மனைவி என்னும் மந்திரம்

நீண்ட நாட்களின் பின்னர் வீடு திரும்பின கஜனுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. தனது வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. பலவித கேள்விக்குறிகளுடன் அங்கும் இங்கும் பார்த்தவனாய் வீட்டினுள் நுழைந்தான்.

"மாப்பிள்ளை வந்திட்டார்..." உறவினர் ஒருவர் கூறவும் அவரை ஏளனத்துடன் பார்த்துவிட்டு தாயை தேடினான்.

"அம்மா... என்ன நடக்குது இங்க... எதுவுமே எனக்கு புரியல..."

"அட... வந்திட்டியாடா... முதல்ல உடுப்பை மாத்திட்டு கை, கால், முகம் கழுவிட்டு வா ஆறுதலாக கதைக்கலாம்." - தாய் மனோன்மணி

"முதல்ல நான் கேட்டதுக்கு பதிலா சொல்லுங்க..."

"ம்... இன்னும் ஒரு வாரத்தில உனக்கு கல்யாணம். அதான் இப்பவே ரெடி ஆகிட்டு இருக்கோம்..."

ஒரு கணம் பூமி இருண்டு விட்டது போன்று தோன்றியது.

"யாரை கேட்டு இதையெல்லாம் செய்றீங்க..." கத்த தொடங்கவும்...

"ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்...... உள்ளே வா..." என இடை மறித்த மனோன்மணி அறையொன்றினுள் அழைத்து சென்றாள்.

"யாரை கேட்கணும்... பெற்ற தாயுக்கு தெரியாதா பிள்ளைக்கு எப்ப என்ன செய்யணும்னு... இந்த வயதில கலியாணம் பண்ணாம என்ன கிழவன் ஆனபிறகா கட்டுறது...."

"அதுக்கில்லைமா... கட்டபோற என்கிட்ட ஒரு வார்த்தை..." முடிக்க முதல்

"ஒ... நீங்க பெரிய மனுசனாகிட்டீன்களோ... இவ்வளவு காலமும் உனக்கு வேண்டியதை நான் தானே செய்தேன்... எனக்கு எல்லாம் தெரியும்... நீ நல்ல பிள்ளையாய் கலியாண மேடைக்கு வந்தா போதும்... சரியா..."

"இல்லைமா... கட்டிக்க போற எனக்கு பொண்ணை பிடிக்க வேண்டாம்மா..."

"ஏன்... உனக்கு தெரியாதாக்கும்... சின்னன்ல இருந்து உனக்கு தான் என்று சொல்லி தானே இருக்கோம். எண்ட தம்பிண்ட மகள் அபிராமி தான்..."

"நீங்க சொன்னீங்க சரி... எனக்கு பிடிக்க வேண்டாம்மா...?"

"இங்க பாரு... இது என்னோட கௌரவ பிரச்சனை... உங்க அப்பா இறந்த பிறகு இந்த குடும்பத்தை கட்டி காக்குறது உன்னோட மாமா தான். இண்டைக்கு நீ இந்த நிலையில இருக்க என்றால் அதுக்கு காரணம் அவன் தான். அவனுக்காக இது நடந்தே ஆகணும்... அப்பிடி இல்லை என்றால் வந்தனி எனக்கு கொள்ளியை வைச்சிட்டு போ..." கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறினாள் மனோன்மணி.

எல்லாமே கை மீறி போன நிலையில் செய்வது அறியாமல் சிலையாய் நின்றான். மனதுக்குள் குறும்படம் ஓடிட்டு இருந்தது. எதனையும் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. சிறுவயதிலையே தந்தையை இழந்ததினால் தாயாய் தந்தையை தன்னை படிக்க வைச்சு ஆளாக்கி அழகுபார்க்கும் தாயை மீற முடியவில்லை.

திருமணம் நடந்து முடிந்தது. இரண்டு வாரம் கழித்து கஜன் தன் மனைவி அபிராமியை அழைத்துக்கொண்டு கொழும்பு திரும்பினான்.

அதிகாலை பொழுது...

அபிராமி நேரத்துக்கு எழுந்து தன் கடமைகளை முடித்துக்கொண்டு கணவனுக்கு தேநீர் தயாரித்து கொடுத்தாள்.

'டிங் டிங்'

கதவில் அழைப்பு மணி ஒழிக்க அபிராமி சென்று கதைவை திறந்தாள். வெளியே ஒரு அழகு பதுமை நின்றுகொண்டிருந்தாள். அபிராமியை மேலிருந்து கீழ் வரை பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் உள்ளே நுழைந்தாள்.

"யார் நீங்க... யார் வேண்டும் உங்களுக்கு..." ஆச்சரியத்துடன் அபிராமி கேட்டாள்.

