காந்தி கொலை வழக்கு

’விநாயக்ஜி, வாழ்த்துகள்’ உள் அறையிலிருந்து யாரோ ஓடி வந்து அவர் கையைப் பிடித்துக் குலுக்கினார்கள், ‘உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது’

’ஆண் குழந்தையா?’ விநாயக் கோட்ஸே அதிர்ந்துபோய் நின்றார், ‘கடவுளே!’

***

‘விநாயக், உன் குடும்பத்தில் பிறக்கிற ஆண் குழந்தைகள்மீது ஒரு சாபம் இருக்கிறது, அதனால்தான் அடுத்தடுத்து உன் மகன்கள் எல்லோரும் இறந்துபோயிருக்கிறார்கள்’

‘இப்போது நான் என்ன செய்யவேண்டும் ஸ்வாமிஜி?’

‘விதியை நம்மால் ஜெயிக்கமுடியாது. ஆனால், கொஞ்சம் தந்திரம் செய்து ஏமாற்றலாம்’

‘அப்படியென்றால்?’

‘அடுத்து பிறக்கிற உன் மகனை, ஒரு பெண்போல வளர்க்கவேண்டும், அதன்மூலம் உங்கள் குடும்பத்தின்மீது இருக்கிற சாபம் நீங்கும்’

***

சின்ன வயதிலிருந்தே, நாதுராம் சராசரியான ஒரு பையனாகதான் வளர்ந்தான். படிப்பு, விளையாட்டு என எதிலும் அவனுக்குப் பெரிதாக ஆர்வம் இல்லை.

ஆனால், அவனிடம் ஒரு மிக விசேஷமான சக்தி இருந்தது. அல்லது, அப்படி அவனுடைய குடும்பத்தினர் நம்பினார்கள்.

நாதுராம்மீது தங்களுடைய குலதெய்வம் இறங்கி வந்து குறி சொல்வதாகக் கோட்ஸே குடும்பம் நினைத்தது. நடந்தவை, இனி நடக்கப்போகிறவை என எல்லாவற்றையும் விளக்கிச் சொல்கிற ஆற்றல் அவனுக்கு உண்டு என்பது அவர்களுடைய நம்பிக்கை.

வேடிக்கை என்னவென்றால், இந்த விஷயமெல்லாம் நாதுராம்க்குச் சுத்தமாகத் தெரியாது. அவன்பாட்டுக்குப் பேஸ்த் அடித்தாற்போல் ஒரு மூலையைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருப்பான். திடீரென்று அவனுடைய கண்கள் தியானத்தில் விழுந்ததுபோல் சுருங்கும், சட்டென்று குலதெய்வத்தின் குரலில் பேசத் தொடங்கிவிடுவான், அதுவரை அவன் எப்போதும் கேட்டிருக்காத சமஸ்கிருத ஸ்லோகங்களைத் துல்லியமான உச்சரிப்பில் மடை திறந்ததுபோல் பொழிவான், மற்றவர்கள் பயபக்தியோடு கை கட்டி, வாய் பொத்திக் கேட்கிற கேள்விகள், சந்தேகங்களுக்கெல்லாம் கணீரென்ற தொனியில் பதில் சொல்லுவான்.

கொஞ்ச நேரம் கழித்து, குலதெய்வம் மலையேறிவிடும். நாதுராம் பழையபடி திருதிருவென்று விழித்துக்கொண்டு, ‘இங்கே என்ன நடந்தது? நான் எங்கே இருக்கேன்?’ என்று அப்பாவியாக விசாரிப்பான்.

***

சாவர்க்கர் ரத்னகிரிக்கு வந்து சுமார் ஆறு வருடம் கழித்து கோட்ஸே குடும்பம் அங்கே குடியேறியது.

அப்போது விநாயக் கோட்ஸே ஓய்வு பெறும் வயது நெருங்கிக்கொண்டிருந்தது. ஆனால் அவருடைய மூத்த மகன் நாதுராம் கோட்ஸே இன்னும் சொந்தக் காலில் நிற்கமுடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தான்.

