ஐம்பதாண்டுகளில் இந்திய அணுசக்தித் துறையகத்தின் மகத்தான விஞ்ஞானப் பொறியல்துறைச் சாதனைகள்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

அணுசக்தி மின்சார உற்பத்திக்கு இப்போதிருந்து [1944] இன்னும் இருபதாண்டுகளில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப் பட்டால், இந்தியா தனக்குத் தேவையான திறமைசாலிகளைத் தனது இல்லத்திலேயே தோற்றுவித்துக் கொண்டு, அன்னிய நாடுகளில் தேட வேண்டிய திருக்காது.

‘சுருங்கித் தேயும் நிலக்கரிச் சுரங்கங்கள், குன்றிடும் ஹைடிரோ-கார்பன் எரிசக்தி சேமிப்புகளைக் கொண்டு, விரிந்து பெருகும் இந்தியாவின் நிதிவளத்தை நோக்கினால், நூறு கோடியைத் தாண்டிவிட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய யுரேனியம், தோரியம் ஆகியவற்றின் எரிசக்தியை முழுமையாகப் பயன் படுத்தி அணுசக்தியை உற்பத்தி செய்யும் முறை ஒன்றுதான் தற்போது இந்தியாவுக்கு ஏற்றதாக உள்ளது’

முன்னுரை: ‘விஞ்ஞானப் பொறியியல் தொழிற் துறைகள் மட்டுமே, உலக நாடுகளில் செல்வம் செழித்து முன்னேற ஆக்க வினைகள் புரிந்துள்ளன! அவ்விதமே விஞ்ஞானம், பொறிநுணுக்கத் தொழில்களை விருத்தி செய்து, இந்தியாவும் செல்வீக நாடாக முன்னேற வேண்டும்! ‘ என்று பறைசாற்றியவர், பாரதத்தின் முதல் பிரதம மந்திரி, ஜவஹர்லால் நேரு. 1948 ஆகஸ்டு 10 ஆம் நாள் ஜவஹர்லால் நேரு இந்திய அணுசக்திப் பேரவையைத் [Atomic Energy Commission] துவக்கி அதன் முதல் அதிபதியாய் விஞ்ஞான மேதை, டாக்டர் ஹோமி ஜஹாங்கீர் பாபாவை நியமனம் செய்தார். நேருவின் விஞ்ஞான முற்போக்கு குறிநோக்கை மேற்கொண்டு, டாக்டர் பாபா ஆசியாவிலே உயர்ந்த ஓர் அணுவியல் பெளதிக, இரசாயன நுணுக்க ஆய்வுக் கூடத்தையும், அணு மின்சக்தித் துறைக் கூட்டகத் தொழிற் சாலைகளையும் நிறுவி, இந்தியாவிலும் தொழிற் புரட்சியைச் துவங்கித் தொழில் யுகத்தை நிலைநாட்டினார்!

ஆசியாவின் முதல் ‘அப்ஸரா நீச்சல் தடாக அணு உலை ‘ [APSARA Swimming Pool Reactor] பாம்பேயில் 1956 ஆகஸ்டு 4 ஆம் தேதி பூரணநிலை அடைந்தது. இரண்டாம் உலகப் போர் நடக்கும் சமயம், அமெரிக்கா சிகாகோ பல்கலைக் கழகத்தில் இரகசியமாக உலக விஞ்ஞான மேதைகள், என்ரிகோ ஃபெர்மியின் கீழ் அணுப்பிளவு தொடரியக்கத்தை [Nuclear Chain Reaction] 1942 டிசம்பரில் நடத்திக் காட்டி வெற்றி பெற்ற தருணம். பிரிட்டிஷ் இந்தியாவில் தொழிற்துறை வளர்ச்சி அடைய வல்லுநர்களுக்கு முற்போக்கான விஞ்ஞானப் பயிற்சி அளிக்க 1944 மார்ச்சில் டாக்டர் ஹோமி பாபா ஓர் அரிய திட்டத்தை வெளியிட்டு ‘டாடா தொழிற்கூடப் பணியகத்தின் ‘ அதிபர் ஸர் தொராப்ஜி டாடாவுக்கு [Tata Trust, Sir Dorabji Tata] ஓர் கடிதம் எழுதினார்.

‘அணுசக்தி மின்சார உற்பத்திக்கு இப்போதிருந்து [1944] இன்னும் இருபதாண்டுகளில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப் பட்டால், இந்தியா தனக்குத் தேவையான திறமைசாலி களைத் தனது இல்லத்திலேயே தோற்றுவித்துக் கொண்டு, அன்னிய நாடுகளில் தேட வேண்டிய திருக்காது ‘ என்று டாக்டர் ஹோமி பாபா டாடாவுக்கு அக்கடிதத்தில் குறிப்பிட்டி ருந்தார். அதைப் பின்பற்றி ‘டாடா அடிப்படை ஆராய்ச்சிக் கூடம் ‘ [The Tata Institute of Fundamental Research (TIFR)] பம்பாயில் 1945 இல் நிறுவப்பட்டு, சாகும் நாள் வரை [1966] டாக்டர் பாபா அதன் ஆணையாளராகப் [Director] பணியாற்றி வந்தார். அன்றிலிருந்து இன்றுவரை TIFR ஆசியாவிலே உன்னத விஞ்ஞான நுணுக்க ஆராய்ச்சிகள் செய்துவரும் ஓர் உயர்ந்த ஆய்வுக் கூடமாக இருந்து வருகிறது.

