எண்ணெய்யும் தண்ணீரும் 9 இயற்கைவள சாபம்

வெனிசுயேலா (Venezuela) தென்அமெரிக்க கண்டத்தின் வடக்கு எல்லையில் உள்ள ஒரு நாடு. இந்தியாவோடு ஒப்பிட்டால் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு இருக்கும். மக்கட்தொகை மூன்றரை கோடிக்கு கீழே. பதினாறாம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டின் காலனியாக ஆக்கப்பட்ட பகுதிகளில் இதுவும் சேரும். 1830 வாக்கிலேயே சண்டையிட்டு ஸ்பெயினில் இருந்து பிரிந்து சுதத்திர நாடாக ஆகி இருந்தாலும், அதற்கப்புறம் நூறு வருடங்களுக்கு என்னென்னவோ அரசாட்சி குழப்பங்கள். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்துதான் ஜனநாயகம், தேர்தல் முதலிய திசைகளை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறது.

எதற்காக திடீரென்று இந்த நாட்டை பற்றி பேசுகிறோம் என்றால், உலகிலேயே மிக அதிகமாக தரைக்கடியில் கச்சா எண்ணெய்யை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும் நாடு அது என்பதால்தான்! பல்வேறு ஆய்வுகளுக்குப்பிறகு ஓரிடத்தில் எவ்வளவு எண்ணெய் இருக்கிறது என்று அளவிடுவார்கள் என்று முன்பு பார்த்தோம் இல்லையா? அருகிலுள்ள வரைபடம் உலகின் பல்வேறு நாடுகளில் இப்படி அளவிடப்பட்ட எண்ணெய் (Proven Reserve) எவ்வளவு இருக்கிறது என்று காட்டுகிறது.

இதிலெல்லாம் நிறைய பித்தலாட்டங்கள் இருக்கின்றன, களப்பணியையும், அறிவியல் ஆய்வுகளையும் மட்டும் பொறுத்து இல்லாமல், பெரிய கம்பெனிகளின் நிர்வாக குழுக்களின் அறைகளில்தான் இந்த அளவீடுகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் நிச்சயம் உண்டு. எண்களில் கொஞ்சம் பிசகு இருக்கலாம் என்றாலும், உலகிலேயே எண்ணெய் வளம் மிகுந்த நாடு வெனிசுயேலாதான் என்பதில் ஏதும் சந்தேகம் இருப்பதாக தெரியவில்லை. வரைபடம் காட்டுவதுபோல் வெனிசுயேலாவில் மட்டும் ஏறக்குறைய முப்பதாயிரம் கோடி பீப்பாய் எண்ணெய் இருக்கிறது! எண்ணெய்க்கு பெயர்போன சவூதிஅரேபியாவை விட இது மூவாயிரம் கோடி பீப்பாய்கள் அதிகம். அப்படியானால் உலகிலேயே மிகவும் பணக்கார நாடாக சும்மா உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருப்பார்களோ என்று பார்த்தால், நிச்சயம் இல்லை! இந்தியாவோடு ஒப்பிட்டால், நீங்கள் கொலை செய்யப்பட்டு இறப்பதற்கான சாத்தியக்கூறுகள் அங்கே பதினாறு மடங்கு அதிகம்! சராசரி மருத்துவச்செலவுகள் பத்து மடங்கு அதிகம்! சிறையில் அடைக்கப்படுவதற்கான சாத்தியம் ஐந்து மடங்கும், எய்ட்ஸ் வருவதற்கான சாத்தியம் இரண்டு மடங்கும் அதிகம்! மூன்று மடங்கு அதிகம் பணம் சம்பாதித்து, ஆனால் மின்சாரம், எண்ணெய் முதலியவற்றை வாங்குவதில் சராசரி இந்தியர்களை விட ஏழு மடங்கு செலவிடுவீர்கள்!

