்கு பதிய வேண்டியது தான்.

திரைப்படங்களும், அடிக்கடி போடப்படும் நகைச்சுவை காட்சிகளும் தான் சிறிது நேரம் தொலைக்கட்சியில் பார்க்க முடிகிறது. சில போராட்டங்களுக்கு பின், தொலைகாட்சியில் போடப்படும் படங்களில் ஆபாச காட்சிக்களும், வன்முறை காட்சிகளும் , மது அருந்தும் காட்சிகளும் நீக்கபட்டு காண்பிக்கபடுகின்றன. பண்டிகை நாட்களில் ஒவ்வொரு சேனலிலும் 'இந்திய தொலைக்கட்சிகளில் முதன்முறையாக ' என்று போடும் போது நமக்கு தான் எதை பார்ப்பது என்று திணறல். இங்கே கூத்தாடிகள் இரண்டுபட்டால் மக்களுக்கு தான் கொண்டாட்டம்.

'தமிழை வளர்கிறோம் பேர்வழி' என்ற பெயரில் உள்ள சேனல் , முழுக்க முழுக்க தமிழ் கலாச்சாரத்துடனும், மக்களுக்கு பயனுறும் வகையிலும் நிகழ்சிகளை தமிழிலேயே பேசி ஒளிப்பரப்புகிறது. இவர்களும் செய்திகளை அவர்கள் கட்சிக்கு சாதிக்கு ஆதரவாகவே ஒளிப்பரப்புகிறார்கள். இவர்களுடைய 'தலைவர் அய்யா' பேசும் பொது கூட்டங்களை ஒளிப்பரப்பும் நிகழ்ச்சியை பார்த்தாலே நாட்டில் சாதி வெறி சண்டைகள் வந்துவிடும்.

அரசாங்கம் நடத்தும் பொது வேலைநிறுத்ததின் போது, எல்லா வணிக நிறுவனமும், தனியார்/ அரசு நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படும். ஆனால் சேனல்களுக்கு மட்டும் அன்று விடுப்பு இல்லை. வழக்கமாக போடும் பழைய படங்களை போடாமல் 'விடுமுறை தின கொண்டாட்டம்' என்று நட்சத்திரங்களின் திரைபடங்களை போட்டு வருவாய் தேடி கொள்வார்கள். மாநிலம் முழுவதும் வேலைநிறுத்தம், அவர்களுக்கு மட்டும் இல்லையா?!?!?!

விளையாட்டு - எவனோ ஒருவன் விளையாடி சம்பாதிப்பதை , தேசத்திற்காக என கூறி விளையாட்டே கதி என்று உள்ளவர்களும் உண்டு. கிரிக்கெட் மட்டும் என்ன இந்தியவின் பண்டைய காலத்து விளையாட்டா?? அதை பெரிதாக காட்டி, விளம்பரம் செய்து கோடிகளில் புரளும் வியாபாரமாக மாற்றியது தொலைகாட்சிகள் தான். தேசிய விளையாட்டை நேரடியாக ஒளிப்பரப்பமல், விளம்பரம் செய்யாமல், அந்நிய தேசத்து மட்டை விளையாட்டை மட்டும் காட்டுவது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை. இதனால் கிரிக்கெட் பார்ப்பது/ ஊக்குவிப்பதோ தப்பு என்று சொல்லவில்லை. அதை போல எல்லா விளையாட்டையும் ஊக்குவித்தால் நல்லது என்பது என் கருத்து.

இவ்வளவு சொத்தை சொல்கிறேனே என்பதற்காக, இந்த தனியார் தொலைக்காட்சி சேனல்களையெல்லாம் வணிக ரதியாக பணமே சம்பாதிக்க கூடாது என்று சொல்லவில்லை. அவர்களும் வியாபாரிகள் தானே! மக்களுக்கு உதவுவது போலவும், மொழியை வளர்ப்பது போலவும் , சில பல நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பினால் நன்றாக இருக்கும் என்பதே என் வாதம்.

(நன்றி - பி .விமல் ராஜ்)

எழுதியவர் : செல்வமணி - (வலையில் படித்த (31-Aug-15, 2:39 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 354

மேலே