பாண்டிச்சேரி - பழம் பெருமையுடைய காலனீய நகரம்

புதுச்சேரி என்று 2006-ம் ஆண்டிலிருந்து அலுவல் ரீதியாக அழைக்கப்பட்டு வரும் பாண்டிச்சேரி, அதே பெயரையுடைய மத்திய அரசின் நேரடி ஆட்சிப்பகுதியான பாண்டிச்சேரியின் தலைநகரமாகும். இந்த நகரமும், அதன் பிற ஆட்சிப் பகுதிகளும் பிரெஞ்சு காலனியாதிக்கதில் நெடுங்காலம் இருந்து, அதன் விளையாக பல்வேறு தனித்தன்மையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பெற்றிருக்கின்றன.

மூன்று இந்திய மாநிலங்களில் பரவியிருக்கும் கடற்கரை நகரங்களை கொண்ட யூனியன் பிரதேசம் தான் பாண்டிச்சேரி. ஆந்திரபிரதேசத்தில் யானாம், தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரையில் பாண்டிச்சேரி, காரைக்கால் மற்றும் கேரளாவின் மேற்கு கடற்கரையிலுள்ள மாஹே ஆகியவைதான் இந்த நான்கு ஆட்சிப்பகுதிகள்.

வங்காள விரிகுடா கடல் தழுவி நிற்கும் சோழமண்டல கடற்கரையில் இருக்கும் பாண்டிச்சேரி நகரம் சென்னையிலிருந்து 162 கிமீ தொலைவில் உள்ளது. பிரெஞ்சு அரசின் முக்கிய காலனிப் பகுதியாக இருந்து வந்த பாண்டிச்சேரி 1674-ம் ஆண்டு முதல் 1954-ம் வரை பிரெஞ்சு ஆட்சிப் பகுதியாகவே இருந்தது.

கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகளுக்கு யாருடைய இடையூறும் இல்லாமல் பாண்டிச்சேரியை ஆண்டு வந்த கலைகளின் தாயகம் பிரான்ஸ், வளமான கலாச்சாரத்தையும் மற்றும் அற்புதமான கட்டிடக்கலையையும் இந்த நகரத்திற்கு வழங்கியுள்ளது.
பாண்டிச்சேரியைச் சுற்றியுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள்
மாறுபட்ட அனுபவங்களை விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு பாண்டிச்சேரி சிறந்த சுற்றுலாத் தலமாக இருக்கும். ப்ரோமெனேட் கடற்கரை (வீதி உலா கடற்கரை), பாரடைஸ் கடற்கரை, செரினிட்டி கடற்கரை மற்றும் ஆரோவில் கடற்கரை ஆகியவை பாண்டிச்சேரிக்கு விடுமுறையை கொண்டாட வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு புத்துணர்ச்சியளிக்க காத்திருக்கும் நான்கு சிறந்த கடற்கரைகளாகும்.
கடற்கரைகள் மட்டுமல்லாமல், இந்தியாவின் மிகச்சிறந்த தியான மையங்களில் ஒன்றான அரவிந்தர் ஆசிரமமும் இங்கிருக்கிறது.
உதய நகரம் என்று அழைக்கப்படும் ஆரோவில் நகரம், சுற்றுலாப் பயணிகளை அதன் தனித்தன்மையான கலாச்சாரம், பாரம்பரிய சின்னங்கள் மற்றும் கட்டிடக்கலைகளால் ஈர்க்கிறது.

காந்தி சிலை, மாத்ரிமந்திர், பிரெஞ்சு போர் நினைவுச் சின்னம், ஜோசம் பிரான்கோயிஸ் டூப்ளிக்ஸ் சிலை, கௌபர்ட் அவென்யூவில் உள்ள பிரெஞ்சு வீராங்கனை ஜோன் ஆப் ஆர்க்-ன் சிலை ஆகிய பல்வேறு கலைநினைவுச் சின்னங்களையும், சிலைகளையும் பாண்டிச்சேரியில் பொலிவு குறையாமல் இன்றும் காண முடியும்.

பாண்டிச்சேரி அருங்காட்சியகம், ஜவஹர் பொம்மை காட்சியகம், தாவரவியல் பூங்கா, உட்சேரி நீர் நிலப்பகுதி, பாரதிதாசன் அருங்காட்சியகம் மற்றும் தேசிய பூங்கா, அரிக்கமேடு, டூப்ளிக்ஸ் சிலை மற்றும் ராஜ் நிவாஸ் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை கவரும் பிற பார்வையிடங்களாகும்.

இந்த நகரத்தில் இந்து கோவில்கள் மற்றும் கிறித்தவ தேவாலயங்கள் ஆகியவை ஒரே கலவையில் கலந்திருக்கின்றன. தி எக்லைஸ் டெ நாட்ரே டேம் டெஸ் ஆன்கஸ் சர்ச் (அவர் லேடி ஆப் ஆன்கஸ் சர்ச் என்றும் அழைக்கப்படுகிறது), ஜீசஸின் தூய இருதய தேவாலயம், அவர் லேடி ஆப் இம்மாக்குலேட் கன்ஷப்சன் தேவாலயம், ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில் மற்றும் கன்னிகா பரமெஸ்வரி கோவில் ஆகியவை பாண்டிச்சேரி வரும் சுற்றுலாப் பயணிகளால் அதிகம் விரும்பப்படும் சுற்றுலாத் தலங்களாகும்.