1948 ஏப்ரல் 26 ஆம் தேதி மீண்டும் டாக்டர் ஹோமி பாபா கூறியது: ‘இன்னும் 20 ஆண்டுகளுக்குள் இந்தியாவின் தொழில்வள நிதிப்போக்கிலும் [Economy], உலக நாடுகளின் தொழிற்துறை அரங்குகளிலும் அணுசக்திப் பெருமளவு பங்கேற்றுப் புரளப் போகிறது! முற்போக்கு நாடுகளின் முன்பு தொழிற் துறைகளில் பாரதம் இன்னும் பிற்போக்காவதை வேண்டாதிருந்தால், அணுவியற் துறைகளை விருத்தி செய்வதில் முழுச்சக்தியுடன் மேற்கொண்டு முற்பட வேண்டும் ‘. அவ்வாக்கு மெய்யாகி 1969 ஏப்ரலில் பாரதத்தின் முதல் அணுமின்சக்தி நிலையம் தாராப்பூரில் நிர்மாணிக்கப் பட்டு மின்சாரம் பரிமாறியது.

சுதந்திர இந்தியாவின் ‘தொழில்யுகப் பொற்காலம்

‘இருபதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளைச் சுதந்திர இந்தியாவின் ‘தொழில்யுகப் பொற்காலம் ‘ [Golden Time of the Industrial Age] என்று பாரத வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கலாம். இந்தியாவின் மெய்யான ‘முழுமைத் தேசீயப் படைப்பு ‘ [Gross Domestic Product (GDP)] கடந்த ஆறு ஆண்டுகளின் வருடக் கூட்டு வளர்ச்சி 6.5% வீதமாகத் [(1993-1999) Compound Annual Growth Rate: 6.5%] தொடர்ந்து விருத்தியாகி உள்ளது என்று சிங்கப்பூர் அரசியல் எழுத்தாளர் பிரசென்ஜித் பாஸு கூறுகிறார். இந்த வியக்கத் தக்க திறனியக்கம் [Performance] நிதிவள வேக வளர்ச்சியில் இந்தியாவை உலகக் குடியரசு நாடுகளிலே உன்னதத் தொழில்வள நாடாக உயர்த்துகிறது, என்றும் பாஸு கூறுகிறார்.

‘அந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் 65% வீத வளர்ச்சியில் மிகைப் படுத்தப்பட்டு இந்திய மென்னியக்கிகள் [Software Programs] வெளிநாடுகளுக்கு ஏற்று மதியாகி யுள்ளன. அந்த சமயம் வேளாண்மை விருத்தி 4% அதிகரித்தி ருக்கிறது. பாரதத்தில் உணவு தானிய வகைகளின் விளைச்சல் கடந்த முப்பதாண்டுகளாய் [1969-1999] மும்முறை பெருகியுள்ளன. முதியவர் கல்விப் புகட்டு 1991 இல் 51% ஆக இருந்தது, 1999 இல் 65% ஆக மிகுதி யடைந்தது! அவிழ்த்து விடப்படாமல் முடங்கிக் கிடக்கும் மானிடத்திறக் களஞ்சியங்கள் [Untapped Human Potentials] இந்தியா வெங்கும் தூண்டு வாரற்று இன்னும் குவிந்து கிடக்கின்றன! தொழிற் துறை வளர்ச்சியில் இன்னும் பாரதம் பன்மடங்கு பெருகி முன்னேற ஒளிமிகுந்த எதிர்காலம் கன்ணில் தெரிகிறது ‘ என்றும் சிங்கப்பூர் எழுத்தாளர் பாஸு கூறுகிறார்.

இரண்டாம் உலகப் போரில் முளைத்த அமெரிக்காவின் ‘அணு ஆயுத ஆராய்ச்சிகள் ‘, ஆக்க வினைகள் புரியும் மின்சக்தி நிலையங்களாகத் தாரணி எங்கும் தோன்றிக் கிளைகள் விட்டன. ஜெர்மெனி போரில் ஏவியக் ‘கட்டளை ஏவுகணைகள் ‘, அண்ட வெளியைத் தேடும் விண்கப்பலுக்கு வாகனமாய் அமைந்தன. அணு ஆயுதங்கள், அணுமின் நிலையங்கள், அண்ட வெளிப் பயணங்கள் ஆகியவை உண்டாக்கியப் பொறி நுணுக்கத் தொழிற்துறைகள் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், சைனா, இந்தியா மற்றைய உலக நாடுகளிலும் உதயமானவை எண்ணிக்கையில் அடங்கா! குறிப்பாகப் புதிதான நுணுக்கமான இரசாயன அணுத்துறைத் தொழிற்சாலைகள் [யுரேனியம், தோரிய தாதுக்கள் மீட்கும் சுரங்கங்கள், சுத்தீகரிப்பு இரசாயனச் சாலைகள், எரிக்கோல் உருட்டும் கூடங்கள், அவற்றை வைத்து ஆராய்ச்சி செய்யும் அணு ஆய்வு உலைகள்] பல அகில உலகில் தோன்றின. சிறப்பாக அணுவியல் விஞ்ஞானம், அணுமின் சக்தி பொறி நுணுக்கங்கள் பெருமளவில், பெரு வேகத்தில் விருத்தி அடைந்தன. பதினேழாம் நூற்றாண்டில் ஈரோப்பில் உதயமான ‘தொழில்யுகம் ‘ மேல்நாடுகளில் மீண்டும் விரைவாக்கப் பட்டு செழிப்படைந்தது! பாரத நாட்டிலே முதன்முதல் ‘தொழில்யுகச் சக்கரம் ‘ காலூன்றி, வேரூன்றி வேகமாய்ச் சுற்ற ஆரம்பித்தது!

