மறக்கப்பட்ட முதல் கலகம்

மறக்கப்பட்ட முதல் கலகம்:
தமிழ்நாட்டின் பஞ்சத்தின் விதைகள் 1870களுக்கு நூறாண்டுகளுக்கு முன்னரே தூவப்பட்டுவிட்டன. பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி அப்போது ஆட்சி செய்தது என்றாலும், அது உண்மையில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அதிகாரத் தரகராகவே தென்னிந்தியாவில் செயல்பட்டு வந்தது. அக்காலகட்டத்தில் விவசாய நிலங்களிலிருந்து மிக அதிக அளவில் வருமானத்தை வரிவசூல் மூலம் உறிஞ்ச பிரிட்டிஷ் அதிகாரிகளும் அவர்களுக்குத் துணையாக உள்ளூர் அதிகாரிகளும் செயல்பட்டு வந்தனர்.
நில உடைமையாளர்களிடமிருந்து எந்த அளவு உறிஞ்ச முடியுமோ அந்த அளவு செல்வத்தை உறிஞ்சி எடுப்பது பிரிட்டிஷ் எந்திரத்தின் நோக்கமாக இருந்தது. இந்தச் செயல்பாடு விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் தொழில்-சமுதாய குழுக்களிடையே நிலவிய உறவுகளையும் பாதித்தது. இந்த உறவுகள் சுரண்டலற்ற சமத்துவ உறவுகள் அல்ல. சமத்துவம் சுரண்டல் இரண்டுக்குமேயான சாத்தியங்களைக் கொண்டவை. ஆனால் பிரிட்டிஷ சுரண்டல் அந்த உறவுகளின் எதிர்மறைத் தன்மைகளையே பெரிதாகப் பரிணமிக்க வைத்தது.
பிரிட்டிஷ் இங்கு அமல்படுத்திய விவசாயக் கூலிக்கான சட்டங்கள் அன்றைய பிரிட்டிஷ் நிலவுடைமையாளர்-விவசாயக் கூலிகளின் நிலையை இந்தியாவுக்குப் பிரதியெடுத்தன. 1759இல் அதிகபட்சக் கூலி பாரம்பரிய கூலியைக் காட்டிலும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டது.. இந்த நிர்ணயிக்கப்பட்ட கூலிக்கு அதிகமாகக் கேட்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. 1802 இல் தஞ்சாவூர் கலெக்டர் விவசாயத் தொழிலாளர்களுக்குக் கூலியாகக் கொடுக்கப்படும் தானியங்கள் உடை ஆகியவையும் ஒழுங்குப்படுத்தப்பட வேண்டுமென ஆணையிட்டார்.[2]
Madras_famine_1877
இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் இது அன்றைய நிலவுடைமையாளர்களுக்கு ஆதரவாகவும் (பெரும்பாலும் தலித்துகளான) தொழிலாளர்களுக்கு எதிராகவும் பிரிட்டிஷ் உருவாக்கியது என்கிறார்கள். இந்தச் சட்டங்கள் தலித் சமுதாயங்களுக்கு எதிரானவை என்பதில் ஐயமில்லை. ஆனால் இவை சுதேசிய நிலவுடைமையாளர்களுக்கும் எதிரானவையாகவே இருந்தன. தமிழகத்தின் முதல் கலகத்தின் ஆவணங்கள் அதைத்தான் காட்டுகின்றன. நிலவுடைமையாளர்களான கொண்டைகட்டி வெள்ளாளர், விவசாயக் கூலிகளான பறையர், ’பள்ளி’ ஆகிய சமுதாயக் குழுக்கள் ஒருங்கிணைந்து பிரிட்டிஷுக்கு எதிரான கலகத்தில் ஈடுபட்டனர்.