நாதுராம்க்குப் படிப்பு வரவில்லை. மெட்ரிகுலேஷன் பாஸ் செய்யமுடியவில்லை. ’சரி, போகட்டும்’ என்று விட்டுத் தொலைத்துவிட்டு வேறு வேலைகளைப் பார்க்கலாம் என்றால் அதுவும் சரிப்படவில்லை.

ஆரம்பத்தில் நாதுராம் தச்சுவேலை கற்றுக்கொண்டான். அது சரிப்படாமல் பழ வியாபாரம், கப்பல் துறைமுகத்தில் எடுபிடி வேலைகள், டயர் ரீட்ரேடிங், தச்சு வேலை என்று ஏதேதோ முயற்சி செய்து பார்த்தான். கார் ஓட்டினான். ஏதோ காரணத்தால் அவனுக்கு எந்தத் தொழிலும் ஒத்துவரவில்லை.

அப்போது அவர்கள் வசித்துவந்த ஊருக்குச் சில அமெரிக்கப் பாதிரியார்கள் வந்திருந்தார்கள். இவர்கள் அந்த ஊர் இளைஞர்களுக்குத் தையல் பயிற்சி தருவதாக அறிவித்தார்கள்.

எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று சுற்றிக்கொண்டிருந்த நாதுராம் அந்த வகுப்பிலும் சேர்ந்தான். ஓரளவு நன்றாகவே தைக்கக் கற்றுக்கொண்டான். ஒரு கடை வைத்தான். அடுத்த சில வருடங்களுக்கு அந்தக் கடைதான் அவனுக்குக் கொஞ்சமாவது சோறு போட்டுக்கொண்டிருந்தது.

***

அப்போதுதான் நாதுராமுக்கு ஒரு விஷயம் புரிந்தது. ’வேறெதையும்விட ஹிந்து மகாசபா பணிகளில் ஈடுபடுவதும் ஹிந்து மக்களுக்காக உழைப்பதும்தான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இனி என் எதிர்காலம் அரசியலில்தான்!’

ஆனால் ஒன்று. அரசியலில் சேர்ந்து பெரிய பதவியில் உட்காரவேண்டும், புகழ், பணம் சம்பாதிக்கவேண்டும் என்கிற ஆர்வமெல்லாம் நாதுராம்க்கு இல்லை. இந்து ராஜ்யம் அமையப் பாடுபடுகிறோம் என்கிற உணர்வுதான் அவனைச் செலுத்திக்கொண்டிருந்தது.

அரசியலில் ஈடுபடுவது என்று ஆனபிறகு சங்க்லிமாதிரி சின்ன ஊரில் உட்கார்ந்துகொண்டிருந்தால் நாதுராமின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிடும். ஆகவே பம்பாய் அருகில் உள்ள பூனாவுக்குக் குடிபெயரத் தீர்மானித்தான் அவன்.

***

நாதுராம் மிக எளிமையாகதான் உடுத்துவார். அவருடைய அறையில் அநாவசிய ஆடம்பரங்கள் எதையும் பார்க்கமுடியாது. சிகரெட் புகைப்பது, மது அருந்துவது மாதிரியான கெட்ட பழக்கங்கள் கிடையாது. அவரது ஒரே பலவீனம் என்று பார்த்தால், காஃபி! நல்ல காஃபிக்காகப் பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று குடித்துவிட்டுத் திரும்புவதற்குக்கூட அவர் தயாராக இருந்தார்.

இப்படிப் பரிசுத்தமாக வாழ்ந்த நாதுராம் கோட்ஸேவுக்கு நாராயண் ஆப்தே என்கிற அதிஆடம்பரமான, ஆர்ப்பாட்டமான, பெண் வாசனை பட்டாலே கிறங்கி விழக்கூடிய ஒரு சிநேகிதம் கிடைத்தது பெரிய ஆச்சர்யம்தான்!

நாராயண் ஆப்தே பிறந்தது பூனாவில். பிராமணக் குடும்பம். நாதுராமைவிட ஒரு வயது சிறியவர்.

***

இப்படி கோட்ஸே, ஆப்தே குழுவினர் பல்வேறு திட்டங்களை யோசித்து, நிராகரித்து, மறுபடி யோசித்துக்கொண்டிருந்த நேரம். தங்களுடைய கொள்கைப் பிரசாரத்துக்காக ஒரு பத்திரிகை தொடங்குகிற எண்ணம் அவர்களுக்குத் தோன்றியது.

