எண்ணெய்யும் தண்ணீரும் 10 பன்னாட்டு பிரச்சினைகள்

மிர் என்ற சொல்லுக்கு ரஷ்ய மொழியில் அமைதி என்று அர்த்தம். ஆனால் மிர்-1 மற்றும் மிர்-2 என்று பெயரிடப்பட்ட அந்த இரு பெரிய ரஷ்ய நீர்மூழ்கி வாகனங்கள் சில வருடங்களுக்கு முன் சேர்ந்து செய்த குறும்பு உலக அமைதிக்காக இல்லை என்பதென்னவோ நிச்சயம்! அவை இரண்டும் வட துருவத்தில் இருக்கும் ஆர்டிக் கடலில் இயங்குவதற்கு முன்னேற்படாக, அணுசக்தி ஆற்றலில் இயங்கி பனிக்கட்டிகளை உடைக்கும் ரோஸ்சியா என்கிற கப்பல் (Nuclear Powered Ice Breaker) அங்கே சென்று உறைபனியை முதலில் ஒரு பெரிய சதுர வடிவில், கடல் நீர் மேலிருந்து தெரியும் அளவுக்கு வெட்டித்தள்ளியது. அந்த வேலை முடியும்வரை ரோஸ்சியா கூடவே சென்றிருந்த அகடமிக் ஃப்யோடோரொவ் (Akademik Fyodorov) என்ற அறிவியல் ஆய்வுக்கான கப்பலில் மிர் நீர்மூழ்கிகள் காத்திருந்தன.

2007 ஆகஸ்ட் 2ஆம் தேதி, ஒரு வியாழக்கிழமை. அது ஒரு நல்ல நாளாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அகடமிக் ஃப்யோடோரொவில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக கடலுக்குள் அவை இரண்டும் இறக்கி விடப்பட்டன. அவற்றில் கலத்துக்கு ஒன்றாக ரஷ்ய பார்லிமெண்ட் தூமாவை சேர்ந்த இரண்டு எம்.பி.க்கள் வேறு! மூன்று நாட்கள் தண்ணீருக்குள் இருப்பதற்கு போதுமான பிராண வாயு, சாப்பாடு, இத்யாதிகளுடன் உறைபனியில் இருந்த ஓட்டை வழியே உள்ளே சென்ற அந்த வாகனங்கள் மெல்ல ஆர்க்டிக் கடலின் அடிமட்டத்தை நோக்கிப்பயணித்தன. சூரிய வெளிச்சம் கொஞ்சமும் உள்ளே வராமல் கும்மிருட்டாய் இருந்த அந்த தண்ணீருக்குள் மிர் கலங்களில் இருந்து அடித்த செயற்கை விளக்குகள் மட்டுமே கொஞ்சமாய் வெளிச்சத்தை வழங்கிக் கொண்டிருந்தன.

சுமார் 4.2 கிலோமீட்டர் ஆழத்தை சென்றடைந்து, ஒரு வழியாக தரை தட்டியபின், வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ரோபாட் கரங்களின் உதவியுடன் ஒரு மீட்டர் உயரமுள்ள டைட்டேனியத்தால் செய்யப்பட்ட துருப்பிடிக்காத ரஷ்ய கொடியை அந்த நீர் மூழ்கிகள் ஆர்டிக் கடலின் தரையில் நட்டன! பளிச், பளிச்சென்று நிறைய போட்டோக்கள். கை தட்டல்களுக்கும் குறைவில்லை. மிர்-2 கலத்தில் பயணம் செய்த குழுத்தலைவரான ஆர்துர் சில்லிங்கரொவ் என்ற எம்.பி. இந்த நிகழ்வை ஒரு விண்வெளிப்பயணம் போலவே விவரித்தார். அடுத்த வருடமே இதற்காக ரஷ்யாவின் ஹீரோ என்ற விருது வழங்கி அவர் கௌரவிக்கப்பட்டார். இது விண்வெளியில் மனிதன் பயணித்தது, நிலவில் கால் பதித்தது போன்ற ஒரு பெரிய அறிவியல் முயற்சியோ என்றால், இல்லை, இதன் நோக்கம் வேறு என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த முயற்சியின் குறிக்கோள் என்ன என்று புரிந்துகொள்ள இன்னொரு பக்கத்தில் இருந்து இந்தக்கதையை அணுக வேண்டும்.

