ஒரு விரல் போதுமா

உங்களைப்போலவே, எனக்கும் நிஜ நண்பர்களைவிட டிஜிட்டல் நண்பர்கள்தான் அதிகம். இவர்களில் பெரும்பாலானோரை நான் நேரில் சந்தித்தது கிடையாது. ஆனால் ஈமெயில், சாட், ட்விட்டர், ப்ளாக், இப்போது ஃபேஸ்புக் என்று பலவிதங்களில் தினசரிப் பழக்கம்.

எனது ஆன்லைன் நண்பர்களில் பலர், வெளிநாட்டுவாசிகள். அவர்களோ, அவர்களது நண்பர்கள் (அ) உறவினர்களோ இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் என்னைச் சாட்டிலோ, ஈமெயிலிலோ அழைத்து அன்பாகக் கேட்பார்கள் ‘பாஸ், உங்களுக்கு இங்கிருந்து ஏதாச்சும் வாங்கிட்டு வரணுமா?’

இந்தக் கேள்வி என்னை எப்போதும் திகைப்பில் ஆழ்த்தும். காரணம், வெளிநாட்டிலிருந்து வரும்போது, அல்லது அங்கே செல்லும்போது பெட்டியின் எடை அளவு ரொம்ப முக்கியம். ஒவ்வொரு பொருளையும் எடை போட்டுப் பார்த்து(ஹெஹெஹெ, ரெட்டை அர்த்தம்!)தான் சூட்கேஸில் வைக்கவேண்டியிருக்கும். நூறு கிராம் மிஞ்சிப் போனாலும் ஏகப்பட்ட அபராதம் கட்டவேண்டியிருக்கும். அல்லது, ஏர்போர்ட்டில் வைத்து அம்மாம்பெரிய பெட்டியைத் திறந்து எதையாவது பொறுக்கியெடுத்து (மனசே இல்லாமல்) குப்பைக்கூடையில் வீசவேண்டியிருக்கும்.

இத்தனைச் சிரமங்களுக்கு மத்தியிலும், எனக்காக ஏதோ வாங்கிவர நினைக்கிறார்கள் என்றால், அவர்களது நட்பின் தீரத்தை நினைத்து வியக்காமல் இருக்கமுடியுமா? வாழ்க நீர் எம்மான்!

நிற்க. சமீப காலமாக, இப்படி என்னிடம் ‘ஏதாவது வாங்கி வரணுமா?’ என்று கேட்கிற நண்பர்கள் உடனடியாக ஒரு சிபாரிசும் செய்கிறார்கள். ‘ஜம்முன்னு ஒரு iPad வாங்கிக்கவேண்டியதுதானே?’

ஆப்பிள் ஐபேட் இப்போது இரண்டாம் அவதாரம் எடுத்து இன்னும் ‘ஜம்’மாகி இருக்கிறதாம். அதன் தொடுதிரை தொடங்கிப் பாதுகாப்புக் காந்த மூடிவரை சகலத்தையும் வியந்து போற்றும் இணையப் பதிவுகள் ஏராளம்.

தனிப்பட்டமுறையில் எனக்கு ஸ்டீவ் ஜாப்ஸை ரொம்பப் பிடிக்கும். அவரது வாழ்க்கை வரலாறை எழுதிவிடவேண்டும் என்று ரொம்பக் காலமாக முயற்சி செய்து தோற்றுக்கொண்டிருக்கிறேன். அப்பேர்ப்பட்ட பிரமிப்பூட்டும் கதை அவருடையது.

அதேபோல், ஆப்பிள் தயாரிப்புகளிலும் ஒரு குறை சொல்லிவிடமுடியாது. அந்த வெள்ளைவெளேர் தோற்றத்தில் தொடங்கி, hardware performance, Security, எவரையும் ஈர்க்கும் User Interfaceவரை சகலத்திலும் அவர்களுடைய மேதைமை தெரியும். மற்றவர்கள் அதற்குப் பக்கத்தில்கூட வரமுடியாது.

ட்விட்டரில் என் நண்பர்கள் பலர் ஐபேட் விசுவாசிகள். நேரிலும் பலர் அதன் மகிமைகளைப் பட்டியல் போட்டுச் சிலாகித்திருக்கிறார்கள்.

ஆனால் இத்தனைக்குப்பிறகும், ஐபேட் வாங்கவேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை. காரணம் விலை அல்ல. வேறு பஞ்சாயத்து. ஆர்வமுள்ளோர் இந்தப் பதிவைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.

சரி. ஐபேட் இல்லை. அடுத்து?

ஐபேட்க்கு இணையாக Android தொழில்நுட்பத்தைக் கொண்ட சிலேட்டுக் கணினி(Tablet Computer)கள் பலது கிடைக்கிறதாம். இவற்றின் விலை (ஒப்பீட்டளவில்) ரொம்பக் குறைவு. ஆனால் உத்திரவாதம் ஏதும் கிடையாது.

ஒரே பிரச்னை, சிலேட்டுக் கணினி வாங்கிவைத்துக்கொண்டு நான் என்ன செய்வேன்?

எனக்குத் தொடுதிரையில் மோகம் இல்லை. கேம்ஸ் விளையாடுகிற பழக்கமே இல்லை. சினிமா பார்ப்பதில்லை. இணையம் பார்க்கவும் ஈமெயில் படிக்கவும் பாட்டுக் கேட்கவும் செல்ஃபோன் இருக்கிறது. புத்தகம் படிக்க ஈபுக் ரீடர் இருக்கிறது. இதெல்லாம் போக இன்னொரு Tablet Computer எதற்காக?

