உள்ளுணர்வில் ஓர் ஊஞ்சல் -Mano Red

அவளை நான்
நன்கு அறிவேன்.

நான் காத்திருக்கும்
இடத்தில்தான்
அவளும் காத்திருப்பாள்
எனக்காக அல்ல
பேருந்திற்காக..

வர்ணிக்க ஒன்றுமிருக்காது,
முழுக்க மூடிய
கருப்பு உடையில்
முகம் மறைத்தவளின்
கண்கள் மட்டும்
காட்டுத்தீயாய் இருக்குமென
அவ்வப்போது உணருவேன்
என் பக்கம் திரும்பும் போதெல்லாம்.

அவளுக்கு பாடல் பிடிக்குமா
எனத் தெரியாது,
மனதுக்குள் முனகினாலும்
சட்டெனத் திரும்புவாள்
தான் ரசித்ததையும் காட்டிக்கொள்ளாமல்..

அவளுக்கு என் முகம் தெரியுமென்பது
அடிக்கடி முகமூடி கிழிக்கும்
எனக்கும் தெரியும்,
அழைப்பது போல
அலைவரிசை காட்டிவிட்டு
தொலைவில் நின்று விலகுவாள்.

அவளின் உள்ளுணர்வு நூலில்
ஊஞ்சல் கட்டி
ஆடத் தெரிந்த எனக்கு,
அவளின் மனதைக் கட்டியிழுக்க
காரணக் கயிறு கிடைக்கவில்லை.

நிறுத்தம் வந்தது
அவளும் இறங்கிச் சென்றுவிட்டாள்,
ஆனாலும்,
அவள் கண்கள்
இன்னும் இறங்கவிடவில்லை
அடுத்த நிறுத்தம் வரை...

எழுதியவர் : மனோ ரெட் (6-Oct-15, 9:21 am)
பார்வை : 348

மேலே