எண்ணெய்யும் தண்ணீரும் 11 எரிவாயு பிரச்சினைகள்

பத்து வருடங்களுக்கு முன் வேலை நிமித்தமாக நானும் ஒரு பிரிட்டிஷ் சக ஊழியரும் டென்மார்கில் உள்ள ஒரு சின்ன ஊரில் சில நாட்கள் கேம்ப் அடித்திருந்தோம். ஓரிரவு ஏதோ ஒரு ரெஸ்டாரண்டில் உணவருந்தியபடி பேசிக்கொண்டிருந்த போது பேச்சு எங்கெங்கோ போய்விட்டு எண்ணெய் எரிவாயு பக்கம் திரும்பியது. வடகடலில் (North Sea) எதிர்பார்த்ததை விட அதிர்ஷ்டவசமாக நிறைய எரிவாயு கிடைத்தபோது, அதை சாமர்த்தியமாக உபயோகித்துக்கொள்ள தெரியாமல் பிரிட்டிஷ் அரசு இஷ்டத்திற்கு அதை எடுத்து விரயம் செய்து ஒழித்து விட்டது என்று அவர் திட்டித்தீர்த்தார். கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 20 டாலரில் இருந்து 60 டாலராக முந்தைய நான்கு வருடங்களில் உயர்ந்திருந்ததால் எரிவாயு வழியாக கைக்கு கிடைத்த ஒரு புதையலை பிரிட்டிஷ் அரசாங்கம் சரியாக பயன்படுத்தாமல் போனது அவரது எரிச்சலுக்கு காரணம். அதற்கப்புறம் அடுத்த சில வருடங்களில் எண்ணெய் விலை பீப்பாய்க்கு 140 டாலரை தாண்டியபோது அவருடைய கருத்து இன்னும் பல மடங்கு முக்கியத்துவம் பெற்ற ஒரு தீர்க்கதரிசனம் என்றே தோன்றியது!

கடந்த பத்துபதினைந்து ஆண்டுகளாக உலகில் எரிவாயுவை எக்கச்சக்கமாக எடுத்து ஏற்றுமதி செய்துகொண்டு இருக்கும் நாடு ரஷ்யாதான். சில அத்யாயங்களுக்கு முன், அளவிடப்பட்ட எண்ணெய் வளம் ஒவ்வொரு நாட்டிலும் எவ்வளவு இருக்கிறது என்று பார்க்கும்போது, அந்த தரவரிசையில் முதலிடத்தில் இருப்பது வெனிசுயேலா என்று பார்த்தோம் இல்லையா? அதே போல் அளவிடப்பட்ட எரிவாயு வளம் பற்றிய தரவரிசையை எடுத்து பார்த்தால், முதலிடத்தில் நிற்பது ரஷ்யா, அதற்கு அடுத்த இடங்களில் ஈரான், கத்தார், அமெரிக்கா. அதற்கப்புறம்தான் சவூதிஅரேபியா, UAE முதலியவை.

எந்த ஒரு நாடும் தன்னிடம் இருக்கும் திறன்களையும் வளங்களையும் உபயோகித்து முன்னேற முயல்வது மிகவும் பாராட்டப்படவேண்டிய விஷயம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த வளத்தையே ஒரு துருப்பு சீட்டாக பயன்படுத்தி மற்ற நாடுகளை இக்கட்டில் மாட்டிவிட முயன்றால் உலகம் முகம் சுளிக்க ஆரம்பித்துவிடுகிறது. சென்ற அத்யாயத்தில் நாம் பார்த்தது போல், ரஷ்ய அதிபர் பூட்டின் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் ரஷ்யாவின் பிடியை நிலை நிறுத்த முயன்று வருவதின் ஒரு பகுதியாக ரஷ்யாவில் கிடைக்கும் எரிவாயுவை ஒரு ஆயுதமாகவே உபயோகித்து வருகிறார். இந்த உத்தியின் படி கடந்த பத்தாண்டுகளில் பலமுறை தனது அண்டை நாடான உக்ரைனின் கழுத்தை நெரிக்க ரஷ்யாவில் இருந்து உக்ரைனுக்கு போகும் எரிவாயுவை அடைத்து நிறுத்தி இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் சோவியத்யூனியன் காலத்தில் அதன் ஒரு பகுதியாக இருந்த உக்ரைன் 90களில் தனிநாடாகி மேற்கு ஐரோப்பிய நாடுகளின் பக்கம் சாய்ந்தது ரஷ்யாவிற்கு பிடிக்காமல் போனதுதான். குளிர் பிய்த்தெடுக்கும் உக்ரைனில் வீடுகளை சூடுபடுத்துவதில் இருந்து தொழிற்சாலைகளை ஓட்டுவது வரை எல்லாவற்றிக்கும் எரிவாயு அவசியம். எனவே ரஷ்யா அந்த குழாய்களை மூடினால் உக்ரைன் தடுமாற ஆரம்பிக்கும்.