கடலில் பிளாட்பார்ம் கட்டி எண்ணெய்/எரிவாயு எடுப்பது பற்றி பேசும்போது, ஏன் கடலுக்கடியில் அவ்வளவு எண்ணெய் இருக்கிறது என்று ஒரு கேள்வி எழலாம். கடலோடு ஒப்பிடும்போது ஆறடி உயரமுள்ள மனிதன் மிக மிகச்சிறியவன் என்பதால், கடல் என்பதே மலைப்பு தட்டுமளவுக்கு ஒரு பெரிய படைப்பாக நமக்குத்தோன்றுகிறது. பூமியின் நிலப்பரப்பில் 72 சதவீதம் தண்ணீர் என்று வேறு நாம் கேள்விப்பட்டிருப்பது பூமியே முக்கால்வாசி தண்ணீரினால் ஆனது என்று நம்மை நினைக்கத்தூண்டும். 72 சதவீதம் தண்ணீர் என்பது சரிதான் என்றாலும், பூமியின் சைஸோடு ஒப்பிடும்போது நாம் சாதாரணமாக நினைத்துக்கொள்வது போல் கடல் ஒன்றும் அவ்வளவு ஆழம் இல்லை. அப்படி பூமியை சுற்றி படர்ந்து இருக்கும் தண்ணீரை எல்லாம் சேர்த்து ஒரு உருண்டையாக்கினால் அது எவ்வளவு பெரியதாக இருக்கும் என்று காட்டும் இந்தப்படம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

படத்தில் குட்டி கோலிக்குண்டு போல் அமர்ந்திருக்கும் நீல நிற பந்து பூமியில் இருக்கும் அத்தனை கடல்கள் (95% தண்ணீர்), ஆறுகள், ஏரிகள், மேகங்கள், துருவங்களில் இருக்கும் பனிப்பிரதேசங்கள், இமயமலை, அலாஸ்கா போன்ற இடங்களில் இருக்கும் ஐஸ், நம் உடல்கள், விலங்கினங்கள், தாவரங்களில் இருக்கும் தண்ணீர் எல்லாவற்றையும் சேர்த்து காட்டுகிறது! இதனால் நமக்கு புரிவது என்னவென்றால், 72% நிலப்பரப்பு தண்ணீரில் மூழ்கி இருந்தாலும், பூமியின் அளவுடன் ஒப்பிடும்போது தண்ணீர் ரொம்ப ஆழம் இல்லாமல் ஒரு மெல்லிய படலம்போல்தான் படர்ந்திருக்கிறது என்ற ஆச்சரியமான விஷயம்தான்!

எனவே, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் எந்தக்கண்டம் எங்கே இருந்தது, அப்போது அங்கே உயிரினங்கள் இருந்தனவா, அவை அழிந்தபின் அவை எப்படி பூமிக்கடியில் போய் சேர்ந்தன, அதன் பின் கண்டங்கள் எங்கிருந்து எங்கே நகர்ந்தன, எந்தெந்த இடங்கள் தண்ணீருக்கடியில் மூழ்கின போன்ற பல விஷயங்களைப்பொறுத்து எண்ணெய்யும் எரிவாயுவும் ஆங்காங்கே உருவாகி உட்காந்திருக்கின்றன. தரையில் இருந்து எண்ணெய்யை எடுப்பது கடலில் இருந்து எடுப்பதை விட சுலபம். ஆனாலும் நிகழ்தகவுகள் (Probabilities), மற்றும் நிஜ கண்டுபிடிப்புகள் படி கடலுக்கடியிலும் நிறைய எண்ணெய் இருப்பதால், அதையும் நாம் விட்டுவைப்பதாய் இல்லை.

ஒரு நாட்டின் எல்லை என்பது காஷ்மீர், பாலஸ்தீனம் போன்ற சில இடங்களைத்தவிர பொதுவாக தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கும் விஷயம். எனவே நிலத்தில் யார் எங்கே தோண்டலாம் என்பதில் பெரிதாக குழப்பங்கள் வருவதில்லை. ஆனால் கடல் சம்பந்தப்பட்ட இடங்களில் எந்த நாடு எந்த இடத்தில் தோண்டி எண்ணெய்யும் எரிவாயுவும் எடுக்க உரிமை கொண்டிருக்கிறது என்பது குடுமிப்பிடி சண்டைகளை உண்டாக்கும் விவாதம். இது பலநூறு வருடங்கள் பல நாடுகளுக்கு இடையே பிரச்சினைகளை கிளப்பக்கூடிய விஷயம் என்பதால், ஐக்கியநாடுகள் சபையில் சில வரைமுறைகளை ஏற்படுத்தி கொஞ்சம் ஒழுங்கை கொண்டுவர சென்ற நூற்றாண்டிலேயே முயன்றிருக்கிறார்கள்.