ஹோமி பாபா தோற்றுவித்த அணுவியல் விஞ்ஞானத் தொழிற்துறைகள்

டாக்டர் ஹோமி பாபாவின் 1948 இல் வெளியிட்ட பொன்வாக்கு வேற்கொள்ளப்பட்டு, பாரதம் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு 1969 இல் முதல் அணுமின் நிலையம் தாராப்பூரில் இயங்க ஆரம்பித்து மின்சாரத்தைப் பரிமாறியது. 2003 நவம்பரில் 13 அணுமின் நிலையங்கள் 2600 MWe மின்னாற்றலைப் பாரத மெங்கும் அனுப்பி வருகின்றன. பாம்பேயில் பாரத வல்லுநர் பலர் ஆழ்ந்து பணி புரியும், மாபெரும் ‘பாபா அணுசக்தி ஆய்வு மையம் ‘ [Bhabha Atomic Research Centre] ஆசியாவிலே உன்னத அணுவியல் ஆராய்ச்சிகளை மகத்தான முறையில் செய்து வருகிறது. அதுபோல் சென்னைக் கல்பாக்கத்தின் ‘இந்திரா காந்தி அணுசக்தி ஆய்வு மையத்தில் ‘ [Indira Gandhi Centre for Atomic Research] சிக்கலான ‘வேகப்பெருக்கி அணுமின் உலை [Fast Breeder Test Reactor] ஒன்று கட்டப்பட்டு, எதிர்கால மின்சக்தி உற்பத்திக்கு ஆராய்ச்சிகள் செய்யப்படுகின்றன.

உலக அரங்கில் அணு ஆயுத நாடாகத் தலை நிமிர்ந்து நிற்கும் இந்தியா, சில அணுகுண்டுகளையும், ஹைடிஜரன் குண்டு களையும் ராஜஸ்தான் பொக்ரானில் 1974, 1998 ஆண்டுகளில் அடித்தள வெடிப்புச் செய்து சோதனைகளைப் புரிந்துள்ளது. அணு ஆயுதங்களுக்கு வேண்டிய புளுடோனியம்-239, செறிவு யுரேனியம்-235, டிரிடியம், டியூடிரியம் [Tritium, Deuterium] ஆகியவை யாவும் பாரத அணுத்துறைச் சாலைகளில் தயாராகின்றன. பதிமூன்று அணுமின் நிலையங்கள், மற்றும் வேகப் பெருக்கி அணு உலைகளுக்குத் தேவையான யுரேனிய /புளுடோனிய எரிக்கோல்கள் ஹைதிராபாத் எரிக்கோல் தயாரிப்புக் கூடத்தில் [Nuclear Fuel Complex -Fuel Fabrication Plants] உருவாக்கப் படுகின்றன.

பாரதத்தின் அணுவியல் துறையின் பிதா எனப்படும் ஹோமி பாபா அணுமின் சக்தி ஆக்கத்திற்குத் தனது ‘மூவரங்கு முற்பாடுத் திட்டத்தை ‘ [Three-stage Approach Program] வகுத்து முதல் அரங்குக்கு அடித்தள மிட்டார். ஆசியாவின் முதல் ‘நீச்சல் தடாக அணு உலை, அப்ஸரா ‘ [APSARA Swimming Pool Reactor (1MWt)] 1956 ஆகஸ்டு 4 ஆம் தேதி பாம்பேயில் ‘பூரணநிலை ‘ [Criticality] அடைந்தது. அடுத்து கனடாவின் உதவியில், கனடாவின் NRX ‘ஸைரஸ் ‘ ஆராய்ச்சி அணு உலைக் [CIRUS Atomic Research Reactor (40 MWt)] கட்டப் பட்டு 1960 ஜூலை 10 ஆம் தேதி பூரணநிலை அடைந்தது.

அமெரிக்காவின் உதவியில் ஜெனரல் எலெக்டிரிக் BWR மாடலில் முதல் இரட்டை கொதி அணுமின் உலைகள் [Boiling Water Reactor (210 MWe)] தாராபூரில் அமைக்க ஏற்பாடுகள் தயாரிக்கப் பட்டன. அதே சமயம் கனடாவின் காண்டு மாடலில் [CANDU Heavy Water Reactors (220 MWe)] இரட்டை அணுமின் நிலையங்கள் ராஜஸ்தான் ராவட்பாடாவில் நிறுவ முயற்சிகள் தொடர்ந்தன. டாக்டர் பாபா துவங்கி வைத்த அணுசக்தி ஆராய்ச்சி, அணுமின் சக்தி உற்பத்தி ஆகியவற்றின் ஆரம்பப் பணிகள் மேலே கூறப்பட்டவையே. முதலிரண்டு அணுமின் நிலையங்கள் முழுமை பெற்று பூரணநிலை அடைவதற்கு முன்பே, 1966 ஜனவரி 24 ஆம் தேதி விமான விபத்தில் அவர் காலமாகி விட்டார்!

டாக்டர் ஹோமி பாபாவின் அணுத்துறைப் பணிகள் 1944 முதல் 1966 வரை 22 ஆண்டுகள் நீடித்தன. அவர் விதையிட்டுச் சென்ற அரும்பெரும் அணுவியல் திட்டங்களை, அவருக்குப் பின்வந்த ஹோமி N. சேத்னா, டாக்டர் ராஜா ராமண்ணா, டாக்டர் M.R. சீனிவாசன், டாக்டர் R. சிதம்பரம், டாக்டர் அனில் ககோட்கர் ஆகியோர் நிறைவேற்றி, அவை யாவும் பன்மடங்கு இப்போது பெருகி ஆல விழுதுகள் போல் விரிந்து கொண்டே போகின்றன.