இந்த எரிவாயு தடுப்புகளுக்கு வெவ்வேறு வருடங்களில் வெவ்வேறு வர்ணங்கள் பூசப்படுவதும் உண்டு. உதாரணமாக, உக்ரைனுக்குள் இருக்கும் ஒரு பகுதியில் ரஷ்யாவை ஆதரிக்கும் ஒரு பிரிவினர் இருப்பார்கள். அந்த பகுதிக்கு உக்ரைன் சரியாக எரிவாயுவை வழங்காததால், தாங்களே நேரே புகுந்து எரிவாயுவை வழங்கிவிட்டு, ரஷ்யா பில்லை உக்ரைனுக்கு அனுப்பி வைக்கும். அந்த பகுதிகளில் தங்களால் நுழையக்கூட முடியாததால், தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத பகுதிக்கு ரஷ்யா நேரடியாக வழங்கிய எரிவாயுவுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று உக்ரைன் கோஷம் போடும். உக்ரைன் சரியாக எரிவாயு பில்லை கட்டி ரசீது பெற்றுக்கொள்ளாததால் நாங்கள் சப்ளையை தூண்டிப்பது அவசியமாகிறது என்று ரஷ்யா திரும்ப பதிலடி கொடுக்கும். உக்ரைன் வேறு எங்கிருந்தாவது வாயுவை வாங்கிக்கொள்ள வேண்டியதுதானே என்று யோசிக்கும்போதுதான் பழைய சோவியத்யூனியன் காலத்து உடன்பாடுகளின்படி உக்ரைன் தள்ளுபடி விலையில் ரஷ்யாவிடம் இருந்து எரிவாயுவை பெற்று வருவது தெரியவரும்!

இதற்கு மேலாக, எரிவாயு உற்பத்தி செய்து விநியோகிப்பதென்னவோ ரஷ்ய அரசாங்கத்தின் நிறுவனமான காஸ்ப்ரோம்தான் (Gazprom) என்றாலும், சில உடன்பாடுகளின்படி வாயு உக்ரைன் வழியாக ஹங்கேரியை சென்றடையும்போது, ஹங்கேரியின் எரிவாயு சப்ளையர் உக்ரைனின் அரசாங்க நிறுவனமான நாஃப்டோகாஸ் (Naftogaz) ஆக மாறிவிடுகிறது. எனவே காஸ்ப்ரோம் நிறுவனம் எரிவாயு சப்ளையை நிறுத்தினால் கெடுவது என்னவோ நாஃப்டோகாஸ் நிறுவனத்தின் பெயர்தான். இது மாதிரி நிறைய குழப்பங்கள் இந்த உலகில் உண்டு! எண்ணெய்யும் தண்ணீருமாய் ஒருவருக்கொருவர் பிடிக்காமல், ஆனால் புவியியல், அரசியல், தொழில்நுட்ப காரணங்களால் இணைந்து இயங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நாடுகள் அல்லது சமூக அமைப்புகளுக்கு ரஷ்யா/உக்ரைன் ஜோடி ஒரு நல்ல உதாரணம்!

ரஷ்யாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயுவை எடுத்துச்செல்லும் குழாய் வழியமைப்புகளை காட்டும் இந்த வரைபடத்தை பார்த்தால் இந்த வர்த்தகத்தின் மூலம் ரஷ்யாவினால் உலகின் பல நாடுகளை தடுமாற வைக்க முடியும் என்பது புரியும். உதாரணமாக வரைபடத்தின் இடதுபுறம் சாம்பல் நிறத்தில் காட்டப்பட்டிருக்கும் பல ஐரோப்பிய யூனியனை சேர்ந்த நாடுகள் தங்கள் எரிவாயு தேவைகளில் மூன்றில் ஒரு பங்கை ரஷ்யாவிடம் இருந்து மட்டும் வாங்கி பூர்த்தி செய்து கொள்கின்றன. அதில் பாதிக்கு மேல் உக்ரைன் வழியே போகும் குழாய்கள் மூலம்தான் டெலிவரி செய்யப்படுகிறது. எனவே 2009இல் ரஷ்யா குழாய்களை மூடியபோது க்ரோயேஷியா, பல்கேரியா, துருக்கி, மாசடோனியா, கிரீஸ், ரோமானியா ஆகிய ஆறு நாடுகளும் ஸ்தம்பித்தன! இந்த மாதிரியான வளர்ந்து வரும் நாடுகள் மட்டும் இன்றி நன்கு வளர்ந்த ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற தொழில் மயமான நாடுகளும் கூட நேராகவோ மறைமுகமாகவோ ரஷ்ய எரிவாயுவை தங்கள் தேவைகளுக்காக நம்ப வேண்டி இருக்கிறது.

