இலக்கணக் குறிப்புகளை எளிதில் அடையாளம் காண சில வழிகள்

பொதுத் தேர்வில் அடிக்கடி கேட்கப்படும் இலக்கணக்குறிப்புகளை எளிதில் அடையாளம் காண சில வழிமுறைகள்
தொகுத்து வழங்குபவர் திருமதி ஸ்ரீ.விஜயலஷ்மி
தமிழாசிரியை
கோயம்புத்தூர் 22
1. வேற்றுமைத் தொகை
எந்த வேற்றுமை உருபும் பயனும் மறைந்து வந்துள்ளதோ அது அந்த வேற்றுமைத் தொகையாக்க் கருதப்படும்.
(எ.கா) படம் பார்த்தான் (இதில் படத்தைப்(ஐ) பார்த்தான் என்று இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளமையால் இது இரண்டாம் வேற்றுமைத் தொகை ஆகும்.
குறிப்பு இதைப் போன்றே பிற வேற்றுமைத் தொகைகளைக் கண்டறிய வேண்டும்.

2. உரிச்சொல் தொடர்
ஒரு சொல்லின் தன்மையை மிகுதிப் படுத்திக் கூறுவது உரிச்சொல் எனப்படும். உறு, சால, தவ நனி என்பன உரிச்சொற்கள் அந்த உரிச்சொல்லை அடுத்து பிரிதொரு சொல் வந்து முடிவது உரிச்சொல் தொடர் எனப்படும்.
(எ.கா) சாலப் பேசினான்.
குறிப்பு இதைப் போன்றே பிற உரிச்சொல் தொடர்களைக் கண்டறிய வேண்டும்.

3. எதிர்மறைத் தொழிற்பெயர்
ஒரு தொழிற் பெயர் எதிர்மறையாகப் பொருள் தருவது எதிர்மறைத் தொழிற்பெயர் ஆகும்.

(எ.கா) கொல்லாமை (கொல்லாதிருத்தல்)

4. எண் உம்மை
இருவேறு சொற்கள் உம் என்ற எழுத்தில் முடிந்தால் அது எண் உம்மை எனப்படும்.
(எ.கா) வெற்றிலையும் பாக்கும்

5. பண்புத் தொகை
பண்பு உருபுகள் (போல, புரைய, அன்ன, ஒப்ப போன்றவை) மறைந்து வருவது பண்புத் தொகை எனப்படும்.
(எ.கா) மலர் முகம் (மலர் போன்ற முகம் என விரியும்.

6. வினையால் அணையும் பெயர்
ஒரு செயல் மற்றும் செயலைச் செய்பவர் ஆகிய இருவரையும் இணைத்துக் கூறுவது வினையால் அணையும் பெயர் எனப்படும்.
(எ.கா) காண்பார் இதில் காணுதல் என்பது செயல். காண்பார் என்பது காணுதலாகிய செயலைச் செய்வார் எனப் பொருள் படும்.

7. வியங்கோள் வினைமுற்று
ஒரு சொல்லின் இறுதியில் க, இய, இயர் என்ற ஏதேனும் ஒன்று வந்திருப்பின் அது வியங்கோள் வினைமுற்று எனப்படும்.
(எ.கா) வாழ்க, வாழிய, வாழியர்.

8. தொகுத்தல் விகாரம்
ஒரு சொல்லில் சில எழுத்துக்கள் மறைந்து வருவது தொகுத்தல் விகாரம் எனப்படும்.
(எ.கா) விரிவாகுமே, மனதிற்கு
இது விரிவாகும்மே என்றும், மனத்திற்கு என்றும் விரிந்து பொருள் தரும்.

9. ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
நிலைமொழி ஈற்று எழுத்து எதிர்றைப் பொருள் தந்து பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிவது ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் ஆகும்.
(எ.கா) ஓடாக் குதிரை (இதில் ஓடாத என்பதில் த என்ற எழுத்து இல்லை.
குறிப்பு ஓடும் - உடன்பாடு
ஓடாது - எதிர்மறை

10. வினைத்தொகை
ஒரு சொல்லில் மூன்று காலங்களும் மறைந்து வந்தால் அது வினைத்தொகையாகும்.
(எ.கா) அலைகடல்
இது அலைகடல், அலைகின்ற கடல், அலையும் கடல் என்று மூன்றுகாலங்களிலும் பயின்றுவரும்.

11. ஆகுபெயர்
ஒரு சொல் தன் இயற்பொருளை உணர்த்தாது, தன்னோடு தொடர்புடைய பொருளை உணர்த்துவது ஆகுபெயர் ஆகும்.

(எ.கா) ஊர் திரண்டது. (இது ஊரைக் குறிக்காமல் ஊரில் உள்ள மக்களைக் குரிக்கும்.)

