வண்ணக்கோலம்

தேன் சிந்தும் பூக்களை
பார்த்திருப்பீர்கள்.
நீர் சிந்தும் பூக்களை
பார்த்ததுண்டா.?
அது வாசல் தெளிக்கும்
எந்தமிழ் பெண்கள்தான்.!

கோலமிடும் பெண்களால்
வாசல் அழகாகி..
வீதி அழகாகி..
ஊரே அழகாகும்.!

வாசலுக்கும்
வாலிபத்திற்கும்
ஓரு சேர வண்ணம் பூசும்
வண்ணத்துப்பூச்சி
அவர்கள்.!

ஆணுக்குத்தெரியும்
கோலமயில் இருக்கும் வீடு
கோலங்களால் ஆனதென.!

வானம் பார்த்துக்கிடந்த
வண்ணக்கோலங்களால்
வானவில்
வளைந்துபோன காலமது.!

ஒரு முறைக்கு
ஒன்பது வெண்முத்துக்கள் சிந்தும்
மாயச்சிப்பி அவர்களது கைகள்.!

புள்ளியைச்சுற்றிய கோடுகள்
கோலங்களாகி நிற்க
கோலத்தைச்சுற்றியப்புள்ளிகள்
காதலாகி நின்றார்கள்.!

தமிழ் பெண்கள் வாசல்தான்
புண்ணியபூமி.!

கன்னிப்பெண்ணின்
கோலம் புக முடியாத
ஒரு பூவின் கோபம்
பூசணி ஆனது.!

பெண் வரையும் பூக்கோலம்தான்
பின்னாளில் பூகோளமானது.!

நட்சத்திரங்கள்
பார்க்கையில்தோனும்
வளையல் கைகளுக்கு எட்டியிருந்தால்
இந்த வானம் எவ்வளவு அழகாக
இருந்திருக்கக்கூடும் என்று.!

பூவைத்த கோலத்தோடு
கோலத்தில் பூ வைக்கும்
மார்கழிப்பெண்கள்
அதிகாலைச்சூரியனோடு
அதீத சினேகம் கொண்டவர்கள்.!

கலிலியோ
தமிழ் வீதியில் நின்று
இதைத்தான்
சொல்லி இருக்கக்கூடும்
பூமி கோலவடிவமானதென்று.!

எட்டுப்புள்ளி
ஏழுவரிசைக்கோலத்தில்
ஆறாவது புள்ளிக்கு மேல்
அழகு கூடிக்கொண்டுபோகும்
அவள் வளைவுகளில்..

இப்படி உடல்வளைத்துக்
கோலமிட்ட
என் தமிழ் பெண்கள் குறைந்து
இன்று உடல் குறைக்க
நடந்து போகிறார்கள்
தெருவெங்கும் நாய்களோடு.!

எழுதியவர் : நிலாகண்ணன் (25-Sep-15, 3:27 pm)
பார்வை : 847

மேலே