ஒரு விதத்தில் பார்த்தால் இந்த எரிவாயு ஆயுதம் இருபுறமும் கூர்மையான வாள்தான் (Double Edged Sword). ரஷ்யா ரொம்பவும் இந்த வாளை சுழற்றினால், அதன் வருவாய் குறைந்துபோய் அதன் பொருளாதாரமும் சீர்குலையும். எனவே தனக்கு நிறைய பணம் கொடுக்கும் வாடிக்கையாளர்களான ஐரோப்பிய நாடுகளை ரஷ்யா பகைத்துக்கொள்ள விரும்பாது என்றாலும், அவ்வப்போது பழைய சோவியத்யூனியனை சேர்ந்த நாடுகளை தன் வழிக்கு கொண்டுவர ரஷ்யா எரிவாயுவை திறந்து மூடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறது. இந்த பிராந்திய சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாமல் தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வது எப்படி என்று ஐரோப்பிய நாடுகள் சதா யோசனை செய்து கொண்டிருக்கின்றன. தகராறு ஏதுமற்ற பிராந்தியங்கள் அல்லது கடல் வழிகள் மூலம் எரிவாயுவை கொண்டு செல்ல பாதைகள் அமைப்பது இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு. ஆனால் இன்னொரு புறத்திலிருந்து சுற்றுப்புற சூழல் சுகாதாரம் பற்றி குரலெழுப்பும் பல அமைப்புகள் ரஷ்யா அமைக்கவிருக்கும் புதிய கடல்வழி குழாய் அமைப்புகளை எதிர்க்கின்றன. உதாரணமாக உக்ரைனை தவிர்த்துவிட்டு கருங்கடல் (Black Sea) வழியே நேராக மத்திய ஐரோப்பிய நாடுகளை சென்றடையும்படி ரஷ்யா அமைக்க விரும்பிய சௌத் ஸ்ட்ரீம் (South Stream) என்ற 40 பில்லியன் டாலர் ஆழ்கடல் எரிவாயு குழாய் திட்டத்தை போன டிசம்பரில் பூட்டின் திடீரென்று கேன்ஸல் செய்து விட்டார்.

இந்த மாதிரியான கேன்ஸல்கள் ஆங்காங்கே உலகெங்கிலும் நடப்பதுதான். கனடாவில் இருந்து அமெரிக்கா வழியே செல்லும் கீஸ்டோன் (Keystone) என்ற குழாய் அமைப்பு பல வருடங்களாக இயங்கி வருகிறது. மூன்று வருடங்களுக்கு முன்பு இந்த அமைப்பை இன்னும் நீழ்படுத்தும் கீஸ்டோன் எக்ஸ்‌எல் (Keystone XL) என்ற திட்டம் நிறைய வேலை வாய்ப்புகளை கொண்டு வரும், வட அமெரிக்காவின் எண்ணெய்/எரிவாயு சுதந்திரத்திற்கு இன்னும் வழி கோலும் என்று பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இறுதியில் ஒபாமாவின் ஆதரவு இல்லாமல் போகவே, சுற்றுபுற சூழல் பற்றிய கவலைகளால் கிடப்பில் போடப்பட்டு இன்றுவரை பல்வேறு இழுபரிகளில் மாட்டிக்கொண்டிருக்கிறது. ஏன் எரிவாயு உலகில் இப்படி பல தடங்கல்கள்?