ஹோமி பாபாவின் மூவடுக்கு அணுமின்சக்தி ஆக்கத் திட்டங்கள்

இந்தியாவில் அணுவியல் எருக்களான யுரேனியம், தோரிய தாதுக்கள் [Nuclear Fuels: Uranium, Thorium Ores] ஏராளமாகக் கிடைகின்றன. சுரங்க யுரேனிய இருப்பு பாரதத்தில் இன்னும் 50 ஆண்டுகள் வரை நீடிக்கலாம். உலகத்திலே மூன்றில் ஒரு பங்கு தோரியம்232 பாரத நாட்டிலே ஏராளமாகக் கிடைப்பது நமக்கொரு வரப் பிரசாதம். இயற்கை யுரேனியச் சுரங்கம் வற்றியவுடன் பாரதம் தோரியத்தை அணு உலைகளில் நியூட்ரான் கணைகளால் தாக்கி, யுரேனியம்-233 அணுப்பிளவு எருவாக மாற்றி, மூன்றாம் கட்ட அணுசக்தி உற்பத்தியைத் துவங்க வேண்டும்! அப்போது நம்மிடமுள்ள ஏராளமான தோரியம்-232, பல அணுமின் உலைகளில் கவசமாக வைக்கப்பட்டு யுரேனியம்-233 எருவாக மாற்றப்பட வேண்டும். பிறகு மீள் சுத்திகரிப்புச் சாலைகளில் கழிவிலிருந்து யுரேனியம்-233 பிரித்தெடுக்கப் பட வேண்டும். முடிவில் யுரேனியம்-233 எருக்கள் சேமிக்கப் பட்டு அவையே வேகப் பெருக்கி அணுமின் உலைகளில் பல்லாண்டுகள் நிரந்தரமாக உபயோகப்படும். இந்தியாவில் ஏராளமாகப் புதைந்து கிடக்கும் 360,000 டன் தோரியம்-232 செழிப்பு உலோகத்தை வேகப் பெருக்கி அணு உலைகள் மூலம் யுரேனியம்-233 ஆக மாற்றி, அடுத்து 100 ஆண்டுகளுக்கு 300,000 MWe மின்சக்தியை உற்பத்தி செய்யலாம் என்று இந்தியப் பொறியியல் துறைஞர்கள் கணக்கிட்டு அனுமானிக்கிறார்கள்!

டாக்டர் ஹோமி பாபா அணுமின் சக்தி ஆக்கத்திற்குத் தனது ‘மூவரங்கு முற்பாடுத் திட்டத்தை ‘ [Three-stage Approach Program] வகுத்து முதல் அரங்குக்கு அடித்தள மிட்டார். அத்திட்டப்படி இந்தியாவில் முதற் கட்டத்தில் இயற்கை யுரேனியம், அழுத்த கனநீர் பயன்படும் அணு உலைகள் [CANDU Pressurized Heavy Water Reactor (PHWR)] அமைக்கப்படும். இரண்டாம் கட்டத்தில் முதற்படி அணு உலைகளில் கிடைக்கும் கிளை விளைவான புளுடோனியம்-239 அணுப்பிளவு எருவையும், இயற்கை யுரேனியம்-238 செழிப்பு உலோகத்தையும் உபயோகித்து, வேகப் பெருக்கி அணு உலைகள் அமைக்கப்படும். அவை ஈன்றும் புதிய புளுடோனியம்-239 பிளவு எருவையும், தோரியம்-232 செழிப்பு உலோகத்தையும் வேகப் பெருக்கிகளில் வைத்து, புதிய பிளவு எரு யுரேனியம்-233 தயாரிக்கப்பட்டு தனித்தெடுக்கப் படும்! மூன்றாம் கட்டத்தில் யுரேனியம்-233, தோரியம்-232 இரண்டும் பயன்பட்டு அணு மின்சக்தியும், தொடர்ந்து யுரேனியம்-233 அணு எருவும் உற்பத்தியும் தொடர்ந்து கிடைக்கும்!

முதலிரண்டு காண்டு அணுமின் உலைகள் கனடாவின் உதவியில் கட்டப் பட்டன. 1974 இல் பாரதம் முதல் அடித்தள அணு ஆயுத வெடிப்புச் சோதனை செய்து, அமெரிக்கா, கனடாவின் விரோதத்தையும், மற்ற உலக நாடுகளின் வெறுப்பையும் பெற்றுக் கொண்டது! அதன் விளைவு ? வட அமெரிக்க, ஈரோப்பிய நாடுகள் அணுவியல் துறை உடன்பட்ட சாதனங்களை, நூதனங்களை இந்தியாவுக்கு விற்பதை நிறுத்திக் கொண்டன! பாரதம் அணுத்துறைத் தொழில் முற்பாடுகளில் தனித்து விடப்பட்டுத் தன் காலில் நின்று, இந்தியத் தொழிற் துறைகளை ஊக்குவித்து நூதனச் சாதனங்களை உற்பத்தி செய்ய வேண்டிதாயிற்று! இம்முயற்சியில் மூழ்கி, சிரமத்துடன் நீந்தி, புதிதாக எட்டுக் கனநீர் அணுமின் நிலையங்களைக் கட்டி இந்தியா மகத்தான வெற்றி அடைந்துள்ளது!