படத்தில் காட்டியிருப்பது போல் இடது பக்கம் இருப்பது ஒரு நாட்டின் கடற்கரை (Dry Land) என்று ஆரம்பித்தால், அடுத்து வருவது கண்டக்கடல் படுகை (Continental Shelf) என்று சொல்லப்படும் ஆழமற்ற கடற்பகுதி. இந்தப்பகுதியில் கடலின் ஆழம் மிக மெதுவாக அதிகரித்து, 500 அடி வரை போகலாம். அதைத்தாண்டி கடலின் தரையை தொட்டபடி பயணம் செய்தால், விருவிருவென்று ஆழம் அதிகரிக்கும் கண்டச்சரிவு (Continental Slope) என்கிற பகுதியை பார்ப்போம். அதையும் தாண்டிப்போனால், கண்டஉயர்வு (Continental Rise) எனப்படும் பகுதி வரும். இது இரண்டும் கெட்டானாய் கண்டக்கடல் படுகையை விட கொஞ்சம் அதிகமாகவும், கண்டச்சரிவை விட கொஞ்சம் மெதுவாகவும் ஆழம் அதிகரிக்கும் பகுதி. இது இறுதியில் கடலின் அடிமட்டதை தொட்டு விடைபெற அப்புறம் குண்டும் குழியுமான ஆழ்கடல் படுகை எங்கும் விரவி இருக்கும். ஒரு நாட்டின் கடற்கரையில் இருந்து இருநூறு மைல் வரை இருக்கும் கடல் பகுதி அந்த நாட்டை சேர்ந்த கண்டக்கடல் படுகை என்று 1982 வாக்கில் ஒரு உலகளாவிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

இப்படி எல்லாம் கடலின் தரை இருப்பதற்கு காரணம் பல லட்சம் வருடங்களாக இருந்த/மறைந்த பனி காலமும் (Ice Age) அப்போதெல்லாம் தண்ணீர் இருந்த உயரமும் என்கிறார்கள். பனிக்காலத்தில் கடலின் தண்ணீர் உயரம் கண்டக்கடல் படுகையை தொடுமளவு மட்டுமே இருந்திருக்கும். பின்னால் கடலின் உயரம் அதிகரித்து கண்டக்கடல் படுகையை மூழ்கடித்து தற்போதைய கடற்கரை வரை தண்ணீர் உள்ளே வந்திருக்கிறது. பல்லாயிரக் கணக்கான வருடங்களுக்கு முன் கண்டக்கடல் படுகை பகுதி தண்ணீரில் மூழ்காமல் கட்டாந்தரையாக இருந்திருப்பதால், அந்தப்பகுதிகளில் நிறைய உயிரினங்களும் தாவரங்களும் இருந்து மறைந்து, பின்னால் பூமிக்குள் புதைந்து எண்ணெய்யாகவும் எரிவாயுவாகவும் மாறியிருக்க வாய்ப்பிருக்கிறது. எனவே கடலுக்குள் இந்த கண்டக்கடல் படுகை பகுதிகளில் எண்ணெய் கிடைக்கும் வாய்ப்பு அதிகம். பல்வேறு நதிகள் கடலில் வந்து கலக்கும்போது கொண்டுவந்து சேர்க்கும் மண் எப்படிப்பட்டது என்பதைப்பொருத்து கண்டக்கடல் படுகை, கண்டச்சரிவு என்று குறிப்பிடப்படும் இடங்களின் தன்மை மிருதுவானதாகவோ அல்லது கடினமானதாகவோ உருமாறும்.

