தமிழ்நாட்டில் மருத்துவ சேவைகளுக்கு புகழ்பெற்ற நகரங்கள் பற்றி தெரியுமா உங்களுக்கு

குடிக்க நீரும், சுவாசிக்க காற்றும், உன்ன உணவும், உடுத்த உடையும், வசிக்க வீடும் வாழ்வதற்கான மனிதனின் அடிப்படைத் தேவைகளாக இருக்கின்றன. இந்த வரிசையில் இன்னொன்றை சேர்க்க வேண்டுமானால் அது உயிர் காக்க மருத்துவர்களும், மருந்துகளும் தான். எத்தனை தான் பணம் இருந்தாலும், எவ்வளவு பெரிய வீட்டில் வசித்தாலும் உடல் ஆரோக்கியம் இன்றி நோயுற்று இருந்தால் மற்றவை எல்லாமே வீண் தான். அதுவும் இன்றைய நவீன வாழ்க்கை முறையினால் புதுப்புது நோய்கள் தோன்றிய வண்ணம் இருக்கின்றன. இப்படிப்பட்ட நோய்களில் இருந்து தப்பிக்க நவீன சிகிச்சை முறைகள் அவசியமாகின்றன. அப்படி தமிழகத்தில் அதிநவீன உபகரணங்கள் மற்றும் தகுதி வாய்ந்த மருத்துவர்களை கொண்டு உலகத்தரத்திலான சிகிச்சை வழங்கும் சில மருத்துவமனைகள் இருக்கும் நகரங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

இன்று இந்தியாவின் மருத்துவ சேவைகளின் தலைநகரமாக சென்னை நகரம் உருவெடுத்து வருகிறது. தமிழகம் இந்தியாவின் வளர்ச்சியடைந்த மாநிலங்களில் ஒன்றாக இருப்பதினால் அதன் தலைநகரில் சிறப்பான மருத்துவ வசதிகள் கிடைப்பதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை என்றாலும் மும்பை, கொல்கத்தா போன்ற மற்ற பெருநகரங்களை காட்டிலும் சென்னையில் மருத்துவ வசதிகள் மிகச்சிறப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.

சென்னை:

சென்னையில் அரசு பொது மருத்துவமனை, அடையார் புற்றுநோய் மையம், தேசிய சித்தவைத்திய கல்லூரி மருத்துவமனை போன்ற அரசு சார்ந்த மருத்துவமனைகளில் தனியார் மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சைகளுக்கு இணையான மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன.

இன்று பல வெளிநாடுகளில் இருந்தும் சிகிச்சைக்காக சென்னை நோக்கி மக்கள் வர முக்கிய காரணமாக இருப்பது இங்குள்ள தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் உலகத்தரமிக்க மருத்துவ சேவைகள் தான். அமேரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள மருத்துவமனைகளில் இருப்பதற்கு இணையான அதி நவீன வசதிகள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் இருக்கின்றன.

குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் அப்போலோ மருத்துவமனை, ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை, சங்கர நேத்ராலயா போன்றவை சென்னையில் இருக்கும் மிகப்பிரபலமான மருத்துவமனைகள் ஆகும். ஒரு புள்ளிவிவரத்தின் படி இந்தியாவுக்கு மருத்துவ சுற்றுலா வரும் வெளிநாட்டவர்களில் 40% பேர் சென்னையை தேர்வு செய்வதாக சொல்லப்படுகிறது.

கோயம்பத்தூர் :

சென்னைக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் வளர்ச்சியடைந்த நகரமாக இருப்பது கோயம்பத்தூர் தான். கல்வி நிறுவனங்கள், மோட்டார் மற்றும் வாகன உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்கள், பஞ்சாலைகள், மென்பொருள் நிறுவனங்கள் போன்ற விஷயங்களுக்கு பிரபலமான இந்த கொங்கு நாட்டு நகரம் சமீப காலமாக மேற்கு மற்றும் மத்திய தமிழகத்தின் மக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவையை வழங்கும் நகரமாகவும் உருவெடுத்துள்ளது.

கோவையில் நிகழ்ந்த அதீத தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக இன்று சென்னையில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு இணையான அதிநவீன வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் கோயம்பத்தூரிலும் இப்போது வந்துவிட்டன.

இங்குள்ள மருத்துவமனைகளில் இதய மாற்று அறுவை சிகிச்சை, கல்லீரல் மற்று அறுவை சிகிச்சை போன்ற மிகவும் சிக்கலான சிகிச்சைகளை செய்யும் அளவிற்கு தகுதியான மருத்துவர்களும், மருத்துவமனைகளும் இருப்பதால் கோயம்பத்தூரை சுற்றயுள்ள திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி மாவட்டங்களில் இருந்தும் மேலும் கேரளாவில் இருந்தும் உயர் சிகிச்சை பெறுவதற்காக மக்கள் கோயம்பத்தூருக்கு வருகின்றனர்.

கோவை பொது மருத்துவமனை, கோவை மெடிக்கல் சென்டர், குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை, கங்கா மருத்துவமனை போன்றவை கோவையில் இருக்கும் பிரபலமான மருத்துவமனைகள் ஆகும். சென்னையை காட்டிலும் இங்குள்ள தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் பல மடங்கு குறைவு என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

வேலூர் :

சென்னை மற்றும் கோயம்பத்தூரை போல அதிக வளர்ச்சியடைந்த நகரமாக இல்லாவிட்டாலும் அந்த இரண்டு நகரங்களுக்கும் இணையாக மருத்துவ சேவைகளை வழங்குவதில் முன்னோடியாக திகழ்கிறது வேலூர் நகரம்.
இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டம் நடந்த வரலாற்று சிறப்புமிக்க இந்நகரின் இன்றைய பெருமைமிக்க அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது இங்கிருக்கும் கிருத்துவ மருத்துவ கல்லூரி மருத்துவமனை. 1900ஆம் ஆண்டு அமெரிக்கன் மிசனரியால் ஆரம்பிக்கப்பட்ட இந்த மருத்துவமனை தான் இன்றிருக்கும் எல்லா அதி நவீன மருத்துவமனைகளுக்கும் முன்னோடியாக திகழ்கிறது.

இந்த மருத்துவமனையில் தான் இந்தியாவின் முதல் 'ஓபன் ஹார்ட்' அறுவை சிகிச்சை, முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் முதல் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை போன்றவை செய்யப்பட்டிருக்கின்றன. 2600 படுக்கை வசதிகள் கொண்ட ஆசியாவின் பிரமாண்டமான மருத்துவமனைகளில் ஒன்றான இதற்கு ஒரு ஆண்டுக்கு மூன்று லட்சத்திற்கும் அதிகமான நோயாளிகள் வருகின்றனர்.

இந்த மருத்துவமனை வளாகத்திலேயே அமைந்திருக்கும் மருத்துவ கல்லூரியானது இந்தியாவின் தலைசிறந்த மருத்துவ கல்லூரிகளில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்தியாவின் முதல் நர்சிங் கல்லூரியும் இங்கே தான் துவங்கப்பட்டுள்ளது. சேவை அமைப்பினால் நடத்தப்படும் மருத்துவமனை என்பதால் அரசு பொது மருத்துவமனையில் ஆகும் செலவு தான் இங்கும் ஆகிறது என்பதும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய அம்சமாகும்.

எழுதியவர் : செல்வமணி - (வலையில் படித்த (31-Aug-15, 3:50 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 708

சிறந்த கட்டுரைகள்

மேலே