கோட்ஸேவுக்கோ ஆப்தேவுக்கோ அதற்குமுன் பத்திரிகை நடத்திய முன் அனுபவம் இல்லை. ஆனால் காந்திஜி உள்படப் பெரும்பாலான தலைவர்கள் பத்திரிகைகளின்மூலம் தங்களுடைய கருத்துகளை முன்னெடுத்துச் சென்ற காலகட்டம் அது. ஆகவே இந்துக்களின் நிஜமான உரிமைகளையும் அடுத்து செய்யவேண்டியவற்றையும் அவர்களுக்கு எடுத்துச் சொல்வதற்கு ஒரு பத்திரிகை இருந்தால் நல்லது என்று நாதுராம் கோட்ஸே நினைத்தார்.

***

வாசலில் ஒரு கார் வந்து நின்றது. ‘காந்திஜி வந்துவிட்டார்’ என்று யாரோ கத்தினார்கள்.

விழா அமைப்பாளர்கள் அவசரமாக வாசலுக்கு ஓடினார்கள். கூட்டமும் ஆவலாகத் திரும்பிப் பார்த்தது.

அந்த நேரத்தில் எங்கிருந்தோ ‘திம்’மென்ற பெரும் சத்தம். காந்தியடிகளின் கார் அருகே ஒரு நாட்டு வெடிகுண்டு வந்து விழுந்து வெடித்தது.

மறுநிமிடம் அந்த இடத்தைப் புகையும் குழப்பமும் சூழ்ந்துகொண்டது. ‘காந்திஜிக்கு என்னாச்சு?’ என்று மக்கள் அலறினார்கள்.

சிறிது நேரத்தில் புகை அடங்கியது. காந்தி அங்கே இல்லை. விழா அமைப்பாளர்கள் பதறிப்போய்த் தேடினார்கள்.

***

காந்தி தன்னுடைய கொலை முயற்சியை ஒரு பெரிய விஷயமாகக் கருதவில்லை. எதுவுமே நடக்காததுபோல் தன்னுடைய பிரார்த்தனைக் கூட்டங்களைத் தொடர ஆரம்பித்துவிட்டார்.

ஆனால் காந்தியின் தொண்டர்களால் அப்படிச் சாதாரணமாக இருக்கமுடியவில்லை. இன்றைக்கு இல்லாவிட்டாலும் நாளையோ நாளை மறுநாளோ மறுபடி காந்தியின் உயிருக்கு ஆபத்து வரலாம் என்று அவர்களுக்குக் கவலை.

‘பாபுஜி! நீங்கள் தயவுசெய்து போலிஸ் பாதுகாப்புக்கு ஒப்புக்கொள்ளவேண்டும்’ என்று அவர்கள் காந்தியிடம் கெஞ்சினார்கள். ‘பெரிதாக எதுவும் இல்லை. உங்களுடைய பிரார்த்தனைக் கூட்டத்துக்கு யார் யாரோ வருகிறார்கள். அவர்களையெல்லாம் ஒழுங்காகப் பரிசோதனை செய்து உள்ளே அனுமதித்தாலே போதும். எந்த அசம்பாவிதமும் நடக்காமல் பார்த்துக்கொண்டுவிடலாம்.’

’முடியவே முடியாது’ என்று கண்டிப்பாக மறுத்துவிட்டார் காந்தியடிகள். ‘இந்த விஷயத்தில் நீங்கள் என்னை வற்புறுத்தினால் நான் ராத்திரியோடு ராத்திரியாக எங்கேயாவது புறப்பட்டுச் சென்றுவிடுவேன்.’

அப்போதுமட்டுமில்லை. பிறகு எப்போதும் காந்தி தன்னுடைய பிடிவாதத்தைத் தளர்த்திக்கொள்ளவே இல்லை. கடைசிவரை, காந்தியின் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட யாரும் – நாதுராம் கோட்ஸே உள்பட – போலிஸால் பரிசோதிக்கப்பட்டதே கிடையாது.

