வாத்தியார்

பக்கத்து வீட்டில் ஒரு பையன். பெயர் அர்ஜுன் என்று வையுங்களேன்.

ஏப்ரல், மே கோடை விடுமுறையை முன்னிட்டு, அர்ஜுன் வீட்டுக்கு ஒரு வாத்தியார் தினமும் வருகிறாராம். காலை 8 டு 9 அவனுக்கு ஓவியம் வரையக் கற்றுத்தருகிறாராம்.

இதைக் கேள்விப்பட்டதிலிருந்து, நங்கை என்னை நச்சரிக்க ஆரம்பித்துவிட்டாள், ‘என்னையும் ட்ராயிங் க்ளாஸுக்கு அனுப்புப்பா, ப்ளீஸ்!’

’யம்மாடி, உன்னை க்ளாஸுக்கு அனுப்பறது பிரச்னையே இல்லை. ஆனா, லீவ் நாள்ல காலையில ஒன்பது, ஒன்பதரைவரைக்கும் நீ எழுந்திருக்கமாட்டியே, நீ எப்படி எட்டு மணி ட்ராயிங் க்ளாஸுக்குப் போகமுடியும்?’

‘நான் கரெக்டா செவன் தேர்ட்டிக்கு எழுந்துடுவேன்ப்பா.’

‘ஒருவேளை எழுந்திருக்கலைன்னா?’

‘நாலு பக்கெட் தண்ணியை என் தலையில ஊத்து!’

இத்தனை தீவிரமாக ஒரு பெண் இருக்கும்போது, அந்தக் கலை ஆர்வத்தைக் கெடுக்கக்கூடாது. இன்று காலை எட்டு மணிக்கு, அந்த ஓவிய வகுப்புபற்றி விசாரிப்பதற்காகப் பக்கத்து வீட்டுக்குச் சென்றிருந்தேன்.

அந்த வீட்டு வாசலில் ஒருவர் டிஷர்ட், ஜீன்ஸ் சகிதம் பிளாஸ்டிக் நாற்காலியில் உட்கார்ந்து ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ படித்துக்கொண்டிருந்தார். அவரை நெருங்கி, ‘சார், இங்க ட்ராயிங் மாஸ்டர்?’ என்றேன் சந்தேகமாக.

‘நான்தான். என்ன வேணும்?’

ஓவியம் வரைகிறவர்கள் ஜிப்பாவும் ஜோல்னாப்பையுமாக அலைந்தது அந்தக் காலம். இலக்கியவாதிகள்போலவே இவர்களும் மாறிவிட்டார்கள்போல.

இந்த ஓவிய ஆசிரியருக்கு மிஞ்சிப்போனால் இருபத்தைந்து வயது இருக்கலாம். கை விரல்கள் வெண்டைக்காய்போல நீள நீளமாக இருந்தன. ஒரு தேர்ந்த நடனமணியின் லாவகத்தோடு அவற்றை அசைத்து அசைத்து அவர் பேசுகையில் காற்றில் ஓவியம் வரைகிறாரோ என்று சந்தேகமாக இருந்தது.

கொஞ்ச நேரம் அவரிடம் வகுப்புபற்றி விசாரித்துவிட்டு, ‘உங்க க்ளாஸ் தினமும் எட்டு மணிக்குன்னு சொன்னாங்களே’ என்று இழுத்தேன்.

‘ஆமா. அதுக்கென்ன?

‘இப்ப மணி எட்டரை ஆயிடுச்சே. க்ளாஸ் ஆரம்பிக்கலியா?’

‘அர்ஜுன் இப்பதான் தூங்கி எழுந்து டாய்லெட்டுக்குப் போயிருக்கான். அவன் ஹார்லிக்ஸ் குடிச்சு முடிச்சுட்டு வரட்டும்ன்னு காத்திருக்கேன்’ அப்பாவியாகச் சொன்னார் அவர். அதற்குமேல் பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்பதுபோல் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் கவிழ்ந்துகொண்டார்.

வீடு திரும்பும்போது பாக்யராஜின் ’க்ளாஸிக்’குகளில் ஒன்றான ‘ஏக் காவ்மேய்ன் ஏக் கிஸான் ரஹ்தா தா’ காமெடிதான் ஞாபகம் வந்தது!

எழுதியவர் : செல்வமணி - இணையம் - சொக்கன். (2-Oct-15, 12:36 pm)
பார்வை : 727

மேலே