"ம்.... உன் புருஷன் தான்..." பதிலை சொல்லிக்கொண்டு நேராக அவர்களின் படுக்கை அறையினுள் சென்றாள்.

"ஹாய்... பிரேமி... எப்பவந்தாய்...?" கஜன் துள்ளலுடன் கேட்டான்.

"ம்.... சொல்லுவண்டா இப்ப உனக்கு..." - நேராக சென்று அவனுக்கு அருகில் கட்டிலில் அமர்ந்தாள் பிரேமி

"பேபி... நான் சொல்லல… அபிராமி... இவள் தான்..." என மனைவியை அறிமுகப்படுத்தினான்.

"அபி... இவள் தான் பிரேமி... என்னோட செக்ரட்டரி... அண்ட்... எல்லாமே..."

"பிரேமி... அவள் கொஞ்சம் நாட்டுப்புறம்... சோ... நீ தான் கொஞ்சம் சமாளிச்சு நடந்துக்கணும்... சரியா..."

"இதை ஏன் என்கிட்ட சொல்லுறாய்... நான் யாருகிட்டயும் சமாளிச்சு கொண்டு போக மாட்டன். முடிஞ்சா அவளுக்கு சொல்லு... என்கிட்ட வாலாட்ட வேண்டாம் என்று..." - கடுப்புடன் கூறினாள் பிரேமி.

"சரி சரி... சீக்கிரம் எழும்பி குளிச்சிட்டு வா... வெளிய போகணும்... நிறைய வேலை இருக்கு..." என கூறவும்

"ஓகே டார்லிங்... பத்து நிமிடத்தில வந்திடுறன்" என்றுவிட்டு குளியலறையினுள் நுழைந்தான்.

சிலை போல பிரம்மிச்சு போயி நின்ற அபிராமியை ஒரு பார்வை பார்த்துவிட்டு அன்றைய தினம் அவன் அணிய வேண்டிய உடுப்புக்களை பிரேமி தேர்வு செய்தாள்.

என்ன நடக்குது என்று புரியாமல் மலைத்து போயி நின்றாள் இன்னும் ஆயிரம் ஆயிரம் கேள்விகள் அவளினுள். காலையிலையே கேட்பது நல்லதல்ல. வேலை முடித்துவிட்டு வரட்டும் கேட்கலாம் என்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள்.

"அபி... பகலைக்கு வரமாட்டன். நீ சாப்பிட்டு இரு. வீட்டை உள்பக்கமாக பூட்டிக்கோ... இரவைக்கு தான் வருவன்..." என்றுவிட்டு கஜன் கிளம்பினான்.

"அதுகூட ஷுவர் இல்லை" என்றவாறு பிரேமியும் கூடவே கிளம்பினாள்.


புதிய இடத்தில் புது வாழ்க்கை ஆரம்பிக்கின்றது என்ற சந்தோசத்தில் காலை எழுந்தவளுக்கு இன்றோடு தன் வாழ்க்கை மொத்தமும் தொலைந்திடுமோ என்ற ஏக்கம் தொற்றிக்கொண்டது. பகல் முழுவதும் சாப்பிடவில்லை. இரவைக்கு என்ன செய்வது என யோசித்தவள் கஜனுக்கு தொடர்பு கொண்டால் அவன் பதில்லளிக்கவில்லை. முன்னபின்ன பழக்கம் இல்லாத இடம். என்ன செய்வது அறியாது யோசித்துக்கொண்டு இருந்தாள்.

இரவு ஒன்பது மணி தாண்டி கஜன் வீடு வந்தான். அவளிடம் ‘சாப்பிட்டியா’ என்று கூட கேட்காமல் நேர அறையினுள் சென்று கட்டிலில் விழுந்தான். பத்து நிமிடங்கள் வரை பார்த்தவள் அவன் அருகே சென்று,

"என்னங்க..."

"ம்...."

"சாப்பிட்டீங்களா..?"

"ம்... வரும் வழியிலயே சாப்பிட்டான். நீ படுத்து நித்திரை கொள்..."

"ம்... சரிங்க..." இரவும் சாப்பாடு இல்லை என்றாகிவிடாது.

"நான் ஒன்று கேட்கலாமா..."

"என்ன கேட்கணும்... "

"காலைல வந்த பொண்ணு யாருங்க...?"

"அதான் காலைலயே சொல்லிட்டன் ல"

"அதுசரிங்க... நான் செய்யவேண்டிய வேலைகளை அவங்க செய்றாங்க... நீங்களும் பார்த்திட்டு இருக்கீங்க... அவங்க எதுக்கு இங்கவரைக்கும் வரணும்..."

"அவளுக்குரிய வேலையை அவள் செய்கிறாள். நீ தான் இடையில வந்தனி..."

