​என் வாழ்க்கைப் பயணம் - அனுபவச் சாரல்கள் 22​

​வணக்கம் . இடையில் ​ஓர் தொய்வு . அகன்ற இடைவேளை . விரிந்திட்ட இடைவெளி ....
தொடரில் ஏற்பட்டதை கூறிகிறேன் .....காரணம் வழ்க்கம் போன்று உடல்நிலை...சில முக்கிய நிகழ்வுகளின் தாக்கம் ....சோகம் ....இப்படிப் பல . ஆயினும் இதன் மத்தியில் 18.10.2015 அன்று , எனது இரண்டாவது படைப்பான " நிலவோடு ஓர் உரையாடல் " என்கின்ற கவிதை தொகுப்பு நூலும் வெளியிடப்பட்டது . மகிழ்ச்சிக் கடலில் மிதந்தேன் என்பதை மறுக்கவோ , மறக்கவோ இயலாத காலம் அது.

அதில் இன்ப அதிர்ச்சியாய் , இதயம் நிறைவாய் , எதிர்பாராமல் நடந்தது என்னவெனில் ....நான் என்றும் போற்றுகின்ற , மதிக்கின்ற , விரும்புகின்ற திராவிட இயக்கத் தூண்களில் முக்கியமானவரும் , இன்றைய தமிழக அரசியலில் மூத்த , முதிர்ந்த அனுபவம் வாய்ந்த , சொல்வதை ஆழமாக தெளிவாக மனதில் பதியவைக்கும் திறன் கொண்ட , சற்றும் அரசியல் சலனம் இல்லாத , கொள்கை பிடிப்புள்ள , மனம் தளராத , அகவை மிகுந்தாலும் , அன்பில் , ஆற்றலில் மாறுபடாத இனமானப் பேராசிரியர் திரு க அன்பழகன் அவர்களின் திருக்கரங்களால் வெளியிடப்பட்டு , முதல் பிரதியை , ஈரோட்டு சிங்கம் , திராவிட இயக்கத்தின் ஆணிவேர் , முதுமையிலும் சாதி மத ஒழிப்பு போராட்டங்களில் கலந்து கொண்டு இறுதி வாழ்வு வரையிலும் , பிணியிலும் தன் பணியில் இருந்து ஒதுங்கி ஓய்வெடுக்காமல் உழைத்து மறைந்த தந்தை பெரியார் அவர்களின் வாரிசு , அவர்வழி நடக்கும் அரிமா , கொள்கை மறவர் , விடுதலை ஆசிரியர் மானமிகு திரு க வீரமணி அவர்கள் பெற்றுக் கொண்டது என்றும் என் வாழ்வில் மறக்க முடியாத அரிய வாய்ப்பு .

அந்த அருமையான விழாவின் முக்கிய காரணகர்த்தா அன்பும் பாசமும் தன்னலம் இல்லாமல் உழைக்கும் நம் அகன் பெருமகனார் தான் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்ள விரும்புகிறேன் . அன்றைய விழாவின் நாயகர் , மகாகவி ஈரோடு தமிழன்பன்ஆவார். அவர்களின் 81 வது பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சியோடு , எழுத்து தள படைப்பாளிகளுக்கு " தமிழன்பன் விருதும் " , பாராட்டு சான்றிதழும் , சால்வையும் அணிவித்து கௌரவித்தது எங்களுக்கு பெருமை. எல்லையிலா ஆனந்தம் .

அந்த விழாவில் கலந்து கொண்டவர்கள் சான்றோர் பெருமக்கள் , தமிழ் ஆர்வலர்கள் , திரு சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் , பெருங்கவி இன்குலாப் அவர்கள் , கம்யூனிசக் கொள்கையிலும் கட்சியிலும் , உயர்ந்த இடத்தில் இருப்பவருமான , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ,தோழர் திரு மகேந்திரன் அவர்கள் , நீதித்துறையிலும் நடைமுறை வாழ்விலும் நேர்மையிலும் சற்றும் தடம் மாறாதவர் , எளிய வாழ்விற்கு உதாரணமாக திகழும் நீதிநாயகம் திரு சந்துரு அவர்கள் , எழுத்தாளர் ,கவிஞர் திரு மணிகண்டன் அவர்கள் , கவிஞர் கவிமுகில் அவர்கள் , கவிஞர் பழனி பாரதி அவர்கள் , மற்றும் எழுத்து தளத்தை சார்ந்த பன்முக கவிஞர்கள் , அருமை நண்பர்கள் பலரும் ஆவர் .

இன்பமாய் கழிந்தது அன்றைய பொன்மாலைப் பொழுது.... இதயத்திலும் நிலைத்தது .

நான் இரண்டு பிள்ளைகளை பெற்ற தந்தை போல மகிழ்ச்சியுடன் , மன நிறைவுடன் இருந்ததால் இன்னும் சற்று கால தாமதம் ஏற்பட்டது இந்த தொடரைத் தொடர்ந்திட .

சென்ற பகுதியில் நான் தனியார் நிறுவனம் ஒன்றிலும் சுமார் ஐந்து வருடங்கள் பணியாற்றி , விருப்பமுடன், உடல்நலம் காரணமாக விலகி வந்தததையும் குறிப்பிட்டு இருந்தேன் . அதன்பிறகு எனக்கு அகவை இருந்தாலும் தகுதிக்கு , ஆர்வம் இல்லை அலுவல் மேலும் புரிந்திட . நான் தனிஒருவனாக இருப்பதாலும் , பெற்றவர்களும் மறைந்ததாலும் இனி வேலைக்குச் சென்று சாதிக்கபோவது ஒன்றும் இல்லை என்ற எண்ணமும் இருந்ததால் , வீட்டிற்குள்ளேயே முடங்கி விட்டேன் . அந்த நேரத்தில்தான் , எனக்கு ஏற்கனவே உள்ள கவிதை மோகமும் , தமிழன் தாகமும் என்னை கணினியில் கவிதைகள் எழுத தூண்டியது. ஒரு சில தளங்களில் என் கவிதைகளை பதிவிட ஆரம்பித்தேன் . இருப்பினும் எனக்கு ஒரு மன நிறைவு இல்லை. அவைகளை எவரும் படிப்பதாகவும் தெரியவில்லை. பின்பு கூகிள் இணையதளம் மூலமாக ஒரு நல்ல தளத்தை தேடினேன் . அப்போது நான் கண்டதும் பெற்றதும் தான் இந்த " எழுத்து . காம் " . என்னை மிகவும் ஈர்த்தது . அன்றிலிருந்து என் கவிதைகளை பதிவிட ஆரம்பித்தேன் . முதலில் அந்த அளவு வரவேற்பு இல்லையெனினும் பின்பு நாளடைவில் நட்பு எண்ணிகையும் , பார்வையாளர்கள் எண்ணிக்கையும் கூடியது . அதுவே எனக்கு பெரிய ஊக்கமளித்தது . அங்கும் பல அனுபவங்கள் ....பல நிகழ்வுகள் இடையினில் ......

மீண்டும் சந்திக்கிறேன் .....

இனி வரும் தொடர்களில் கடந்த காலமுடன் நிகழ் கால அனுபவங்களும் இணைந்தே இருக்கும் ......

பழனி குமார்
01.11.2015

எழுதியவர் : பழனி குமார் (1-Nov-15, 12:03 pm)
பார்வை : 307

சிறந்த கட்டுரைகள்

மேலே