1975 ஆண்டுக்குப் பிறகு நரோரா [உத்தர் பிரதேசம்], கக்கிரபார் [குஜராத்], கைகா [கர்நாடகா], ராவட்பாடா [ராஜஸ்தான்] ஆகிய இடங்களில் கட்டிய 8 காண்டு அணுமின் நிலையங்கள் [மின்னாற்றல்: 220 MWe] அனைத்தும் இந்தியரால் டிசைன் செய்யப் பட்டு, இந்தியச் சாதனங்களால் [சுமார் 80%] கட்டப்பட்டு, இந்தியரால் இயக்கப்பட்டு பராமறிக்கப் படுபவை. இப்போது புதிதாக 540 MWe மின்னாற்றல் கொண்ட இரட்டைக் கனநீர் அணுமின் நிலையங்கள் டிசைன் செய்யப்பட்டு, தாராப்பூரில் கட்டப்பட்டு வருகின்றன.

அடுத்து 1100 MWe மின்னாற்றல் கொண்ட ரஷ்யாவின் VVER-1000 மாடலில் இரட்டைப் பூத அணுமின் நிலையங்கள், சென்னையின் தென்கோடி முனையில் உள்ள கூடங்குளத்தில் கட்டப் பட்டு இயங்கப் போகின்றன. இதற்குத் தேவையான (2%-4%) செறிவு யுரேனிய-235 அணுமின் உலை எரிக்கோல்கள் அடுத்து முதன்முதல் இந்தியாவிலே தயாரிக்கப்படும். இப்போது இயங்கி வரும் 13 வெப்ப அணு உலைகள் மூலம் இயற்கை யுரேனியத்தில் (1%-2%) அணுசக்தியைத்தான் பிழிந்தெடுக்க முடிகிறது! அவ்வாறு முதற் கட்ட அணுசக்தி உற்பத்தியில் 12,000 MWe ஆற்றலை இன்னும் 30 ஆண்டுகளுக்கு உண்டாக்கலாம்! இரண்டாம் கட்டத்தில் புளுடோனியத்தைப் பிரதம எருவாகவும், இயற்கை யுரேனியத்தைக் கவச அரணாக வும் பயன்படுத்தி வேகப் பெருக்கிகளை இயக்கினால், யுரேனியம்-238 புளுடோனியம்-239 ஆக மாறி எருவின் அளவு மிகை யாகிறது. அம்முறையில் ஒவ்வொரு தரமும் புளுடோனியம்-239 சேர்வதால் வேகப் பெருக்கிகளால் யுரேனியத்தி லிருந்து 75% அணுசக்தியைப் கறக்க முடியும் என்று பொறியியல் துறைஞர் கணிக்கி றார்கள்! அம்முறையில் இன்னும் 400,000 MWe ஆற்றல் சக்தி சில நூற்றாண்டுகளுக்கு உண்டாக்கலாம் என்று கணித்துள்ளார்கள்!

2011 ஆண்டுவரை 20 அணுமின் நிலையங்கள் அடுத்தடுத்துப் பாதுகாப்பாய் இயங்கி இப்போது கூடங்குளத்தில் ரஷ்யாவின் பூத 1000 மெகா வாட் அணுமின் நிலையம் பூரணம் அடைந்து முதன்முதல் ஏராளமான மின்சாரம் அனுப்பி புதிதாய் ஓர் இந்திய வரலாற்று நிகழ்ச்சியை மைக் கல்லாக வைக்கப் போகிறது.

இந்திய அணுசக்தித் துறையின் தொழிற்துறைச் சாதனைகள்

1. அணுவியல் ஆராய்ச்சி உலைகள்: அணுவியல் ஆய்வுக்காக பலவித அணு ஆராய்ச்சி உலைகளைக் கட்டிப் பண்டங்கள் மீது நியூட்ரான்களை மோத விட்டுச் சோதனைகளைச் செய்து அணுக்கருப் பெளதிகத்தை [Nuclear Physics] வளர்க்கிறது. அந்த அடிப்படை விஞ்ஞானம் அணுப்பிளவு விளக்கங்களையும், கழிவுகளைப் பற்றியும், அவற்றிலிருந்து எழும் கதிரியக்கம், கிளைப் பண்டங்கள் [சிறப்பாக புளுடோனியம்-239, மற்ற கதிர்வீசும் அணுக்கருக்கள்] பற்றியும் அறியப்பட்டன.

தோரியத்தைக் கவசமாக அணு உலைகளில் வைத்து, வேகப் பெருக்கி அணு உலைகளுக்குத் தேவையான யுரேனியம்-233 எருவின் உற்பத்தியை அறிவது. அடுத்து அணு உலைகளில் மற்ற உலோகங்களை இட்டு நியூட்ரான் கணைகளால் தாக்கி, பலவித ‘கதிர் ஏகமூலங்கள் ‘ [Radio isotopes] தயாரிப்பது.

கோபால்ட்-60 கதிர் ஏகமூலங்கள் புற்று நோய் சிகிட்சைக்குப் பயன்படுகிறது. அதுபோல் இந்திய அணுசக்தி துறையகம் அணு உலைகளில் நியூட்ரான் கதிரூட்டி, நூற்றுக்கணக்கான கதிர் ஏகமூலங்களை பாரதம் உலகெங்கும் அனுப்பி வருகிறது. உலகில் பெருமளவு கதிர் ஏகமூலங்களை உற்பத்தி செய்து விற்கும் நாடுகளில் இந்தியா முன்னணியில் நிற்கிறது. கதிர் ஏகமூலங்கள் மருத்துவம், வேளாண்மை, தொழிற்சாலை ஆகியவற்றுக்குப் பயன்படுகின்றன.