ஏன் இப்படி ஒரு நிலை என்று கேட்டால், இது இயற்கை வளத்துடன் வந்து சேரும் ஒரு சாபம் (Natural Resource Curse) என்று பதில் கிடைக்கிறது. இந்த சாபத்திற்கு முன்னோடி டச் டிசீஸ் (Dutch Disease) என்றழைக்கப்படும் ஒரு வினோதம். 1959 வாக்கில் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த க்ரொநிஞ்ஜன் (Groningen) என்ற இடத்தில் எக்கச்சக்கமாய் எரிவாயு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த களத்தில் இருந்து எரிவாயு உற்பத்தி தொடங்கி ஏற்றுமதி பெருகியபோது, நெதெர்லாந்துக்கு பணம் வந்து குவியவே, அதனுடைய நாணய (Currency) மதிப்பு நிறைய உயர்ந்தது. அதன் காரணமாக நெதெர்லாந்தில் தயாரிக்கப்பட்ட மற்ற பொருட்களின் விலை உலகசந்தையில் மிகவும் உயர்ந்துபோய், எரிவாயுவைத்தவிர மற்ற எல்லா பொருட்களின் விற்பனையும் சரிந்தது. விவசாயம், பல்வேறு பொருட்களின் உற்பத்தி, சேவை முதலிய துறைகளில் வேலை செய்துகொண்டிருந்தவர்களும் வேறு வழியின்றி எரிவாயு சம்பந்தப்பட்ட வேலைகளிலேயே ஈடுபட ஆரம்பித்தார்கள். சில வருடங்களில் மொத்த நாடும் தனது தொழில்துறை நிபுணத்துவத்தில் இருந்த பன்முகத்தன்மையை இழந்து எரிவாயுவை மட்டுமே நம்பி வாழ வேண்டிவந்தது. பின்னாட்களில் நெதர்லாந்து சமாளித்து எழுந்து கொண்டது என்றாலும், ஒரு வேளை அந்த பெரிய எரிவாயு புதையல் கிடைக்காமலே இருந்திருந்தால், மற்ற துறைகளில் வீழ்ச்சி ஏதும் ஏற்பட்டிருக்காது என்கிறது இந்த கருத்து.

இந்த பொருளாதாரத்தத்துவம் வெறும் எரிவாயுவிற்கு மட்டுமின்றி எந்த ஒரு இயற்கை வளமும் திடீரென்று நிறைய அளவில் ஒரு சமூகத்திற்கு கிடைக்கும்போதும் தலை காட்டுவது வழக்கம். ஒரு விதத்தில் பார்த்தால் லாட்டரி சீட்டில் பெரிதாக பரிசு கிடைத்தபின் அந்த பணத்தை எப்படி முறையாக பயன்படுத்தி வாழ்வில் முன்னேறுவது என்று தெரியாமல் சில குடும்பங்கள் சீரழிவது போல்தான் இதுவும். ஒரு குடும்பம் போன்ற சிறிய அலகில் இந்த தடுமாற்றத்தை புரிந்து கொள்வது சுலபம். ஒரு நாடு தனக்கு கிடைத்த புதையலை சரியாக பயன் படுத்திக்கொள்ள முடியாமல் போவதற்கு கொஞ்சம் சிக்கலான நான்கு காரணங்களை சொல்லலாம்.

பல்வேறு தொழில்துறைகள் மற்றும் பொருளாதாரம் முதலிய விஷயங்களில் முன்னேற்றம் அடையாத ஒரு நாட்டில் தீடீரென்று எண்ணெய், எரிவாயு, தங்கம், வைரம் போன்ற ஒரே ஒரு இயற்கை வளம் நிறைய இருப்பதாக கண்டறியப்பட்டால், அந்த ஒரு வளத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் ஒரு சிலராலோ அரசாங்கத்தாலோ முழு நாட்டையும் அதன் குடிமக்களையும் கட்டுக்குள் கொண்டு வந்து விட முடிகிறது. அதன்பின் ருசி கண்ட பூனை போல், அந்த கட்டுப்பாட்டை வைத்திருக்கும் சிலர் அதை விட்டுக்கொடுக்க மறுத்து, சர்வதிகாரம், எதிர்த்து பேசுபவர்களை ஒடுக்குதல், லஞ்சம், ஊழல் போன்ற திசைகளில் நகர்ந்து நாட்டை முன்னேற விடாமல் தடுத்து விடுகிறார்கள்.