தனித்தன்மையான கட்டிடக்கலைகளையுடைய நகரம்
கடலையும், தனித்தன்மையான கட்டிடங்களையும் வரமாக பெற்றிருக்கும் பாண்டிச்சேரி நகரத்தை காலாற நடந்து சுற்றிப் பார்க்கும் போது சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக சிறந்த அனுபவத்தைப் பெறுவார்கள்.

இங்கு திட்டமிட்டு கட்டப்பட்டிருக்கும் கட்டிடங்கள், தெருக்களின் அமைப்புகளில் பிரெஞ்சு கட்டிடக்கலையின் நேரடி தாக்கத்தை காண முடிகிறது. பாண்டிச்சேரியில் பல்வேறு தெருக்கள் பிரெஞ்சு பெயர்களை தாங்கியுள்ளதாகவும் மற்றும் பிரம்மாண்டமான வீடுகளையும், தனி மாளிகைகளையும் காலனீய காலத்தைச் சோந்த கட்டிடக்கலையில் கட்டப்பட்டிருப்பதை காண்பது பார்வையாளரின் கண்களுக்கு சிறந்த விருந்தளிக்கும்.

இந்த நகரம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது—இதில் பிரெஞ்சுப் பகுதியானது வெள்ளை நகரம் அல்லது வில்லே பிளான்சே என்றும், இந்தியப் பகுதி கருப்பு நகரம் அல்லது வில்லே நோய்ரே என்றும் அழைக்கப்படுகின்றன.

முதல் பகுதி பிரம்மாண்டமான காலனீய வடிவ கட்டிடங்களையும், இரண்டாம் பகுதி பாரம்பரியமான தமிழக பாணியிலான கட்டிடக்கலைகளையும் கொண்டிருக்கின்றன. இந்த இரு கட்டிடக்கலைகளின் இணைவு பாண்டிச்சேரி நகரத்தின் தனித்தன்மை மற்றும் அழகுக்கு பெருமை சேர்க்கின்றன.

உணர்வுகளைத் தூண்டும் உணவுகள்

பிரெஞ்சு மற்றும் தமிழக கலாச்சாரங்களின் கலவையாக இருக்கும் பாண்டிச்சேரியின் உணவு வகைகளிலும் அவற்றின் தாக்கம் வெகுவாக இருக்கிறது. அதன் மூலம் சமையல் கலையில் ஆச்சரிய்படும் வகையிலான உணவுகளும் பரிமாறப்பட்டு வருகின்றன.

பிரெஞ்சு பாகெட்ஸ், பிரியோசேஸ் மற்றும் இதர பதார்த்தங்களை தமிழ் மற்றும் கேரள உணவுகளுடன் சேர்த்து பரிமாறும் இடம் தான் பாண்டிச்சேரி. லே கிளப், ப்ளூ டிராகன், ஸ்டாட்ஸங்கா, ரென்டஸ்வஸ், சீ கல்ஸ், லெ கஃபே, லா கோரமண்டலே மற்றும் லா டெர்ராஸே ஆகியவை சுற்றுலாப் பயணிகளின் நாவில் சுவையூட்டும் திறன் பெற்ற இடங்களாகும்.

ஷாப்பிங் செய்ய விரும்புபவர்களின் சொர்க்கமாக இந்த நகரத்தின் தெருக்களிலுள்ள கடைகள் உள்ளன. பல்வேறு வகைகளினாலான கைவினைப் பொருட்கள், துணி வகைகள், கற்கள், மர சிற்பங்கள், பாய்கள், பானை வகைகள், வாசனை பொருட்கள், நறுமணப் சாம்பிராணிகள், கண்ணாடி வேலைப்பாடுகள், விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகள் ஆகியவை இந்த கடைத்தெருவிற்கு வருபவர்களின் ஆர்வத்தை தூண்டும் விஷயங்களாகும்.

டிசம்பர் மாதங்களில் நடக்கும் சர்வதேச யோகா திருவிழா, ஆகஸ்டு மாதத்தில் நடக்கும் பிரெஞ்சு உணவு திருவிழா மற்றும் ஜனவரி மாதத்தில் நடக்கும் ஷாப்பிங் திருவிழா ஆகியவை பாண்டிச்சேரியில் நடத்தப்படும் புகழ் பெற்ற திருவிழாக்களாகும்.

பாண்டிச்சேரிக்கு செல்லும் வழிகள்

பாண்டிச்சேரி நகரம் ரயில் மற்றும் சாலை வழிகளால் மிகவும் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. நல்ல சுற்றுலாவிற்கேற்ற பருவநிலையை கொண்டிருப்பதால் உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகள் வருடம் முழுவதும் வந்து செல்ல ஏற்ற இடமாக பாண்டிச்சேரி உள்ளது.

பாண்டிச்சேரிக்கு வருகை தர சிறந்த காலம்

தனித்தன்மையான கலாச்சார குணாதிசயங்கள், அருமையான உணவு வகைப்பாடுகள் மற்றும் மாறுபட்ட பார்வையிடங்களை உடைய பாண்டிச்சேரிக்கு, மாறுபட்ட சுற்றுலா அனுபவத்தைப் பெற விரும்புபவர்கள் எந்த நாட்களிலும் வரலாம்.

எழுதியவர் : செல்வமணி - (வலையில் படித்த (31-Aug-15, 3:29 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 1042

மேலே