2. இந்தியாவில் மூன்று வித அணுமின் நிலையங்கள்:

(a) தாராப்பூரில் முதலில் கட்டிய ஜெனரல் எலெக்டிரிக் கம்பெனியின் கொதிநீர் அணுமின் உலைகளும் [American General Electric Boiling Water Reactor (BWR)], தற்போது [2003] சென்னைக் கூடங்குளத்தில் உருவாகி வரும் ரஷ்யாவின் [VVER-1000] PWR அழுத்தநீர் அணு உலையும் [(2%-4%) Uranium-235] செறிவு யுரேனிய எரிக்கோலாய்ப் பயன்படுத்து பவை. இரண்டும் சாதாரண எளிய நீரை மிதவாக்கி யாகவும், வெப்பத் தணிப்பு நீராகவும் [Light Water Moderator & Coolant] உபயோகப் படுத்து பவை. இவற்றுக்கு தேவைப்படும் செறிவு யுரேனியத்திற்காக, யுரேனியச் செறிவுத் தொழிற்கூடம் [Uranium-235 Enrichment Plant] ஒன்று மைசூர் ரத்தேஹல்லியில் [Rattehalli, Mysore] அமைக்கப் பட்டுள்ளது.

(b) கனடாவின் டிசைன் மாடலான காண்டு அழுத்தக் கனநீர் அணுமின் நிலையங்கள் [Canadian (CANDU) Pressurized Heavy Water Reactors] 220 MWe, 540 MWe மின்னாற்றலில் தற்போது NPCIL [Nuclear Power Corporation of India Ltd] டிசைன் செய்து, நிறுவகம் செய்து இயக்கியும் வருகிறது. அவற்றுக்கு வேண்டிய அணுவியல், யந்திர, மின்சார சாதனங்கள், கருவிகள் பாரதத்தில் 80% மேற்பட்ட எண்ணிக்கையில் உருவாக்கப் படுகின்றன.

(c) சென்னை கூடங்குளத்தில் முதன்முதல் ரஷ்யாவின் [Russian (VVER-1000) Pressurized Light Water Reactors] உதவியால் இரட்டை அணுமின் நிலையம் நிறுவகமாகி வருகிறது. அந்த இரட்டை அணு உலைகள் செர்நோபிள் போலின்றி முற்றிலும் வேறுபட்ட டிசைனில் ஆக்கப் பட்டவை. மேலும் செர்நோபிள் விபத்துக்குப் பிறகு சீராக்கப்பட்டவை!

3. அணு உலைகள், அணுமின் நிலையங்கள் மற்றும் அணுத்துறை சார்ந்த கதிரியல் கருவிகள் அனைத்தும், ஹைதிராபாத் ECIL [Electronic Corporation of India Ltd] மின்யந்திர சாலையில் 1967 முதல் தயாராகி வருகின்றன. அத்துடன் தூரத் தொடர்பு, பாரதப் படைத்துறை, அண்டவெளி நுணுக்கவியல், பெட்ரோல் இரசாயனத் தொழிற்துறைகள், வெப்ப மின்சக்தி நிலையங்கள் [Telecommunication, Defence Depts, Space Technology, Petrochemical Industries, Steel Industries, Thermal Power Plants] ஆகிய வற்றுக்குத் தேவையான மின்னியல் கருவிகள் [Electrical & Electronic Instrumentation], மின் கணனிகள் அனைத்தும், ஹைதிராபாத் ECIL இல் தயாராகின்றன. 1994 இல் மின்னியல் துறையகத்தின் [Dept of Electronics] சிறப்புப்பணிப் பரிசை ECIL பெற்றுள்ளது.

4. இந்திய அணுத்துறைப் புளுடோனியப் பிரித்தெடுப்பு நுணுக்க முறையில் கைதேர்ந்து 1965 ஆண்டு முதல் அணுக் கழிவுகளை மீள்சுத்தீகரிப்பு [Spent Fuel Reprocessing] செய்து வருகிறது. பாரதத்தில் உள்ள மூன்று மீள்சுத்திகரிப்பு சாலைகளிலும் ஆண்டுக்குச் சுமார் 50 டன் கழிவுகள் சுத்தமாகிப் புளுடோனியம்-239 மீட்கப் படுகிறது. புளுடோனியம் அணு ஆயுதங்களுக்கும், வேகப் பெருக்கி அணு உலைகளுக்கும், ‘அணுசக்திக் கடலடிக் கப்பலுக்கும் ‘ [Nuclear Submarine] பயன்படுகிறது.

5. இந்தியக் கடற்படைத் துறைக்குக் கடலடியில் உலவும் ‘அணுசக்திக் கடலடிக் கப்பல் ‘ [Nuclear Submarine] ஒன்றைப் பாபா அணுசக்தி ஆய்வு மையம் [BARC], பாரத முற்போக்கு நுணுக்கக் கப்பலாக [Navy ‘s Advanced Technology Vessel (ATV)] அமைத்து வருகிறது. கடலடிக் கப்பல் எஞ்சினை இயக்கத் தேவையான 20% செறிவு யுரேனியம் [20% Enriched Uranium-235] அல்லது புளுடோனியம் [Plutonium-239] BARC இல் தயாராகிறது.

6. பாரத இராணுவம் பாதுகாப்புக்காகக் கையாளும் பிருத்வி, அக்கினி கட்டளை ஏவுகணைகள் [Prithvi, Agni Guided Missiles] ஏந்திச் செல்லும் அணு ஆயுத போர்க் குண்டுகளை [Nuclear Warheads] BARC தயாரிக்கிறது.