***

’மிலிட்டரி’ மனிதராகிய ஆப்தே இந்த விஷயத்தில் மிகத் தீவிரமாக இருந்தார். முஸ்லிம் லீக் தலைவர்கள் சேர்ந்து பேசுகிற கூட்டத்தில் குண்டு வைக்கலாம். அவர்கள் தங்குகிற ஹோட்டல் அறைக்குள் ஜன்னாடி வழியே துப்பாக்கியால் சுடலாம். பாகிஸ்தானுக்குச் செல்லும் ரயில்களை வழிமறித்துக் கொள்ளையடிக்கலாம். அந்த ஊர்ப் பாராளுமன்றத்தையே ராக்கெட் வைத்துத் தகர்த்துவிடலாம். இங்கே இந்தியாவுக்குள் இருந்துகொண்டு நமக்குத் துரோகம் செய்யும் முஸ்லிம் ஆட்சியாளர்களுடைய கஜானாவைக் கொள்ளையடிக்கலாம் … இப்படி ஆப்தே இஷ்டம்போல் திட்டங்களை அடுக்கிக்கொண்டே போனார். அவருடைய மற்ற தோழர்கள் வாயைப் பிளந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

இதில் காமெடியான விஷயம் நாராயண் ஆப்தே மிலிட்டரியில் வேலை செய்தாரேதவிர அவருடைய வேலை முழுக்க முழுக்க உள்ளூர் ஆஃபீஸ் கட்டடத்துக்குள்தான். அவர் போர்க்களத்துக்கெல்லாம் சென்றதே கிடையாது. எப்போதாவது போர்வீரர்களுடைய துப்பாக்கிகள், வெடிபொருள்கள், மற்ற ஆயுதங்களைத் தொட்டுப்பார்த்திருப்பாரேதவிர அவற்றை எப்படி இயக்கவேண்டும், எந்த ஆயுதத்தால் என்னமாதிரியான சேதம் உண்டாக்கலாம் என்றெல்லாம் அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.

ஆனால் இந்த விஷயம் கோட்ஸேவுக்கோ மற்ற நண்பர்களுக்கோ தெரியவில்லை. ஆப்தேவின் கதையளப்புகளை உண்மை என நம்பினார்கள். அவர் நினைத்தால் ஒரே வாரத்தில் பாகிஸ்தானைச் சிதைத்துப் பாரதத்தோடு இணைத்துவிடுவார் என்று நினைத்தார்கள்.

நாதுராம் கோட்ஸேவுக்கு இந்தியக் கலாசாரம், ஹிந்து மதம் சார்ந்த புத்தகங்களுக்கு அடுத்தபடியாக மிகவும் பிடித்தவை துப்பறியும் நாவல்கள்தான். ஆகவே அவருக்கும் ஆப்தேயின் கற்பனைத் திட்டங்கள் மிகுந்த பரவசம் தந்திருக்கவேண்டும்.

ஆப்தே வெறுமனே திட்டம் தயாரிப்பதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. அவற்றை நிஜமாக நிறைவேற்றுவதற்காக நிதி திரட்டத் தொடங்கினார்.

நிதியா? இந்தக் காமெடி திட்டங்களை நம்பி யார் காசு தருவார்கள்?

நம்புங்கள். அதற்கும் ஒரு கூட்டம் இருந்தது. பூனாவில், பம்பாயில், இன்னும் பல பகுதிகளில்!

***

இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்து செல்வது உறுதியாகிவிட்ட நேரம். அவர்களுக்கு வெறுமனே நிலப் பரப்பைமட்டும் பங்கிட்டுக் கொடுத்தால் போதாது. ஒன்றுபட்ட இந்தியாவின் அனைத்துச் சொத்துகளையும் இந்த இரு தேசங்களுக்கும் சரியான விகிதத்தில் பிரித்துத் தருவதுதான் நியாயமாக இருக்கும்.

அப்போது இந்திய ரிஸர்வ் வங்கியின் கையிருப்பில் சுமார் நானூறு கோடி ரூபாய்க்குச் சற்றே குறைவான தொகை இருந்தது. இதில் 75 கோடி ரூபாய் பாகிஸ்தானுக்குச் சொந்தமானது என்று தீர்மானிக்கப்பட்டது.

