வாடகை வீடே போதும்

தினமும் அந்த பர்னிச்சர் கடையைப் பார்த்துவிட்டுத்தான் செல்கின்றேன்.அவ்வளவு அழகாக இருக்கிறது அங்கிருக்கும் பர்னிச்சர்கள்.சரி , பார்க்கலாம் , ரசிக்கலாம். ஆனால் அவற்றை வாங்கும் அளவிற்கு நமக்கு சக்தி இருக்க வேண்டுமல்லவா.அதனால் பார்த்து ரசித்துவிட்டுச் சென்று விடுவதோடு சரி என்றாலும் அவ்வப்பொழுது ஏதோ ஒரு விதமான ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது.

சொந்தமாக ஒரு வீடு வாங்கினாலோ அல்லது நாமே கட்டினாலோ இந்த மாதிரியான பர்னிச்சர்களை வாங்கி நம் வீட்டிலும் வைத்து அழகு பார்க்கலாம்தான்.ஆனால் அதற்கான பொருளாதார சூழ்நிலை வேண்டும்தானே. அதுதான் என்னைப் போன்ற நடுத்தர வர்க்கத்தினரின் பிரச்சனையே.

அப்படியே பொருளாதார சூழ்நிலை இல்லையென்றாலும் கடனை வாங்கியாவது வீடு கட்டியே தீர வேண்டும் என்றால் இப்பொழுது வாங்கும் சம்பளத்திற்கு வீடு வாங்கும்/கட்டும் அளவிற்கு லோன் கிடைத்துவிடும்தான்.இருந்தாலும் லோன் போட்டு வீடு வாங்க பயமாகவே இருக்கிறது.காரணம் தற்பொழுது வேலை செய்து கொண்டிருக்கும் துறை.

ஐ.டி.துறையில் எதுவும் நிரந்தரம் இல்லை என்பதால் அதை நம்பி லட்சக்கணக்கில் லோன் போட்டு வீடு வாங்க பயப்படும் பலரில் நானும் ஒருவன். என் நண்பர்கள் பலரும் பயமில்லாமல் அதைச் செய்துவிட்டார்கள் என்றாலும் எனக்கு அந்தத் துணிச்சல் இன்னும் வரவில்லை. என்னைக் கோழை என்றுகூட சிலர் நினைக்கக்கூடும்.

எதைச் செய்தாலும் இரண்டு குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்துக்கொண்டே செய்ய வேண்டியிருக்கிறது. அதிக கடனை வாங்கி மாட்டிக்கொண்டு வேலைக்கு ஏதாவது பிரச்சனை வந்துவிட்டால் குழந்தைகளின் எதிர்காலத்தில் சிக்கல் வந்துவிடும் என்பதே என் பயம்.அரசாங்க வேலை என்றால்கூட எப்படியும் 58 வயது வரை சர்வீஸ் இருக்கிறது என்று நினைத்து துணிச்சலாக கடனை உடனை வாங்கி வீடு கட்டிவிடலாம்.இந்தத் துறை அப்படியில்லை.நிச்சயத்தன்மை இல்லாத துறை.ஐ.டி. துறையில் வேலையை இழந்து வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவிக்கும் பல நபர்களை எனக்குத் தெரியும்.என் பயம் அதிகமானதற்கு அவர்களும் காரணம் என்றே சொல்லலாம்.

அதுவுமில்லாமல் இன்றைக்கு பெங்களூர் போன்ற நகரங்களில் வீடு வாங்க வேண்டுமென்றால் குறைந்தது ஐம்பது லட்சங்கள் இருந்தால் மட்டுமே அது சாத்தியம்.அதுவும் கூட நகருக்குள் கிடைக்க வாய்ப்பில்லை.அதோடு அபார்ட்மெண்ட் தான் கிடைக்கும் இந்த ஐம்பது லட்சங்களுக்கு.சொந்த வீடு போன்ற திருப்தி கிடைக்காது என்ற எண்ணம் கொண்டவன் என்பதால் அபார்ட்மெண்டிலும் ஆர்வம் இல்லை.அப்படியிருக்க தனி வீடு கட்ட வேண்டும் என்பதெல்லாம் இப்போதைக்கு சாத்தியமில்லை.

ஆனால் ஊரில் சொந்த வீடு கட்ட வேண்டுமென்றால் முப்பது லட்சம் இருந்தால் போதும்.நம் திருப்திக்கேற்ப கட்டிக்கொள்ளலாம்.ஆனால் அதற்கும் கூட லோன் போட்டுத்தான் செய்ய வேண்டும்.அதனால் அதுவும் இப்போதைக்கு நிறைவேற வாய்ப்பில்லை.

சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் மற்றவர்களைப் பார்த்து நானும் கடனை வாங்கியாவது நிச்சயம் வீடு கட்டிவிட வேண்டும் என்றெல்லாம் இதுவரை நினைக்கவில்லை.இன்றைக்கும் கிராமத்தில் இருக்கும் அந்த சிறு வீடே எனக்குப் போதுமானதாக இருக்கிறது.மாட மாளிகை இல்லையென்றாலும் அதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது.