7. மைசூர் ரத்தேஹல்லியில் அமைக்கப் பட்டிருக்கும் செறிவு யுரேனியத் தொழிற்சாலையில் ஆண்டுக்கு சுமார் 28 கிலோ கிராம் மிகத்தூய யுரேனியம்-235, சுழல்வீச்சு முறையில் [Centrifuge Process] இந்திய அணுத்துறையகம் தயாரித்து வருகிறது.

8. அணு உலைகளுக்கு வேண்டிய இயற்கை யுரேனியம், புளுடோனிய-239, யுரேனியம்-233 எரிக்கோல்கள் ஹைதிராபாத்தில் உள்ள NFC இல் [Nuclear Fuel Complex] தயாரிக்கப் படுகின்றன. அவற்றுக்குத் தேவையான நூதன உலோகங்களை [Zircaloy Pressure Tubes], [Fuel Sheaths], [Boron-10] தயாரிக்கும் உலோக உருக்கு, மடிப்புச் சாலைகள் (Metallurgical Plants) ஹைதிராபாத்தில் உள்ளன.

9. இந்தியா 1974 ஆம் ஆண்டு ராஜஸ்தான் பொக்ரானில் முதல் அடித்தள அணு ஆயுத வெடிச் சோதனையைச் செய்தது. பிறகு 1998 இல் இருமுறை அணு ஆயுதச் சோதனைகள் செய்து தன்னை அணு ஆயுத நாடென்று வெளிப்படையாகவே அறிவித்துக் கொண்டது! பாரதம் சுமார் (240-395) கிலோ கிராம் அணு ஆயுதத் தூய புளுடோனியம்-239 [Weapon-grade] கொண்டுள்ளதாக அனுமானிக்கப் படுகிறது. அந்நிறையப் பயன்படுத்தி இந்தியா, கீழ்த்தரம் முதல் மேல்திற முள்ள 200 கிலோ டன் (40-90) எளிய அணுப்பிளவு அணுகுண்டுகள் [Simple Nuclear Fission Bombs] ஆக்கலாம் என்று கணக்கிடப் படுகிறது. மேலும் இந்தியாவிடம் ஈரடுக்கு வெடிப்பு வெப்ப அணுக்கரு ஆயுதம் [Two-stage Thermonuclear Weapons (Hydrogen Bombs)] உள்ள தாகவும் கருதப்படுகிறது.

10. ராஜஸ்தானிலும், கல்பாக்கத்திலும் அணு உலைகளின் தேய்ந்த, கடும் கதிரியக்க முள்ள 306 அழுத்தக் குழல்கள் [306 Zircoaloy Pressure Tubes] முதன்முதலாக நீக்கப்பட்டு குறைந்த காலத்தில் [18 மாதங்கள்] புதிய ஸிர்கோனியம் நியோபியம் குழல்கள் [Zirconium +2.5% Niobium Tubes] நிரப்பப்பட்டுப் புதுப்பிக்கப்பட்டன! இதுவரைப் பாரத அணுவியல் துறையகம் புரிந்த பராமரிப்புகளில், அப்பணி ஓர் அசுர சாதனையாகக் கருதப்படுகிறது!

11. ஆசியாவிலே மிகக்பெரும் 500 MWe மின்னாற்றல் கொண்ட வேகப் பெருக்கி [Fast Breeder Power Reactor] டிசைன் செய்யப் பட்டு, கல்பாக்கத்தில் கட்டப்பட்டு வருகிறது. அடுத்து முற்போக்கு அணுவியல் நுணுக்கங்களைப் புகுத்தி, அழுத்தக் குழல்களில் ஓரளவு கொதிப்பைத் தணிப்புக் கனநீரில் அனுமதித்து, [Allowing Partial Boiling of Coolant Heavy Water in the Pressure Tubes] 700 MWe மின்னாற்றலில் அழுத்தக் கனநீர் அணுமின் நிலையம் [Advanced Heavy Water Reactor (AHWR)] டிசைன் செய்யப்பட்டு வருகிறது.

12. 1977 இல் கல்கத்தாவில் ‘சக்திக் கட்டுப்பாடுள்ள சுழல்வீச்சு விரைவாக்கி யந்திரம் ‘ [Variable Energy Cyclotron] இயங்க ஆரம்பித்தது. அதில் பரமாணுக்களின் [Proton, Electron, Positron] வேகத்தை மிகப்படுத்தி உலோகங்களில் மோதவிட்டு புதிய உலோகங்களைப் படைக்க முடியும்!

13. அகமதாபாத்தில் அமைக்கப் பட்டுள்ள ‘பிழம்புக்கனல் ஆய்வுக் கூடத்தில் ‘ [Institute of Plasma Research SST-1] அணுப்பிணைவு ஆராய்ச்சிகள் [Nuclear Fusion Power Research] புரிய டோகாமாக் அணுப்பிணைவு மின்யந்திரம் [(Tokamaks) International Thermonuclear Experimental Reactor (ITER)] ஒன்று கட்டி முடிக்கப்பட்டுத் தற்போது [2003] முன்னோடி இயக்கங்களில் சோதிக்கப் பட்டு வருகிறது!