பேசிப்பேசியே விவாதங்களின் மூலம் ஒப்பந்தங்களை கொண்டுவர வேண்டிய ஐ.நா. சபை மாதிரியான இடங்களில் எல்லோரும் ஒற்றுமையாக ஒரே குரலுடன் முடிவுகளையும் வரைமுறைகளையும் கொண்டு வருவது அவ்வளவு சுலபம் இல்லை. எல்லா நாடுகளையும் பல விதங்களில் தட்டிக்கொடுத்து, கெஞ்சி/கொஞ்சி, இழுத்துப்பிடித்துத்தான் ஒப்பந்தகளை மெதுவாக ஏற்படுத்த முடிகிறது. எனவே 1982இல் ஐ.நா. சபையில் உருவாக்கப்பட்ட ஆழ்கடல் பற்றிய ஒரு ஒப்பந்ததை 1999க்குள் தனித்தனி நாடுகள் தங்கள் அரசியல் அமைப்புப்படி நிறைவேற்றி ஏற்றுக்கொள்ள (Ratification) வேண்டும். அப்படி நிறைவேற்றியபின், தங்கள் நாட்டை சுற்றியுள்ள கண்டக்கடல் படுகை நீட்டிக்கப்படவேண்டும் என்றால் அதை அடுத்த பத்து வருடங்களுக்குள் ஒரு விண்ணப்பமாக தேவையான ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கலாம் என்று முடிவெடுத்தார்கள்.

அதுதான் 200 மைல் வரை அந்தந்த நாட்டுக்கு சொந்தம் என்று சொல்லியாயிற்றே, அப்புறம் என்ன நீட்டிப்பு விண்ணப்பம் என்று உங்களுக்கு கேட்கத்தோன்றலாம். அதற்கு காரணம் இந்தப்பல்வேறு படுகைகள் செயற்கையாக கச்சிதமாக உருவாக்கப்படாமல் இயற்கையாய் லட்சக்கணக்கான வருடங்களில் பல்வேறு சக்திகளின், தட்பவெப்ப மாறுபாடுகளின் காரணமாக இஷ்டத்திற்கு வெவ்வேறு மாறுபாடுகளுடன் உருவாகியிருப்பதுதான். அதனால், இந்த ஒவ்வொரு ஏரியாவும் எவ்வளவு தூரம் கடலுக்குள் விரிந்து இருக்கும் என்று ஒரே மாதிரியாய் அறுதியிட்டு சொல்ல முடியாது. உதாரணமாக தென்அமெரிக்காவின் மேற்கு பகுதியில் இருக்கும் சிலே (Chile) நாட்டின் கடற்கரையில் இருந்து மேற்கு நோக்கி கடலுக்குள் போனால் கண்டக்கடல் படுகை என்று ஒன்றுமே இல்லாமல் ஓரிரு மைல்களிலேயே கண்டச்சரிவு வந்து விடுகிறது. ஆனால் தென்சீனக்கடல் (South China Sea), பாரசீக வளைகுடா (Persian Gulf) போன்ற பகுதிகளில் கண்டக்கரை சமவெளி அது பாட்டுக்கு பல நூறு மைல்களுக்கு பரந்திருக்கிறது! இந்த வேறுபாடுகளை சமன்படுத்த, நாடுகள் இரண்டு விதிகளுக்கு உட்பட்டு நீட்டிப்பு விண்ணப்பம் கொடுக்கலாம் என்று முடிவெடுத்தார்கள். அதென்ன இரண்டு விதிகள்?

மொத்த நீட்டிப்பு நாட்டின் கடற்கரையில் இருந்து 350 மைல்கள் வரைதான் போகலாம்.

அந்த நாட்டின் கடற்கரையில் இருந்து எங்கே கடலின் ஆழம் 2.5 கிலோ மீட்டரை தொடுகிறதோ அங்கிருந்து, நீட்டிப்பு அதிகப்பட்சம் 100 மைல் வரைதான் போகலாம்.

மேலே உள்ள வரைபடம் இந்த விதிகள் தெரிந்தவுடன் பல நாடுகள் தங்கள் நாடுகளை சுற்றி உள்ள இடங்களை தங்கள் கண்டக்கடல் படுகை என்று உரிமை கொண்டாட முடிவு செய்து பதிவுகள் செய்திருக்கும் இடங்களை வண்ணமிட்டு காட்டுகிறது. இந்தியாவும் பேருக்கு 2009ல் ஒரு பதிவு செய்திருக்கிறது. ஆனால் வேறு பல நாடுகள் பல பதிவுகளை செய்திருக்கின்றன. இந்த வேலையில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளவை சீனாவும், ரஷ்யாவும்தான்.