இதை ஒரு நண்பரிடம் கேட்டபோது பொங்கி எழுந்துவிட்டார். ‘என்ன சார் இது? டெய்லி எத்தனையோ இடத்துக்குப் போறீங்க, பஸ்ல, க்யூவிலே காத்திருக்கீங்க, அங்கெல்லாம் நேரத்தை வீணடிக்காம டாப்ளட்ல எழுதலாமே!’

’டாப்ளட்ல தமிழ் எழுத வருமா?’

‘ஓ, தாராளமா!’

அடுத்து அதை விசாரித்தேன். ஐபேடில் செல்லினம், ஆண்ட்ராய்டில் தமிழ்விசை என்று இரண்டு சாஃப்ட்வேர்களைச் சொன்னார்கள். அவற்றை நிறுவிக்கொண்டால் இஷ்டப்படி தமிழ் எழுதலாமாம்.

முதன்முறையாக, எனக்கும் டாப்ளட் ஆசை பற்றிக்கொண்டது. லாப்டாப்பில் லொடலொடா என்று தட்டிக்கொண்டிருக்காமல் திரையைத் தொட்டுத் தொட்டுத் தமிழ் வளர்த்தால் என்ன?

போனவாரம், எங்கள் அலுவலகத் தேவைகளுக்காக ஓர் ஆண்ட்ராய்ட் ஃபோன் வாங்கினார்கள். அதிலும் ’தமிழ்விசை’ நன்றாக வேலை செய்யும் என்று கேள்விப்பட்டேன். டாப்ளட் வாங்குவதற்கு முன்னால், இந்த ஃபோனில் கொஞ்சம் முன்னோட்டம் பார்த்தால் என்ன?

ஆஃபீஸ் ஃபோன் சனி, ஞாயிறுகளில் சும்மாதானே இருக்கும்? அதை வீட்டுக்குக் கொத்திவந்தேன். உம்மாச்சி முன்னால் வைத்துக் கன்னத்தில் போட்டுக்கொண்டு எழுத ஆரம்பித்தேன்.

சும்மா சொல்லக்கூடாது, தமிழ்விசை அட்டகாசமாக வேலை செய்தது. ’தொடத்தொட மலர்ந்ததென்ன’ என்று ஒரு பாட்டில் வைரமுத்து எழுதியதுபோல் நான் தொடத்தொட ஃபோன் திரையில் தமிழ் மணந்தது. பலே ஜோர்!

ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினாலும், அரை மணி நேரத்தில் சுமார் மூன்று பக்கங்கள் எழுதி முடித்துவிட்டேன். அந்தக் கட்டுரையை ஒரு பத்திரிகைக்கும் அனுப்பியாகிவிட்டது.

அப்புறமென்ன? ஆண்ட்ராய்ட் டாப்ளட் வாங்கித் தமிழ்விசையை நிறுவவேண்டியதுதானே?

அங்கேதான் ஒரு பெரிய பிரச்னை. இந்தத் தொடுதிரை ஃபோனில் மூன்று பக்கம் எழுதி முடித்தவுடன் என்னுடைய தோள்கள் இரண்டும் பிடித்துக்கொண்டுவிட்டன.

அதாகப்பட்டது, ஃபோனை (அல்லது சிலேட்டுக் கணினியை) ஒரு கையில் இப்படிப் பிடித்தபடி இன்னொரு கையால் தொட்டுத் தொட்டு எழுதுகிறோம் இல்லையா? ஒரு எஸ்.எம்.எஸ்., இரண்டு ட்வீட், ஒரு சின்ன ஈமெயில் என்று எழுதினால் பிரச்னை இல்லை. பக்கம் பக்கமாக நிறைய எழுதினால், இரண்டு தோள்களையும் நெடுநேரம் ஒரேமாதிரி வைக்கவேண்டியிருக்கிறது. வலிக்கிறது.

இன்னொரு பிரச்னை, தொடுதிரையில் தோன்றும் பட்டன்கள் மிகச் சிறியவையாக இருப்பதால் ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்து டைப் செய்யவேண்டியிருக்கிறது. அடிக்கடி தப்பு வருகிறது. இன்னும் பார்வையைக் குவித்தால் கண்ணும் வலிக்கிறது.

ஆக, தொடுதிரைக் கருவிகளில் அப்பப்போ ரெண்டு வரி, நாலு வரி எழுதலாம். ரொம்ப விசுவாசமாக உழைக்கும். என்னைப்போல தினமும் 20 பக்கம் என்றெல்லாம் எழுத முயற்சி செய்தால் கதை கந்தலாகிவிடும்போல!

என்னைப் பொறுத்தவரை, எந்தக் கருவியும் (தமிழில்) எழுத உதவினால்தான் மதிப்பு. ஆகவே, எனக்கு ஐபேடும் வேணாம், ஆண்ட்ராய்டும் வேணாம். லாப்டாப்பும், ஒற்றைக் கையில் பிடித்துத் திரையைப் பார்க்காமலே தமிழ் எழுத முடிகிற Nokia 2730cயும் போதும். சுபம்!

***

என். சொக்கன் …

28 03 2011

எழுதியவர் : செல்வமணி - இணையம் - சொக்கன் (8-Oct-15, 1:14 am)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : oru viral POTHUMA
பார்வை : 288

மேலே