இந்த காலகட்டத்தில் இப்பகுதிகளுக்கு கலெக்டராக இருந்தவர் லயோனெல் பிளேஸ் (Lionel Place) என்பவர். இவரைப் பொருத்தவரையில் சுதேசிகள் நிலங்களின் வரி மதிப்பீட்டைக் குறைக்க சதி செய்துவிட்டார்கள். எனவே இவர் அதிகபட்ச வரிகளை நிலங்களுக்கு நிர்ணயம் செய்யலானார். பூந்தமல்லியில் 1785 மற்றும் 1796களில் பறையர் ‘பள்ளி’ ஆகியோர் அறுவடை செய்ய மறுத்துவிட்டனர். பிரிட்டிஷ் வரி வசூல் அவர்களின் வருமானத்தைப் பாதித்தது. தங்கள் கூலியான அறுவடைப் பங்கை அவர்கள் அதிகரித்துக் கேட்டனர். ஒவ்வொரு பத்து கலம் நெல்லுக்கும் இரண்டு மரக்காலுக்கு அதிகமான நெல்லை அவர்கள் இப்போது கேட்டனர். அதாவது கிழக்கிந்திய கம்பனியின் வரவுக்கு முன்னால், அவர்களுக்குத் தரப்பட்ட பாரம்பரிய கூலியையே கேட்டார்கள். அப்படி கிடைக்கவில்லையென்றால் தாங்கள் அறுவடை செய்வதில்லை என வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
விவசாயக்கூலிகளின் இந்தக் கோரிக்கைக்கும் வேலை நிறுத்தத்துக்கும் நில உடைமையாளர்களின் ஆதரவு இருந்தது. ஒட்டுமொத்தமாகப் பறையருக்கான பாரம்பரிய வேலைக் கூலியான ‘கலவசம்’ 10-12 சதவிகித விளைச்சலை எடுத்துவிடுவதாகவும் குறை கூறுகிறது பிரிட்டிஷ் கலெக்டரின் அறிக்கை.[3] ஆனால் இதை சுதேசிய நிலவுடைமையாளர்கள் குறையாகக் கூறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
1790களில் இந்த பிரச்சினை சோழமண்டலத்துக்கும் பரவியது. பிரிட்டிஷாரின் அதிக வரிவிதிப்பால் விவசாயத்தை கைவிட்டுவிடும் விவசாய மிராசுதார்களைக் கட்டுப்படுத்த அரசு உத்தரவிட்டது. ஆனால் வரி வசூலை குறைக்கக் கூடாது என்பதில் கண்டிப்பாக இருந்தது. அதேபோல வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு தங்கள் நிலவுடைமையாளர்களிடமிருந்து பிரிந்துசெல்லும் பறையர் பள்ளர் மக்களின் சொத்துகளை நிலவுடைமையாளர்கள் எடுத்துக் கொள்ளலாம் எனும் பிரகடனத்தை பிரிட்டிஷ் கம்பெனி மாயாவரம், கும்பகோணம் பகுதிகளில் 1798 இல் அறிவித்தது. பறையர் பள்ளர் மக்களுக்கு உதவி செய்வோருக்கு மிகக் கடுமையான தண்டனை எல்லோருக்கும் ஒரு பாடமாக இருக்கும் வகையில் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.[4]
சென்னையையும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் இந்த வேலைநிறுத்தமே மிராசுதார்களால் தூண்டிவிடப்படுவதாக பிரிட்டிஷ் அரசாங்கம் கருதியது. சாதி அமைப்பின் காரணமாக மெட்ராஸ் பிரதேசமெங்கும் இருக்கும் பறையர் சாதியினர் அனைவரும் இப்படி வேலைநிறுத்ததில் ஈடுபடலாம் எனும் அச்சமும் பிரிட்டிஷாருக்கு ஏற்பட்டது. பிற பறையர் சமுதாய மக்களுக்கு கலகச் செய்தியை கொண்டுசெல்லும் சில பறையர் சமுதாயத் தலைவர்கள் குறித்த செய்தியும் பிளேஸுக்கு கிடைத்தது. திருவள்ளூரில் ஒரு கோவில் அதிகாரியால் ஒரு குமஸ்தாவுக்கு எழுதப்பட்ட கடிதம் பறையர்களுக்கு எதிராக பிரிட்டிஷ் கம்பெனி எடுத்த நடவடிக்கைகளைக் கூறுகிறது. அங்கு வசிப்பவர்கள் பறையர்களுக்கு உதவக்கூடாதென்று கம்பெனி முரசறிந்து அறிவித்ததையும் பறையர்கள் ஒன்றாக இணைந்துவிடக் கூடாதென்பதில் அதிகாரிகள் கவனமாக இருப்பதாகவும் அது கூறுகிறது.[5]
பிளேஸின் ஆவணங்கள் ஒரு முழுமையான பிரிட்டிஷ் எதிர்ப்பலை வீசியதைக் காட்டுகின்றன. பொன்னேரி பகுதிக்கான பாளையக்காரர், பிளேஸால் தண்டிக்கப்பட்டார். அவரது சம்பளம் தண்டனையாக எடுத்துகொள்ளப்பட்டது. ஆனாலும் அவர் பிளேஸை வந்து சந்திக்க மறுத்துவிட்டார். சென்னை ‘கறுப்பு நகரத்தில்’ பல பாளையக்காரர்கள் கூடி கலந்தாலோசித்ததாகவும் தெரிகிறது.