ஒரே ஒரு இயற்கை வளத்தை நம்பி இருக்கும் ஒரு நாட்டின் பொருளாதாரம் அதன் கையில் மட்டுமே முழுதும் இல்லாமல், அந்த வளத்தின் (உதாரணமாக கச்சா எண்ணெய்) விலை நிர்ணயிக்கப்படும் உலக சந்தையின் கைகளில்சென்று அமர்ந்து விடுகிறது! விலையின் ஏற்றதாழ்வுக்கு ஏற்ப அந்த நாட்டின் பொருளாதாரமும் உயர்ந்து தாழும்.

முன் சொன்ன நெதர்லாந்து நிகழ்வுகள் போல், அந்த நாட்டின் நாணயத்தின் மதிப்பு உயர்வும் வந்து கொட்டும் பணமும் மற்ற தொழில்களை நொடித்து போக வைக்கும்.

ஒரு பரந்து விரிந்த, வரி செலுத்தும் சமூகமும், அந்த வரிகளின் மூலம் ஜீவித்து சமூகத்திற்கு தேவையான வசதிகளை செய்துதரும் அரசாங்கமும் இல்லாததால், மக்களுக்கு தேவையான கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் வருவாயை செலவிடாமல், பெரிய அரண்மனைகள், அடுக்கு மாடி கட்டிடம் போன்ற திட்டங்களில் (Prestige Projects) பணத்தை அரசாங்கம் விரயம் செய்வதால், பிற்காலத்திலும் நாட்டை தாங்கி நிறுத்தக்கூடிய வலுவுள்ள இளய சமுதாயத்தை படைக்காமல் போவது இன்னொரு காரணம். இந்த மாறுதல்களை பார்க்கும் அந்த நாட்டு தொழில் வல்லுனர்கள் பலர், இந்த கொள்ளையில் எப்படி பங்கு பெறலாம் என்று யோசிக்க ஆரம்பிப்பார்கள் அல்லது வெறுத்து வேறு நாடுகளுக்கு குடி பெயர்ந்து விடுவார்கள்.

இந்த பட்டியலில் உள்ள நான்கு காரணங்களில் ஏதாவது ஒன்றை தவறு என்றோ அல்லது அதை வேறு கோணத்தில் இருந்து பார்க்க வேண்டும் என்றோ நீங்கள் நினைக்கலாம். அவ்வாறு வாதிடும் அல்லது இத்தோடு இன்னும் ஓரிரு விஷயங்களை சேர்க்க வேண்டும் என்று உறுமும் பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளை பார்த்திருக்கிறேன். உதாரணமாக, ஒரு நாட்டின் தரைக்கடியில் புதைந்திருக்கும் கனிம வளங்களைப்பற்றிய கணிப்பு பெரிதாக இருந்தாலும், அது வெட்டி எடுத்து ஏற்றுமதி செய்யப்படும் அளவுதான் இந்த சாபத்தின் உக்கிரம் இருக்கும் என்று ஒரு வாதம் உண்டு. அதெல்லாம் சரிதான் என்றாலும், ஓட்டு மொத்தமாக இந்த அலசலில் உள்ள உண்மை தற்காலத்திய பல சமூகங்களிலும் நாடுகளிலும் பிரதிபலிப்பதை நிச்சயம் மறுக்க முடியாது.