12. எதிர்மறை ஓகாரம்
ஒரு சொல்லின் ஈற்றிலுள்ள ஓகாரம் (ஓ என்ற எழுத்து) எதிர்மறைப் பொருளை உணர்த்துவது.
(எ.கா) பகையும் உளவோ? இது பகை இல்லை என்ற பொருளை உணடர்த்துகிறது.

13. முற்றெச்சம்
ஒரு வினைமுற்று எச்சப் பொருளில் வந்து வேறொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது முற்றெச்சம் எனப்படும்.
(எ.கா) கண்டேன் கற்பிற்கு அணியை.
(இதில் கண்டேன் என்ற வினைமுற்று எச்சப் பொருளில் வந்து கற்பிற்கு அணியை என்ற பிரிதொரு வினைமுற்றைக் கொண்டு முடிவதால் இது முற்றெச்சமாகும்.

14. உருபு மயக்கம்
ஒரு வேற்றுமை உருபு வரவேண்டிய இடத்தில் பிரிதொரு வேற்றுமை உருபு வந்து பொருள் மாறாமல் இருப்பது வேற்றுமை மயக்கம் அல்லது உருபு மயக்கம் எனப்படும்.
(எ.கா) நிலத்தோடு ஒட்டல் (இதில் நிலத்தின் கண் ஒட்டல் என்று 7ம் வேற்றுமை உருபு வரவேண்டிய இடத்தில் 3ஆம் வேற்றுமை உருபு ஓடு வந்து பொருள் மாறாமல் இருப்பதல் இது வேற்றுமை மயக்கம் அல்லது உருபு மயக்கம் எனப்படும்.

15. உருவகம்
உவமை வேறு, உவமேயம் வேறு என்றில்லாமல் இரண்டினையும் ஒன்றாகக் கருதுவது உருவகம் எனப்படும்.
(எ.கா) முகத்தாமரை, வாய்பவளம்

16. உவமை
ஒரு சொல்லின் பொருளை விளக்குவதற்கு வேறொரு சொல்லை எடுத்துக்காட்டி விளக்குவது உவமை எனப்படும்.
(எ.கா) பால் நிலவு

17. ஒருபொருட் பன்மொழி
ஒரே பொருளைத் தரக்கூடிய இரண்டு சொல் ஒருங்கிணைந்து ஒரே சொல்லாய் வருவது ஒருபொருட் பன்மொழி எனப்படும்.

(எ.கா) ஒரு தனி போயினான்.

18. சொல்லிசையளபெடை

ஒரு சொல்லின் பொருள் தன்மையை மாற்றுவது சொல்லிசையளபெடை ஆகும். (எ.கா) நசைஇ
இதில் நசை என்றால் விருப்பம் என்று பொருள். ஆனால் இங்கு நசைஇ (விரும்பி) என்று பொருள் மாறி இருப்பதால் இது சொல்லிசையளபெடை ஆகும்.

19. முரண் தொடை
சொற்கள் எதிர்ப்பதப் பொருளில் தொடுப்பது முரண் தொடை எனப்படும்.
(எ.கா) ஆண்டும் ஈண்டும் (அங்கும் இங்கும்) .

20. இடைக்குறை
ஒரு சொல்லில் இடயில் ஒரு எழுத்து மறைந்து வருவது இடைக்குறை எனப்படும்.
(எ.கா) உளான் (உள்ளான்)

குறிப்பு: இதுபோல முதலெழுத்து மறைவது முதற்குறை.
இறுதி எழுத்து மறைவது கடைக்குறை எனப்படும்.

21. முன்னிலை ஒருமை வினைமுற்று
தனக்கு முன்பாக இருப்பவரின் செயலைக் குறிப்பது முன்னிலை ஒருமை வினைமுற்று எனப்படும்.
(எ.கா) அனையை

22. தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருவர் தானும், மற்றவர்களும் சேர்ந்து செய்யும் செயலைக் குறிப்பது தன்மைப் பன்மை வினைமுற்று எனப்படும்.
(எ.கா) நெய்யுண்ண்ணோம் , பாலுண்ணோம்

23. மரூஉ
ஒரு சொல் திரிந்து வந்திருந்தாலும் பொருள் மாறாமல் இருந்து சான்றோர்களால் ஏற்றுக் கொள்ளப் படுவது மரூஉ எனப்படும்.
(எ.கா) மருதை – மதுரை
குருதை - குதிரை
எந்தை – என் தந்தை
-------------------------------
நன்றி. புதிய பயிற்சியில் மீண்டும் சந்திப்போம்.

எழுதியவர் : திருமதி ஸ்ரீ விஜயலட்சுமி (19-Sep-15, 9:40 pm)
பார்வை : 1293

மேலே