எரிவாயு ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லப்படுவதற்கு இந்த மாதிரி குழாய்களை உபயோகிப்பது ஒரு முறை. இல்லாவிட்டால் அதை ஏகத்திற்கு குளிர்வித்து, 1:600 அளவுக்கு அதன் கன அளவை (Volume) குறைத்து, Liquified Natural Gas (LNG) எனப்படும் திரவமாக்கி, -160 டிகிரி செல்சியஸ் குளிர் பதனத்தில் படத்தில் உள்ளது போன்ற பெரிய கப்பல்களில் ஏற்றி அனுப்புவது இன்னொரு முறை.

ஃப்ராகிங் வழியே அமெரிக்காவில் நிறைய எரிவாயு கிடைத்தால் அதை கப்பல்களில் அனுப்பச்சொல்லி வாங்கி கொள்ள வேண்டியதுதானே என்று யோசிக்கும் போதுதான் உலக அளவில் எண்ணெய் சந்தையும் எரிவாயு சந்தையும் ஒன்றிலிருந்து ஒன்று மிகவும் வேறு பட்டவை என்பது தெரியவரும்! அப்படி இரண்டிற்கும் என்னென்ன வித்யாசங்கள்?

கச்சா எண்ணெய் வாங்கி விற்கும் உலக சந்தை சுமார் 150 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகிறது. எரிவாயு சந்தை துவங்கி நாற்பது, ஐம்பது வருடங்கள்தான் ஆகிறது. எனவே எண்ணெய் சந்தையின் முதிர்ச்சி/அனுபவம் எரிவாயு சந்தைக்கு கிடையாது.

கச்சா எண்ணெய் எடுக்கும்/விற்கும் நாடுகளும் நிறுவனங்களும் நூற்றுக்கணக்கில் உண்டு. உலகில் உள்ள அத்தனை நாடுகளிலும் எண்ணெய் உபயோகம் உண்டு என்பதால் அது சம்பந்தப்பட்ட வியாபாரமும் உண்டு. ஆனால் எரிவாயு எடுத்து விற்கும்/வாங்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்களின் எண்ணிக்கை ஓரிரு டஜன்கள் மட்டுமே என்று சொல்லலாம்.

இது வரைக்கும் எண்ணெய்க்கு இருப்பது போல் எரிவாயுவுக்கு தெளிவான வரையறை (definition), விவரக்குறிப்புகள் (Specifications, benchmarks) சார்ந்த விலை அமைக்கும் வழக்கம் நடைமுறைக்கு வரவில்லை. கச்சா எண்ணெய்யின் விலை என்பது உலகம் முழுதும் எந்த ஒரு சமயத்திலும் ஒரே ஒரு எண்ணாக இருக்கும் (அதாவது, இன்றைய விலை பீப்பாய் 60 டாலர் என்பது போன்ற நிலவரம்). அந்த ஒரு எண்ணில் இருந்து எண்ணெய்யின் தரத்திற்கு ஏற்றவாறு (West Texas Sweet Crude, Brent Composition) உலகெங்கிலும் விலை அமைந்துவிடும். மணிக்கு மணி இந்த விலை மாறலாம். ஆனாலும் உலகம் முழுதும் அதே விலைதான். எரிவாயு விலை இதற்கு நேர் மாறாக, வாங்கும்/விற்கும் அமைப்புகளுக்கு இடையே பேரம் பேசி பல வருடங்களுக்கு நீளும் ஒப்பந்தங்களில் மாறாத ஒரு எண்ணாக நியமிக்கப்படுகிறது. எரிவாயு ஒப்பந்தங்கள் பத்து முதல் இருபது வருடங்களுக்கு நீளுவது சகஜம்.

ஒரு நாளைக்கு சுமார் 400 கோடி டாலர்கள் பெருமானமான எண்ணெய் வியாபாரமாகிறது. எரிவாயு வியாபார சந்தை அதோடு ஒப்பிட்டால் அரைக்கால் (1/8) சைஸ்தான். எண்ணெய் பொருட்சந்தைகளில் (Commodity Market) நிறைய வெளிப்படையாக வாங்கி விற்கப்பட்டாலும், எரிவாயு என்னவோ தனித்தனி நாடு/நிறுவனங்களால் சத்தமில்லாமல் ரகசியமாய் வாங்கி விற்கப்படுகிறது. எனவே எண்ணெய் போன்ற உலகளாவிய சந்தையாய் இல்லாமல் எரிவாயு பிராந்திய சந்தையாய் மட்டுமே இதுவரை இருந்து வருகிறது.