அங்கோலா, லிபியா, சூடான், காங்கோ முதலான எண்ணெய் வளம் மிகுந்த பல ஆப்பிரிக்க தேசங்களில் இத்தகைய சீரழிவை பார்க்கலாம். சியாரா லியோன் நாட்டில் உள்ள வைரச்சுரங்கங்களாலும் இதே விளைவு ஏற்பட்டிருக்கிறது. ஆப்பிரிக்காவின் ஏழை நாடுகளிடையே எவ்வளவு கனிம வளம் இருக்கிறதோ அதற்கு இணையாய் உள்நாட்டு சண்டைகளும் மிகுந்திருப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. ஆனால் லாட்டரி பரிசு பெறும் வேறு சில குடும்பங்கள் அந்த பணத்தை ஒழுங்காக கையாண்டு வாழ்வில் முன்னேறுவதைப்போல், நாடுகளும் தங்களின் திறமையான மேலாண்மை காரணமாக முன்னேறவும் முடியும். தென்னாப்ரிக்கா, நார்வே போன்ற நாடுகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம். இந்த சாபத்தில் இருந்து விடுபட என்ன வழி என்றால், ஒளிவு மறைவு இல்லாமல், எந்த ஒரு இயற்கை வள ஏற்றுமதி வழியாகவும் வந்து சேரும் பணத்தை வெளிச்சம் போட்டுக்காட்டி ஒழுங்காக செலவழிப்பதும், பொருளாதாரத்தை பன்முகப்படுத்துவதும்தான். இதற்காக Extractive Industries Transparency Initiative (EITI) என்று ஒன்றை ஆரம்பித்து, சம்பந்தப்பட்ட நாடுகளையும், தனியார் நிறுவனங்களையும் அதில் சேர்ந்துகொண்டு தாங்களாகவே முன்வந்து தங்கள் கொடுக்கல் வாங்கல் விஷயங்களை அம்பலப்படுத்தும்படி முன்னாளைய பிரிட்டிஷ் பிரதமர் டோனி ப்ளேர் போன்றவர்கள் வலியுறுத்திக்கொண்டிருக்கிறார்கள். விளைவுகளை பத்து, இருபது வருடங்கள் கழித்து ஆய்ந்து பார்ப்போம்.

எண்ணெய்யை மட்டும் நெருங்கி பார்த்தோமானால், இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் “ஏழு சகோதரிகள்” என்று வர்ணிக்கப்பட்ட ஏழு எண்ணெய் நிறுவனங்கள்தான் உலகம் முழுதும் கோலோச்சிக்கொண்டிருந்தன. அந்த நிறுவனங்கள் சுமார் 85% எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனையை கட்டுப்படுத்திக் கொண்டிருந்ததை எதிர்க்க “பெற்றோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு” (OPEC: Organization of Petroleum Exporting ountries)1960இல்உருவாக்கப்பட்டது.

இப்போது இந்த அமைப்பில் அல்ஜீரியா, அங்கோலா, ஈக்குவடார், ஈரான், ஈராக், குவைத், லிபியா, நைஜீரியா, கத்தார், சவூதிஅரேபியா, UAE, வெனிசுவேலா முதலிய நாடுகள் இருக்கின்றன. அவர்களின் வலைத்தள தகவல்படி, உலகில் இதுவரை கண்டறியப்பட்டிருக்கும் எண்ணெய் வயல்களில் 80 சதவீததிற்கு மேல் இந்த ஒரு டஜன் நாடுகளில் மட்டுமே இருக்கின்றன! எனவே 1970களில் இருந்து கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு என்ன விலை என்பது பெரும்பாலும் இந்த அமைப்பின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. பெரும்பாலும் என்று சொல்வதற்கு காரணம் எண்ணெய் உற்பத்தி இந்த அமைப்பில் இல்லாத நாடுகளிலும் நடந்து கொண்டிருந்ததும், இந்த OPEC நாடுகளுக்குள்ளேயே அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் வந்து கொண்டிருந்ததும்தான். உலகிலேயே மிக அதிகமான அளவு எண்ணெய் உற்பத்தி செய்வது சவுதிஅரேபியாதான் என்பதாலும், தேவைக்கேற்ப அவர்களால் உற்பத்தியை ஏற்றி இறக்க முடியும் என்பதாலும், அந்த நாடுகளிடையே அது ஒரு “தல” போல் செயல்பட்டு பீப்பாய் விலையை தேவையான உயரத்தில் நிலை நிறுத்த தொடர்ந்து முயன்று வருகிறது.

