கரப்பான்பூச்சியை இனி அடிச்சு கொல்லாதீங்க

ஒரு கரப்பான் விடாம அடிச்சி கொல்லுங்க... என்று இந்தியாவில் விளம்பரம் செய்கின்றனர். அந்த அளவிற்கு கரப்பான் பூச்சி என்றாலே அச்சமும் அருவெறுப்பும் உள்ளது நம்மவர்களிடம். ஆனால் அண்டை நாடான சீனாவிலோ கராப்பான் பூச்சியை பொறித்து சாப்பிடுகின்றனர். கரப்பான் பூச்சி பண்ணை வைத்து வளர்ப்பவர்கள் கோடி கோடியாய் சம்பாதிக்கின்றனர். உணவுக்குப் பயன்படுவதோடு மருந்துப் பொருளாகவும், அழகுசாதனப்பொருளாகவும் கரப்பான் பூச்சி பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாகவே கரப்பான் பூச்சிக்கு சீனாவில் வரவேற்பு அதிகரித்துள்ளது. நம் ஊரில் வெறுத்து ஒதுக்கப்படும் கரப்பான்பூச்சியிடம் அப்படி என்னதான் இருக்கிறது மேற்கொண்டு படியுங்களேன்.

கரப்பான் பூச்சியின் மூளையில் காணப்படுகின்ற வேதிக் கூறுகள் பல ஆபத்தான கிருமிகளைக் கொல்லும் தன்மை கொண்டுள்ளன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கரப்பான் பூச்சியின் நரம்பு மண்டலம் நுண்ணுயிரிகளின் தாக்குதலிலிருந்து காக்கப்படுவது வியப்பைத் தருகிறது என்று அறிவியலார் கருதுகின்றனர். நரம்பு மண்டலம் நுண்ணுயிரிகளால் தாக்கப்பட்டால் சாவு உறுதி. ஆனால் கரப்பான் பூச்சியிடம் நுண்ணுயிரி எதிர்ப்புத் திறன் மிகுதியாகவே உள்ளது.

கரப்பான் பூச்சியின் மூளைப் பகுதியிலிருந்து பெறப்படும் சிற்றளவிலான வேதிக் கூறுகள் நுண்ணுயிரிகளைக் கொல்வதில் 90% சக்தி கொண்டவையாக உளவாம். முதலில் இன்னும் விரிவான ஆய்வுகள் நிகழ்த்தப்பட வேண்டும். பின் மருந்துவகைகள் ஆக்கப்பட வேண்டும். அதன் பிறகுதான் மருந்து சந்தைக்கு வரும்.

புரதச்சத்து கரப்பான் பூச்சியில் உள்ள புரதச்சத்து மற்றவகை புரதச்சத்தைவிட, விலை மிகவும் குறைவு. மேலும் இவற்றின் இறக்கையில் உள்ள செலுலோஸ் என்ற பொருளையும் பயன்படுத்தலாம் எனவேதான் சீனர்கள் பண்ணை வைத்து இவற்றை வளர்க்கின்றனர்.

கரப்பான் பூச்சிகள் அணுக்கதிர் வீச்சையும் கூட தாங்கும் தன்மை கொண்டவையாம். இவற்றின் மூலம் எய்ட்ஸ், புற்றுநோய் போன்றவைகளுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

வழுக்கைத் தலையில் முடிவளர பல விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. ஆனால் சீனாவில் லீ ஷீவான் என்ற 78 வயது சீன வைத்தியர், கரப்பான் பூச்சிகளை அரைத்து, தன் வழுக்கைத் தலையில் தினமும் தேய்த்துக் கொண்டதால், முடி வளர்ந்ததாக கூறியுள்ளார். முகம் பளபளப்பாக கரப்பான் பூச்சியை அரைத்து பூசலாம் என்கின்றனர்.

நாம் அடித்துக் கொல்லும் கரப்பான் பூச்சிகளையும், வெட்டுக்கிளிகளையும் பொறித்து, வறுத்து சாப்பிடுகின்றனர் சீனர்கள். அதேபோல தென்ஆப்பிரிக்கா, தென்அமெரிக்காவில் உள்ள மக்கள் கம்பளிப்புழு, வண்டு, தேள், குளவி போன்ற பூச்சி, புழுக்களை விரும்பி சாப்பிடுகின்றனர்.

கோடிக்கணக்கில் வருமானம் சீனாவில் மட்டும் நூற்றுக்கணக்கான கரப்பான் பூச்சி பண்ணைகள் இருக்கின்றன. ஒருகிலோ உலர்ந்த கரப்பான்பூச்சியின் விலை ரூ.2400. 61 ரூபாய் முதலீட்டில் 670 ரூபாய் லாபம் பார்க்கலாம் என்கின்றனர்.

நம்ஊரில் நாட்டுக்கோழி வளர்ப்பு, ஈமு கோழி வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு விளம்பரம் போல சீன டிவிகளில் கரப்பான்பூச்சி வளர்ப்பு பற்றிய விளம்பரங்கள் பிரபலமாக உள்ளனவாம். இனி நம் வீட்டிலும் கரப்பான் பூச்சிகளை கொஞ்சம் கருணையோடு பாருங்களேன்!

எழுதியவர் : செல்வமணி (31-Oct-15, 10:10 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 232

மேலே