உலகின் எதிர்கால போக்குவரத்து ஹோவர்போர்டு கால்களில் இறக்கை கட்டி பறக்கலாம்

உலகின் எதிர்கால போக்குவரத்தாக கருதப்படும் பறக்கும் பலகை என்ற ஹோவர்போர்டை கனடாவைச் சேர்ந்த இளைஞர் உருவாக்கியுள்ளார்.

வரும் காலத்தில் பறக்கும் கார், சிறிய ரக ஹெலிகாப்டர் ஆகியவை சந்தையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவற்றின் விலை எட்டாத உயரத்தில் இருக்கும் என்பது நிச்சயம். மேலும் இடவசதி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவை நடைமுறைக்கு ஒத்துவராத விஷயமாகவே கருதப்படுகிறது.

அந்த குறையைப் போக்கும் வகையில் நினைத்தவுடன் எங்கிருந்து வேண்டுமானாலும் பறந்து செல்லும் வகையில் புதிய ஹோவர்போர்டை கனடாவின் கியூபெக் நகரைச் சேர்ந்த கேட்டலின் அலெக்சாண்ட்ரூ டுரூ (30) உருவாக்கியுள்ளார்.

வேகமாக, அவசரமாக செல்பவர் களை கால்களில் இறக்கை கட்டி பறக்கிறார் என்று சொல்வதுண்டு. அந்த கூற்றை அலெக்சாண்ட்ரூ உண்மையாக்கியுள்ளார். அவர் உருவாக்கியுள்ள ஹோவர் போட்டை கால்களில் கட்டிக் கொண்டு 16 அடி உயரத்துக்கு பறந்து செல்லலாம்.

இதற்கு முன்பு ஹோவர்போர்டில் 162 அடி தூரம் பயணித்தது உலக சாதனையாக இருந்தது. அதனை அலெக்சாண்ட்ரூ டுரூ முறியடித்துள்ளார். அவர் தனது ஹோவர்போட்டில் 905 அடி தொலைவு வரை பயணித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

இதுகுறித்து அலெக்சாண்ட்ரூ டுரூ கூறியதாவது: மனிதர்களால் ஹோவர்போர்டு உதவியுடன் நீண்ட தொலைவுக்கு பறக்க முடியும் என்பதை நிரூபிக்கவே இந்த உலக சாதனையை நிகழ்த்தினேன். எனது ஹோவர்போட்டின் அடியில் 4 புரோபல்லர்கள் பொருத்தப் பட்டுள்ளன. அதன்மூலம் தற்போது 16 அடி உயரத்துக்கு பறக்க முடிகிறது. நமது கால்களின் மூலமாகவே ஹோவர்போர்டை கட்டுப்படுத்தலாம்.

தற்போது 12 மாதங்களில் சோதனை அடிப்படையில் இதனை உருவாக்கியுள்ளேன். எதிர்காலத்தில் அதிக உயரம் மற்றும் அதிக தொலைவுக்கு பறக்கும் வகையில் மேம்படுத்தப்படுத்த திட்டமிட்டுள்ளோம். பின்னர் அவற்றை வணிகரீதியில் விற்பனைக்கு கொண்டு வருவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமை கோரியுள்ள அலெக் சாண்ட்ரூ வீட்டின் வாசலில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் காத்திருக்கின்றன.

எழுதியவர் : மீள் (22-Oct-15, 11:47 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 436

மேலே