1998இன் இறுதியில் பீப்பாய் $16 விற்றுக்கொண்டிருந்தது. இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் முதல் பத்து வருடங்களில் இந்தியாவும் சீனாவும் வளர்வது தொடர, உலகின் தினப்படி எண்ணெய் தேவை சுமார் 8.8 கோடி பீப்பாய் அளவில் .தற்போது மிதக்கிறது. ஏழெட்டு வருடங்களுக்கு முன் வரை இந்த தேவைகளை பூர்த்தி செய்ய சவூதிஅரேபியா, வெனிசுயேலா, ரஷ்யா முதலிய நாடுகளையே வெகுவாக நம்பி இருக்க வேண்டி இருந்ததால் விலை விறுவிறுவென்று ஏறிக்கொண்டே போய் 2008ல் $140 என்று ஆனபோது, இந்த நாடுகளில் பண மழை பெய்துகொண்டிருந்தது.

அப்போதெல்லாம் வெனிசுயேலாவின் ஜனதிபதியாக இருந்த ஹ்யுகோ சாவேஸ் அமரிக்காவை அவமானப்படுத்துவதில் குறியாய் இருந்தார். அமெரிக்காவிற்கு தனது குடிமக்களை பார்த்துக்கொள்ள துப்பில்லை எனவே, குளிர் காலத்தில் குளிரில் அவதிப்படும் அமெரிக்கர்களுக்கு நான் இலவசமாக வீடுகளை சூடுபடுத்துவதற்கான எரிபொருட்களை வழங்குகிறேன் என்று அறிவித்து எண்ணெய் லாரிகளை அனுப்பி வைத்தார். அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதியான ஜார்ஜ் புஷ்ஷை சாத்தான் என்று வர்ணித்து, 2006இல் நியூயார்க் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பேசும்போது, “நேற்று இங்கே அந்த பிசாசு வந்திருந்ததால் இப்போது கூட இந்த இடத்தில் கந்தக நெடி அடிக்கிறது” என்று அவர் வழங்கிய உரையை யுட்யூப்பில் பார்க்கலாம். பின்னாட்களில் ஒபாமாவையும் கோமாளி என்று திட்டித்தீர்த்தவர் இவர். Maduroஇரண்டு வருடங்களுக்கு முன் ஹ்யுகோ சாவேஸ் புற்றுநோயால் இறந்து விட்டாலும், இப்போது அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் வாரிசான மதுரோ ஜனாதிபதியாகி ஏறக்குறைய ஹ்யுகோ சாவேஸ் வழியிலேயே நாட்டை வழி நடத்த முற்பட்டு ஆனால் திணறிக்கொண்டு இருக்கிறார். இவரது அரசாட்சியை எதிர்த்து நிறைய போராட்டங்களும் ஊர்வலங்களும் தொடர்கின்றன.

இவருடைய மற்றும் ரஷ்யாவின் பூட்டின் போன்ற தலைவர்களின் எதிர்கால திட்டங்களில் நிறைய மண்ணை வாரி வீசிக்கொண்டிருப்பது சென்ற அத்யாயத்தில் நாம் பார்த்த அமெரிக்க ஃப்ராகிங் தொழில் நுட்பம்தான்! பீப்பாய் விலை $140 வரை சென்றபோது, OPEC அமைப்பின் பிரதிநிதிகள் இனிமேல் எண்ணெய் விலை எப்போதும் $100 மேலேதான் இருக்கும். இது ஒரு புதிய சாதாரண நிலை (The New Normal). உலகம் இந்த நிலையிலேயே வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்கள். உற்பத்தியை பெருக்கி விலையை குறைக்க முடியும் என்றாலும், அப்போது அவர்கள் அதை விரும்பவில்லை.

