குற்றுயிரும் குறையுயிருமாய்

ஆதரவோடு பின்னால் ஓடிவரும், அந்த கருப்பு நாய்குட்டியை, கண்டும் காணாமல் தவிர்த்துவிட்டு வேகமாக நடக்கிறேன்.... என் வேகத்துக்கு ஓட முயற்சித்து, முன்னங்கால்கள் தடுக்கி, கீழே விழுந்து, என்னை தொடர முடியாமல் தோற்று திரும்புகிறது...

உன்மையில் தோற்றவன் நான்தான்.... முன்னொரு காலம், 5க்கும் 10க்கும் அல்லாடிக்கொண்டிருந்த பாலா, தெருவில் அலையும் நாய்குட்டிகளை கருணையுடன் தூக்கிவந்து அவனுடைய சிறிய ஒழுகும் வீட்டில் வளர்ப்பான்.... ஓரளவு வளர்ந்த பிறகு அதை எங்காவது பாதுகாப்பான இடத்தில் விட்டுவிடுவான்....

அப்போதெல்லாம் ஒரு ஓட்டை சைக்கிளும், சிகப்பு கலர் வயர் பேக்குக்கும் அவனிடம் இருந்தது... அந்த பேக்குக்கு பெயரே "நாய்குட்டி பை" தான்... அந்த அளவுக்கு பல குட்டிநாய்களை குப்பைதொட்டிகளில் இருந்தும், சாலையோரங்களில் இருந்தும் இதே பையில்தான் மீட்டு கொண்டுவந்து பராமரிப்பான்...

இப்போதுல்ல பாலா... சமூகத்தில் சற்று மதிப்புள்ளவனாக மாறியிருக்கிறான்...! நன்றாக உடை உடுத்துகிறான், பைக்கில், காரில் உலவுகிறான் ! சமூகம் விரும்பிய அனைத்தையும், பிடித்தோ பிடிக்காமலோ அவனே சூடிக்கொண்டான், அவன் மனிதத்தையும், இரக்க குணத்தையும் அவன் புறச்சூழல்கள் கொஞ்சம் கொஞ்சமாக தின்றுக்கொண்டிருக்கிறது...

நாய்குட்டியை எங்கு வைத்து பராமரிப்பது ? தற்போதுல்ல அடுக்குமாடி குடியிருப்பில் அதற்கு அனுமதி இல்லை, பக்கத்து வீட்ல எதாவது சொல்லுவாங்க... போன்ற சுய சமாதானங்களை சொல்லிக்கொண்டு, அவனுள் உள்ள இரக்க குணத்தை விரும்பியே மறைக்கிறான்...

உன்மையில், இங்கு சுற்றிக்கொண்டிருக்கும் வேஷதாரி பாலா பழைய சைக்கிளில் சுற்றிக்கொண்டிருந்த உத்தமன் அல்ல... இந்த சமூக மாற்றங்களையும், புற சூழல்களையும் விரும்பி ஏற்றுக்கொண்ட, பொருளாதார அடிமையே....

இரண்டு நாட்கள் முன்பு... கருகருவென திரண்ட மேகங்கள் பெருமழைக்கான ஒத்திகையை பார்த்துக்கொண்டிருந்தது. எங்கோ படீரென இடித்த இடி சத்தம் கேட்டு பயந்த என் மகள், ஓடிவந்து என்னை கட்டிக்கொள்கிறாள்.... திடீரென... ஒரு கணம், மனதில் அந்த கருப்பு நாய்குட்டி வந்துபோகிறது.... " ம்ம்ம்... மரத்த வெச்சவன் தண்ணி ஊத்துவான்" என்கிற கையாலாகாத உதாரணத்தை எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன்...

குற்றுயிரும் குறையுயிருமாய் என்னுள் இன்னமும் கொஞ்சம் வாழ்ந்துக்கொண்டிருக்கும் பழைய பாலா, சிகப்பு வயர் பேக்கையும், பழைய ஓட்டை சைக்கிளையும் தேடி ஓடுகிறான்...!

- பாலா

எழுதியவர் : செல்வமணி (27-Sep-15, 11:42 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 167

மேலே