இருந்தாலும் பிற்காலத்தில் குழந்தைகளுக்கும் அந்த வீடே பிடித்துப்போக வேண்டும் என்று நினைப்பது என் சுயநலம்.அவர்களுக்காகவாவது என்றைக்காவது ஒரு நாள் புது வீடு கட்டியே தீர வேண்டும்.

ஆனால் இன்றைக்கு அந்த சூழ்நிலை இல்லை என்பதுதான் நிதர்சனம். கையில் 80% சதவீகிதமாவது பணம் இல்லாமல் வீட்டைப் பற்றி நினைப்பதில்லை என்று உறுதியாகவே இருக்கின்றேன்.ஆனால் , அதைச் சம்பாதிக்க பல வருடங்கள் ஆகும் என்பதால் என்றைக்காவது அது நிறைவேறும் என்ற சிறிய நம்பிக்கை மட்டும் இருக்கிறது.

அலுவலகத்தில் நண்பர் ஒருவரை சமீபத்தில் வேலையை விட்டுத் தூக்கும் அளவிற்குப் பிரச்சனை வந்துவிட என்னிடம் வந்தார் நண்பர்.”என்ன கதிர் , வேலைக்கு ஏதாவது பிரச்சனை வந்துவிடுமா , எனக்கு பயமாகவே இருக்குங்க , பையன் ஸ்கூலுக்குப் போறான் , இப்பத்தான் நாற்பது லட்சம் லோன் போட்டு வீடு வேறு வாங்கினேன் , வேலைக்கு ஆபத்து என்றால் என் நிலைமை மிகவும் மோசமாகிவிடும்” என்று கிட்டத்தட்ட அழுதுவிட்டார்.

அவரின் வருத்தத்திற்கு காரணம் அவருக்கு 15 வருடங்களுக்கு மேல் ஐ.டி. துறையில் அனுபவம் இருக்கிறது.இன்றைக்கு ஐ.டி மார்க்கெட்டில் 10/15 வருடங்களுக்கு மேல் அனுபவம் இருப்பவர்களுக்கெல்லாம் அதிக வேலை வாய்ப்புகள் இல்லை.காரணம் அவர்களுக்கு அதிக சம்பளம் கொடுத்து வேலைக்கு எடுக்க வேண்டும் என்பதால் குறைவான வாய்ப்புகளே உண்டு.

இந்த வேலை போய்விட்டால் அடுத்த வேலை கிடைப்பது அவ்வளவு சுலபம் இல்லை என்பதுதான் நண்பரின் வருத்தத்திற்கு காரணம்.இப்படிப்பட்டவர்களின் நிலைமையைப் பார்த்ததால் என் பயமும் அதிகமாகி லோன் வாங்கும் எண்ணம் சுத்தமாகப் போய்விட்டது.

ஐ.டி. நிறுவனங்களுக்கு பொருளாதார நெருக்கடி வந்து நம் வேலைக்கும் நெருக்கடி வந்துவிட்டால் லோனைப் போட்டு வாங்கிய வீட்டைக் கூட அப்பொழுது விற்க முடியாது என்பதையும் பல நண்பர்கள் மூலம் நான் பார்த்ததுண்டு.

இவை எல்லாம் சேர்த்தே என் பயத்தை அதிகமாக்கிவிட்டது.அதனால் இப்பொழுதெல்லாம் இந்த மாதிரி பர்னிச்சர் கடைகளைப் பார்த்து ரசித்துவிட்டுச் செல்வதோடு சரி.ரசிப்பதற்கு கூலியும் கொடுக்கத் தேவையில்லை.

“இத்துனை வருடங்கள் இந்தத் துறையில் வேலை செய்யுறீங்க , இன்னமுமா வீடு வாங்கல” என்று நண்பர்கள் பலரும் கேட்டுவிட்டார்கள். இத்துனை வருட சம்பாத்தியத்தில் இடம் மட்டும் வாங்கிப்போட முடிந்தது. அவ்வளவுதான்.

நடுத்தர வர்க்கத்தினர் பலருக்கும் இதே பிரச்சனைதான்.சிலர் அதிக ஆசைப்பட்டு மாட்டிக்கொள்கிறார்கள்.சிலர் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு யோசித்து தப்பித்துவிடுகிறார்கள்.

இன்றைக்கு சூழ்நிலை சரியில்லை என்பதால் நான் புது வீடு கட்டுவதை விடவும் தப்பித்துவிடவே ஆசைப்படுகின்றேன்.குழந்தைகளுக்கு கொஞ்சம் பணத்தை சேமித்து வைத்தால் அவர்களின் கல்வியிலாவது எந்தப் பிரச்சனையும் வராது.வீட்டைப் பற்றி பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

கையில் பணம் இருந்தால் வீடு கட்டலாம் இல்லை என்றால் காலத்திற்கும் வாடகை வீட்டில் கூட இருந்து கொள்ளலாம்.தவறில்லை.நம் ஆசைக்காக எதிர்காலத்தை ஏன் கேள்விக்குறியாக்க வேண்டும்.

——– கதிர்

எழுதியவர் : செல்வமணி - இணையம் - ஈரோடு க (25-Sep-15, 10:17 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 258

மேலே