அதே உயர்ந்த விலை, நிறைய பணம் செய்ய ஒரு வாய்ப்பளித்து புதிய முகங்களை இந்த துறைக்கு வரத்தூண்டி ஈர்த்தது. அப்போது பிரபலமானதுதான் இந்த ஃப்ராகிங். மெக்ஸிகோ வளைகுடாவில் ஒரு ரிக்கை (Rig) அமைத்து, எண்ணெய் கிணறு வெட்டி உற்பத்தியை தொடங்குவது நிறைய பணம் செலவாகும் ஒரு தொழில்முறை. அதோடு ஒப்பிடும்போது பென்சில்வேனியா, வட டகோட்டா போன்ற மாநிலங்களில் ஆங்காங்கே தரையில் துளையிட்டு ஃப்ராகிங் முறையில் எண்ணெய் மற்றும் எரிவாயுவை உற்பத்தி செய்வது அவ்வளவு செலவில்லாத, எளிதாக ஆரம்பித்து விடக்கூடிய தொழில்முறை! தேவை இல்லை என்றால் எளிதாக பெரிய பொருட்செலவில்லாமல் நிறுத்திவிடவும் முடியும். தொட்டியில் இருந்து எண்ணெய்யை எடுப்பதைப்போல் செயல்படும் பாரம்பரிய கிணறுகள் போல் இல்லாமல், பாறைகளை உடைத்து உலுக்கி இந்த எண்ணெய் எடுக்கப்படுவதால், இந்தக்கிணறுகள் ஓரிரு வருடங்களிலேயே வற்றியும் போய் விடும். எனினும் செலவு கம்மி என்பதால் புதிய கிணறுகளை வெட்டிக்கொண்டே இருப்பதன் மூலம் பழைய கிணறுகளில் குறையும் உற்பத்தியை விரைவாக ஈடு செய்யவும் இயலும். முன் சொன்னது போல் இதனால் சுற்றுப்புற சுகாதரக்கேடுகளும், நிறைய நிலநடுக்கங்களும் உருவாவது சாத்தியம் என்றாலும், இந்த மாதிரி கிடைக்கும் எண்ணெய் அமெரிக்காவின் பல மாநிலங்களில் மட்டும் இன்றி, உலகின் பல பகுதிகளிலும் உண்டு என்பதால், உலக எண்ணெய்/எரிவாயு அரங்கில் தேவையான போது திறந்து மூடும் ஒரு குழாய் போல் இந்தத்தொழில் மாறி வருகிறது!

இதைப்புரிந்து கொண்ட OPEC நாடுகள், குறிப்பாக சவூதிஅரேபியா, இந்த தொழில்முறை ரொம்பவும் பரவி விடாமல் தடுப்பது எப்படி என்று யோசிக்க ஆரம்பித்தது. ஃப்ராகிங் முறையில் லாபகரமாக எண்ணெய் எடுக்க எண்ணெய்யின் விலை பீப்பாய்க்கு $60 ஆகவாவது இருக்க வேண்டும். அதை விட மிகவும் குறைந்தால் உற்பத்தி லாபகரமாக இருக்காது. ஆனால் மற்ற நாடுகளைப்போல் இல்லாமல், சவூதிஅரேபியா மட்டும் பீப்பாய் $10க்கு உலக சந்தையில் விற்றால் கூட லாபம் ஈட்டும். இதன் காரணம் கடலில் இருந்து எண்ணெய் எடுப்பது, ஃப்ராகிங் போன்ற தொழில்நுட்பங்களை உபயோகிப்பது போன்ற தேவைகள் ஏதும் இல்லாமல் சுலபமாக நிலத்தடியில் இருந்து அங்கே நிறைய எண்ணெய் கிடைப்பதுதான். பீப்பாய் $10 என்று விற்றாலும் சவூதிஅரேபியாவுக்கு நஷ்டம் இல்லை என்றாலும், லாபம் மிகவும் குறைந்து, செலவுகள் குறையாத பட்சத்தில் அரசாங்கத்தின் கஜானாவில் உள்ள சேமிப்பை குடிக்கும். இருந்தாலும் இப்போதைக்கு விலை குறைந்தாலும் பரவாயில்லை, ஆனால் ஃப்ராகிங்கை வளர விடக்கூடாது என்று OPEC உற்பத்தியை பெருக்கி விலையை $60க்கு கீழே கொண்டு வந்து விட்டார்கள்.