பிளேசால் கைப்பற்றப்பட்ட மற்றொரு கடிதத்தில் சென்னை நகரிலிருந்த பறையர் சமுதாயத் தலைவர்கள் சென்னைக்கு நாற்பது கல் தொலைவிலிருந்த கருங்குழியில் வாழும் பறையர்களை சென்னைக்கு வந்து கலந்தாலோசனை செய்யச் சொன்னதாகக் கூறப்பட்டிருந்தது. இந்தக் கடிதத்தை எழுதியதாகச் சொல்லப்பட்ட பறையர் சமுதாயத் தலைவர்கள் இருவர் இறந்து ஒரு வருடம் ஆகியிருந்தது. மூன்றாவது நபரோ அது தான் எழுதியதல்ல என சொல்லிவிட்டார். இந்தக் கடிதம் குறித்து சென்னையில் வாழும் பறையர் சமுதாயத் தலைவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள், ‘இது எங்களை மாட்டவைக்க மேல்சாதியினரின் சதி’ என்று மறுத்தனர்.. இந்த மறுப்புரையை பிளேஸ் ஆவணப்படுத்தியிருக்கிறார். பெரியதம்பி என்கிற பறையர் சமுதாயத் தலைவரின் மறுப்புரை அது:
“பிரிட்டிஷ் அரசாங்கத்தாரின் பூட்ஸ்களைச் சுத்தம் செய்து வாழ்ந்து கொண்டிருக்கும் நாங்கள் இப்படிப்பட்ட வேலைகளில் ஈடுபடுவோமா? பிரிட்டிஷார் எங்கள் கைகளிலும் கால்களிலும் விலங்குகள் மாட்டி எங்களைத் தீவாந்திரம் அனுப்பிவிட மாட்டார்களா? கருங்குழியில் உள்ள பறையர்களைக் கண்டித்து அவர்கள் எவ்விதக் கலகத்திலும் ஈடுபடக்கூடாதென்று நானே சென்று சொல்கிறேன்.”[6]
கலெக்டர் பிளேஸில் தொடங்கி இந்தக் கலகத்தை அண்மையில் ஆவணப்படுத்தும் யூஜீன் இர்ஷிக் (Eugene F. Irschick) வரை இது பறையர்களைப் பயன்படுத்தி நிலவுடைமைச் சாதிகள் செய்த கலகம் என்றே கூறுகின்றனர். ஆனால் இந்த முதல் கலகத்தை மீண்டும் வாசிக்கும்போது சில முக்கிய விஷயங்கள் தெரிகின்றன:
ஒரு குறிப்பிட்ட விவசாய நிலத்துடன் இணைந்திருந்தாலும் பறையர்களுக்கு விவசாயக் கூலி உரிமை இருந்தது. அந்தப் பாரம்பரியக் கூலி உரிமை மகசூலில் பத்து சதவிகிதம் வரை இருந்தது. அதே காலகட்டத்தில் உலகின் வேறெந்தப் பகுதியின் –பிரிட்டிஷ் உட்பட்ட – விவசாயக் கூலிகளின் கூலியைவிட இது உயர்ந்தது. அரசாங்க வரிவசூல் நியதிகளை இந்தப் பாரம்பரியமுறை கண்டுகொள்ளவில்லை என்பதை கலெக்டரின் ரிப்போர்ட் தெரிவிக்கிறது.
பறையர்கள் வேலை நிறுத்தம் செய்தது மிகத் தெளிவாக தங்கள் கூலி உயர்வை முன்வைத்தே.. பிரிட்டிஷார் கூறுவது போல எஜமான விசுவாசத்தை முன்வைத்து அல்ல.
பறையர்களுக்கும் இதர பிரிட்டிஷ் எதிர்ப்பாளர்களுக்கும் மிகக் கடுமையான தண்டனை அளிக்கப்பட்டது. தீவாந்திர சிட்சை எனப்படும் இந்தத் தண்டனை – சுமத்ரா தீவில் உள்ள பிரிட்டிஷ் தொழிற்சாலை ஒன்றில் அடிமைகளாக வாழ்க்கை முழுவதும் அடிமையாக மடிவது.

எழுதியவர் : செல்வமணி - இணையம் - கலை நந்த (30-Sep-15, 11:36 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 89

சிறந்த கட்டுரைகள்

மேலே