‘படவா’ என்றழைப்பது இப்படித்தான்

படுபயங்கரம், படுகொலை, படுபாவி போன்ற சொற்றொடர்களைக் காண்கிறோம். பயங்கரம், கொலை, பாவி என்பனவற்றை அறிவோம். அவற்றுக்கு முன்னொட்டாக வரும் படு, என்ன பொருளைத் தருகின்றது ?

படு என்பது வினைச்சொல்லாக வருமிடத்தில் ‘படுத்துக்கொள், தரையில் விழு’ என்னும் பொருளைத் தரும். பெயர்ச்சொல்லின் முன்னொட்டாக வருகின்ற ‘படு’வுக்கு கொடிய, பெரிய, இழிவான என்பன பொருள்கள்.

கொடுஞ்செயலின் கோரத்தை உணர்த்த, இழிவுறுகையை வலிமையாய்ச் சொல்ல, பென்னம் பெரிதாய் நிகழ்ந்துவிட்டதைக் கூற, ஒன்றின் மிகையினும் மிகையான தன்மையைக் கூற - படு என்ற முன்னொட்டு பயன்பாட்டுக்கு வரும்.

கோரமாய் நிகழ்ந்துவிட்ட கொலை படுகொலை.
நினைக்கவே அஞ்சத்தகுந்த பயங்கரம் படுபயங்கரம்.
பெரும் பாவங்களைச் செய்யும் பாவி படுபாவி.
உயிராபத்தை விளைவிக்கும் கொடுங்காயம் படுகாயம்.
பெரும் பாதகம் படுபாதகம்.
அவற்றைச் செய்பவன் படுபாதகன்.
மிகுந்த குறும்புத்தனமுள்ள சுட்டி படுசுட்டி.
முழுமையான கிழத்தன்மை படுகிழம்.
விழுந்தால் மீள முடியாதபடியுள்ள ஆழமான குழி படுகுழி.
நன்கு கிடைமட்டமாய் உள்ள நிலை படுகிடை.
பெரும்பொய் படுபொய்.
பெரிய மோசம் படுமோசம்.

இந்தப் படு என்பது உணர்த்தும் மிகைப்பொருளை முன்னொட்டாகக் கொண்டு அன் என்னும் ஆண்பால் விகுதியைச் சேர்த்து உருவான சொல்தான் படுவன். அதை விளிக்கும்போது படுவா. அது பேச்சுவழக்கில் திரிந்து படவா. மிகையான குறும்பு, நடத்தையுள்ளவர்களை ‘படவா’ என்றழைப்பது இப்படித்தான்.

எழுதியவர் : முகநூலில் - படித்தது பகிர் (24-Sep-15, 8:56 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 181

மேலே