14. மெளன்ட் அபுவில் நிறுவகமான காமாக் கதிர் வானோக்குச் சாதனம் [Mount Abu Gamma Ray Astronomy Facility] ஒன்று இப்போது இயங்கி வருகிறது. கதிர் மீட்டரலைப் பூதத் தொலைநோக்கி (GMRT) [Giant Metrewave Radio Telecope] அண்டவெளிக் கோள்கள், விண்மீன்கள் போன்றவை வீசும் கதிரலைகளைப் பிடித்து ஆராய்ச்சிகள் செய்ய உதவிகள்புரியும். மாபெரும் ஆற்றல் கொண்ட புதிய அணுமின் நிலையம் இந்திய அணுசக்தித் துறையகத்தின் வரலாற்றில், 2005 மார்ச் மாதம் 6 ஆம் தேதி பொன்னெழுத் துக்களில் பொறிக்கப்பட வேண்டிய நாள்! அன்றுதான் மகாராஷ்டிராவில் உள்ள தாராப்பூரில் பூத ஆற்றல் கொண்ட புதிய கனநீர் அணுமின்சக்தி உலையின் ஆரம்ப இயக்கம் ‘பூரணத்துவம் ‘ (Criticality) எய்தியது! அந்த அசுரப் பணியின் மகத்துவம் என்ன வென்றால், ஐந்தாண்டுகளில் முதல் யூனிட் கட்டப்பட்டு ஆய்வு வினைகள் அனைத்தும் முடிக்கப் பட்டு, முதல் தொடக்க இயக்கம் துவங்கி மாபெரும் சாதனையை நிகழ்த்தி யுள்ளது. பாரத அணுவியல் விஞ்ஞானி களும், பொறியியல் வல்லுநர்களும் முழுக்க முழுக்க டிசைன் முதல், நிறுவகம் வரைச் செய்து முடித்து, அயராது பணியாற்றி வடிவம் தந்த இரட்டை அணுமின் உலைகள் கொண்ட நிலையம் அது.

இதுவரை பாரதம் கட்டி இயக்கிவந்த 220 மெகாவாட் நிலையங்களை விட இரண்டு மடங்கு ஆற்றலுக்கும் மிகைப்பட்ட தகுதி [540 MWe (Each)] பெற்ற நிலையம் அது. அணு உலை பூரணத்துவம் அடைவது, அணு உலை இயக்க முறையில் துவக்க நிலையாகும். அப்போது அணு உலையின் பாதுகாப்பு, அபாயநிலைத் தவிர்ப்பு முறைகள் யாவும் கீழான வெப்ப நிலையில் பலதரம் சோதிக்கப்பட்டு [Low Power Testing] அடுத்து மின்சக்தி ஆற்றலை மிகையாக்க ஆய்வுகள் நடத்தப்படும். இரட்டை அணுமின் உலைகள் ஒவ்வொன்றும் 540 மெகாவாட் ஆற்றல் பெற்றது. 2005 ஆகஸ்டில் முதல் யூனிட்-4 முழு ஆற்றலை மேற்திக்கு மின்சாரக் கோப்புக்குப் [Western Power Grid] பரிமாறத் துவங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்திய அணுத்துறை நிறுவகத்தின் ஒளிமயமான எதிர்காலம்!

நேருவின் விஞ்ஞான முற்போக்கு குறிநோக்கை மேற்கொண்டு, டாக்டர் பாபா ஆசியாவிலே உயர்ந்த ஓர் அணுவியல் பெளதிக, இரசாயன நுணுக்க ஆய்வுக் கூடத்தையும், அணு மின்சக்தித் துறைக் கூட்டகத் தொழிற்சாலைகளையும் நிறுவி, இந்தியாவில் தொழிற் புரட்சியைச் துவங்கித் தொழில்யுகத்தை நிலைநாட்டினார்! மாபெரும் விஞ்ஞானப் பொறியியல் பணி புரிய, அவிழ்த்து விடப்படாமல் முடங்கிக் கிடக்கும் மானிடத்திறக் களஞ்சியங்கள் [Untapped Human Potentials] இந்தியா வெங்கும் தூண்டுவாரற்று இன்னும் குவிந்து கிடக்கின்றன! பாரத அரசாங்கம், மாநில அரசுகள் ஆக்கத் துறைகளைப் படைத்து அவர்களை ஊக்குவிக்க முற்பட வேண்டும்!

கடந்த ஐம்பது ஆண்டுகளில் காலூன்றி, வேரூன்றித் தழைத்து விழுதுகள் பெருக்கும் அணுசக்தித் துறையகம் அடுத்த ஐம்பதாண்டுகள் செழித்தோங்கப் போகும் ‘ஒளிமயமான எதிர்காலம் ‘ பாரதத்தில் பளிச்செனத் தெரிகிறது. பாரத அணுவியல் துறையகம் 2020 ஆண்டுக்குள் 20,000 MWe மின்னாற்றல் கொண்ட அணுமின் நிலையங்களைக் கட்ட முற்பட்டு வருகிறது. இன்னும் குறைந்தது இருபது, இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு இந்தியா இதுவரை விருத்தி செய்த அணு மின்சக்தியின் ஆதரவில்தான் வளர்ச்சியுற முடியும், என்பது இக்கட்டுரை எழுத்தாளரின் உறுதியான கருத்து. உலக நாடுகள் முழு ஆராய்ச்சியில் மூழ்கியுள்ள அணுப்பிணைவு சக்தி நிலையங்கள் [Nuclear Fusion Power Stations] அடுத்துத் தோன்றும் வரை, மாந்தர் அணுப்பிளவு சக்தி நிலையங்கள் [Nuclear Fission Power Stations] மூலமாகத்தான் மின்சார ஆற்றலைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதில் சிறிதேனும் ஐயமில்லை.

****************

எழுதியவர் : பகிர்வு: செல்வமணி (4-Nov-15, 11:47 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 307

மேலே