எண்ணெய் பொதுவாக போக்குவரத்து இயக்கங்களுக்காக உபயோகப்படுத்த படுகிறது. எரிவாயு பெரும்பாலும் மின்சாரம் தயாரித்தல், வீடு, அலுவலகங்கள், தொழிற்சாலைகள் முதலியவற்றை குளிர் காலத்தில் சூடு படுத்துதல் போன்ற தேவைகளுக்கு பயன்படுகிறது. போக்குவரத்து தேவைகள் போல் இல்லாது மின்சார தயாரிப்புக்கு சூரிய வெளிச்சம், காற்று, அனுசக்தியால் இயங்கும் உலைகள் என்று பல மாற்று தொழில்நுட்பங்கள் உண்டு. எனவே எரிவாயுவின் மவுசு மற்ற தொழில் நுட்பங்களுடன் ஒப்பிடும்போது அதன் விலை, எவ்வளவு எளிதில் கிடைக்கிறது என்ற விஷயங்களைப்பொறுத்து நிறைய மாறுபடும்.

குழாய்களை நம்பாமல் கப்பல்களை நிரப்பி ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எரிபொருட்களை கொண்டு செல்லும் முறையை அலசினால், எண்ணெய்யை சுமந்து செல்லும் கப்பல்கள் உலகெங்கிலும் 4000ற்கு மேல் இருக்கலாம். எண்ணெய்யை கப்பலில் அமைக்கப்பட்டிருக்கும் பெரிய தொட்டிகளில் நிரப்பி சாதாரண வெப்ப நிலையில் எடுத்துக்கொண்டு போவது பல காலமாக வழக்கில் இருந்து வரும் முறை. இத்தகைய கப்பல்களின் விலை சுமார் பத்து கோடி டாலர்கள் இருக்கும். எரிவாயுவை திரவமாக்கி, குறைந்த வெப்பநிலையில் கப்பல்களில் எடுத்துச்செல்வது இன்னும் தலைவலி பிடித்த வேலை. இத்தகைய கப்பல் ஒன்று இருபைத்தைந்து கோடி டாலர்கள் பெரும். எனவே உலகெங்கிலும் தேடினாலும் LNG எடுத்துச்செல்லும் கப்பல்கள் ஒரு நானூறு தேறினால் அதிகம் என்கிறார்கள்!

இப்படி வந்து சேரும் எரிவாயுவை வாங்கிக்கொள்ள குளிர்பதனம் செய்யப்பட்ட, அழுத்தத்தை தாங்கக்கூடிய தொழில்நுட்பங்கள் கொண்ட சீல் செய்யபட்ட கிடங்குகள் தேவை. எண்ணெய்யைப்போல் சாதாரணமாக ஒரு தொட்டியில் கொட்டி வைத்து விட முடியாது.

எண்ணெய்யை உற்பத்தி செய்யும் இடத்தில் இருந்து பயன்படுத்தப்படும் இடத்திற்கு கொண்டுசெல்வதற்கான செலவு அதன் இறுதி விலையில் வெறும் ஓரிரு சதவீதம்தான். ஆனால் மேற்சொன்ன காரணங்களால், எரிவாயுவின் விலையில் போக்குவரத்து செலவு 25 சதவீதத்தை தொட்டு விடுகிறது. எண்ணெய்யைப்போல் இல்லாமல் எரிவாயு எல்லா இடங்களிலும் உபயோகப்படுவதில்லை என்பதால், அது இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டி இருப்பது இதற்கு ஒரு காரணம். உதாரணமாக, அலாஸ்காவில் எடுக்கப்படும் எண்ணெய்யை குழாய்கள் வழியாக 800 மைல் தூரம் எடுத்துச்சென்று வால்டீஸ் என்ற துறைமுகத்தை அடைந்து அங்கே வந்து சேரும் கப்பல்களில் அதை நிரப்பி, இன்னும் தெற்கே பயணித்து கலிஃபோர்னியாவில் உள்ள ஒரு துரப்பன தொழிற்சாலைக்கு எடுத்துச்சென்று பெட்ரோலாக மாற்றும்போது, இந்த போக்குவரத்து செலவு பீப்பாய்க்கு பத்து டாலர் கூட ஆவதில்லை. ஆனால் அதே இடத்தில் இருந்து எடுக்கப்படும் எரிவாயு முதலில் திரவமாக மாற்றப்பட்டு பின்னால் மைனஸ் 160 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர்விக்கப்பட்ட கப்பல் தொட்டிகளில் நிரப்பப்பட்டு அது உபயோகப்படுத்தப்படும் இடமான ஜப்பானுக்கு எடுத்துச்செல்லப்படும் போது இந்த செலவுகள் எரிபொருளின் அடக்க விலையில் பாதிக்கு மேலாகிவிடுகிறது!