"அப்பிடினா... சத்தியமா விளங்கேல்ல எனக்கு..."

"அவள் தான் என்னுடைய உண்மையான மனைவி. ரொம்ப வருசமா ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம். சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்க இருந்த நேரத்தில தான் அம்மாட தொல்லையால உன்னை கட்டிக்க வேண்டியதாய் போயிட்டுது...."

"அப்பிடிஎன்றா.... நான்...? எண்ட வாழ்க்கையை யோசித்து பார்த்தீங்களா...?"

"ஒன்றும் யோசிக்காத... இப்பிடியே இரு. இன்னும் கொஞ்ச மாசத்தில உனக்கும் எனக்கும் பொருத்தம் இல்லை என்று சொல்லி விவாகரத்து தந்துவிடுறன். அதுக்கு பிறகு நீ சுதந்திரமாக உனக்கு பிடிச்ச வாழ்க்கையை வாழலாம்."

"ஐயோ... ஐயோ... ஐயோ... கொஞ்சம் சரி பொறுப்பாக பேசுறீங்களா பாருங்க... என்னை பிடிக்கலை என்றா சொல்லியிருக்கலாம் தானே. இப்ப எண்ட வாழ்க்கையை இப்பிடி நாசமாக்கிடீங்களே... நான் எவ்வளவு கனவுகளோட வந்தன்... அத்தனையும் ஒரே நாளில போட்டுடைச்சிடீங்க... நான் உங்களுக்கு என்ன பாவம் செய்தேன்... ஏன் எனக்கு இந்த தண்டனை. நீங்கள் தான் உலகம் என்று கனவு கண்டிட்டு இருந்த எனக்கு நல்ல பரிசு தந்துடீங்கள்..."

"பளார்" கஜனின் கை அபிராமியின் கன்னத்தை பதம் பார்த்தது.

"என்னடி... வாய் ரொம்ப தான் நீளுதோ... இங்க பார்... உங்க அப்பா எங்களுக்கு உதவி செய்தார் சரி. இல்லை என்று நான் சொல்லல. அதுக்காக உன்னை கல்யாணம் பண்ணி எண்ட வாழ்க்கையை வீணாக்க முடியுமா... ஒரு நாளைக்கு வெளில என்கூட வந்து நான் வாழ்கிற வாழ்க்கையை பாரு. உன்னால கிட்ட கூட நெருங்க முடியாது. விழா அது இதுன்னு எத்தனையோ நடக்கும். பட்டிக்காடு உன்னை கூட்டிட்டு போகவா முடியும்... என்னைப் பற்றி என்ன நினைப்பாங்க... அவள் இங்க வருவாள் போவாள். அதைகேட்கும் உரிமை உனக்கில்லை...."

"......." மெளனமாக அழுதுகொண்டிருந்தாள் அபிராமி.

"இங்க பார்... இதைப் பற்றி வெளியில யார்கிட்டயும் மூச்சுகூட விடக் கூடாது. சரியா... மீறி சொன்ன... உன்னைப்பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி உங்க குடும்பத்தையே சந்தி சிரிக்க வைச்சிடுவன்.... தெரியும் தானே என்னைப் பற்றி..."

தன்னை தானே நொந்துகொண்டே உறங்கிப் போனாள்.

அதிகாலை எழுந்து கஜனுக்கு தேநீரை கொடுத்துவிட்டு காலை உணவு தயாரிக்கும் பணியில் மூழ்கினாள். வழக்கம் போல பிரேமி காலையிலேயே வந்து அவனுக்கான தயார்படுத்தல்களை கவனித்தாள்.

இது தான் வாழ்க்கை என்பதை தெரிந்து கொண்டாலும் ஏதோ ஒருவித நம்பிக்கையில் வாழ முடிவெடுத்தாள்.

நாட்கள் வெகு வேகமாக நகர்ந்து நான்கு மாதங்களும் கடந்துவிட்டது... தீபாவளிக்கு நாட்கள் நெருங்கவும் அபிராமியின் மனதினுள் இனம்புரியா ஆனந்தம் குடிகொண்டிருந்தது. வாழ்க்கையே போனாலும் தலைதீபாவளி இல்லையா... நாட்களை எண்ணிக்கொண்டிருந்தாள் அபிராமி.

ஒருநாள்...
"கஜா..." வீரிட்டு கத்தினாள்.

ஒரு வாகன விபத்தில் சிக்குபட்டவனாக வைத்தியசாலையில் உயிருக்கு போராட்டிடு இருந்தான் கஜன். வைத்தியர்கள் உயிரைக் காப்பாற்றுவதற்கு பிரயத்தனம் செய்துகொண்டிருந்தனர். ஒரு பக்கம் பிரேமியும் மறு பக்கம் உள்ள எல்லா தெய்வங்களையும் வேண்டிக்கொண்டு அபிராமியும் தவித்துக்கொண்டிருந்தனர்.