தென்சீனக்கடலின் பல பகுதிகள் சீனாவைசேர்ந்த கண்டக்கரை பகுதிகள் என்று சீனா உரிமை கோருவது, அந்த சுற்றுவட்டாரத்தில் இருக்கும் மலேசியா, பிலிப்பைன்ஸ், தைவான் போன்ற நாடுகளை வெறுப்பேற்றி இருக்கிறது. இதற்கு எதிர்மறையாய் வியட்நாம் தனது பகுதி என்று ஒரு எரியாவை சுட்டிக்காட்டி விண்ணப்பித்த சில மணிநேரங்களில் சீனா “அப்ஜெக்க்ஷன், யுவர் ஆனர்” என்று எழுந்து நின்று எதிர்த்தும் இருப்பதாக கேள்வி!

மேலே இருப்பது போன்ற நீள்சதுர வரைபடங்களுக்கு பதில் ஒரு பூமி உருண்டையை எடுத்துப்பார்த்தீர்களானால் சில விஷயங்கள் சட்டென்று கண்ணில் படும். அதில் ஒன்று சாதாரணமாய் உலகின் வெவ்வேறு மூலைகளில் இருப்பதாக பலர் நினைக்கும் சில நாடுகள் பூமியின் வடதுருவ பிரதேசத்தை குறிப்பாக கவனிக்கும் போது ஒன்றுக்கொன்று மிகவும் நெருங்கி நிற்கும் சமாச்சாரம்! அடுத்த படம் சுட்டிக்காட்டுவது போல், அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலம், ரஷ்யா, நார்வே, க்ரீன்லாந்து, கனடா போன்ற பல நாடுகளின் எல்லைகள் வட துருவ பிரதேசத்தில் அருகருகே வந்து விடுகின்றன. இந்த பகுதியில் இருக்கிறது ஆர்டிக் பெருங்கடல்.

லோமோனோஸோவ் நிலவுயர்வு (Lomonosov Ridge) என்பது இந்த கடலுக்குள் இருக்கும் சுமார் 1,200 மைல் நீளமுள்ள ஒரு பெரிய மலை போன்ற அமைப்பு என்று சொல்லலாம். படத்தின் நடுவில் ஆழ்ந்த நீல நிறத்தில் காட்டப்பட்டிருக்கும் இந்த நிலவுயர்வு தண்ணீருக்குள் மூழ்கி இருந்தாலும், தண்ணீரின் ஆழம் அதற்கு மேல் ஒரு அரை கிலோ மீட்டர் கூட இல்லை. இந்த லோமோனோஸோவ் நிலவுயர்வு தனது சைபீரிய கண்டக்கடல் படுகையை தொட்டுக்கொண்டு இருப்பதால், அது எது வரை நீளுகிறதோ அந்த பகுதிகளெல்லாம் ரஷ்யாவை சேர்ந்ததென்றும், அதைச்சுற்றி உள்ள இருநூறு மைல் பகுதிகளும் ரஷ்யாவையே சேரவேண்டிய கண்டக்கடல் படுகை என்றும் திருவாளர் பூட்டின் அடி போட்டுக்கொண்டிருக்கிறார்! இது எப்படி இருக்கு? அதற்கு முக்கியக்காரணம் வடதுருவத்தின் ஆர்க்டிக்கடலின் கீழே மட்டும் உலகின் இது வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய்யை போல் இன்னொரு 25% இருக்க முடியும் என்ற யூகம்தான்!

அந்த உரிமை கொண்டாடும் முயற்சியின் ஒரு பகுதிதான் நாம் ஆரம்பத்தில் பார்த்த மிர் நீர் மூழ்கிகளின் கொடி நாட்டு விழா! இந்த சம்பிரதாய கொடி நடலுக்குப்பின் வடதுருவத்தில் உலகின் பொதுச்சொத்தாக இருக்கும் சுமார் நான்கரை லட்ச சதுர கிலோமீட்டர் பரப்பளவை அவர்கள் எங்கள் நாட்டை சேர்ந்தது என்று உரிமை கொண்டாடினர். இதைக்கேட்டு கடுப்படைந்த கனடா நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் பீட்டர் மாக்கே, “சும்மா எங்கேயாவது ஒரு கொடியை நட்டுவிட்டு, இது எங்கள் நாடு என்று உரிமை கொண்டாட, இதென்ன, பதினைந்தாம் நூற்றாண்டா?” என்று ரஷ்யாவை கடிந்து கொண்டார். ஆனால் இதெல்லாம் ரஷ்யாவுக்குள் யார் காதிலும் விழுந்ததாக தெரியவில்லை. ரஷ்யாவின் அதிபர் பூட்டின், வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ், ரஷ்ய தொலைக்காட்சி சேனல்கள் எல்லாம், “அட, சும்மா அசத்திடோமில்ல” என்று தங்கள் சாதனையை பற்றி பேசி குதித்துக்கொண்டிருந்தார்கள்.