மொத்தத்தில் இரண்டும் எரிபொருட்கள் என்றாலும், அருகே சென்று பார்த்தால், பல குணாதிசயங்களில் இரண்டும் மிகவும் வேறுபடுவது விளங்கும். இருந்தாலும் உலகில் பல இடங்களில் எரிவாயு இருப்பதும், ஃப்ராகிங் போன்ற தொழில்நுட்பங்களால் அவற்றை வெளிக்கொணர்வது சாத்தியம் ஆகிக்கொண்டிருப்பதாலும், முடிந்தவரை மேலே சொல்லப்பட்ட காரணங்களை சமப்படுத்தி எரிவாயு உபயோகத்தை அதிகரிக்கும் முயற்சிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. அடுத்த வரைபடம் இப்போது உலகில் எந்தெந்த இடங்களில் இருந்து எந்தெந்த இடங்களுக்கு குழாய் வழியாகவும் (சிவப்பு நிற கோடுகள்), LNG என்கிற திரவ வடிவிலும் (நீல நிறக்கோடுகள்) எரிவாயு அனுப்பப்படுகிறது என்று காட்டுகிறது. ஒரு இருபத்தைந்து வருடங்களுக்கு முன் இருந்த நிலையை வரைந்தால் வரைபடத்தில் இரண்டு மூன்று கோடுகள்தான் தேரும்! எனவே நாளுக்கு நாள் இந்த தொழில்நுட்பம் நிச்சயம் முன்னேறி வருகிறது.

போன மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாய், அமெரிக்காவின் மின்சாரத்தாயாரிப்பில் எரிவாயுவின் உபயோகம் நிலக்கரியின் உபயோகத்தை மிஞ்சி ஒரு குட்டி சாதனை படைத்திருக்கிறது. உலகில் ஏறத்தாழ இருநூறு நாடுகள் இருந்தாலும் ஊடகங்கள் ஏன் அமெரிக்காவை பற்றி மட்டும் நிறைய பேசுகின்றன என்பது பல விதமான புள்ளி விவரங்களை பார்க்கும் போது உடனே புரியும். உதாரணமாக உலகின் மொத்த பொருளாதாரத்தையும் எடுத்துக்கொண்டால், அதில் சுமார் இருபது சதவீதம் அமெரிக்காவினுடையது மட்டும்! எளிதாக ஞாபகம் வைத்துக்கொள்ள, ஆசிய நாடுகள் இன்னொரு 30 சதவீதமும், ஐரோப்பிய நாடுகள் இன்னொரு 30 சதவீதமும், உலகின் மற்ற பகுதிகள் அனைத்தும் சேர்ந்து இன்னொரு இருபது சதவீதமும் பங்களிப்பதாக கொள்ளலாம். உலகின் அத்தனை நாடுகளையும் தரவரிசைப்படுத்தி பார்த்தால், அடியில் உள்ள சுமார் 160 நாடுகளின் பொருளாதார பங்களிப்பு அமெரிக்கா என்ற ஒரு நாட்டின் பங்குக்கு ஈடாக இருப்பதை பார்க்கலாம்.

அதே போல் உலக மக்கள் தொகையில் அமெரிக்காவின் பங்கு வெறும் ஐந்து சதவீதம் கூட கிடையாது. ஆனால் அதன் ஆற்றல் உபயோகிப்பு (Energy Utilization) உலகின் மொத்த உபயோகிப்புடன் ஒப்பிட்டால் 25%! இப்படி பல விதங்களில் அந்த ஒரு நாடு மட்டும் உலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதால், அமெரிக்கா தன் மின்சார தயாரிப்புக்கு பெரும்பாலும் எண்ணெய்/நிலக்கரியை நம்புவதை நிறுத்தி சுற்றுப்புற சூழலுக்கு உகந்ததான எரிவாயுவை உபயோகிக்க ஆரம்பித்தால் அது உலகிற்கே நல்லதுதான்!

______________________________________
நன்றி: சுந்தர் வேதாந்தம் On July 31, 2015

எழுதியவர் : செல்வமணி - இணையம் - குப்புச (4-Oct-15, 1:35 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 92

மேலே