அதிகளவு இரத்தம் வெளியேறி இருந்ததினால் அவசரமாக இரத்தம் தேவைப்பட்டது. பிறேமியின் இரத்த வகை கஜனுக்கு செலுத்த முடியுமாயிருந்தும் 'மது வகை அருந்தியிருப்பதாக' பொய் கூறி அவள் தர மறுத்துவிட்டாள். அங்கிருந்தோர் அவளை வேறு கண்ணோட்டத்துடன் பார்க்கவும் 'எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. வேறு யாரிடமாவது வாங்குங்கள்' என் கூறிவிட்டு வெளியேறினாள். அபிராமியின் இரத்த வகை பொருத்தமற்றதாக இருந்தது.

நேரம் செல்ல செல்ல அவனின் ஆயுள் காலம் குறைந்து கொண்டிருந்தது. ஒருநாள் முழுமையாக கடந்துவிட்ட நிலையில் திரும்ப பிரேமி வராததினால் என்ன செய்வது, யாரிடம் உதவி பெறுவது என தெரியாது தன்னன் தனியாக நின்றுகொண்டிருந்தாள் அபிராமி.

"மேடம்... உங்களை டாக்டர் வரச் சொன்னார்..." தாதி ஒருவர் கூறி செல்ல,
என்ன ஏதோ என பயந்தவாறு உள்ளே சென்றாள்.

"மேடம்... இரத்தம் தேவை பற்றி வேறு ஒரு ஆஸ்பத்திரி நிர்வாகத்தோட பேசிபார்த்தன். ஒருத்தரிடம் இருக்குதாம். ஆனா...."

"எடுக்க வேண்டியது தானே டாக்டர்... எப்பிடியாவது இவரை காப்பாற்றனும். ப்ளீஸ் டாக்டர்..."

"அதில ஒரு சிக்கல் இருக்குதுமா... அவங்களுக்கு வேறு ஒரு வகை இரத்தம் அவசரமாக தேவைப்படுதாம்..."

"சரி... அதுக்கு..."
"இல்லை மேடம்... அது உங்க இரத்தவகை தான்...." என இழுக்கவும்

"டாக்டர்... உங்களுக்கு எவ்வளவு வேணுமோ எடுத்துக்கொள்ளுங்கள்... எப்பிடியாவது கஜாவை காப்பாற்றனும் டாக்டர்... ப்ளீஸ்...."


ஒருவார கால தீவிர சிகிச்சையின் பின் இயல்புநிலைக்கு திரும்பினான் கஜன்.
ஆனாலும் இந்த காலப் பகுதியில் பிரேமி எட்டிக் கூட பார்க்கவில்லை. இரண்டு வார கால சிகிச்சையின் பின்னரே வீடு திரும்பியிருந்தான் கஜன்.

ரெண்டு நாட்களின் பின்னர் பிரேமி வீட்டுக்கு வந்து சுகம் விசாரித்தாள்.
"எங்க போயிருந்த பிரேமி..."

"எங்கயும் போகல... தினமும் நான் தானே உன்னை பார்த்துக்கிட்டன்... ஏன் அபிராமி சொல்லலையா... அவள் எங்க இதெல்லாம் சொல்ல போறாள்..."

"இரண்டு கிழமைக்கு முதலே கண் முழிச்சிட்டன்... அதான் கேட்டன்..."

"அதில்லடா... கொஞ்சம் வேலை அதிகமா இருந்திச்சு..."

"என்னை விட வேலை முக்கியமா போயிச்சுல... சரி விடு..."
பதிலளிக்க முடியாமல் தடுமாறினாள்.

அபிராமி அவளுக்கு தேநீர் கொண்டுவந்து கொடுத்தாள்.

"இல்லை... வேண்டாம்..." என கூறவும்

"என்ன பண்ண... எண்ட பொண்டாட்டி எனக்கு கட்டளை போட்டிருக்காள் இனிமேல் சாராயம் எதுவும் வீட்டுக்குள்ள கொண்டுவர கூடாது என்று. இல்லை என்ற அதை தந்திருப்பன்..." என்றான் கஜன்.

பிரேமி திரும்பி அபிராமியை பார்த்தாள். அவள் ஒரு ஏளன புன்னகையுடன் நின்றுகொண்டிருந்தாள். நிலைமையை உணர்ந்து கொண்ட பிரேமி உடனே அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.

தலைத்தீபாவளி இப்போது இவர்களை நெருங்கிக் கொண்டிருந்தது.

எழுதியவர் : விக்கிரமவாசன் (13-Oct-15, 10:54 am)
பார்வை : 531

மேலே