அதாவது பாகிஸ்தான் என்கிற புது தேசம் உருவானதும் அதன் ஆரம்பக் கட்டமைப்புச் செலவுகளுக்காக இந்தியா அவர்களுக்கு எழுபத்தைந்து கோடி ரூபாய் தரவேண்டும். அதன்பிறகு அவர்களுக்குத் தனி கஜானா, தனி ரிஸர்வ் வங்கி, தனி வருவாய், தனிச் செலவினங்கள், எல்லாம் அவர்கள் பாடு.

இதன்படி இந்தியா சுதந்தரம் பெற்றுப் பாகிஸ்தான் என்கிற புது தேசம் தோன்றியவுடன் அவர்களுக்கு முதல் தவணையாக இருபது கோடி ரூபாய் வழங்கப்பட்டுவிட்டது. இந்தத் தொகையைப் பயன்படுத்தி அவர்கள் தங்களுடைய நாட்டின் நிர்மாணப் பணிகளை உடனடியாகத் தொடங்கமுடிந்தது.

ஆனால் அப்போது பாகிஸ்தான் கவனிக்க மறந்த விஷயம், அவர்களுடைய பங்குப் பணமாகிய எழுபத்தைந்து கோடியில் பெரும்பகுதி (55 கோடி ரூபாய்) இன்னும் இந்தியாவின் கையில்தான் இருக்கிறது. அதை எப்போது எத்தனை தவணைகளாகக் கொடுக்கலாம் என்பதை இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவும் மற்ற அமைச்சர்களும் சேர்ந்துதான் முடிவெடுக்கவேண்டும். அதற்குள் இந்த இரு நாடுகளின் எல்லையில் வேறொரு பெரிய பிரச்னை தொடங்கிவிட்டது.

***

பாகிஸ்தானுக்கு இந்தியா தரவேண்டிய பணத்தை நிறுத்திவைத்திருக்கிறது என்கிற தகவலே காந்திக்குத் தெரியாது. அதை அவருக்குச் சொன்னது மவுன்ட்பேட்டன்தான்.

‘இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ மவுன்ட்பேட்டனிடம் கேட்டார் காந்தி.

’இத்தனை நாள்களில் இந்திய அரசாங்கம் செய்த முதல் நேர்மையற்ற செயல் என்று இதைத்தான் சொல்வேன்!’ என்றார் மவுன்ட்பேட்டன்.

காந்தி துடித்துப்போய்விட்டார். இவ்வளவு கஷ்டப்பட்டுச் சுதந்தரம் வாங்கியது நேர்மையற்ற செயல்களைச் செய்வதற்குதானா?

***

1948 ஜனவரி 13ம் தேதி மதியம் 11:55க்குக் காந்தியின் கடைசி உண்ணாவிரதம் தொடங்கியது. அடுத்த சில மணி நேரங்களுக்குள் அவருடைய மருத்துவர்கள் பதற ஆரம்பித்துவிட்டார்கள். ‘பாபுவின் இதயமும் சிறுநீரகமும் ரொம்பப் பலவீனமா இருக்கு. இந்த நிலைமையில அவரோட உடம்பு பசியைத் தாங்காது. உடனடியா நாம ஏதாவது நடவடிக்கை எடுத்தாகணும்!’

நடவடிக்கை? இந்த நேரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கமுடியும்? காந்தி என்ன பல்லி மிட்டாயா கேட்கிறார்? கடைக்குப் போய் வாங்கிக் கொடுத்துச் சமாதானப்படுத்துவதற்கு? இந்து – முஸ்லிம் ஒற்றுமை வேண்டும் என்கிறார். அதுவும் பிரிவினையினால் எல்லாரும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிற இந்த நேரத்தில். நடக்குமா?

***

காந்தி உண்ணாவிரதம் அறிவித்துச் சில மணி நேரங்கள் கழித்து பூனாவில் ‘ஹிந்து ராஷ்ட்ரா’ பத்திரிகை அலுவலகத்தில் இருந்த டெலிப்ரின்டர் உயிர் பெற்றது. ஒரு செய்தியைப் பரபரவென்று அடித்துத் துப்பியது.

கோட்ஸேயும் ஆப்தேயும் அந்தச் செய்தியை எடுத்துப் படித்தார்கள். ‘டெல்லியில் அமைதி திரும்புவதற்காகக் காந்தி உண்ணாவிரதம்.’