கிரைமியாவில் 2014இல் செய்ததுபோல், ஒரு வாக்கெடுப்பு நடத்தி அங்கே வாழும் எங்கள் சகோதர சகோதரிகள் எல்லாம் ரஷ்யாவுடன் சேர்ந்து இருப்பதையே விரும்புகிறார்கள் என்று சொல்லி இந்தப்பகுதியை ரஷ்யாவுடன் இணைத்துக்கொள்ளலாம் என்று பார்த்தால், அந்த குளிரிலும், ஆழத்திலும் ஓட்டுப்போட நிறைய மீன்கள் கூட இருப்பது போல் தெரியவில்லை. 2040 வாக்கிலேயே புவி வெப்பமயமாகும் (Global Warming) காரணங்களால் ஆர்க்டிக் பிரதேசம் எண்ணெய் எடுக்க வசதியாய் கோடைகாலத்தில் சுத்தமாய் பனியே இல்லாமல் காய்ந்து விடும் சாத்தியக்கூறுகள் இருப்பதால், பல நாடுகளின் கவனம் இங்கே திரும்பி இருக்கிறது!

ரஷ்யாவின் விண்ணப்பம் ஐ.நா. விலோ அல்லது மற்ற நாடுகளிலோ உடனே ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றாலும், மற்ற நாடுகளும் விழித்துக்கொண்டு புதிய விண்ணப்பங்களை சமர்ப்பித்திருக்கின்றன. லோமோனோஸோவ் நிலவுயர்வுக்கு அருகில் இருக்கும் கிரீன்லாந்து நாட்டை இப்போதைக்கு டென்மார்க் நிர்வகித்து வருகிறது. எனவே, அங்கே தனக்கு உரிமை உண்டு என்று டென்மார்க் ஒரு மனு போட்டிருக்கிறது. தங்களுக்கும் உரிமை உண்டு என்று நார்வே, கனடா போன்ற நாடுகளும் குரலெழுப்பிக்கொண்டிருக்கின்றன! அமெரிக்கா ரொம்பவும் சத்தம் போடாமல் இருப்பதற்கு ஒரு வித்யாசமான காரணம் சொல்கிறார்கள். ரஷ்யா 1999லேயே அந்த ஐ.நா. ஒப்பந்தத்தை நிறைவேற்றி அதில் அதிகாரபூரவமாக பங்கேற்றிருந்தாலும், அமெரிக்கா இதுவரை அந்த ஒப்பந்தத்தை விவாதித்து நிறைவேற்றவே இல்லை! எனவே, நாங்கள் எப்போது அதை நிறைவேற்றுகிறோமோ அதற்கு அப்புறம் எங்களுக்கு இன்னும் பத்து வருடங்கள் மனு போட உரிமை உண்டு. அதனால் தேவையானபோது பார்த்துக்கொள்வோம் என்று இந்த விவாதத்தை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார்கள்!

அமெரிக்காவை பொறுத்தவரை நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளை ஒட்டியுள்ள கடற்பகுதிகளில் எண்ணெய் எடுப்பதற்கு சுற்றுப்புறசூழல் சம்பந்தப்பட்ட தடைகள் உள்ளன. ஆனால் தெற்கே மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் அத்தகைய தடைகள் இல்லை. எனவேதான் முந்தைய அத்தியாயங்களில் பார்த்ததுபோல் லூயிசியானா போன்ற மாநிலங்களில் கடலில் இருந்து எண்ணெய் எடுக்கும் வேலை நிறைய நடக்கிறது. அதற்கும் மேலாக ஃப்ராக்கிங் முறையில் வேறு இன்னும் எண்ணெய்யும் எரிவாயுவும் கிடைத்து வருவதால், எண்ணெய் எடுப்பது மிகவும் கடினமான ஆர்க்டிக் பிரதேசத்தில் போய் தேவை இல்லாமல் மற்ற நாடுகளுடன் ஏன் சண்டையிட்டு சக்தியையும் நேரத்தையும் செலவிடுவது என்று எண்ணுவதும் இந்த சமன்பாட்டின் மற்றொரு பக்கம்!


_______________________________________
நன்றி: சுந்தர் வேதாந்தம் On July 15, 2015

எழுதியவர் : செல்வமணி - இணையம் - சொல்வனம (4-Oct-15, 1:27 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 99

மேலே