விலை இவ்வளவு இறங்கியவுடன் அமெரிக்காவின் பல பகுதிகளில் (உதாரணம் லூயிசியானா, வட டகோட்டா), எண்ணெய் எடுப்பது கொஞ்சம் குறைந்திருக்கிறது. உலக அளவில் கடந்த ஒரு வருடத்தில் இத்துறையை சேர்ந்த சுமார் 75,000 பேர் வேலை இழந்திருப்பதாக தெரிகிறது! $140க்கு பதில் $60க்கு பீப்பாய் எண்ணெய்யை விற்கும்போது சவூதிஅரேபியாவால் சமாளிக்க முடிந்தாலும், ரஷ்யாவில் இருந்து ஆரம்பித்து, ஈரான், வெனிசுயேலா போன்ற பல நாடுகளின் பட்ஜெட்டில் பெரிய துண்டு விழுந்து அரசியல் தலைவர்களை தடுமாற வைக்கிறது!

அமெரிக்காவில் எண்ணெய் /எரிவாயு எடுப்பது எல்லாம் முற்றிலும் தனியார் நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட தொழில். அரசாங்க நிறுவனங்கள் ஏதும் கிடையாது. எனவே, வேண்டும் என்கிறபோது வேலைக்கு ஆட்கள் எடுப்பதும், வேண்டாம் என்கிறபோது உடனே பணியாட்களின் சீட்டைக்கிழித்து வீட்டுக்கு அனுப்புவதும் ரொம்பவும் சகஜம். தனி மனிதர்களுக்கும், அவர்களை சார்ந்த குடும்பங்களுக்கும் இந்த நிரந்தரமில்லா தன்மை பெரிய தலைவேதனைதான் என்றாலும், அவர்களுக்கு இது தெரிந்த/பழகிய விஷயம்தான். வேலை போய்விட்டது என்பதில் தனிமனித அவமானம் எதுவும் கிடையாது. எனவே வேறு எங்கே எந்த துறையில் வேலை கிடைக்கும் என்று பார்த்துக்கொண்டு போய்விடுகிறார்கள். இப்படி அடிமட்டத்தில் நிலவும் ஊர்ஜிதமில்லாத வாழ்வு முறை, நாடு/உலகம் என்கிற பெரிய அளவில் இருந்து பார்க்கும்போது எண்ணெய் விலையை உயர விடாமல் தடுக்க மிகவும் உதவுகிறது!

இந்த தேவை/உற்பத்தி சமன்பாட்டில் புதிய மாறுதல்கள் ஏதாவது எதிர்காலத்தில் வரலாம். அது வரை இந்த ஃப்ராகிங் குமிழை திருகி தேவைக்கேற்ப அதிகரித்தோ குறைத்தோ எண்ணெய் விலையை உலகம் கட்டுக்குள் வைத்திருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம்! அப்படியே எண்ணெய் தேவை திடீரென்று அதிகரித்தால், எரிவாயு உள்ளே புகுந்து தேவைகளை சமாளிப்பதும் சாத்தியம். எண்ணெய் எரிவாயு இரண்டுக்கும் இடையே உள்ள உற்பத்தி, மற்றும் உபயோக வித்தியாசங்களை பின்னால் அலசுவோம்.

__________________________________________
நன்றி: சுந்தர் வேதாந்தம் On June 29, 2015

எழுதியவர் : செல்வமணி - இணையம் - சொல்வனம (4-Oct-15, 1:17 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 81

மேலே