அடுத்த சில மணி நேரங்களில் இன்னும் பல செய்திகள் வந்தன. அவை ஒவ்வொன்றும் கோட்ஸே, ஆப்தேயின் ரத்த அழுத்தத்தை எகிறச் செய்தன. காங்கிரஸ்மீது, காந்திமீது அவர்கள் கொண்ட வெறுப்பு இன்னும் தீவிரமாகியிருந்தது.

‘இந்த மனிதர்தான் எல்லாப் பிரச்னைக்கும் காரணம்’ என்றார் நாதுராம் கோட்ஸே. ‘நாம பாகிஸ்தானை அழிக்கறதுக்காக என்னென்னவோ திட்டம் போட்டோமே. அதெல்லாம் வேஸ்ட். இப்போதைக்கு நாம செய்யவேண்டிய ஒரே வேலை, காந்தியைக் கொலை பண்றதுதான்!’

’ஆமாம்’ என்று ஒப்புக்கொண்டார் ஆப்தே. ‘நாம உடனடியா டெல்லி புறப்படணும். காந்தியால இந்தியாவுக்கும் இந்துக்களுக்கும் இன்னும் நிறைய ஆபத்து வர்றதுக்குள்ள நாம அவரை முடிச்சுடணும்.’

ஒரு த்ரில்லர் நாவலின் முதல் அத்தியாயம்போல் படிப்பதற்குப் பரபரவென்று இருக்கிறதில்லையா? அடுத்து என்ன நடக்கும் என்று நெஞ்சு துடிக்கிறதில்லையா?

ஆனால் இது கதையா, நிஜமா? உண்மையிலேயே அந்த ஐம்பத்தைந்து கோடி ரூபாய்க்காகதான் கோட்ஸே கோஷ்டி காந்தியைக் கொல்ல முடிவெடுத்ததா?

***

இதுவரை நீங்கள் படித்தது சென்னை புத்தகக் கண்காட்சியில் கிழக்கு பதிப்பகம் வெளியிடவிருக்கும் எனது ‘மகாத்மா காந்தி கொலை வழக்கு’ புத்தகத்திலிருந்து சில காட்சிகள். இது என்னமாதிரியான புத்தகம் என்று சாம்பிள் காட்டுவதற்காக ட்ரெய்லர்போல் ஆங்காங்கே வெட்டி ஒட்டியிருக்கிறேன். முழுசாகப் புரியாவிட்டால் நான் பொறுப்பில்லை :)

காந்தியின் கொலைக்கான அரசியல் காரணங்களில் தொடங்கி சதித் திட்டம், அதில் ஈடுபட்டவர்களுடைய சுருக்கமான வாழ்க்கை வரலாறு, அவர்களுடைய தனிப்பட்ட உள்நோக்கங்கள், கோட்ஸே கோஷ்டியின் சொதப்பல்கள், அதைவிட ஒரு படி மேலாகப் போலிஸ் சொதப்பல்கள், அவர்கள் முட்டாள்தனமாகத் தவறவிட்ட வாய்ப்புகள் என்று தொடர்ந்து காந்தி கொலை, அதன்பிறகு நிகழ்ந்த காலம் கடந்த துப்பறிதல்கள், நீதிமன்ற விசாரணை, தண்டனை, பின்கதை, கோட்ஸே ஆதரவாளர்களின் வாதங்கள் என்று எந்தப் பக்கச்சார்பும் இல்லாத ஒரு முழுமையான வரலாற்று ஆவணமாக இதைத் தர முயன்றிருக்கிறேன்.

நான் இதுவரை எழுதிய புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்தது ‘சாப்ளின் கதை’. அடுத்து கூகுளின் சரித்திரம். அந்த இரண்டைவிடவும் இந்தப் புத்தகம் மிகுந்த மன நிறைவைத் தந்தது. உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். வாய்ப்புள்ளவர்கள் வாசித்துவிட்டுச் சொல்லவும். நன்றி!

***

என். சொக்கன் …

13 12 2010

எழுதியவர் : செல்வமணி - இணையம் - சொக்கன் (5-Oct-15, 12:06 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 433

மேலே